2021ல் பெண்கள்!! (மகளிர் பக்கம்)
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது ஆர்யா ராஜேந்திரன் இந்தியாவின் இளம் வயது மேயர். கல்லூரி மாணவியான இவர் சிறுவயது முதலே இடதுசாரி அமைப்பில் களப்பணி
ஆற்றியவர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராகவும், சி.பி.எம். கட்சியின் சிறுவர்கள் அமைப்பான பாலசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார். கூடவே சி.பி.எம். மாணவர்கள் அமைப்பான எஸ்.எஃப்.ஐ மாநில அலுவலகப் பொறுப்பாளராகவும், சி.பி.எம். கிளைக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
அம்பிகா ஐ.பி.எஸ்
ஆயிரக்கணக்கான பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். குழந்தைத் திருமணத்தின் சாட்சியாக 14 வயதில் திருமணம். 18 வயதில் இரு குழந்தைகளின் தாய். 35 வயதில் மும்பை மாநகர கமிஷனர். திருமணம் நடந்தபோது வெளி உலகம் தெரியாத சிறு பெண்ணாக இருந்தவர் கணவரின் ஒத்துழைப்பில் 10ம் வகுப்பு தேறி தொடர்ந்து பட்டப் படிப்பையும் முடித்தார். ஐபிஎஸ் பயிற்சிக்காக சென்னை வந்தவர், அடுத்தடுத்து மூன்று முறையும் தேர்வில் தோல்வியுற்று நான்காவது முறையாக வென்று ஐபிஎஸ் அதிகாரியானார். மனம் தளராமல், நம்பிக்கையோடு, விடா முயற்சியால் தனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிக் காட்டியவர்.
மிஸ் இந்தியா
மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டி பிப்ரவரி 2021ல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மானசி வாரணாசி மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதுடன், 2022 உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோஸி ஒகேஞ்சோ
உலக வர்த்தக சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண், முதல் ஆப்ரிக்கர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 66 வயது நிரம்பிய கோஸி ஒகேஞ்சோ. மார்ச் 1 ல் பதவியேற்க இருக்கும் இவருக்கு, உலக வர்த்தக சபையில் உறுப்பினர்களாக இருக்கும் 164 நாடுகளும் தங்களின் ஒருமித்த ஆதரவை தெரிவித்துள்ளனர். நைஜீரியாவின் முதல் பெண் நிதியமைச்சராக இரண்டு முறையும், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். உலக வங்கியில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றியதுடன், அதன் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். GAVI எனப்படும் தடுப்பூசி மற்றும் நோய் தடுப்புக்கான உலகளாவிய கூட்டமைப்பின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
தடகள வீராங்கனை தனலெட்சுமி
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற 24வது தேசிய ஃபெடரேஷன் தடகளப் போட்யில் தமிழகம் சார்பில் பங்கேற்று, 100 மீட்டர் பந்தய தூரத்தை 11.39 விநாடிகளில் கடந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான டூட்டி சந்த், ஹிமாதாஸ் சாதனைகளைப் பின்னுக்கு தள்ளியதோடு, 200 மீட்டர் தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து பி.டி.உஷாவின் சாதனையையும் முறியடித்தவர் தனலெட்சுமி. வறுமையை பின்னுக்குத் தள்ளி, பந்தய கோட்டை முந்திய நொடியின் வெற்றியை உணர்ந்தவர், தனது ஷூக்களைக் கழற்றி கரங்களில் ஏந்தி மைதானத்தில் குனிந்து அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திய புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலானது.
தமிழக உளவுத்துறையின் முதல் பெண் அதிகாரி
தமிழக காவல்துறை உளவுத்துறையில் திறமை வாய்ந்தவர்களே நீடித்துள்ளனர். உளவுத்துறை ஏடிஜிபிக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியாக உளவுத்துறை டிஐஜி அந்தஸ்தில் பெண் அதிகாரி ஆசியம்மாள் முதல் முறையாக அமர்த்தப்பட்டுள்ளார். 56 வயது நிறைந்த நேர்மையான குரூப்-1 அதிகாரியான இவர் எம்.எஸ்.சி., எம்.டெக் மற்றும் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.
காம்ரேட் மைதிலி சிவராமன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர். ஒரே நேரத்தில் 6 நிறுவனங்களுக்கு சிஐடியு தொழிற்சங்க தலைவராக இருந்தவர். அனைத்திந்திய ஜனநாயகச் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழக அமைப்பாளர். கம்யூனிஸ சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டவர். தன் வாழ்நாள் முழுவதும் களப் போராளியாகவே இருந்தவர். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அல்சைமர் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் மே 30ல் கொரோனோ நோய் தொற்றில் காலமானார்.
