நைட்டீஸ் தைக்கலாம்… நல்ல வருமானம் பார்க்கலாம்!! (மகளிர் பக்கம்)
“நேர்மை, உண்மை, அயராத உழைப்பு எனக்கு மட்டுமில்ல… என்னை நம்பி இங்க இருக்கற பொண்ணுங்களுக்கும் இருக்கு. அதாங்க வெற்றி ரகசியம்.’’
கணவரின் நூல் சேலை வியாபார வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லாததால் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என நினைத்து தனக்கு தெரிந்த தையல் பயிற்சியை வைத்து ஏதாவது செய்யலாமே என 20 ஆண்டுகளுக்கு முன் எடுத்த அதிரடி முடிவு, நூற்றுக்கும் அதிகமான தொழிலாளிகளின் ‘மோஸ்ட் லவ்வபிள் ஓனர்’ எனும் மகிழ்ச்சியை சாந்தி பாலசுப்பிரமணியனுக்கு ஏற்படுத்தி உள்ளது. மில்லினியம் நூற்றாண்டு தொடங்கி 20 ஆண்டுகளிலேயே, கொரோனா எனும் கொடிய அரக்கனால் மிகப்பெரிய பொருளாதார பேரிழப்பை உலகம் சந்தித்து வரும் இந்த நேரத்தில், சாந்தியம்மாவின் நைட்டி, சிம்மிஸ், டாப்ஸ் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள் எல்லாராலும் வாங்கக்கூடிய ரொம்பவே மலிவான விலையில், உயர் தரத்துல கிடைக்குதுன்னா சும்மாவா… எவ்ளோ பெரிய பிராண்டுகளே விக்க முடியாம தகிடுதத்தம் போடுற இன்னிக்கி நிலையில, ‘லவ்லி’யின் வெற்றியைப் பற்றி பகிர்கிறார் சாந்தி.
‘‘நேர்மை, உண்மை, அயராத உழைப்பு எனக்கு மட்டுமில்ல.. என்னை நம்பி இங்க இருக்கற இந்த பொண்ணுங்களுக்கும் இருக்கு. அதாங்க வெற்றி ரகசியம்’’ என புன்னகைக்கிறார் சாந்தி பாலசுப்பிரமணியன். ராஜபாளையம் அடுத்த தளவாய்புரத்துல வாழ்க்கைப்பட்டு 40 வருஷத்துக்கு மேல ஆய்டிச்சி. அவருக்கு நூல் புடவை வியாபாரம். பொளபொளன்னு பொழுது விடியறப்போ தலைச்சுமை மேலும் 2 கைலயும் பெரிய கட்டைப்பையில நூல் புடவைங்களோட கிராமங்களுக்கு போயிட்டு பொழுது சாய்ஞ்சப்புறம் வருவாரு. கல்யாணம் ஆன புதுசுல பொழப்புக்கு போய்ட்டு வந்ததும், ‘‘சாந்தி இன்னிக்கி பாரு ₹300 லாபம்’’ அப்படீம்பாரு. எனக்கும் சந்தோஷமா இருக்கும். ரெண்டு பையனுங்க பொறந்தாங்க. அவங்க ஹைஸ்கூல்ல கால் வைக்கறப்போ ஒருவரின் வருமானம் போதுமானதாக இல்லை.
டவுன்ல ஏசி ஷோரூம்ல சூப்பர் டிசைன்லாம் வச்சிருக்கான்.
நீங்க என்னடான்னா இன்னும் நூல் புடவையே எடுத்து வர்றீங்க. அதுவும் டிசைனாவே இல்லையே என பலர் கூறினாலும், கடைசி காலம் வரை தனது வியாபாரத்தை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. சொல்லும் அளவு வருமானம் இல்லாத அந்த காலகட்டத்தில், பசங்க வேற பள்ளி இறுதியை எட்டினார்கள். அடுத்து காலேஜ், பெரிய படிப்புன்னு செலவுக்கு என்ன பண்றதுன்னு திகைத்தேன். அப்போதுதான், ‘உனக்குத்தான் டைலரிங் நல்லா தெரியுமே. சர்ட்டிஃபிகேட் கூட வச்சிருக்க.. மெஷினப் போடு, கல்லா கட்டுனு’, ஒரு குரல் எனக்குள் ஒலித்தது. அசதியோட வீடு திரும்புன புருஷன் கிட்ட பக்குவமா சொன்னேன்.
உடனே, ‘லவ்லி.. ஸ்டார்ட் பண்ணிடலாம்’, அப்டீன்னாரு. கணவர் சொன்ன மொத வார்த்தை பேர்லயே இரண்டே இரண்டு மெஷினோட ‘லவ்லி’ நைட்டி 20 வருஷத்துக்கு முன்பு ஆரம்பிச்சேன். வருஷங்கள் எப்பிடி போச்சுன்னே தெரியல.
இப்போதும், ‘‘அம்மா, நேத்து நீ தைத்த நைட்டி டிசைனுக்கு… பல்க் ஆர்டர் கெடச்சிருச்சி’’ன்னு பசங்க சொல்லும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு.
