பெற்றோருக்கு 20 விஷயங்கள்! (மருத்துவம்)
குட் டச்… பேட் டச்… க்ருஷ்னி கோவிந்த்
இந்திய அரசு சார்பில் பள்ளிகளில் உடல் ரீதியிலான தண்டனைகளை தடைசெய்ய சட்டம் எதுவும் கொண்டுவரப்படவில்லை. இருப்பினும், பல்வேறு மாநிலங்கள், இவ்வகையான தண்டனைகளை சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலமாகத் தடை செய்திருக்கின்றன.
மத்திய அரசு இப்போது குழந்தைகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைத் தடுக்க ஒரு சட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. உடல் ரீதியாகத் தண்டனை கொடுப்பது குழந்தைக்கு எதிராக இழைக்கப்படும் குற்றமாகக் கருதப்படும். இந்தச் சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் வரை இம்மாதிரியான செயல்களை தடுக்க எந்தச் சட்டங்கள் இருக்கின்றனவோ, அவை பயன்படுத்தப்படும்.
தமிழகத்தில் உடல் ரீதியிலான தண்டனைக்கு தடை உண்டு. ‘திருத்துவதற்காக’ என்று மனதளவில் அல்லது உடலளவில் வலி ஏற்படும் அளவுக்குத் தண்டனைகளை தருவது தடை செய்யப்பட்டுள்ளது. கோவாவில் குழந்தைகள் சட்டம் 2003ன்படி உடல் ரீதியான தண்டனைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்காளத்தில் பள்ளிகளில் குழந்தைகளைக் குச்சியால் அடிப்பது சட்ட விரோதமானது. ஆந்திராவில் உடல்ரீதியிலான தண்டனை பற்றிய பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எல்லா கல்வி நிலையங்களிலும் உடல் ரீதியிலான தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்று டில்லி, சண்டிகர், இமாச்சலப்பிரதேசமும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்துள்ளது.
சட்டம் இயற்றி குற்றவாளிகளை தண்டிப்பது ஒரு புறம், ஒரு பெற்றோராக, ஆசிரியராக நமக்கு சில கடமைகள் உள்ளன. அதையும் விவாதிப்போம்.குழந்தைகளுக்கு பெற்றோரை அடுத்து மிக முக்கியமானவர்கள் அவர்களுடைய ஆசிரியர்கள். ‘எங்க மிஸ் தந்தாங்க’, ‘எங்க மிஸ் ஸ்டார் போட்டாங்க’ என்று கண்கள் விரிய முகமெங்கும் புன்னகை பூரிக்க அவர்கள் சொல்வதை நாம் ரசித்து இருக்கலாம். இது ஆசிரியர்களுக்கு குழந்தைகள் தரும் சிறப்பு மட்டுமல்ல… பொறுப்பும் கூட.
ஆசிரியர் பொய் சொல்ல மாட்டார், முழு நம்பிக்கைக்கு உரியவர், மரியாதையுடன் அணுகக் கூடியவர், நட்பானவர் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆசிரியர் ஒரு நம்பகத்தன்மையுடன் குழந்தைகளுடன் பழகவேண்டியது மிக அவசியம். பாதிக்கப்பட்ட குழந்தைகளை வேறுபாடாக நடத்தாமலும், தைரியம் கூறியும் செயல்பட வேண்டும். சட்டங்கள், ஊடகங்களின் பயன்பாடு பற்றியும் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
ஒரு குழந்தையை மனரீதியாக சந்தோஷப்படுத்துவது ஆசிரியர்களால் மட்டுமே முடியும். வீட்டில் ஒருவர் இருவராக இருக்கும் குழந்தைகள், பள்ளியில் 50 பேரில் ஒருவராக இருக்கும்போது இந்த மனரீதியான ஊக்கமும் மகிழ்ச்சியும் மிகவும் இன்றியமையாதது. சமீபத்தில் பால்ய விவாகம் செய்ய வைக்க இருந்த 5 மாணவிகளை ஆசிரியர் காப்பாற்றிய செய்தியை அறிந்திருப்போம். இதுபோன்ற அடிப்படை சட்ட அறிவு ஆசிரியருக்கு மிகவும் தேவை.
பெற்றோருக்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டலாம்…
1. அடுத்தவரிடம் எப்படி பழக வேண்டும் என்று ஒரு வரையறை மிக அவசியம். அது பெரியவர்களானாலும் வளர்ந்த குழந்தையானாலும் அவர்களிடம் எப்படி பழக வேண்டும், என்ன எல்லை என்பதை குடும்ப சூழ்நிலை பொறுத்து நீங்களே தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
2. குழந்தைகளுக்கு விரும்பத்தகாத சூழ்நிலை, வேண்டாத நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் இருந்து எப்படி உடனே வெளியேறுவது என்பதை கற்பிக்க
வேண்டும்.
3. பயப்படும்படியான சூழலோ, பாதுகாப்பாக உணராத போது உங்களிடம் பேச நேர்ந்தால், அவர்களின் நிலையை உணர்த்த ஒரு பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளலாம்.
4. பாடி பவுண்டரிஸ் எனப்படும் உடலின் பிரத்யேக பகுதிகளை கற்றுக்கொடுங்கள். உடலில் ரகசியம் என்று எதுவும் இல்லை. குறிச்சொற்கள் இன்றி நேரடியான சொற்கள் மூலமே எல்லாவற்றையும் கற்றுத்தர வேண்டும்.
5. அன்னியர் அல்லது நண்பர்கள், உறவினர்களே ஆனாலும், அவர்களின் உடையையோ, உடலையோ தொட்டுப் பேசுவதையோ, தொடுவதையோ தவிர்த்தல் வேண்டும்.
