சேமிப்பு வழிகாட்டி-வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)
ஒவ்வொரு நாளும் உழைத்துச் சேமித்த பொருளைப் பாதுகாப்பது நமது கடமை என்பதோடு மட்டுமல்லாமல், இழப்பு ஏற்பட்டால் நம்முள்ளே தோன்றி நம்மை அழுத்தும் கவலை மற்றும் அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகளிலிருந்து நாம் மீள்கின்றோம். ‘வீட்டுக்கு உயிர்வேலி, வீதிக்கு விளக்குத்தூண், கோட்டைக்கு மதில்சுவர்..’ என்னும் கவிஞாயிறு பாரதியின் கவிதை வரிகளை படிக்கும்போது இணையாக நமக்குள் தோன்றும் இன்னொரு வரி ‘கொள்பொருளுக்கு ஒருலாக்கர்’ என்பதேயாகும். பாதுகாப்புப் பெட்டகவசதி (Safe Deposit Locker) என்பது இன்று அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. திருமணம் நிச்சயமாகி நடக்கும் முன்பே வரும் மருமகளின் பெயரில் ‘லாக்கர்’ எடுக்கும் மாமியார்கள் ஏராளம். உன் நகை உனக்கு என் நகை எனக்கு என்று புன்னகை தொடர்கதையாகப் பூரிக்கும் குடும்பங்கள் பல.
பாதுகாப்புப் பெட்டக வசதி தேர்வும், கணக்குத் துவக்கும்முறை மற்றும் பெட்டகத்தைப் பயன்படுத்தும் வழிகளை விரிவாகப் பார்த்தோம். பெட்டகக் கணக்கை எவ்வாறு முடிப்பது, பெட்டகம் வைத்துள்ளவர் இறந்துவிட்டால் அவரின் நியமிக்கப்பட்ட வாரிசுதாரர் அல்லது சட்ட ரீதியான வாரிசுகள் என்ன செய்யவேண்டும், பெட்டகச் சாவி தொலைந்து விட்டால் என்ன செய்வது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை தெரிந்து கொள்ளலாம்.
வாரிசுதாரர் நியமனம் (Nomination)பாதுகாப்புப் பெட்டக கணக்கிற்கு (லாக்கர்) வாரிசுதாரர் நியமனம் (Nomination) செய்யலாம். லாக்கர் வைத்திருப்பவர் இறந்துவிட்டால் நியமிக்கப்பட்ட வாரிசுதாரர் லாக்கரைத் திறக்க அனுமதியுண்டு. பிற கணக்குகளுக்கு நாம் தெரிவித்தபடி வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (1949) மற்றும் வங்கி நிறுவன விதிகள் 1985ன் படி வாரிசுதாரர் நியமனம் என்பது உயில் என்று கருதப்படாவிட்டாலும் சட்டரீதியாக செல்லுபடியாகும். வாரிசுதாரரின் லாக்கருக்கு அறங்காவலர் (Trustee) என்ற அடிப்படையில் உரிமை கோரலாம்.
நியமிக்கப்பட்ட வாரிசுதாரரின் பெயர், வயது, முகவரி, உறவுமுறை ஆகியவற்றை வங்கிக்கு அதற்கான வாரிசுதாரர் நியமனப் படிவத்தில் (Nomination Form (SL 1 / SL 1A) எழுதிக் கையெழுத்திட்டுத் தரவேண்டும். கூட்டாக (Joint ) தொடங்கி நடைபெறும் லாக்கர் கணக்கு என்றால் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் கையெழுத்திடவேண்டும். நியமிக்கப்படும் வாரிசுதாரர் 18 வயது பூர்த்தியாகாதவராக (Minor) இருந்தால் அவருக்கான ஒரு பாதுகாவலர் (Guardian) குறித்த விவரங்களை படிவத்தில் குறிப்பிட வேண்டும். வாரிசுதாரர் அயல் நாட்டில் வசிக்கும் இந்தியராகவும் (Non-Resident Indian – NRI) இருக்கலாம்.
லாக்கர் கணக்கு வைத்திருப்பவர் நியமிக்கப்பட்ட வாரிசுதாரரை எந்த நேரமும் மாற்றலாம் அல்லது நீக்கலாம். வங்கியும் கடினமான செயல்பாடுகள் / பிரச்சனைகள் இல்லாமல் வாரிசுக்கு இறந்தவரின் லாக்கரை நியமிக்கப்பட்ட வாரிசுதாரர் உரிமை கோரித் திறந்து, லாக்கரில் உள்ளவற்றை சட்டரீதியாகச் சொந்தமாக்கிக் கொள்ள இந்த வசதி உதவுகின்றது. வாரிசுதாரர் நியமனப்படிவத்தை (SL 1 / SL 1A) லாக்கர் கணக்குத் துவக்குபவர் கையெழுத்திட்டு வழங்கியவுடன் அதன் ஒரு நகலில் வங்கியிடம் ஒப்புகை பெற்று வாங்கி நம் வீட்டில் வைத்திருக்க வேண்டும்.
ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர், ஆனால் லாக்கருக்கான வாரிசு நியமனம் முதல் மகன் பெயரில் மட்டும் பதியப்பட்டுள்ளது, இரண்டாவது மகன் உரிமைகோர முடியுமா..? இந்தக் கேள்விக்கான விடை நியமிக்கப்பட்ட வாரிசுதாரர், அதாவது முதல் மகன் மட்டும்தான் வங்கியிடம் உரிமை கோரலாம். இரண்டாவது மகன் நீதிமன்றத்தின் மூலம் சட்ட ரீதியாகத்தான் தன் அண்ணனிடம் விண்ணப்பித்து தன் பங்கைப் பெறமுடியும். குடும்ப உறவுகளுக்குள் சிக்கல் இருக்கின்றது என்ற போதுதான் இத்தகைய கேள்விகள் வரும்.
வாரிசுதாரர் நியமிக்கப்படாத லாக்கர் (Locker with No Nomination) லாக்கர் வைத்திருப்பவர் இறந்துவிட்டால் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு:
(1) உரிய அரசுத்துறை வழங்கிய இறப்புச் சான்றிதழ்.
(2) உரிய அரசுத்துறை வழங்கிய வாரிசு சான்றிதழ் (வாரிசுதாரர் நியமிக்கப்
படாத லாக்கருக்கு மட்டும்)
(3) இறந்தவரின் லாக்கர் எண் மற்றும் பிறவிவரங்களை வங்கிக்குத் தெரிவித்து லாக்கரைத் திறக்க உரிமைகோரும் கடிதம். இதற்கான அச்சடிக்கப்பட்ட
படிவத்தை வங்கியிடமிருந்து பெறலாம்.
நாம் மேலும் தெரிந்துகொள்ளவேண்டியவை என்னவெனில், லாக்கர் கணக்கு இருவர் அல்லது மூன்று / நான்கு பேரின் பெயர்களில் இருந்தால், அவர்களில் ஒருவர் இறந்துவிட்டால், உயிரோடு இருப்பவர்கள் வங்கியிடம் மேலே குறிப்பிட்ட இறப்புச் சான்றிதழ் மற்றும் கடிதத்தை வழங்கி இறந்தவரின் பெயரைக் கணக்கிலிருந்து நீக்கச்செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பெயரில் லாக்கர் கணக்கு இருக்கும்போது லாக்கரை யாரேனும் ஒருவர் இயக்கலாமா (Either or Survivor / Anyone of us or Survivor) அல்லது அனைவரும் கூட்டாக இயக்க வேண்டுமா (Joint Operation) என்ற பதிவு வங்கியுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தில் எவ்வாறு உள்ளதோ அந்த நிபந்தனையின்படிதான் ஒருவர் இறந்தபின் லாக்கர் கணக்கை மூடுவதை வங்கி அனுமதிக்கும்.
இவ்வாறு கூட்டுக் கணக்கில் பல கோணங்கள் இருப்பதால் வங்கியிடம் விரிவாக அவரவர் வைத்துள்ள லாக்கர் கணக்கின் இயக்க விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது சிறப்பு. லாக்கர் சாவி தொலைந்துவிட்டால்நம்மிடம் வங்கி வழங்கியுள்ள நம் லாக்கரின் சாவி தொலைந்துவிட்டால் நமது முதல் கடமை உடனே வங்கிக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர் தனியாக அல்லது கூட்டாக இயக்க அனுமதியுள்ள லாக்கர் எனில் சாவி தொலைந்துவிட்டது என்ற தகவலைத் தெரிவிக்கும் கடிதத்தில் அனைவரும் கையெழுத்திட்டு வங்கியிடம் வழங்கவேண்டும்.
லாக்கரை வடிவமைத்து உருவாக்கிய நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவரை / தொழில்நுட்ப வல்லுனரை வங்கி வரவழைத்து லாக்கர் கணக்கு வைத்திருப்பவர் மற்றும் வங்கி அலுவலரின் முன்னிலையில் லாக்கரின் பூட்டு கழட்டப்பட்டு வேறு பூட்டு பொருத்தப்பட்டு அதற்குரிய சாவி லாக்கர் கணக்காளரிடம் வழங்கப்படும். இந்த சேவைக்கான கட்டணத்தை சாவியைத் தொலைத்த வாடிக்கையாளர் ஏற்கவேண்டும் என்பது விதி.
