சீர் குலைக்கும் மனநிலை கோளாறு (Disruptive Mood Dysregulation Disorder)!! (மருத்துவம்)

Read Time:14 Minute, 30 Second

மனசே… மனசே… டாக்டர் சித்ரா அரவிந்த்

குழந்தை மற்றும் டீனேஜரைப் பாதிக்கும் மனச்சோர்வுக் கோளாறுகளில் ஒன்றான சீர்குலைக்கும் மனநிலை கோளாறு (DMDD) பற்றி அலசுவோம்…

எல்லாக் குழந்தைகளுமே, தனக்குப் பிடித்தவாறு விஷயங்கள் நடக்கவில்லையெனில், சண்டித்தனம் செய்வது வழக்கமே. பெரும்பாலான குழந்தைகள் கோபம், வருத்தம் போன்ற மோசமான எதிர்மறை மன நிலையுடன் காணப்படுவதும் சகஜமே. அதுவே, அடிக்கடி / கடுமையாக, விரும்பத்தகாத அளவில் எரிச்சல் மற்றும் கோபத்தை வெளிக்காட்டினால், அது அவர்கள் பள்ளி, குடும்ப வாழ்க்கையை பாதிக்கக்கூடும்.

தொடர்ந்து எரிச்சல் மனநிலையிலேயே இருப்பது மற்றும் அடிக்கடி, கடுமையாகவும் பெருங்கோபத்துடனும் சுய கட்டுப்பாட்டை மீறி செயல்படும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு இக்கோளாறு இருக்கும். இக்குழந்தைகளுக்கு தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத் திருப்பது மிகவும் கடினமான விஷயம். சிறு வயதிலிருந்தே, தொடர்ந்து எரிச்சல் / கோபம் கொள்ளும் குழந்தைகளுக்கு DMDD தாக்கும் அபாயம் அதிகம்.

DMDD பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் மனச்சோர்வு மற்றும் பதற்றக் கோளாறுகளுக்கு உள்ளாகும் வாய்ப்புகளும் அதிகம். பொதுவாக, பெண்களைவிட இது ஆண்களைதான் பாதிக்கிறது.

இதன் அறிகுறிகள்…

1. சின்ன விஷயத்துக்குக் கோபம் கொண்டு சத்தம் போடுவது / மற்றவருக்கோ அவர்கள் பொருட்களுக்கோ தீங்கு செய்வது.

2. இவர்களின் கோபத்தின் வெளிப்பாட்டுக்கும் அவர்கள் வயதுக்கும் சம்பந்தமே இருக்காது. அதாவது, சின்னக் குழந்தை அழுது அடம்பிடிப்பது அதன் வயதுக்கு உரிய செயலே! வளர்ந்த பின்னரும் அப்படி நடந்துகொண்டால் , அது இயல்பற்றதாகி விடுகிறது.

3. சராசரியாக வாரம் மூன்று அல்லது அதற்கும் அதிகமாக, இவர்கள் நிதானமின்றி நடந்து கொள்வார்கள்.

4. கோப வெளிப்பாடு இல்லாத நேரங்களிலும், இவர்கள் தொடர்ந்து எரிச்சல் / கோபத்துடனே தினந்தோறும் காணப்படுவார்கள். இவர்களின் இந்த மனநிலை, பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கும் வெளிப்படையாக தெரிந்திருக்கும்.

இந்த எல்லா அறிகுறிகளும் ஒரு வருடத்துக்கும் மேலே காணப்பட்டு, இடையில் குறைந்தபட்சம் 3 மாதம் இடைவெளியின்றி அறிகுறிகள் தொடா்ந்து இருந்து கொண்டேயிருந்தால்தான் அது சீர்குலைக்கும் மனநிலைக் கோளாறு என நிர்ணயிக்கப்படும். இத்தகைய அறிகுறிகள், ஒரு குறிப்பிட்ட சூழலில் மட்டும் வெளிப்படையாக தெரிவதோடு, வீடு, நண்பர்கள் மற்றும் பள்ளி போன்ற பலதரப்பட்ட சூழல்களுள், குறைந்தபட்சம் இருவேறு சூழல்களிலும் காணப்படுகிறது.

ஏதேனும் ஒரு சூழலிலாவது மிகவும் கடுமையாக வெளிப்பட வேண்டும். பெற்றோரிடத்தில் மட்டுமே இவ்வறிகுறிகள் காணப்பட்டால், அது (DMDD) ஆகாது. இக்கோளாறு 6 வயதுக்கு மேல் 18 வயதுக்குள்தான் கண்டறியப்படுகிறது. ஆட்டிஸ கோளாறுகள் (Autism), பிரிவு குறித்த பதற்றக் கோளாறு (Separation Anxiety Disorders), தொடர்ந்திருக்கும் மனச்சோர்வு (Dysthymia), அதிர்ச்சிகரமான மனஅழுத்த நோய் (Trauma and Stress related disorders) கோளாறுகள் ஏற்படுத்தும் அறிகுறிகளிலிருந்து DMDD வேறுபட்டு இருக்கும். தீவிர மனச்சோர்வு நோய் ஏற்படுத்தும் அத்தியாயங்களின் (Episodes) போது மட்டுமே இவ்வறிகுறிகள் காணப்பட்டால் அது DMDD ஆக இருக்காது.

