உங்கள் குழந்தைகள் சரியாக உட்காருகிறார்களா? (மருத்துவம்)
உடல் மொழியானது மனதை வெளிப்படுத்துகிறது. இதற்காகத்தான் குழந்தைப் பருவத்தில் இருந்தே குழந்தைகள் எப்படி உட்கார வேண்டும், நிற்க வேண்டும் என்பது போன்ற நடைமுறைகளை பழக்கப்படுத்தினார்கள்.இன்றைய நியூக்ளியர் குடும்பங்களில் சர்வ சுதந்திரத்துடன் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர். இவர்கள் தரையில் சம்மணமிட்டு அமர்வது, பாதங்களை மண்ணில் ஊன்றி நடப்பது, தவழ்வது போன்ற பழக்கம் இன்றி வளர்கின்றனர். இவர்கள் அதிக நேரம் செலவழிக்கும் பள்ளிகளிலும் தரையில் அமர்வதில்லை.
பள்ளி, வீடு இரண்டு இடங்களிலும் குழந்தைகள் ஓடி விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. வீட்டில் பெரும்பாலான குழந்தைகளின் இருப்பிடம் வரவேற்பறை சோபாதான். எழுந்ததில் இருந்து டிவி பார்த்தபடியே அனைத்து வேலைகளையும் செய்ய, கையில் மொபைலுடன் அமர்ந்து கொள்ள அல்லது வீடியோ கேம் விளையாட என எல்லாப் பணிகளுக்கும் இவர்கள் பிடித்த இடத்தைப் பயன்படுத்துகின்றனர்.
பெண் குழந்தைகளும் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றியே வளர்கின்றனர். வளர் இளம் பருவத்தைத் தாண்டிய பின்னரும் இவர்கள் தங்களது உடல் மொழி பற்றி எந்தக் கவலையும் படுவதில்லை. இதுவே அவர்களது உடல் நலன் மற்றும் பாதுகாப்புக்கு எதிராக மாறுகிறது. அதிகளவு புத்தகச் சுமையால் முதுகுவலி பாதிப்புக்கு ஆளாகின்றனர். சரியான நிலையில் அமராத காரணத்தால் உடலில் வலிகள் ஏற்படுவதுடன் குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது என்கிறார் பிசியோதெரபி மருத்துவர் ரம்யா செந்தில்குமார்.
‘‘குழந்தைகள் நடப்பது, அமர்வது மற்றும் அவர்களின் புத்தகச்சுமையும் முதுகுத் தண்டுவட வளர்ச்சியை பாதிக்கிறது. தசை வளர்ச்சியையும் பாதிக்கிறது. முதுகுத் தண்டு வடம் 21 வயது வரை வளரும் தன்மை கொண்டது. வீடியோ கேம் மற்றும் செல்போன் பயன்பாட்டின் பொழுது குனிந்து உட்காருவது, கூன் போட்டு அமர்வதாலும் அவர்களின் முதுகுத் தண்டு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இவர்களால் குனிந்து முட்டியை மடக்காமல் கால் பெரு விரலைத் தொட முடியாது. இவர்களுக்கு குனிந்து நிமிர்வதே பெரிய வேலையாகிப் போகும்.
இவர்களுக்கு கால்களை மடக்கி அமர்ந்தால் விரைவில் கால்கள் மரத்துப் போகும். வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவதால் கால்களை மடக்கி விரிப்பதே இவர்களுக்குச் சவாலாக இருக்கும். மேலும் பெண் குழந்தைகள் குஷன் சோபா மற்றும் வேறு இடங்களில் அமரும் போது சரியான நிலையில் அமரக் கற்றுத்தர வேண்டும். கால்களை விருப்பம் போல் வைத்து அமர்வதும் அவர்களுக்கு உடல் அளவில் தொந்தரவுகளையும் பாதுகாப்பற்ற நிலையினையும் உண்டாக்குகிறது.
இந்தியன் டாய்லெட்டைப் பயன்படுத்துவது, தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் சுவற்றோடு ஒட்டி நிற்பது, கூன் போடாமல் முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி அமர்வது. சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் அவசியம். தரையில் காலை மடித்து அமர்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முதுகு வலி, கழுத்துவலி பிரச்னைகள் இருப்பின் அவர்கள் பிசியோதெரபி மருத்துவரை அணுகி ஆலோசனையும் தீர்வும் பெறலாம்.
டைனிங் டேபிளைக் கூட தரையில் அமர்ந்து சாப்பிடும் ஜப்பானியர் ஸ்டைலில் மாற்றிக் கொள்ளலாம். உடலின் ரத்த ஓட்டம் மற்றும் வளர்ச்சி ஆகியவை சீராக இருக்கும்படி குழந்தைகளின் வாழ்க்கை முறையை வடிவமைக்க வேண்டியது பெற்றோரின் கடமை” என்கிறார் ரம்யா செந்தில்குமார்.
Average Rating