டீன் ஏஜ் செக்ஸ்?!! (அவ்வப்போது கிளாமர்)
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள’
– புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமை பற்றி இப்படி ரசனையோடு விளக்குகிறார் வள்ளுவர். காமம் என்பதும் அப்படி ஐம்புலனின் வழியாகவும் நம்மை ஆட்கொண்டு மகிழ்விப்பதுதான். இன்று அதிகரித்திருக்கும் போர்னோகிராபி பழக்கத்துக்கும் அடிப்படை அதுவாகத்தான் இருக்க முடியும்.
பாலியல் கிளர்ச்சி ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால், அதன்பிறகு காமம் சார்ந்தே எல்லாவற்றையும் தேடவும் வைக்கிறது. இந்தத் தேடலில் அவர்கள் கண்டடைவதே போர்னோகிராபி எனப்படும் செக்ஸ் வீடியோக்கள். இணையதள பயன்பாடும், ஸ்மார்ட் போன்கள் அதிகரிப்பும் இன்று போர்னோ வீடியோக்கள் பார்ப்பதை சாதாரணமாக மாற்றிவிட்டன. மொபைல் சேவை நிறுவனங்கள் டேட்டாக்களை போட்டி போட்டு வழங்குவது அதை கட்டற்ற சுதந்திரமாக்கிவிட்டது.
போர்னோ பார்க்காத நபரையும், போர்னோ வீடியோ இல்லாத மொபைல்/லேப்டாப்புகளையும் பார்ப்பது இன்று அரிதாகிவிட்டது. இந்த போர்னோகிராபி பார்ப்பது சரியானது
தானா அல்லது தவறான செயலா?
– உளவியல் ஆலோசகர் ஞான மணிகண்டன் விளக்குகிறார்.
‘‘பாலியல் தேடல் முந்தைய தலைமுறையில் கதைப் புத்தகங்களாக உலவி, அதன்பிறகு நீலப்படங்களாகவும், மலையாள சினிமாக்களாகவும் மறுவி இப்போது இணையதளங்களில் போர்ன் வீடியோக்கள் பார்க்கும் பழக்கமாக உருமாறியிருக்கிறது.பசி, தாகம், பாலுணர்வு என்பது மனித வாழ்வின் ஒரு பகுதி என்கிறார் உளவியலின் தந்தையான சிக்மண்ட் ஃப்ராய்டு.
அதனால், பாலுணர்வு என்பது பாவகரமான ஒரு செயல் அல்ல. அது இயல்பான ஒன்றுதான். அது வயதுக்கு ஏற்ப வெளிப்படும். இந்த இயல்பான உணர்வுதான் ஆர்வம் காரணமாக போர்ன் வீடியோக்கள் பார்க்கும் பழக்கமாக ஏற்படுகிறது.
இதில் எந்தத் தவறும் இல்லை. பாலியல் தொடர்பான வீடியோக்களைப் பார்த்து ரசிப்பது வயது வந்த ஒருவரின் வழக்கமான செயல்தான். அதில் எந்த குற்ற உணர்வும் அடைய வேண்டியதில்லை. சாதாரணமாக ஆர்வத்தின் அடிப்படையில் தொடங்குவதுதான் போர்னோ படங்கள் பார்க்கும் பழக்கமும். அதை புரிந்துகொண்டால் போதும்.’’போர்ன் எப்போது தவறான பழக்கமாக உருமாறுகிறது?
‘‘உளவியலில் வாயரிஸம்(Voyeurism) என்று சொல்வதுண்டு. பாலியல் தொடர்பான விஷயங்களைப் பார்த்து ரசித்து இன்புறுவதுதான் வாயரிஸம். ஆர்வத்தின் அடிப்படையில் தொடங்கும் இந்த செயல், அளவு தாண்டும்போது பிரச்னையாகிவிடுகிறது.
எப்போதாவது பார்ப்பது என்பதிலிருந்து மாறி, தினமும் 10 முறைக்கும் மேல் போர்ன் வீடியோக்கள் பார்ப்பது என்கிற நிலைக்குச் செல்லும்போது அது Addiction என்கிற அடிமைத்தனத்தில் கொண்டுசென்று தள்ளுகிறது. இதுவும் ஒருவகையிலான உளவியல் கோளாறுதான். அதிலும் முறையற்ற உறவுகள் கொண்ட வீடியோக்களும், விபரீத உணர்வை விதைக்கும் வீடியோக்களும் ஒரு தனிநபரின் மனதைப் பாதிப்பதோடு அது சமூகத்துக்கும் ஆபத்தாக ஒரு கட்டத்தில் மாறிவிடக் கூடிய அபாயம் உண்டு.’’
போர்ன் வீடியோக்களின் பார்வையாளர்களை அடையாளம் காண முடியுமா?
