சினிமா நடைமுறைகளை மாற்றிய நடிகை அஸ்வத்தம்மா!! (மகளிர் பக்கம்)
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலப் படங்களில் தமிழோ, தெலுங்கோ, கன்னடமோ ஏதாவது ஒரு மொழியில் மட்டுமே நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்த நிலைக்கு முற்றிலும் மாறாக, முதன்முதலில் கன்னடம், தமிழ் என இரு மொழிப் படங்களிலும் நடிக்கத் தொடங்கியவர் அஸ்வத்தம்மா. கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவர், அப்போதுதான் ‘சதாரமே’ கன்னடப் படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நிலையிலிருந்து அடுத்தக்கட்ட முன்னேற்றமாக தமிழ் மொழிப் படங்களிலும் நடிக்கத் தொடங்கியதன் மூலம் முதல் இரு மொழி நடிகை என்ற பெருமையையும் பெற்றார்.
அவருக்குப் பின்னரே மற்ற நடிகைகள் தாங்கள் நடித்துக் கொண்டிருந்த மொழிகளிலிருந்து வேற்று மொழிப் படங்களிலும் நடிக்கத் தலைப்பட்டனர். பெரும்பாலும் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களிலும் ஒரே நேரத்தில் பல மொழிகளில் நடிக்கத் தொடங்கினார்கள். இந்திய சினிமாவில் அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் அஸ்வத்தம்மா என்றால் மிகையில்லை.
மற்றொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவ்வாறு நடிக்க வந்தவர்கள் எல்லோரும் கொஞ்சம் சிரமப்பட்டாவது மற்றொரு மொழியைக் கற்றுக்கொண்டு, தங்கள் சொந்தக் குரலிலேயே வசனங்களைப் பேசவும், பாடல்களைப் பாடவும் செய்தார்கள். இப்போதைய காலம் போல் டப்பிங் கலைஞர்களின் புண்ணியத்தால் பல மொழிப் படங்களிலும் பல்லாண்டு பல்லாண்டு காலம் அவர்களில் யாரும் நடிக்கவில்லை. பின்னர் அப்படி நடித்தவர்கள் கூட தங்கள் சொந்தக் குரலில் பேசுவதற்கான எவ்விதமான முயற்சியையும், அவர்களில் பலர் மேற்கொள்ளவில்லை என்பதும் துயரம்.
அபாரமான குரல் வளத்தால் வாய்ப்புகள் பெற்றவர் அஸ்வத்தம்மா கன்னட மொழிப் படங்களில் பிரபல பாடகியாகவும் நடிகையாகவும் இருந்தவர். அந்தக் காலத்தில் நடிப்பதற்கு உடல் அழகைவிட குரல் வளமே முக்கியத் தகுதியாக இருந்ததால் உடனடியாக கன்னட மொழிப் பட உலகம் அவரை அள்ளி அணைத்துக் கொண்டது. அஸ்வத்தம்மா நல்ல உயரமும் காதளவோடிய நீளமான அகன்ற கண்களும் அழகான சிரிப்பையும் கொண்ட பேரழகியும் கூட. கன்னடத்தில் இவர் நடித்த ‘சதாரமே’ என்பது மாபெரும் வெற்றிப் படமாகவும் இவருக்கு அமைந்தது.
அதே காலகட்டத்தில், ‘பவளக்கொடி,’ ‘நவீன சாரங்கதரா’, ‘சத்தியசீலன்’ உள்ளிட்ட மூன்று படங்களில் நடித்து மிகப் பிரபலமாகி வந்த எம்.கே. தியாகராஜ பாகவதரை வைத்து ‘சிந்தாமணி’ என்ற படத்தைத் தயாரிக்க மதுரை ராயல் டாக்கீஸ் நிறுவனத்தினர் திட்டமிட்டனர். இப்படத்தினை இயக்கும் பொறுப்பை ஏற்றவர் – ஒய்.வி. ராவ். இதில் கதாநாயகியாக, தாசி ‘சிந்தாமணி’யாக நடிக்கக் குரல் வளமும் அழகும் கொண்ட ஒரு பெண்ணைத் தேடியபோது கன்னடத் திரைப்படம் ‘சதாரமே’ புகழ் அஸ்வத்தம்மா தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் கண்களில் தென்பட்டார்.
