பர்சனல் ஸ்பேஸ் வேண்டும்!! (மருத்துவம்)
குட் டச்… பேட் டச்… க்ருஷ்னி கோவிந்த்
ஒரு சிறு சம்பவம்… தோழி ஒருவரின் பதின்ம வயது பையன், நண்பர்களே இல்லாமல் பெற்றோரே எல்லாம் என்று இருந்தான். 11வது வகுப்பில் வேறு பள்ளி மாற்றம். சட்டென்று நிறைய நண்பர்கள், எல்லோரும் வீட்டுக்கு வருவதும் அரட்டையும் சிரிப்புமாக அவன் அவனுடைய உலகில் மூழ்கியிருந்தான். தோழி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். காரணம் மிகவும் எளிது. முன் போல மகன் அவரிடம் பேசுவது இல்லை. நண்பர்கள் வந்தால் அவனுடைய அறைக்கதவை அறைந்து சாத்துகிறான். இவர் உள்ளே சென்றால், பேசிக் கொண்டிருப்பதை நிறுத்திவிடுகிறார்கள்.
இவரின் தோழிகளின் குடும்ப விழாக்களில் பங்கு பெற தயங்குகிறான். அப்படியே பங்கேற்றாலும் ஒரு சாதாரண அணைப்புக்கு முகம் சுளிக்கிறான். அந்த பார்ட்டிகளில் இவன் நண்பர்கள் இருந்தாலோ, அவர்களின் சிலருடைய பெற்றோருடனே நெருக்கம் காட்டுகிறான். இப்படி பல குற்றச்சாட்டுகள்!இதே போன்ற சந்தர்ப்பங்களை நாமும் எதிர்கொண்டிருப்போம். அல்லது இனிமேல் எதிர்பார்க்கலாம். இந்தச் சம்பவத்திலிருந்து சில கேள்விகள்… நம்மையே கேட்டுக்கொள்வோமே…
1. பள்ளி மாறியதால் உங்கள் மகன் மாறிவிட்டான் என்று நினைக்கிறீர்களா?
2. நண்பர்களுடன் சிரிப்பும் அரட்டையும் தவறா?
3. அறைக்கதவை அறைந்து சாத்துவது சரியா? தவறா?
4. தோழி செல்லும்போது மகன் பேச்சை நிறுத்தியது சரியா? தவறா?
5. குடும்ப விழாக்களில் அவசியம் பங்கேற்க வேண்டுமா?
6. அணைப்புக்கு முகம் சுளிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
7. சிலருடன் மட்டும் நெருக்கமாக இருப்பது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடும் முன் நம் வாழ்க்கையை சிறிது ஃப்ளாஷ்பேக் செய்து பார்க்கலாம். நம் பதின்ம வயதில் நம் பெற்றோர் நினைத்த நேரத்தில் வெளியே சென்று வர அனுமதித்தார்களா? ஆணோ பெண்ணோ – நம் நண்பர்களை / சிநேகிதிகளைப் பற்றி நம் பெற்றோருக்கு ஒரு அபிப்ராயம் இருந்ததா, இல்லையா? நம் தோழிகளின் குடும்பத்தை பற்றி நம் பெற்றோர் அறிந்து வைத்திருந்தார்களா, இல்லையா? நம் பெற்றோர் சென்ற எல்லா விழாக்களுக்கும் நாம் உடன் சென்றோமா? நம் தோழியுடன் பேசிக் கொண்டிருக்கையில், நம் தாயோ தந்தையோ வந்தால் நாம் பேச்சை தொடர்ந்திருக்கிறோமா? நமக்கு விருப்பமான நண்பர்களோ உறவினர்களோ வந்தாலோ, அவர்களை சந்தித்தாலோ, நாம் கொஞ்சம் அதிக மகிழ்ச்சி அடைந்தோமா, இல்லையா?
இப்போது நாம் நம் குழந்தைகளை பற்றி நினைத்தது போலத்தானே நம் பெற்றோரும் நினைத்திருப்பார்கள்? அப்போது நாம் இருந்த மனநிலையில்தான், இப்போது நம் குழந்தைகள் இருப்பார்கள். பள்ளி மாறியதால் மகன் மாறவில்லை. அவன் பதின்ம வயதின் ஹார்மோன்கள் மாறியது. நண்பர்களுடன் மனம் விட்ட சிரிப்பும் அரட்டையும் மிக அவசியம், இந்த காலகட்ட குழந்தைகளுக்கு.
அறைக்கதவை அறைந்து சாத்தும்படி நாம் நடந்திருக்கக் கூடாது. அவனையும் அப்படி ஒரு செயல் செய்ய அனுமதிக்கவும் கூடாது. நண்பர்கள் முன் கதவைச் சாத்துவது பெற்றோருக்கு நன்மதிப்பை தராது. தோழர்களுக்கு இடையில் செல்லும் போது கதவில் சிறு தட்டலோ, ஒரு அழைப்போ அவர்களின் சுதாரிப்புக்கு உதவும்.
குடும்ப விழா என்பது மிக தனிப்பட்ட விஷயம். ஒவ்வொரு குடும்பத்துக்குமான சந்தர்ப்ப சூழ்நிலைகளின்படி முடிவெடுக்க வேண்டியதுதான். அதில் குழந்தைகளின் பங்கு அவசியம் எனில், அவர்களிடமும் கலந்து ஆலோசிப்பதில் தவறில்லை.
