குழந்தைகளிடம் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லை!! (மருத்துவம்)
‘‘ஊட்டச்சத்து குறைபாட்டால் இன்றைய குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியை பெறவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. WHO / UNICEF ஆகிய அமைப்புகள் உலக வங்கியுடன் இணைந்து நடத்தியுள்ள கணக்கெடுப்பில், சர்வதேச அளவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு கவலை தரத்தக்க வகையில் உள்ளது. வளர்ச்சிக்குறைபாடு மட்டுமின்றி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 38.3 மில்லியன் குழந்தைகள் அதிக உடல் எடையைக் கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அதிகம் என்பது உடனடியாகக் கவனிக்க வேண்டிய விஷயமாகவும் உள்ளது. இத்தகைய வளர்ச்சி குறைபாடுகளின் காரணிகளையும், அவற்றை சரி செய்யும் வழிமுறைகளையும் பற்றி பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்’’ என்கிறார் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரான பாலசுப்ரமணியன். இதுபற்றி அவரிடம் விரிவாகப் பேசினோம்…
குழந்தைகளின் சரியான வளர்ச்சி என்பது சரியான ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்–்சிகளின் கலவையாகும். குழந்தைகளுக்கு நுண் ஊட்டச்சத்துகளை எவ்வாறு வழங்குவது என்பதை கண்டறிய வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் முக்கியமான கடமையும் கூட. குழந்தைகளுக்கு ஒரு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதால் 2-6 வயது வரை ஊட்டச்சத்தினை ெபற வேண்டியதற்கான முக்கிய காலக்கட்டமாக இருக்கிறது. இளம் வயதிலேயே சரியான ஊட்டச்சத்துகள் கொடுப்பது ஆரோக்கியமான சந்ததியினரை எதிர்காலத்தில் உருவாக்க வழிவகுக்கும்.
குழந்தைகள் இயல்பாகவே சில ஆரோக்கியமான உணவை மறுப்பர். இன்னும் சில குழந்தைகள் குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவர். அவர்களுக்கு புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய ஒரு உணவுச்சங்கிலியை(Create a food chain) உருவாக்குவது என்பது அவசியமாகும். எவ்வாறு உருவாக்குவது?
குழந்தைகளுக்குப் பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்ற பட்டியலை முதலில் தயார் செய்து கொள்ளுங்கள். அவர்கள் விரும்பி உண்ணும் உணவின் சுவை, அதன் வண்ணம் ஆகியவற்றைக் கண்டறிந்துகொள்ளுங்கள். அதன்பிறகு அவர்களுக்குப் பிடிக்காத ஆரோக்கியமான உணவுகளையும் அதேபோன்ற சுவை, வண்ணத்தில் தயாரித்து கொடுக்கும் வழிமுறையைக் கையாளுங்கள்.
ஊட்டச்சத்து துணை ெபாருட்கள்
குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் அவர்கள் விரும்பும் வகையில் கொடுக்க ேவண்டும். தினமும், காலை சூரியன் உடலில் படுமாறு நிற்க வேண்டும். உடற்பயிற்சி மிகவும் அவசியம்். இவை அனைத்தும் நோயின்றி குழந்தைகளை வாழ வைக்கும் முறையாகும்.
குழந்தைகள் ஒரு சில உணவுகளைத் தவிர்ப்பதால் நன்கு சாப்பிடும் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சில குறைபாடுகள் ஏற்படலாம். அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக இரும்புச்சத்து, வைட்டமின் A, B6, C, E, தயாமின், ரிபோஃபிளேவின் மற்றும் நியாசின் போன்ற குறிப்பிட்ட நுண் ஊட்டச்சத்துகளின் குறைபாடுகள் இருக்கிறது.
மறைநிலை பசி
குழந்தைகளின் உணவில் நுண் ஊட்டச்சத்து இல்லாதிருந்தால், வயிறு நிறைய உண்டாலும் மறைநிலை பசி(hidden hunger) என்ற உணர்வுக்கு வழி வகுக்கும். இதனால் நொறுக்குத்தீனிகள் உண்ண வேண்டிய மனநிலைக்கு ஆளாவார்கள். இரும்புச்சத்து, மாங்கனீசு மற்றும் துத்தநாகம் போன்ற நுண் சத்துக்குறைபாடுகள் அனோரெக்ஸியா(Anorexia) பாதிப்பிற்கும் வழிவகுக்கும். மேலும் இரும்பு, மாங்கனீசு மற்றும் துத்தநாகம் மற்றும் வைட்டமின் A நுண் ஊட்டச்சத்து குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாட்டுடன் தொடர்பு கொண்டிருப்பதால் வளர்ச்சியை பாதிக்கவும் செய்யும்.
