ட்வின்ஸ்!! (மருத்துவம்)

Read Time:16 Minute, 4 Second

எந்திரன்’ படம் ரிலீசான நேரம்… கடவுள் படைச்சதுலேயே உருப்படியான ரெண்டே விஷயம்… ஒண்ணு நான்… இன்னொண்ணு நீ…’ என ரோபோ ரஜினி பேசிய டயலாக் பிரபலமானது!

அந்த டயலாக் என் இரட்டையரின் ஃபேவரைட் ஆனது. இருவரும் ஒற்றுமையாக இருக்கும் தருணங்களில் கடவுள் படைச்சதுலயே உருப்படியான ரெண்டே விஷயம்… ஒண்ணு நான்… இன்னொண்ணு நீ…’ எனச் சொல்லி என்னைத் திகைக்க வைப்பார்கள். இருவருக்குள்ளும் சின்னதாக ஏதாவது ஒரு சண்டை வந்தாலும் அந்த வசனம் மாறிப் போகும்… எப்படித் தெரியுமா?

கடவுள் படைச்சதுலயே உருப்படியான விஷயம் ஒண்ணே ஒண்ணுதான். அது நான்’ என்பார்கள் போட்டி போட்டுக் கொண்டு! அவர்களது புத்திசாலித்தனத்தைப் பார்த்து வியப்பதா அல்லது போட்டி மனப்பான்மையைக் கண்டு வருத்தப்படுவதா எனத் தெரியாமல் தவித்திருக்கிறேன். பகலில் கட்டி உருண்டதைப் பார்த்து மிரண்டும், இரவில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி தூங்குகிற காட்சியைப் பார்த்து நெகிழ்ந்தும் போயிருக்கிறேன். இரட்டையரின் அம்மாவாக ஆசீர்வதிக்கப்பட்டதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறேன்.

இரட்டைக் குழந்தைகளுக்குள் அவ்வப்போது வருகிற சின்னச் சின்ன போட்டிகளும் சண்டைகளும் சகஜமானவை. தானாக வந்து தானாக சரியாகிவிடக்கூடியவை. ஆனால், அவர்களுக்குள் வருகிற Twin Escalation Syndrome (TES) அப்படி சகஜமானதாக அணுகப்பட வேண்டியதில்லை’’ என்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

அதென்ன… ட்வின் எஸ்கலேஷன் சிண்ட்ரோம்?

பிரச்னை என்னவோ இரட்டையரிடம் ஏற்படுவது என்றாலும், பாதிக்கப்படுபவர்கள் பெற்றோராகவே இருப்பார்கள். உதாரணத்துக்கு இருவரில் ஒரு குழந்தை பால் பாட்டிலில் உள்ள பாலை கீழே கொட்டி விளையாடுகிறது என வைத்துக் கொள்வோம். அதைப் பார்த்த இன்னொரு குழந்தை, அதைவிட ஒருபடி மேலே போய், பாட்டிலில் உள்ள பால் மொத்தத்தையும் தன் மேல் ஊற்றி அபிஷேகமே செய்து கொள்ளும். ஒன்று அழுகிறது என்றால், அதைப் பார்த்து இன்னொன்று இன்னும் வேகமாக, சத்தமாக அழும். டூத்பேஸ்ட்டை மொத்தத்தையும் பிதுக்கி வெளியில் எடுத்து கைதட்டி மகிழும் ஒன்று.

இன்னொன்றோ அந்த பேஸ்ட்டில் பிரஷ்ஷை வைத்துத் தேய்த்தும், தலை முதல் கால் வரை தடவிக் கொண்டும் இப்ப என்ன பண்ணுவே’ என்கிற ரேஞ்சில் நிற்கும். இந்தக் காட்சிகளைப் பார்க்கிற பெற்றோருக்கு பிபி எகிறும்… பைத்தியமே பிடிக்கும்.
நல்ல விஷயங்களை ஒருவரைப் பார்த்து இன்னொருவர் காப்பி அடிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், இந்த ட்வின் எஸ்கலேஷன் சிண்ட்ரோமில் இரட்டையர் எப்போதும் கெட்ட விஷயங்களையே காப்பி அடிப்பார்கள்.