‘கிருஷ்ண கர்ணாமிர்தம்’ என்ற வடமொழி இலக்கியத்தை எழுதிய பில்வ மங்களன் என்பவரைக் குறித்த கதை, ‘சிந்தாமணி’. இதில் சிந்தாமணி தாசியாக இருந்தாலும் கடவுள் மீது, அதிலும் குறிப்பாக கிருஷ்ணன் மீது கொண்ட பக்தி மேலீட்டால் எப்போதும் கிருஷ்ணனையே துதித்துக் கொண்டிருப்பவள். ஆனால், பில்வ மங்களனோ உலகையே மறந்து தாசி வீடே கதி என்றிருப்பவன்; தன் ஆசைக்கும் பிரியத்துக்கும் உரியவளான தாசி சிந்தாமணியை விட்டு ஒரு கணமும் பிரிய நினையாதவன்; இறுதியில் சிந்தாமணியின் மூலமாகவே கிருஷ்ணனின் பாத கமலங்களைச் சென்றடைகிறான். இதுதான் ‘சிந்தாமணி’ படத்தின் கதை.
புதிய வரலாறு படைத்த ‘சிந்தாமணி’அஸ்வத்தம்மா, எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பால் ‘சிந்தாமணி’ படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பெரும் சாதனை புரிந்தது. மதுரை ராயல் டாக்கீஸில் தொடர்ந்து ஒரு வருடம் (52 வாரங்கள்) இப்படம் ஓடியது. இதில் கிடைத்த லாபத்தில் புதியதாக ஒரு திரையரங்கம் கட்டி அதற்கு சிந்தாமணி என்ற பெயரையே வைத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ‘சிந்தாமணி’ படத்தின் பாடல்களுக்கும் அப்போது மக்கள் அடிமை ஆனார்கள்.
இதைக் கண்டுகொண்ட சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிறுவனம் (ஏ.வி.எம்.மின் சொந்த நிறுவனம்) ‘சிந்தாமணி’ பாடல்களை கிராமஃபோன் ரெக்கார்டில் பதிவு செய்து விற்றது. விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. பட்டிதொட்டியெங்கும் ‘சிந்தாமணி’ பாடல்கள் ரீங்காரமிட்டன. இத்தனைக்கும் இப்பாடல்களில் ஒலித்தது என்னவோ பாகவதரின் அசல் குரல் அல்ல. துறையூர் ராஜகோபால சர்மா என்பவரை ‘சிந்தாமணி’ படத்தின் பாடல்களைப் பாட வைத்துப் பதிவு செய்திருந்தனர். அசல் குரல் அல்லாத நகலுக்கே இத்தனை அமோக வரவேற்பும் ஆதரவும் இருந்தது என்றால், அசலாக பாகவதரே பாடி இருந்தாரென்றால், எப்படி இருந்திருக்கும் என்பதையும் உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.
இப்படத்தின் வெற்றி அதுவரை டாக்கீஸைப் பற்றி ஏளனமாகப் பேசிக் கொண்டிருந்தவர்களையும் கூட வியப்புடன் சற்றே திரும்பிப் பார்க்க வைத்தது. ‘சிந்தாமணி’ திரைப்படம் மக்களிடம் பெரும் செல்வாக்கு செலுத்தியதாக எழுத்தாளரும் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகை ஆசிரியருமான கல்கி, ‘ஸ்திரீகள் காலையில் காபி கலக்கும்போது ‘மாயப் பிரபஞ்சத்தில்’ பாடலையும், அவர்களது ஆம்படையான்கள் எந்நேரமும் ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ பாடலையும் முணுமுணுத்துக் கொண்டிருப்பதாக எழுதினார்.