லாக்கர் – புதிய விதிகள்
இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்தியுள்ள புதிய விதிகளின்படி வங்கி லாக்கர் கணக்குத் துவக்க விண்ணப்பிப்பவரிடம் நிலைவைப்பு (Fixed Deposit) செலுத்தும்படி கோரலாம். 2021 நவம்பர் மாதம்வரை அவ்வாறு வற்புறுத்துவது கூடாது என்றிருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துடன் கலந்தாலோசித்து இந்த செயல்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த விதி ஏற்கனவே வங்கியில் லாக்கர் வசதி பெற்றவர்களை கட்டுப்படுத்தாது.
வங்கிக் கட்டிடத்திற்குள், குறிப்பாக லாக்கர் அறைக்குள் வெள்ளம் வந்தாலோ அல்லது இயற்கை சீற்றங்களினால் வங்கிக் கட்டடம் பாதிக்கப்பட்டாலோ வங்கி அந்த நிலையை வாடிக்கையாளருக்கு உடனே தெரிவிக்கவேண்டும். வெள்ளம், பூகம்பம் ஆகியவற்றால் வங்கியில் உள்ள லாக்கர்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு வங்கி பொறுப்பல்ல. வங்கி விதிகளில் குறிப்பிடப்பட்ட அளவு கட்டிடத்தின் பாதுகாப்பைச் செய்யத் தவறி தீ விபத்து, மோசடி, கட்டிடம் நொறுங்கி விழுதல் போன்றவை ஏற்பட்டால், அவ்வாறு நேர்ந்தது வங்கியின் அஜாக்கிரதையினால் என்று நிரூபிக்கப்பட்டால் லாக்கர் கணக்கின் வருடக் கட்டணத்தின் நூறு மடங்கை வாடிக்கையாளருக்கு வங்கி வழங்கவேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதியை வகுத்துள்ளது. வாடிக்கையாளர் தனக்கான இழப்பீடை அதற்குரிய ஆவணங்களுடன் வங்கிக்கு விண்ணப்பித்துப் பெறவேண்டும். புதிய விதிகள் 2022 ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து செல்லுபடியாகும். வங்கியும் லாக்கர் வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளரும் தங்களின் லாக்கர் ஒப்பந்தத்தை 2023 ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் செயல்பாடுகளின் விபரங்களை குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் வங்கிகள் அனுப்ப வேண்டியது அவசியமாகும். லாக்கர் வசதியை விண்ணப்பிப்பவருக்கு உடனே வழங்க முடியவில்லை என்றால், லாக்கருக்காக விண்ணப்பித்துக் காத்திருப்போர் பட்டியலின் எண் தொடர்பான தகவல்களை விண்ணப்பித்தவருக்கு வங்கி வழங்க வேண்டும்.
புதிய வழிகாட்டுதல்களின்படி, வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், தம் வங்கியோடு தொடர்புமில்லாத மற்றவர்களுக்கும் லாக்கர் வசதியை வழங்க முடியும். சில நேரங்களில் தமது கிளையை ஒரு கட்டிடம் / ஒரு பகுதியிலிருந்து வேறொரு கட்டிடத்திற்கு / பகுதிக்கு மாற்றும் நிலை வங்கிகளுக்கு ஏற்படும். வாடிக்கையாளருக்கு அறிவித்து உரிய காலத்திற்குப் பின்னரே வங்கிகள் லாக்கரை புதிய கட்டிடத்திற்கு மாற்ற முடியும்.
லாக்கரின் இயக்கத்தில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய மேலும் பல செய்திகள் என்னவென்றால் வங்கியின் விதிமுறைக்கு உட்பட்டு வருடத்திற்கு ஒருமுறையாவது லாக்கரை வைத்திருப்பவர் இயக்க வேண்டும். பல வருடங்கள் இயக்கப்படாத லாக்கரை, குறிப்பாக அதற்குரிய வருட வாடகை செலுத்தப்படாத லாக்கர் பற்றிய விவரங்களை அதாவது வங்கியின் பெயர், வங்கிக் கிளையின் பெயர், லாக்கர் கணக்கு எண், லாக்கர் வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி மேலும் செலுத்தவேண்டிய நிலுவைக்கட்டணம் ஆகியவற்றை நாளிதழ்களில் வங்கி விளம்பரப்படுத்தியும், குறிப்பிட்ட தேதிக்குள் உரிய வாடிக்கையாளரிடம் பதில் வரவில்லையெனில் லாக்கர் பூட்டை உடைக்க வங்கிக்கு உரிமையுள்ளது.