கண்டறிவது எப்படி?

நடத்தைக் கோளாறுகளான இணக்கமற்ற நடத்தை கோளாறு (ODD), இடைவிட்டு வெடிக்கும் கோளாறு (Intermittent Explosive Disorder-IED) மற்றும் உணர்ச்சி கோளாறான ‘பைப்போலார் கோளாறு’ போன்ற மனநலப் பிரச்னைகள், DMDD உடன் சேர்ந்து ஒருவருக்கு இருக்க வாய்ப்பில்லை. கோபம், எரிச்சல் முக்கிய மாகக் காணப்படும் இடைவிட்டு வெடிக்கும் கோளாறுக்கும் (IED), DMDDக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. IED, உளத்தூண்டல் கட்டுப்பாடு கோளாறுகள் (Disruptive Impulse Control disorders) வகையைச் சேர்ந்த நடத்தை சார்ந்த கோளாறு.

இவர்கள் மன உளைச்சல் தரும் சூழ்நிலையில் மட்டுமே, அதீத ஆத்திரம் காட்டுவார்கள். ஆனால், DMDD மனநிலை / உணர்ச்சி சார்ந்த கோளாறு என்பதால், எப்போதும் எரிச்சல் / கோபத்துடனே காணப்படுவார்கள். ஏற்கெனவே பார்த்த கோளாறான, இணக்கமற்ற நடத்தை கோளாறின் (Oppositional Defiant Disorder-ODD) அறிகுறிகளும், பாதிக்கப்பட்டவரிடையே காணப்பட்டால், அவர்களுக்கு DMDD மட்டுமே உள்ளதென அர்த்தம்.

DMDD கோளாறு உள்ள குழந்தைகளுக்கு மேனியா / ஹைப்போ

மேனியா அறிகுறிகளான, அதீத புத்துணர்ச்சி, அதிக தற்பெருமை பேச்சு, உளப் போராட்டம், அதீத செயலைத் தூண்டும் எண்ணங்கள், குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது போன்றவை இருக்காது. DMDD அறிகுறிகளுடன் ‘மேனியா’ அறிகுறிகளும் சேர்ந்து காணப்பட்டால் அது ‘பைப்போலார் கோளாறுகள்’ (Bipolar Disorders) என அறியப்படுகிறது. பைப்போலார் கோளாறுக்கான சிகிச்சை வேறு… சீர்குலைக்கும் மனநிலை கோளாறுக்கான சிகிச்சை வேறு. சிகிச்சையை மேம்படுத்த சமீபத்தில், ஆராய்ச்சியாளர்களால் கண்டு் பிடிக்கப்பட்ட புதுவித கோளாறுதான் DMDD.

DMDD அறிகுறிகள் எல்லாமும், வேறு மருந்து / உடல்நல / நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் ஏற்பட்டிருந்தால், அது DMDD என சொல்ல முடியாது. மனநல நிபுணர் தகுந்த உடல் / மனநல ஆய்வுக்குப் பின்னரே, ஒருவருக்கு DMDD என்பதை நிர்ணயம் செய்ய முடியும். இதன் அறிகுறிகள், வேறுபல கோளாறுகளின் அறிகுறிபோல காணப்படும் என்பதால், தேர்ச்சி பெற்ற உளவியல் நிபுணர் / மனநல மருத்துவரால்தான் இதை சரிவர நிர்ணயம் செய்து சரியான சிகிச்சைக்கு வழி வகுக்க முடியும்.

DMDD உடன் காணப்படும் வேறு பல மனநலக் கோளாறுகள்

DMDD தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தீவிர மனச்சோர்வு நோய் (Major Depressive Disorder), ஏ.டி.எச்.டி. (ADHD), நடத்தைக்கோளாறு (Conduct Disorder), பதற்றக் கோளாறு (Anxiety Disorders), போதை அடிமைக் கோளாறு (Substance Abuse Disorders) போன்ற வேறு பல மனநலக் கோளாறு இருக்கும் வாய்ப்பும் உள்ளது.

சிகிச்சை

இதன் காரணி சரிவர கண்டறியப்படவில்லை. மருந்து மற்றும் சைக்கோதெரபி மூலம், DMDD யை கட்டுப்படுத்த முடியும். DMDD சிகிச்சையைக் குறித்து பல ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செயல்முறை சார்ந்த நடத்தை பகுப்பாய்வு (Applied behavior analysts), அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை, குடும்ப ஆலோசனை, அவசரக்கால மேலாண்மை (Contingency management), இதை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.

இவர்களுக்கு, தங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளவும், அதை சமாளிக்கவும் வழிமுறை கற்றுத் தரப்படுகிறது. மற்றவர்களின் செயல்பாடுகளின் சரியான நோக்கத்தை புரிந்துகொள்ள உளவியல்-சார் கல்வி (Psychoeducation) தரப்படுகிறது.மருந்துகள் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில், சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்.