ஓங்கி ஒலித்த குரல்
சக மனிதர்களாலே துச்சமாக துரத்தப்படும் தங்கள் மக்களின் பிரச்சனையை காணொளியாக்கி, அரசாங்கத்தையே அசைத்து, திரும்பிப் பார்க்க வைத்தவர் அஸ்வினி. இன்று விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதியாகிவிட்டார். அவர் விடுத்த ஒற்றைக் காணொளியால் அவரை சார்ந்தவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் ஒரே வாரத்தில் முதலமைச்சர்
கரங்களில் கிடைத்தது.
2020-21ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பின்னணிப் பாடகி சித்ரா, இயற்கை விவசாயி பாப்பம்மாள், தடகள வீராங்கனை சுதாசிங், விளையாட்டு வீராங்கனை அனிதா விருது பெற்றனர்.
மிஸ் யுனிவர்ஸ்
21 ஆண்டுகளுக்கு பின் ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் வென்றது இந்தியா. ‘மிஸ் யுனிவர்ஸ்’ 70ஆம் ஆண்டு போட்டியில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து அப்பட்டத்தை வென்றுள்ளார். இஸ்ரேலின் எய்லட் நகரில் இந்தப் போட்டி நடந்தது. இதில் 80 உலக நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 2020ஆம் ஆண்டுக்கான பட்டம் வென்றவரான மெக்சிகோவை சேர்ந்த மிஸ் யுனிவர்ஸ் ஆண்ட்ரியா மேசா, ஹர்னாஸ் சந்துவுக்கு மிஸ் யுனிவர்ஸ் 2021 பட்டத்துக்கான கிரீடத்தைச் சூட்டினார்.
சோயா தாமஸ் லோபோ
இந்தியாவின் முதல் திருநங்கை புகைப்பட பத்திரிகையாளர். எப்படி பிறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. எப்படி வாழ்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையே உள்ளது எனும் இவர், தான் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தில் முப்பதாயிரம் ரூபாய்க்கு பழைய கேமரா ஒன்றை வாங்கி, அதில் தான் ரசித்த விசயங்களைப் புகைப்படங்களாகப் பதிவேற்றி, தன்னுடைய யு டியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். சோயாவின் புகைப்படங்கள் வைரலாகி, மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பாராட்டைக் குவித்தது.
அதிகாலை கேமராவும் கையுமாக கிளம்பும் சோயா மாலையே அதை பத்திரிகை அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி ஒப்படைக்கிறார். வருங்காலத்தில் மாற்றுப்பாலினத்தவர் குடும்பத்தினரால் கைவிடப்படாமல் நேசிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை விதைக்கிறார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் மொத்தமாக 202 கிலோ தூக்கி இந்தியாவின் பதக்க வேட்டையை துவங்கி வைத்தவர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு. மீராவின் வெற்றியைண் நாடே கொண்டாடியது. அவரைத் தொடர்ந்து பாட்மிட்டனில் சீறி பாய்ந்தாடிய பி.வி. சிந்து வெண்கலத்தை கைப்பற்றினார். 2016 ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச் சண்டையில் வெண்கலம் வென்ற சிங்கப் பெண் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த லவ்லினா போர்கோஹெய்ன். உலக சாம்பியனான பூ செனஸ் வுடன் மாதிய லவ்லினா சளைக்காமல் போராடி வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
பாராலிம்பிக் விளையாட்டு வீராங்கனைகள்
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தார் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 19 வயது வீராங்கனை அவானி லெகாரா. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றதுடன், 50 மீட்டர் ஏர்ரைஃபிள் பிரிவிலும் பங்கேற்று வெண்கலம் வென்றார்.பாராலிம்பிக் டேபிள் டென்னில் ஒற்றையர் அரையிறுதியில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாவினாபென் படேல் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில்தான் முதல்முறையாக பேட்மிட்டன் போட்டிகள் சேர்க்கப்பட்டன. இதில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் பாலக் கோலி பங்கேற்றார். மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய மூன்று பிரிவுகளில் விளையாடிய ஒரே இந்திய வீராங்கனை இவர். உலக தர வரிசையில் 11ம் இடத்தில் உள்ள இவர் தனது அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தியபோதும் ச்பதக்கங்களை வெல்லவில்லை.
Average Rating