அவ்வாறு உடைக்கும் போது, அனுமதி பெற்ற பத்திரத்துறை பதிவாளர், லாக்கர் வைத்திருப்பவரின் உறவினர் அல்லாத சாட்சி ஒருவர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி அலுவலர் ஆகியோர் முன்னிலையில் லாக்கரின் பூட்டு உடைக்கப்படும். லாக்கரின் உள்ளே ஏதாவது இருந்தால் அவை பட்டியலிடப்பட்டு பத்திரத்துறை பதிவாளர், சாட்சி மற்றும் வங்கி அலுவலர் ஆகியோர் கையெழுத்திட அவை ஒரு உறை அல்லது பெட்டியில் வைத்து மூடி முத்திரையிட்டு கையொப்பமிடப்பட்டு வங்கி பாதுகாக்கும். மேலும் லாக்கரில் இருந்த பொருட்களின் விவரங்களை ஒரு புத்தகத்தில் பதியப்பட்டு, உரியவர் தக்க ஆதாரங்கள் / ஆவணங்களுடன் விண்ணப்பித்து அதனை வங்கி அங்கீகாரம் அளித்த பிறகே தான் உரியவர் பெறமுடியும்.
அயல்நாட்டில் உள்ளவர்கள் அதாவது ஒருவருட காலத்திற்குள் வங்கிக் கிளைக்கு வந்து லாக்கரை இயக்க முடியாதவர்கள் உரிய காரணத்தைத் தெரிவித்து வங்கிக்கு எழுதி லாக்கரை இயக்காமல் இருக்க விலக்கு பெறலாம். மிக முக்கியமாக நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் நாம் லாக்கரில் எதை வைக்கின்றோம் என்பது வங்கிக்குத் தெரியாது. நாம் தெரிவிக்கவேண்டிய அவசியமோ அல்லது வங்கிக்கு அதனைக் கேட்கவேண்டிய உரிமையோ சட்டரீதியாக இல்லை. ஆனால் சட்டப்படி தடைசெய்யப்பட்ட பொருட்களை லாக்கருக்குள் வைக்கக்கூடாது. வங்கி லாக்கர் வழங்கும்போது விண்ணப்பிப்பவர் கையெழுத்திடும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் படிவத்தில் தடைசெய்யப்பட்ட மற்றும் ஊறுவிளைவிக்கும் பொருட்களை லாக்கருக்குள் வைக்கமாட்டேன் என்ற உறுதிமொழி வரிகள் இடம்பெற்றுள்ளது.
பாத்திரங்கள் , பத்திரங்கள் , நகைகள், விலையுயர் பொருட்கள் ஆகியவற்றை நாம் கவனமாகத் துடைத்து, அதற்குரிய ஈரமில்லாத சிறுபெட்டி/ பையில் / உறையில் வைத்து லாக்கரில் பாதுகாக்கவேண்டும். லாக்கர் உரிமையாளர் ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட லாக்கரில் ஒரு சொத்துப்பத்திரத்தை வைத்துவிட்டு சிலமாதங்கள் கழித்து வந்து அதனைத் திறந்தார். லாக்கரைத் திறந்தவுடனே அலறி அடித்துக் கொண்டு ஓடி வர… போய்ப் பார்த்தால் லாக்கர் முழுவதும் கரையான்கள் பெருகி இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தன. அவர் பத்திரம் வைத்திருந்ததாகச் சொன்ன பாதுகாப்புப் பெட்டகத்தில் கரையான்கள் ‘பத்திரமாகப்’ பெருகிவிட்டன.
கரையான்கள் லாக்கருக்கு வர வாய்ப்பில்லை. அதே சமயம் லாக்கருக்குள் பத்திரம் வைக்கும் போது, அதில் ஏற்கனவே, கரையான்கள் இருந்திருக்கவேண்டும். வங்கி லாக்கருக்கு வெளியேதான் கரையான் தடுப்பு மருந்துகள் அடிக்கடி அடிக்க முடியுமே தவிர லாக்கருக்குள் மருந்து செலுத்த முடியாது. அவ்வாறு செலுத்துவதும் தவறு. அப்படிச் செலுத்தமுற்பட்டால் உள்ளே விலையுயர்ந்த பொருட்கள் வைத்திருந்தால் அவை பாதிக்கப்படக்கூடும். எனவேதான் நாம் லாக்கரில் வைப்பதற்குமுன் அனைத்தையும் சரிபார்த்து வைத்துப் பாதுகாக்க வேண்டும். சின்னச் சின்ன விவரங்கள்கூட நாம் வாழ்க்கையில் நகரும்போது நம் அனுபவம் மற்றும் அறிவின் அகரம் முதல் சிகரப் பயணத்திற்கு வழிவகுக்கும். பகரும் அவற்றைத் தெரிந்து பயணிப்போம்.
Average Rating