6. யாராக இருந்தாலும் குழந்தைகளின் தனிப்பட்ட உறுப்புகளை படம் எடுக்க அனுமதிக்கக் கூடாது.
7. குழந்தைகளின் நம்பிக்கைக்கு உரியவராக பெற்றோர் வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் உங்களிடம் சொல்லலாம், சொன்னால் எந்த பின்விளைவும் அவர்களை காயப்படுத்தும் விதமாக இருக்காது என்ற நம்பிக்கை அவர்களிடம் வர வேண்டும்
8. வீட்டிலோ, வெளியிடத்திலோ, நண்பர்களையோ, உறவினர்களையோ கட்டிப்பிடிப்பது, உடன் வாகனங்களில் பயணிப்பது போன்ற விஷயங்களில் கட்டாயப்படுத்தக் கூடாது.
9. உடலின் பாகங்களையும் உடல் மீது அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் தெளிவாக அடிக்கடி எடுத்துரைக்க வேண்டும்.
10. உடல் சுத்தம், பர்சனல் ஹைஜீன் பற்றி எந்த தயக்கமும் இல்லாமல் கற்றுத்தர வேண்டும்.
11. குழந்தைகளை அடுத்தவர்களுடன் ஒப்பீடு செய்வது நாம் செய்யும் பெரிய தவறு. அவர்களின் சிறிய தவறுகளுக்கும் பெரிதாக தண்டிப்பதும், ரியாக்ட் செய்வதும் தேவையற்றது.
12. புதிய விஷயங்கள் செய்யவும் முயற்சிக்கவும் அவர்களைத் தூண்ட வேண்டும். எப்போதும் ஏதேனும் கற்றுக் கொண்டிருப்பது அவர்களின் மனச்சோர்வை நீக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் சிறந்த வழிமுறை.
13. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், நடனப்போட்டிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். தோற்ற குழந்தைகளை விட அவர்களின் பெற்றோர் கதறியழுவதை. இது மிக மிக தவறான முன்னுதாரணம்.
14. தோற்பதும் வாழ்க்கையின் ஒரு அங்கம். தோற்கட்டும்… மீண்டும் எழுந்து முயற்சிக்கட்டும். அதிக முயற்சியும், கடின உழைப்பினால் கிடைக்கும் வெற்றியுமே அதிகமாக மகிழ்விக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்தாமல் கூட சேர்ந்து அல்லது அவர்களை விட பெரிதாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து அடுத்தவர்களை கவர்வதில் எந்த வெற்றியும் இல்லை.
15. குழந்தைகள் அவர்களுக்கு பிடித்தமானதை / விருப்ப தேர்வை அறிய உதவுங்கள், பாட்டு கற்க ஆவலா, சேர்த்து விடுங்கள். பிடித்தால் தொடரட்டும் அல்லது விட்டுவிடலாம். மாதாமாதம் பணம் கட்டுவதால் அவர்கள் அதை கற்றே தீரவேண்டும் என்று கட்டாயமில்லை. பிடித்தது கூடிவருவதும், பிடிக்காததில் இருந்து விலகிவிடுதலும் பின்வரும் பிரச்னைகளை குறைக்கும்.
16. அவர்களின் லட்சியத்தை அடைய, லட்சியம் என்னவென்று கண்டுகொள்ள உதவுங்கள், பெற்றோராக நாம் இருப்பதே இதெல்லாம் செய்யத்தானே!
17. எப்போதாவது தவறு செய்யவும் அனுமதியுங்கள். விமர்சனத்தை முன்வையுங்கள். அவர்களின் நண்பர்களின் விமர்சனத்தையும் கேட்க வையுங்கள். வெட்கமோ, குற்ற உணர்வோ வந்து போவதே நல்லது.
18. அவர்களை நம்மைத் தவிர யார் கொண்டாடுவார்கள்? சின்ன விஷயத்துக்கும் கூட உங்கள் சக்திக்கு தகுந்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள், அது பணமாக, பொருளாக இருக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் அன்பான பேச்சாகக் கூட இருக்கலாம். ஒரு சின்ன தட்டிக் கொடுத்தல், ஒரு சின்ன கடிதம் போன்றவைகூட பெரிய ஊக்கமளிக்கும்.
19. உங்களுக்கு அவர்கள் மேல் இருக்கும் அக்கறையை அவர்களுக்கு உணர்த்தவேண்டியதும், குடும்பமே அவர்களுக்காக இருப்பதை உணர வைப்பதும் அவசியம்.
20. பள்ளி தவிர்த்த வெளியுலகுக்கு தேவையானவற்றையும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு பேட்டியோ, சந்திப்போ நடந்தால் பதறாமல் இருப்பதும் அவசியம் தான். உலகில் பிறந்த அனைத்து உயிரினமும் தன் வாழ்வை அழகாக ரசனையாக வாழ உரிமை படைத்தவை. அவர்களில் குழந்தைகள் இன்னும் சிறப்புச் சலுகைகள் கொண்டவர்கள். ஏதோ சில பாதகர்களால் அவர்களின் குழந்தைமை அழியவும், வாழ்நாள் முழுதும் கூட்டுக்குள் முடங்கவும் தேவையில்லை. ‘பாதகம் செய்பவரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு… அவர்கள் முகத்தில் உமிழ்ந்துவிடு’ என்று அந்த நாட்களில் பாரதி கூறிய அறிவுரை இன்று மட்டுமல்ல… இனி எப்போதும் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தரவேண்டிய முக்கிய பாடம்!
Average Rating