மொதல்ல நைட்டி மட்டும் தான் தயாரித்தேன். ஆனால் அதற்கான ஆர்டர்கள் வர ஆரம்பிச்சதும், இரண்டு மெஷின் பத்தலை. கிடைத்த வருமானத்தை முதலீடு செய்தேன். நான் இங்க ஒரு தொழிலை நிர்வகித்து வந்தாலும், என் கணவர் தன்னுடைய நூல் புடவை விற்பனையை விடவேயில்லை’’ என்றவரிடம் தற்போது 80 மெஷின்கள், கட்டிங் மாஸ்டர், அயர்னிங் செக்ஷன், பேக்கிங் செக்ஷன் என 100 பேருக்கு மேல வேலை பார்த்து வருகிறார்கள். ‘‘இப்ப பசங்கதான் இதனை நிர்வகித்து வருகிறார்கள். உற்பத்தி நிர்வாகம், அலுவலக நிர்வாகம், கணக்கு வழக்கு எல்லாமே அவங்க ரெண்டு பேர் தான் பார்த்துக்கிறாங்க. வெளிநாட்டுல இருந்தும் ஆர்டர்கள் வருது.
பொதுவாகவே, பெண்ணின் உடலமைப்பு பெண்ணுக்குத்தான் அத்துப்படி. எனவே, எங்களது தயாரிப்பு கனகச்சிதமா யாருக்கு வேண்டுமானாலும் பொருந்த வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். இந்த நேர்த்தியான வடிவமைப்பு தான் எனக்கான வாடிக்கையாளர்களை மேன்மேலும் அதிகரித்தது.
அது மட்டும் இல்லை, என்னிடம் வேலை பார்க்கும் பெண்களும் பல காரணத்துக்காக வாழ்க்கையை தொலைத்து, நிர்க்கதியானவர்கள். அப்படிப்பட்ட பெண்களாக தேடி பணியில் அமர்த்தினேன். தங்களாலும் வாழ முடியும் எனும் மன உறுதியை அவர்களுக்குள் புதைத்தேன். அதை புரிந்து கொண்டு இப்போது அவர்களுக்காக அயராது உழைக்கிறார்கள்.
உடைகளை நான் வடிவமைத்தாலும், அவர்களும் சில ஐடியாக்களை கூறுவார்கள். அதையும் நான் என்னுடைய டிசைன்களில் செயல்படுத்தி இருக்கேன். இப்போது என்னுடைய தொழில் முன்னேற என்னுடைய உழைப்பு மட்டுமில்லை இவர்களும் ஒரு முக்கிய காரணம். இவர்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்’’ என்றவர் காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருகிறார். ‘‘பெரும்பாலும் உடைகளை கம்ப்யூட்டரில் வடிவமைக்கிறோம். அதன் மூலம் ஒருவருக்கு எந்த உடை பொருந்தும் என்பதை எளிதாக பார்த்து தனித்துவமாக டிசைன் செய்ய முடிகிறது. தயாரிப்பில் ஒரு சிறு குறையும் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறோம். சின்ன தவறு தானே, வாடிக்கையாளர் கண்டுபிடிக்கவா போகிறார் என்ற மனப்போக்கு கொஞ்சமும் இல்லாமல் இருப்பதால் தான், உயர் தரத்தில் உடைகளை தயாரிக்க முடிகிறது.
தற்போது நைட்டி மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு நவீன பாணியில் கவுன் உருவாக்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறேன். பொதுவாகவே ரெடிமேட் ஆடைகள் என்றால், மேலும் ஒரு தையல் போட்டால் கிழியாது எனும் மனப்பான்மை உள்ளது. பீஸ் ரேட் அடிப்படையில் கூலி வழங்குவதாலும், வியாபார போட்டியில் ஆர்டர் கைவிட்டுப் போய்விடும் எனும் நோக்கத்திலும், ஏனோ தானோ என்று நாங்கள் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. ஜப்பான் மெஷின்களை வரவழைத்து, முறுக்கேறிய நூலில் தைக்கிறோம். இதில் சமரசம் செய்து கொண்டு போவது எனும் பேச்சுக்கு இடமேயில்லை. மேலும் உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப போக்குவரத்து வசதிகள் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை சப்ளை செய்ய முடிகிறது.
பணம் சம்பாதிப்பது மட்டுமே எனக்கு குறிக்கோளாக இருந்திருந்தால் எத்தனையோ கோடிகளை அள்ளிக் குவித்திருக்க முடியும். என்னிடம் பணி புரியும் எல்லா பெண்களுமே முன்னேற்றம் கண்டால் தான் மனநிறைவு எனக்கு ஏற்படும். அப்படித்தான் இன்று வரை செயல்படுகிறேன். என்னிடம் வேலை பார்த்த பல பெண்
களுக்கு சொந்தமாக தொழில் அமைத்தும் தருகிறேன். என்னைப் பொறுத்தவரை தொழிலில் நேர்மையும், உண்மையும் இருந்தால் வெற்றி சிகரத்தின் உச்சியில் பெண்கள் கொடி நாட்டுவது உறுதி” என விடை கொடுத்தார் சாந்தி.
Average Rating