ஒரு குழந்தைக்கான நேரத்தை, எனர்ஜியை, அன்பை, பொறுமையை… இப்படி எல்லாவற்றையும் இருவருக்கும் சரிசமமாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டிய மிகப்பெரிய சவால் பெற்றோருக்கு… அப்படி மொத்த எனர்ஜியையும் அன்பையும் நேரத்தையும் இரட்டையர் தன் பக்கமே ஈர்க்க நினைக்கிற போது உருவாகிற உளவியல் பிரச்னைதான் இது…’’ என்கிற டாக்டர் சுபா சார்லஸ், இதைக் கையாளவும் பெற்றோருக்கு டிப்ஸ் தருகிறார்.

கூடிய வரையில் இருவரையும் தனித்தனியே வையுங்கள். இருவரும் ஒன்றாக இருக்கும்போதுதான் இந்த சிண்ட்ரோம் தன் வேலையைக் காட்டும்.

விளையாடும் போதோ, சைக்கிள் ஓட்டும் போதோ, வேறு வேலைகளின் போதோ… இருவருக்கும் குறிப்பிட்ட நேரத்தை அனுமதியுங்கள். ஒருத்(தி)தன் விளையாட வரைக்கும் இன்னொரு(த்தி)வன் அம்மா பக்கத்துலயே இருக்கணும்… அம்மா கம்ப்யூட்டர்ல வேலை பார்க்கப் போறேனாம்… பக்கத்துலயே உட்கார்ந்து அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணணுமாம்…’ என்று இருவரில் ஒருவரின் கவனத்தைத் திசை திருப்புவதன் மூலம் இந்தப் பிரச்னையை எளிதாகக் கையாளலாம்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களுக்கு பூமாதேவி பட்டமே கொடுக்கலாம். அத்தனை பொறுமை அவர்களுக்குள் புகுந்திருக்கும். ஆனாலுமே, ட்வின் எஸ்கலேஷன் சிண்ட்ரோம் உள்ள குழந்தைகளைக் கையாளும் போது எப்பேர்பட்ட பொறுமையும் புஸ்வாணமாகிப் போய் விடும். இருவரும் அடிக்கிற கூத்தில் அதிக டென்ஷனாகி, கோபத்தில் கத்திக் கூச்சலிட்டு, குற்ற உணர்வில் நிற்பவர் பெரும்பாலும் அம்மாவாகத்தான் இருப்பார். எனவே, கோபம் கூடாது. சகித்துக் கொள்ள முடியவில்லையா? பக்கத்து அறைக்குப் போய் ஆழ்ந்த மூச்சு விட்டு, சில நொடிகள் ரிலாக்ஸ் செய்யலாம். தண்ணீர் குடிக்கலாம்.

இருவருடனும் தனித்தனியே நேரம் செலவிடப் பழகுங்கள். பல நேரங்களில் இருவரும் ஒரே நேரத்தில் ஏதேனும் விஷயங்களை அம்மாவிடம் சொல்ல முனைவார்கள். அப்போது அவர்களை அமைதிப்படுத்தி, முதல்ல நீ சொல்றதைக் கேட்கறேன்… அடுத்து நீ சொல்லணும் சரியா…’ எனப் பழக்குங்கள். அடுத்த நாள் அந்த ரொட்டீனை மாற்றி, இரண்டாவது பேசிய குழந்தையை முதலில் பேச வையுங்கள்.

கடைசியாக ஒரு விஷயம்… இது ஒருவகையான உளவியல் சிக்கல்தான். ஆனால், தீர்க்க முடியாததல்ல. சரியான அணுகுமுறையின் மூலம் இதை சுலபமாகக் கடந்து விடலாம். அதுவரை `இதுவும் கடந்து போகும்’ என சொல்லிக் கொள்ளுங்கள்.

ரெட்டை சந்தோஷம்!

இன்னொரு குழந்தைக்கு ஐடியா இருக்கா?’ என இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அம்மாக்களைக் கேட்டுப் பாருங்கள்…
கையெடுத்துக் கும்பிடுவார்கள். அடுத்தடுத்து பத்து குழந்தைகளைக் கூடப் பெற்று வளர்த்து விடலாம். ஆனால், ஒரே பிரசவத்தில் இரண்டு என்றால் அனேக அம்மாக்களுக்கு அது மிரட்சியான அனுபவத்தையே கொடுத்திருக்கும்.விதிவிலக்காக வியப்பளிக்கிறார் நந்தினி விஜயகுமார். சின்மயி, சிரஞ்சீவி என இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த நந்தினிக்கு, இன்னொரு முறை அந்த அனுபவம் வாய்த்தாலும் சந்தோஷமாக ஏற்கத் தயாராம்! இரட்டையரை சுமந்த, பெற்றெடுத்த, வளர்க்கிற அனுபவம் அவருக்கு ஒவ்வொரு கட்டத்திலும் சிலிர்ப்பைத் தந்திருக்கிறது… தருகிறது!