அணைப்புக்கு முகம் சுளிப்பது என்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதையே தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கிறது. சிலருடன் நெருக்கமாக இருப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை நாம் அறிய உதவும் வாய்ப்பு.இதைத்தான் ‘பர்சனல் ஸ்பேஸ்’ என்கிறோம். அவர்களின் விருப்பம், ஆசை, கம்ஃபர்ட்டபிள் என்னவெனத் தெரிந்து, அதை மதிப்பதும் அதற்கு சம்மதித்து அனுமதிப்பதும்தான் இது.
இந்த பர்சனல் ஸ்பேஸ் என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் மாறுபடும். நான், எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சவங்க, எனக்கு ரொம்ப பிடிச்சவங்க – எனக்கு ஓ.கே.வா இருக்கறவங்க, கொஞ்சம் உஷாரா இருக்க வேண்டியவங்க, எனக்கு கொஞ்சம் பிடிக்காதவங்க, பிடிக்கவே பிடிக்காது, வெறுப்பு என்று பல்வேறு நிலைகளையும் கொண்டது.
இது மனிதராக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை… ஒரு பைக், ஒரு சைக்கிள், ஒரு சிறிய பொம்மை, ஒரு பென்சிலாகக் கூட இருக்கலாம். அந்தப் பொருளை பலவந்தமாக இன்னொருவருடன் பகிரும் நிலை வரும்போது ஏற்படும் வெறுப்பு அந்த பொருள் மேல் போகாது. அதை பகிர்ந்தவர் மேலும், பகிர வைத்தவர் மேலுமே செல்லும். பிசிகல் பிரைவசி, எமோசனல் பிரைவசி, பிரைவேட் ஸ்பேஸ்… அவர்களின் தொடுதல் சம்பந்தப்பட்ட விஷயம் மிக முக்கியம். அவர்களுக்குப் பிடிக்காத தொடுதல் என்பது அவர்களின் பிசிகல் பிரைவசியை கெடுப்பதே.
ஏதேனும் ஒரு காரணத்துக்காக அழ நினைக்கும் குழந்தைகளை நாம் தொல்லை பண்ணாமல் விடுவதே எமோசனல் பிரைவசி. அவர்கள் அழுகையை அடுத்தவர்கள் – பெற்றோரே ஆனாலும், பார்ப்பதை சில குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். பிரைவேட் ஸ்பேஸ் என்பது அவர்களுக்கான தனிப்பட்ட இடம், பிடித்தமான இடம் என்று எதுவானாலும் சரிதான்.
தோழர்களுடன் பேசுவது, வெளியில் செல்வது, விரும்பிய உடை உடுத்துவது, விருப்பமான உணவைத் தேர்ந்தெடுப்பது, விளையாட்டு போன்ற எல்லாமே அவர்களின் பர்சனல் ஸ்பேஸில் சில நிபந்தனைகளுடன் விடுவது நல்லது.பர்சனல் ஸ்பேஸுக்கு முக்கியத்துவம் தரச் சொல்கிறோம், அதே நேரம் நிபந்தனைகளும்… குழப்ப வேண்டியதில்லை. அவர்கள் குழந்தைகள், நாம் பெற்றோர் ஆயிற்றே… சில கூடுதல் பொறுப்பும் கவனமும் நமக்குத் தேவையாகிறது!
கவனத்தில் கொள்ளுங்கள்… அதீத கேள்வி அவசியமில்லை. குழந்தைகள் ஒவ்வொரு விநாடி நடந்ததையும் ஒப்புவிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும் அன்று என்ன நடந்தது என்று பொதுவில் கேட்டாலே போதுமானது.உடனே பதில் எதிர்பார்க்கவும் தேவையில்லை. அடுத்தடுத்த கேள்விகளும் அதற்கான பதில்களும் நேர்மறையான விளைவைத் தோற்றுவிக்கும். பதிலுக்கான நேரமும் அளிக்க வேண்டும்.புது சட்டதிட்டங்களை ஒப்புக்கொள்ளுங்கள்
மகனோ மகளோ அவர்களின் தனிப்பட்ட நேரங்களில் போடும் சட்டங்களை ஒப்புக்கொள்ளுங்கள். உதாரணமாக மகனோ மகளோ கதவை பூட்டி உடை மாற்றும் போது அதனை மதிக்க வேண்டும். வலுக்கட்டாயமாக கதவை திறப்பது அவர்களை எரிச்சல் படுத்தும்.அதீத பிரைவசியும் தேவையில்லை கதவை பூட்டி தேவையில்லாமல் நெடுநேரம் உள்ளிருப்பது, அதிக நேரம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது, போனில் பேசுவது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது…
ஏன் படிப்பதாக இருந்தாலுமே அதிக நேரம் தனிமையாக இருக்கத் தேவையில்லை. அடிக்கடி நீங்கள் வருவீர்கள் என்ற எண்ணம் இருப்பது அவசியம்.அவர்களின் செயல்பாடுகளில் எப்போதும் ஒரு கண் இருக்கட்டும், சம்பந்தமில்லாத ஏதேனும் நடந்தாலும் உடனடியாக எந்த முடிவுக்கும் வரவேண்டியதில்லை. நடவடிக்கையின் காலம், விளைவு போன்றவற்றை உறுதிப்படுத்திய பின், அதைக் கையாளலாம்.
Average Rating