செல்லமா… கண்டிப்பா… குழந்தை வளர்ப்பில் எது சரியான வழி?! (மருத்துவம்)
குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது எல்லோருக்கும் குழப்பமான விஷயம்தான். ‘செல்லம் கொடுத்தால் குழந்தைகள் கெட்டுப் போய்விடுவார்கள். கண்டித்துத்தான் வளர்க்க வேண்டும்’ என்றும், ‘இல்லை கண்டிப்பைவிட சுதந்திரமாக வளர்ப்பதே சரியானது’ என்றும் இருவேறு கருத்துக்கள் நம்மிடம் உண்டு. உண்மையில் எது சரியான வழி? உளவியல் மருத்துவர் ரங்கராஜனிடம் பேசினோம்.‘‘குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும், தவறு செய்யும் குழந்தைகளை கடுமையான முறையில் கண்டிக்க வேண்டும் என்பது தவறான வழிமுறை. குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற முறையில், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
அவர்களிடம் கடுமையாகப் பேசுவது, அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது, மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவது, எல்லா செயல்களிலும் குறைகளை மட்டுமே கண்டுபிடித்து திட்டுவது போன்ற நடவடிக்கைகளால் எந்த பயனும் இல்லை. இது குழந்தைகளுக்கும் நன்மை தராது; பெற்றோருக்கும் நன்மை தராது.
தொடர்ச்சியாக குழந்தைகளை குறை சொல்லிக் கொண்டும், திட்டிக் கொண்டுமே இருந்தால் அந்தக் குழந்தைக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். அந்த தாழ்வு மனப்பான்மையால் வெளியிடங்களில் மற்றவர்களோடு பழகுவதிலும், நடந்து கொள்ளும்விதங்களிலும் பெரிய பாதிப்பு ஏற்படும். தன்னம்பிக்கை குறைந்து, அந்தக் குழந்தையின் சமூக வாழ்க்கையே கேள்விக்குறியாகும் அளவு சூழல் உருவாகும்.
பெற்றோர் இதுபோல் அதிக கடுமையோடு நடந்துகொள்வதால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டு, அவர்கள் தகாத செயல்களைச் செய்யவும் வாய்ப்பு உருவாகும். இதன் எதிரொலியாக கல்வியில் ஈடுபாடு குறைந்து, அதில் பின்னடைவு ஏற்படுகிறது. எதையும் கேள்வி கேட்பது, தனக்கு எல்லாம் தெரியும், தான் நினைத்தது சரியாக இருக்கும் என்ற மனநிலை குழந்தைகளின் வளரிளம் பருவத்தில் இயல்பாகவே இருக்கும்.
அந்த நேரத்தில் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதால் தங்களுடைய சக வயது குழந்தைகளிடமும் அதே கடுமையான உணர்வினை பிரதிபலிப்பார்கள். அதுமட்டுமல்ல; தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவர்கள் அதேபோன்ற கடுமையான நடவடிக்கைகளையே கையாள்கிறார்கள். இப்படியே வளரும் குழந்தைகளின் வளர் இளம் பருவத்தில் அவர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, தான் தவறானவன்தான் என்று மற்றவர்கள் மத்தியில் தைரியமாக உரக்கச் சொல்லும் நிலை உண்டாகி விடும்.
இதுபோன்ற மனநிலை குழந்தைகளிடம் உருவாகிவிடாமல், சரியான முறையில் குழந்தைகளை அணுகி மாற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்தான் முதல் நாயகர்கள். பெற்றோருடைய நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் அமைத்து கொடுக்கும் சூழலில் இருந்தே குழந்தைகள் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.
இதனால் தாய், தந்தை இருவருமே குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.ஒரேமாதிரியான தகவல்களை குழந்தைகளிடம் சொல்லும்போது, முன்னுக்குப்பின் முரணாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இருவரும் அந்தத் தகவலை சரியான முறையில் சொல்ல வேண்டும். எப்போதும் உண்மையான, யதார்த்தமான விஷயங்களை அவர்களுக்குப் புரியும்படி பக்குவமாக,பொறுமையாகச் சொல்ல வேண்டும்.
குழந்தைகளின் குறைகளைச் சுட்டிக் காட்டும் முன்னர் அவர்கள் செய்கிற நல்ல விஷயங்களை முதலில் பாராட்டும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மனதாரப் பாராட்டுவதன் மூலம் குழந்தைகளுடைய மனநிலை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கும்.
அப்படி மகிழ்ச்சியாக இருந்தால்தான் பெற்றோர் சொல்வதை காதுகொடுத்து கேட்டு, உள்வாங்கிக் கொள்ளும் மனநிலைக்கே வருவார்கள். அதுபோன்ற மகிழ்ச்சியான சூழலில் அவர்களுடைய தவறுகளைப் புரியும்படி அன்போடு எடுத்துச் சொல்ல வேண்டும். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப, அவர்களுடைய பிரச்னைகளை புரிந்துகொள்ளும்படி விளக்கிச் சொல்ல வேண்டும். இதுதான் சரியான அணுகுமுறை.
குழந்தைகள் நாம் இயக்கும் வெறும் இயந்திரமல்ல. அதனால் அவர்களை பெற்றோரும் மதிப்புடன் நடத்த வேண்டியது அவசியம். குழந்தைகளை எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக உருவாக்க, அவர்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அவர்களுடைய மனநிலையை புரிந்துகொண்டு, எது சரி? எது தவறு? என்பதை சரியான முறையில் சொல்ல வேண்டும்.குழந்தைகளின் தேவைகள் என்னவென்று புரிந்துகொண்டு, அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
‘இந்த விஷயத்தை செய்யாதே’ என்று உத்தரவு போடுவதைவிட, அந்தச் செயல் ஏன் தவறானது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதையெல்லாம் உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று தப்பிப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. உனக்கு காய்ச்சலாக இருக்கிறது. அதனால், ஐஸ்க்ரீம் இப்போது சாப்பிட வேண்டாம். காய்ச்சல் குணமானவுடன் ஐஸ்க்ரீம் நானே வாங்கித் தருகிறேன்.
சரியா? என்பதுபோல் அவர்களுக்குப் புரிய வையுங்கள். அதுதான் சரியான வழிமுறை.குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவையான கல்வி, விளையாட்டு போன்ற பலவற்றையும் உருவாக்கிக் கொடுப்பதோடு நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதனாக வளர்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனவே, குழந்தைகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும்.
‘பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர்களுடைய எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காகவும் சில சமயங்களில் கடுமையான முறையில் நடந்துகொள்கிறார்கள். இதனால் அவர்களது கல்வித்திறன் உள்பட பல விஷயங்களிலும் குறைபாடுகள் ஏற்படுகிறது என்கிறார் அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ரோஸல் ஹெங்டிஸ். இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்’’ என்கிறார் ரங்கராஜன்
Average Rating