‘‘தனிமை விரும்பிகள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், பாலியல்ரீதியாகக் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு அற்றவர்கள், தாம்பத்ய உறவில் திருப்தி அடைய முடியாதவர்கள் என பலவிதமான குணநலன் கொண்டவர்கள் தங்களது பாலியல் கிளர்ச்சிக்காக போர்ன் வீடியோக்
களின் பக்கம் ஒதுங்குகின்றனர். அதுவே அளவுக்கு அதிகமாகும் பொழுது அது செக்ஸூவல் வாயரிஸமாக மாறுகிறது.
ஒரு சிலருக்கு போர்னோ படங்கள் பார்க்கும்போது கிடைக்கும் திருப்தி, தாம்பத்யத்தில் கூட கிடைக்காது என்பது வினோதமான ஓர் உளவியல் உண்மை. எங்கோ தனக்குள் முழுமை அடைய முடியாத நிலையில் அது வேறு ஒரு வழியில் வெளிப்படுகிறது. குறிப்பாக, பாலுறவின் மீதான அதிக ஏக்கமே போர்னோ படங்கள் பார்ப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது.’’
போர்ன் வீடியோக்களை ரசிப்பதன் வேறு காரணங்கள் என்ன?
‘‘வளர் இளம் பருவத்தில் தன்னுடலில் மாற்றங்கள் ஏற்படும்போது அதைத் தெரிந்து கொள்ள ஆரோக்கியமான வழிகள் எதுவும் இல்லாத நிலையில் ஆபாச ஜோக்குகள், ஆபாசமான கதைகள் என நண்பர்களுக்குள் பரிமாறப்படுகிறது.மேலும் வீட்டில் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பு இருக்கும் நிலையும், இணையம் பயன்படுத்தும் வசதியும் கிடைத்தால் போர்ன் வீடியோக்கள் பார்க்கின்றனர். கணினி அல்லது தொலைக்காட்சி வசதி இருந்தாலும் போர்ன் டிவிடிக்களையும் பார்க்கின்றனர். பாலுறவு குறித்த தன் உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பற்ற நிலையில் போர்ன் வீடியோக்களுக்கு அடிமையாகவே மாறிவிடுகின்றனர்.’’
போர்னோ படங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சி ஏற்பட என்ன காரணம்?
‘‘போர்னோ படங்கள் பார்க்கிறபோது உடலுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஒருவித மகிழ்வைத் தருகிறது. குறிப்பாக, ஆணுக்குள் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனும், பெண்ணுக்குள் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனும் அதனால் தூண்டப்படுகிறது. மூளையில் ஏற்படும் இந்த ரசாயன மாற்றங்களால் Dopamine சுரப்பின் வழியாக அந்த இன்பத்தை உணர்கின்றனர்.’’
போர்ன் எப்போது அபாயமானதாகிறது?
‘‘சாதாரண ரசனையாகத் தொடங்கும் பழக்கம் ஒரு கட்டத்தில் வீடியோக்களிலேயே விதவிதமான தேடலை ஏற்படுத்தும். குழந்தைகளுடன் உறவு கொள்வது, வயதில் மூத்தவர்களுடன் உறவு கொள்வது, ஒரு பால் உறவுகள், இயற்கைக்கு மாறான உறவுநிலைகள், குழுக்களாக உறவுகொள்வது, விலங்குகளுடன் உறவுகொள்வது மற்றும் பொருட்களுடன் உறவுகொள்வது என இவர்கள் பார்க்கும் வீடியோக்களின் தன்மைகள் அவர்கள் மனதில் வக்கிர எண்ணங்களை உருவாக்குகிறது. அது சரி என்று நம்பவும் வைக்கும் நிலைக்குத் தள்ளுகிறது. போர்னோ படங்களில் பார்ப்பதை செயல்படுத்திப் பார்க்கவும் ஒருகட்டத்தில் ஆசைப்படுகின்றனர்.
பெரும்பாலான பாலியல் குற்றங்களின் பின்னால் இந்த போர்ன் வீடியோக்களும் இப்படித்தான் முக்கிய காரணியாக மாறிவிடுகிறது.’’திருமண வாழ்வில் என்ன தாக்கங்களை இந்த வீடியோக்கள் ஏற்படுத்துகின்றன?
‘‘போர்ன் வீடியோக்களுக்கு அடிமையானவர்கள் சந்திக்கும் விளைவுகள் மிக மோசமானவையாக உள்ளது. இதனால் மனைவியை/கணவரைத் தாண்டி வேறொரு பார்ட்னரைத் தேடுவதற்கு போர்னோ படங்கள் காரணம் ஆகிறது. அருகில் பார்ட்னர் இருந்தாலும் கூட வீடியோ பார்ப்பதே பெரிய இன்பமாக அவர்களுக்குத் தோன்றும். இவர்கள் மனைவியுடன் உறவுகொள்வதில்கூட அதிக விருப்பம் காட்ட மாட்டார்கள். வீடியோக்கள் பார்த்தபடியே சுய இன்பம் கொள்வதில் அதிக திருப்தியடைவதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்.’’