ஏனெனில், சிகிச்சையளிக்கப்பட்ட சில வாரங்களில், நல்ல மாற்றம் தெரிய ஆரம்பித்த உடன், பெற்றோர்/பாதிக்கப்பட்டவர் சிகிச்சையை நிறுத்துவது மிகவும் தவறான விஷயம். பாதியிலேயே நிறுத்தப்படும் மருந்தினால், கோளாறு திரும்ப தாக்கும் அபாயம் அதிகமாகிறது. பல தருணங்களில், மருத்துவரின் ஆலோசனை இல்லாமலேயே, மருந்துகளை தொடர்ந்தும் சிலர் சாப்பிட்டு வருவதுண்டு. இதனால் பல மோசமான பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. சில நேரங்களில், இப்படி கொடுக்கப்படும் மருந்துகளுக்கு பாதிக்கப்பட்டவர் அடிமையாகும் சூழலும் ஏற்படுவதுண்டு.

குழந்தை மற்றும் டீனேஜரை பாதிக்கும் உண்ணுதல் கோளாறுகள் (Eating Disorders) குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

ராகுல் ஏன் ரெளத்திரம் ஆனான்?

8 வயது சிறுவன் ராகுல். அம்மா மற்றும் வளர்ப்புத் தந்தையுடன் வாழ்ந்து வந்தான். ராகுல் எப்போதுமே எரிச்சல், கோபம் உள்ளவனாக இருந்தாலும், இப்போது, அவன் செயல்பாடுகள் மிகுந்த பிரச்னையை ஏற்படுத்தியதால், சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அவன் தன் வயதொத்த மாணவர்களைக் காட்டிலும் எளிதில் உணர்ச்சிவசப்படுவதுண்டு. ஒருமுறை, நடந்து போய்க் கொண்டிருக்கும்போது, தெரியாமல் சக மாணவனின் கை அவன் மேல் பட்டதற்கு, வெறித்தனமாக கோபம் கொண்டு அடித்து விட்டான். பள்ளியில் பல பிரச்னைகளில் சிக்கி, பிற குழந்தைகளின் பெற்றோர் புகாரினால், அடிக்கடி தலைமையாசிரியரைப் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்தத் தகவல்கள் ராகுலின் தாய்க்கு அதிர்ச்சியாக இல்லை. ஏனெனில், ராகுல் சிறு குழந்தையாக இருந்த போதிலிருந்தே எதற்கெடுத்தாலும் வெறுப்பு, எரிச்சல் அடைந்து விடுவான். வளர வளர, அவனுக்கு பிடித்தவாறு, வீட்டில் ஏதேனும் நடக்கவில்லையெனில், பொருட்களைத் தூக்கியெறியவும் தயங்க மாட்டான். பலமுறை, தன்னைத் தானே அடித்துக் கொண்டதாகவும் அவன் தாய் கூறினார். ஆனால், ஏதேனும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதிலும் படிப்பதிலும் பெரிய பிரச்னை ஏதுமில்லை என தெரிவித்தார். பள்ளியில், ஆசிரியரிடம் கூட அதிக கோபம் கொண்டு கத்துவதாகவும் கூறி வருத்தப்பட்டார். இதனால், அவன் படிப்பு கெட்டுப் போகிறது என்றார்.

அவனுக்கு வரும் கட்டுப்படுத்த முடியாத கோபம் 10 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை கூட நீடிப்பதாகவும் கூறினார். அவன் சோர்ந்து போகும் வரை கூட நிதானத்துக்கு வருவதில்லை எனவும் தெரிவித்தார். சில ஆய்வுக்குப் பின், ராகுலுக்கு DMDD இருப்பது நிர்ணயிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் தொடர்பாக, பெற்றோருக்கு ராகுலிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், கோபம் எல்லை மீறும் வேளையில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ராகுலுக்கு கோபம் வராமலிருக்கும் போது ஆலோசனை வழங்கப்பட்டதோடு, கோபம் வந்துவிட்டால், அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதற்கான திறன்கள் பயிற்றுவிக்கப்பட்டன. எதிர்மறை நிகழ்வுகளை சமாளிக்கும் வழிமுறைகள் மற்றும் பிறரிடம் பழகும் வழிமுறைகளும் (Social Skills) சொல்லி தரப்பட்டது. தேவைப்பட்டால், மருந்துகளும் பரிந்துரைக்கப்பட்டது. 3 மாதங்களுக்குப் பின் ராகுலின் நடத்தையில் நல்ல மாற்றம் தெரிந்தது. 3 மாதம் தொடர்ந்து எந்த அறிகுறிகளும் இல்லாத பட்சத்தில் மட்டுமே, மருந்துகளை நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா?! (அவ்வப்போது கிளாமர்)
Next post குழந்தைகளுக்குமா ஆர்த்ரைட்டிஸ்? (மருத்துவம்)