ஆரோக்கியமான குழந்தை என்பது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நோயின்றி இருக்க வேண்டும். ஊட்டச்சத்துடன் இருக்கும் குழந்தைகளின் உயரமும், எடையும் அவர்களின் உடல் கட்டமைப்பு ஆகியவை கணக்கிட்டுப் பார்க்கும்போதும் சராசரியாக இருக்க வேண்டும். சில குழந்தைகளின் தலை பெரிதாகவும் வயிறு சிறிதாகவும் இருப்பதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடுதான்.
உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கைகுழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டில் இந்தியாவின் பங்களிப்பு ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்குதான். அதாவது 31% நம் நாட்டில் வளர்ச்சிக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 46.6 மில்லியன் என்றும், இதை தொடர்ந்து நைஜீரியா 13.9 மில்லியன் மற்றும் பாகிஸ்தான் 10.7 மில்லியன் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட அதிக எடை கொண்ட குழந்தைகளை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஆய்வு குறிப்பிடுகிறது.
வளரும் குழந்தைகளுக்கு முழுமையான உணவுமுறை கொடுக்கப்பட வேண்டும். ஆரோக்கியமான வளர்ச்சி பெற பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கால்சியமும், பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின்களும், பருப்பு வகைகள் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட்களும், இறைச்சி உண்பவர்களுக்கு புரதச்சத்துகளும் மற்றும் காய்கறிகள் அதிகம் உண்பவர்களுக்கு மினரல்களும் இயற்கையாகவே எளிதில் கிடைக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக உயிர் வாழ மேலே குறிப்பிட்ட அனைத்தும் அத்தியாவசியமாகும்.
பாலில் அதிகமான கால்சியம் மற்றும் புரதச்சத்து உள்ளது. ஒரு நாளைக்கு 300 கிராம் முதல் 500 கிராம் வரை பால் குடித்தால் போதும். அதற்கு மேல் குடிக்க தேவையில்லை. பசும்பாலைவிட தாய்ப்பால் மிகவும் சிறந்தது. எனவே, தாய்மார்கள் குறைந்தது 2 வயது வரையாவது தாய்ப்பால் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும்போது சிறுவயதிலேயே அதிக நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. 1-5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்தான உணவுதான் இந்த உலகத்தில், இறுதி வரை, வாழ சக்தியைக் கொடுக்கும்.
நமது பாரம்பரிய உணவைத் தவிர்த்து விட்டு பீட்சா, பர்கர் போன்ற துரித உணவு வகைகள் மற்றும் மைதாவினால் செய்யப்பட்ட திண்பண்டங்களை எடுத்துக்கொள்வதால் உடல்ரீதியாக மாற்றங்கள் உண்டாகும். நமது பாரம்பரிய உணவில் அநேக வைட்டமின்கள் மற்றும் நுண்சத்துக்கள் உள்ளது, அதை தவிர்த்துவிட்டு துரித உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதால் அல்லது பெற்றோர் வாங்கி கொடுத்து ஊக்குவிப்பதால் உடல் பருமனுக்கு ஆளாகின்றனர். இதனால் குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெற்றோர்களும் இன்னல்பட வேண்டி இருக்கும்.
நம்முடைய நாட்டின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப உணவினை விளைவித்து, இயற்கையே உணவுப் பட்டியலை நமக்கு வழங்கி உள்ளது. மேலும், நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த உணவு ஊட்டல் ரகசியங்களும் பல உண்டு. அவற்றில் முக்கியமானவை, பிறந்த குழந்தைக்கு 6-9 மாதம் வரை கஞ்சி போன்ற திரவ உணவுகளும்(Semi solid food), 9-வது மாதம் முதல் திட உணவும்(Solid food) கொடுக்க வேண்டும். அசைவ உணவுகள் அதிகமாக உண்ணக்கூடாது. அப்படி உண்பதால் உடல் பருமன் அதிகரிக்கும். காய்கறிகள், பழங்கள் சராசரியாக எடுத்துக்ெகாண்டால் உடல் எடை சீராக இருக்கும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும், குழந்தைகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளை அதிக நேரம் விளையாட வைக்க வேண்டும். இதனால் அவர்கள் மூளை சுறுசுறுப்படைவதுடன் வியர்வை வெளியேறும். உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால், தற்போது உள்ள குழந்தைகள் கண் சிமிட்டாமல் தொலைக்காட்சி பார்ப்பதும், கைபேசியை பயன்படுத்துவதும் அதில் வீடியோ கேம்ஸ் விளையாடுவதும் அதிகரித்து வருகிறது.
இதனால் குழந்தைகள் சிந்திக்கும் ஆற்றலை இழக்கும் அபாயத்தில் தள்ளப்படுகின்றனர். உடல் பருமன் அதிகரித்து நோய்க்கும் ஆளாகின்றனர். எனவே, பொருத்தமான உணவுசார் பழக்கஙகள் மற்றும் உடற்பயிற்சிகளின் மூலமாக மட்டுமே உடலின் சரியான வளர்ச்சியையும் நோய் எதிர்ப்பு திறனையும் உருவாக்க முடியும்!
Average Rating