போர்னோக்களால் நாம் ஏதேனும் கற்றுக் கொள்ள முடியுமா?
‘‘போர்னோ வீடியோக்களில் காட்டப்படுவது பாலியல் கல்வியே கிடையாது. அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை. திட்டமிட்டு நடிகர்களை வைத்தே பெரும்பாலும் படம் பிடிக்கப்படுகிறது. இவ்வாறு படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் நம் இயல்பு வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் சரி வராது. போர்னோ படங்களில் தொடர்ந்து அரை மணி நேரம் கூட உடலுறவு கொள்வதாகக் காட்டப்படுகிறது.
அதை உண்மை என்று நம்பிவிடுகிற சிக்கல் உண்டு. தன்னால் அப்படி இருக்க முடியவில்லையே என்ற ஏக்கமும், தனக்கு ஆண்மைக்குறைவு வந்துவிட்டதோ என்ற அச்சமும் ஒருவருக்கு ஏற்படக் கூடும். மேலும் இவை இணையத்தில் பெரும்பாலும் பார்க்கப்படுவதால் இன்னொரு பக்கம் நிறுவனங்கள் இதன்மூலம் பெரும் வருவாயை ஈட்டுகின்றன. அதனால், போர்ன் வீடியோ பார்க்கும் பழக்கத்தை முடிந்தவரைத் தவிர்ப்பதே நல்லது.’’
போர்னோ வீடியோக்கள் பார்க்கும் பழக்கத்தை தடுக்க என்ன செய்யலாம்?
‘‘வீடு மற்றும் அலுவலகங்களில் பொதுவாக ஒரு ஈமெயில் ஐ.டி.யில் சர்ச்சிங் ஆப்ஷன் செட் செய்து வைக்கலாம். தன் மகன், கணவன், மனைவி என மூவரின் சர்ச்சிங் ஆப்ஷனும் மற்றவர் தெரிந்து கொள்ளும்படி பார்த்துக் கொள்வது பலன் தரும். வளர் இளம் பருவத்தில் உள்ள குழந்தைகள் மொபைல் பயன்படுத்தும்போது அவர்கள் சர்ச்சிங் ஆப்ஷனைக் கண்காணிக்கவும் இந்த முறை உதவும். ஆபாச வீடியோக்கள் அடிக்கடி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் கட்டுப்படுத்தும்.
போர்னோ வீடியோக்கள் பார்ப்பது தவறு என புரிகிறது. நான் எப்படி அந்தப் பழக்கத்தில் இருந்து வெளியில் வருவது என நினைப்பவர்கள் மனநல மருத்துவரை அணுகலாம். அவர்கள் அதிக நேரம் தனிமையில் இருப்பதற்கான வாய்ப்புகளைக் குறைத்துக் கொள்ளலாம். அந்த நேரத்தில் தனக்குப் பிடித்த வேறு விஷயங்களைச் செய்வதன் வழியாக இதுபோன்ற எண்ணங்களைத் தவிர்க்க முடியும். இவர்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்தச் செய்வதும் நல்ல பலன் தரும். இந்த உணர்வு இயல்புதான். ஆனால் இது எல்லை தாண்டி நம்மையே மூழ்கடித்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.’’
சிகிச்சை எப்போது தேவைப்படும்?
‘‘என்னால் போர்னோ படங்கள் பார்க்காமல் இருக்க முடியவில்லை எனும் மோசமான நிலையை அடைபவர்களுக்கு மனநல மருத்துவ சிகிச்சை கட்டாயம் தேவைப்படுகிறது. இவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் சந்திக்கும் அதே அளவுக்கான பாதிப்பை அடைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. மூளை நரம்புகளில் ஒரேவிதமான அறிகுறிகளே தென்படுகிறது. போர்னோ படங்கள் பார்க்கும் பழக்கத்தில் இருந்து வெளியில் வர அவர்களுக்கு பிஹேவியரல் தெரபி அளிக்கப்படும்.
பின் அதனால் மனதளவில் அடைந்திருக்கும் பாதிப்பில் இருந்து வெளியில் வர மாத்திரைகள் அளிக்கப்படும். மீண்டும் போர்னோ படங்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வெளியில் வர பாஸிட்டிவ் சிந்தனைக்கான வழிகளும் ஏற்படுத்தப்படும். போர்னோ படம் பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அது உண்மையில்லை.
கட்டமைக்கப்படும் கதைக்கு நடிகர்களில் நடிப்பே என்று நம்ப வேண்டும். அதற்கு அடிமையாவதால் தங்களின் சுய வளர்ச்சி மற்றும் சமூக உறவில் ஏற்படும் சிக்கல்களைப் புரிந்துகொண்டு வேறு நல்ல சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் வாய்ப்பிருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தனிமையை குறைத்துக் கொள்வதுடன் ஆன்லைன் சர்ச்சிங் கண்காணிக்கப்படுவதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.’’
Average Rating