கல்யாணமாகி ரெண்டு வருஷம் கழிச்சு கர்ப்பமானேன். முதல் ஸ்கேன்ல என்னோட டாக்டர் ‘ட்வின்ஸா இருக்கலாம்… ஆனா, உறுதியா சொல்ல முடியலை’னு சொன்னாங்க. எனக்கோ, கணவருக்கோ குடும்பப் பின்னணியில யாருக்கும் ட்வின்ஸ் இல்லை. அதனால பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. அளவுக்கு அதிகமான வாந்தி, மயக்கம், தலைசுற்றல்னு வழக்கமான எல்லா அறிகுறிகளும் இருந்தது. அதிகமாவே இருந்தது. 7வது மாசம் வரைக்கும் ஸ்கேன் அவசியமில்லைனு சொல்லிட்டாங்க என் டாக்டர். 7வது மாச ஸ்கேன்லதான் ட்வின்ஸ்னு தெரிஞ்சது. அப்பவும் ஆணா, பெண்ணாங்கிறதை சொல்லலை.

எந்தப் பெண்ணுக்கும் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டிருக்காது. ட்வின்ஸ்னு தெரிஞ்சதும் எனக்குள்ள பயமும், சந்தோஷமும் கலந்த ஒரு தவிப்பான உணர்வு…. என் கை என்னையும் அறியாம எப்போதும் என் வயித்தைத் தாங்கிப் பிடிச்சுக்கிட்டே இருக்கும். குழந்தைங்க விழுந்துடுவாங்களோனு ஒரு பயம்… 7வது மாசம் ட்வின்ஸ்னு தெரிஞ்சு, எட்டாவது மாசக் கடைசியில எனக்கு டெலிவரி பண்ணிட்டாங்க. பனிக்குடம் உடைஞ்சிருச்சுனு சிசேரியன்ல ஆண் ஒண்ணும், பெண் ஒண்ணுமா குழந்தைங்களை எடுத்துட்டாங்க. அப்பவும் என்னால சந்தோஷம் அனுபவிக்க முடியலை.

என் பொண்ணு பிறக்கிறப்ப வெறும் 900 கிராம்தான் எடை இருந்தா. பிரசவம் ஆன ஒரு வாரத்துல பையனை மட்டும் என் கையில கொடுத்து டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க. பொண்ணுக்கு 48 மணி நேரம் டைம் கொடுத்திருந்தாங்க. குறைப்பிரசவக் குழந்தைங்கிறதால, நுரையீரல் முழுமையா வளர்ச்சியடையலை… சந்தேகம்தான்னு சொல்லிட்டாங்க. ரெட்டைக் குழந்தைங்கனு கனவுகளை சுமந்து, அந்தக் கனவு வளர்றதுக்கு முன்னாடியே குழந்தைங்களை கையில ஏந்தி, அதுலயும் ஒரு குழந்தையை வீட்டுக்கு அனுப்பிட்டு, இன்னொரு குழந்தையை ஆஸ்பத்திரிலயே வச்சுக்கிற கொடுமையை நான் அனுபவிச்சேன்.

கிட்டத்தட்ட 2 மாசம் என் பொண்ணை ஆஸ்பத்திரிலயே வச்சிருந்து, ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க. நான் தாய்ப்பாலை எடுத்து ஆஸ்பத்திரிக்கு கொடுத்தனுப்புவேன். வாரம் தவறாம அவளை கண் டாக்டர்கிட்ட டெஸ்ட்டுக்கு கூட்டிட்டுப் போவேன். ரெண்டு மாசத் தவிப்புக்குப் பிறகு மகளையும் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். அந்த ரெண்டு மாசக் கஷ்டங்களை எல்லாம் ஈடுசெய்யற மாதிரி, இதோ 10 வருஷங்களா சந்தோஷங்களை மட்டுமே அனுபவிச்சிட்டிருக்கேன்…’’ என்கிற நந்தினிக்கு இரட்டையரின் அம்மாவாக இருப்பதுதான் ஆகச்சிறந்த மகிழ்ச்சியாம்!

குழந்தைங்க பிறந்ததும் அவங்களைப் பார்த்துக்கிறதையும் அவங்கக்கூட இருக்கிறதையுமே முழுநேர வேலையா சந்தோஷத்தோட ஏத்துக்கிட்டேன். கழுத்து நிற்கற வரைக்கும் ரெண்டு பேரையும் தனித்தனியா குளிப்பாட்டுவோம். கழுத்து நின்னதும் ரெண்டு பேரையும் ஒரே டப்ல வச்சு குளிப்பாட்டறதும், ரெண்டு பேரும் ஒண்ணா நடை பழகறதையும் ஒருத்தருக்கொருத்தர் மழலையில பேசிக்கிறதையும் ரசிக்கிறதுதான் எனக்கு வாழ்க்கையா இருந்தது. 5 வருஷம் வரை அப்படித்தான் இருந்தேன்.

அவங்க ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்ச பிறகுதான் என் பிசினஸை மறுபடி ஆரம்பிச்சேன். என்னோட ரெண்டு குழந்தைங்களும் பயங்கர ஒற்றுமை. பிறந்ததுலேருந்தே அந்த அன்யோன்யத்தை அவங்கக்கிட்ட பார்க்கறேன். இப்ப ரெண்டு பேரும் 5வது படிக்கிறாங்க. போன வருஷம் வரைக்கும் தனித்தனி செக்‌ஷன்ல படிச்சவங்க, இந்த வருஷம் ஒரே செக்‌ஷன்ல போடச் சொல்லி அடம் பிடிச்சாங்க. ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும்னு நினைக்கிற ஆசைக்கு நான் தடை போடலை. அவங்க ரெண்டு பேரோட ஒற்றுமையையும் மீறி நான் எதையுமே செய்ய முடியாது.

ஒரே பிரசவத்துல ரெண்டு குழந்தைங்க… அதுவும் ஒரே மாதிரி விருப்பங்கள், சிந்தனைகள் உள்ள அற்புதமான குழந்தைங்க கிடைக்க நான் எத்தனை ஜென்மங்கள் புண்ணியம் பண்ணியிருப்பேனோ தெரியலை… ரெட்டைக் குழந்தைங்களை சுமந்து, பெற்று, வளர்த்துக்கிட்டிருக்கிற இந்தப் பயணத்துல எனக்கு சின்னதா கூட ஒரு சலிப்போ, அலுப்போ தெரியலை. ஒவ்வொரு நொடியையும் நான் ரசிக்கிறேன். அதனாலதான் சொல்றேன்… இன்னொரு முறை இந்த அனுபவம் எனக்குக் கிடைச்சாலும் அதை ரெட்டை சந்தோஷத்தோட ஏற்க நான் தயார்…’’ – நம்பிக்கையுடன், நயம்படச் சொல்கிறார் நந்தினி.

நந்தினியின் டிப்ஸ்

ட்வின்ஸாங்கிற ஆச்சர்யத்தோட ஆரம்பிச்சு, ‘கர்ப்ப காலத்துல அப்படியிருக்கும்… பிரசவத்தின் போது பயங்கரமா இருக்கும்… பிரசவத்துக்குப் பிறகு அம்மாவுக்கு பைத்தியமே பிடிக்கும்’னெல்லாம் பயமுறுத்தறவங்க நிறைய பேர்… எதையுமே காதுல போட்டுக்காதீங்க. இன்னிக்கு ஒரு குழந்தை போதும்னு நினைச்சு நிறுத்திக்கிறவங்கதான் அதிகம். அப்படிப்பட்டவங்களுக்கு மத்தியில ஒரே நேரத்துல ரெண்டு குழந்தைங்களை சுமந்து, வளர்க்கிறது கடவுளோட மிகப்பெரிய வரம்னுதான் சொல்லணும்… வாழ்க்கையில வேறெந்த அனுபவத்தோடவும் ஆனந்தத்தோடவும் ஒப்பிடவே முடியாத வரம் அது…’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனுசரிப்புக் கோளாறுகள் (ADJUSTMENT DISORDERS)!! (மருத்துவம்)
Next post போர்னோ போதை!! (அவ்வப்போது கிளாமர்)