சினிமா பேசத் தொடங்கிய காலம் முதல் அதுவரை தமிழில் வெளிவந்திருந்த 80 திரைப்படங்களில் கதை, வசனம், இசை, நடிப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என அனைத்து அம்சங்களிலும் ‘சிந்தாமணி’யே ஆகச் சிறந்த படம் என்று எழுத்தாளர் புதுமைப்பித்தன் ‘ஈழ கேசரி’ இதழில் எழுதினார். அஸ்வத்தம்மா கன்னட மொழி பேசும் பெண்ணாக இருந்தாலும் அவரது தமிழ் உச்சரிப்பு அட்சர சுத்தமாக இருக்கிறது என்றும் அதில் அவர் பாராட்டியிருந்தார். ‘தனக்குப் பிடித்த நடிகை அஸ்வத்தம்மா தான்’ என்று கலைஞர் கருணாநிதியும் கூட ஓரிடத்தில் எழுதினார். அந்த அளவுக்கு ‘சிந்தாமணி’ மாபெரும் வெற்றி பெற்றது. எல்லோரையும் கவர்ந்து இழுத்தது.
அது மட்டுமல்லாமல், அதன் பிறகும் கூட தொடர்ந்து தாசி வீடே கதியெனக் கிடக்கும் கதாநாயகர்களைக் கொண்ட கதைகளை நடிகர்களும், தயாரிப்பாளர்களும் தேர்ந்தெடுப்பதற்கும் கூட ‘சிந்தாமணி’ படத்தின் மாபெரும் வெற்றியும் ஒரு காரணம் என்று கூறலாம். பாகவதரும் தொடர்ந்து தாசி வீடு தேடும் நாயகனாக நடித்தே உச்ச நாயகனாக உயர்ந்தார். மற்றொரு உச்ச நடிகராகத் திரை வானில் அப்போது மின்னிக் கொண்டிருந்த பி.யு.சின்னப்பாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
தாசி வீட்டுக்குச் செல்வதை கௌரவமாகவும் உயர் மதிப்பாகவும் கருதிக் கொண்டிருந்த காலம் அது என்பதும் கசப்பான உண்மை அல்லவா…?! இப்படியாகத் தமிழ்கூறும் நல்லுலகில் நட்சத்திர அந்தஸ்து உருவாக ‘சிந்தாமணி’ திரைப்படம் ஒரு வெற்றிக் காரணியாக இருந்திருக்கிறது என்பது திரை வரலாறு.
புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கிய சக்குபாய்‘சிந்தாமணி’ படத்தின் இந்த வெற்றி அஸ்வத்தம்மாவுக்குத் தமிழில் இரண்டாவது பட வாய்ப்பைத் தேடித் தந்தது. படத்தின் பெயர் – ‘சாந்த சக்குபாய்’. சதாசர்வ காலமும் பண்டரிபுரம் விட்டலனை பூஜிக்கும் பக்தை சக்குபாயாக நடித்தவர் அஸ்வத்தம்மா. அவருடன் இணையாக நடித்தவர் சாரங்கபாணி. மற்றும் கொத்தமங்கலம் சுப்பு, கொத்தமங்கலம் சீனு, பானி பாய் ஆகியோர் இணைந்து நடித்தனர். சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கத்தில் படம் தொண்ணூறு சதவீதம் முடிந்திருந்த நிலையில் அஸ்வத்தம்மா திடீரென நோய்வாய்ப்பட்டார். படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.
கதாநாயகி அஸ்வத்தம்மா உடல் நலம் பெற்று மீண்டு வருவதற்காகச் சில வாரங்கள் படக் குழுவினர் காத்திருந்தனர். ஆனால் நோய் தீவிர காச நோயாக முற்றியது. காச நோய் என்பது அக்காலகட்டத்தில் மருந்து கண்டுபிடிக்கப்படாத, மிக பயங்கரமான தொற்றுநோய். அப்போது. இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் பயங்கர அதிர்ச்சி. படத்தை எப்படி முடிப்பது? இதுவரை எடுக்கப்பட்டதிலேயே ஏராளமான பணம் இதில் முடங்கிக் கிடக்கிறதே! இனி என்ன செய்வது?
அவர்கள் என்ன செய்தார்கள்?
தெரிந்து கொள்வோம்…டூப் நடிகர்களின் தேவை உணரப்பட்ட தருணங்கள்திரைப்படங்களில் சண்டைக் காட்சிகள் மற்றும் அபாயகரமான சாகசக் காட்சிகளில் இன்றளவும் டூப் போடும் பழக்கம் இருக்கிறது. பெரும்பாலும் கதாநாயகர்கள், பிரபல வில்லன் நடிகர்களுக்கு டூப் பயன்படுத்தப் படுகிறது. ஒரு நடிகர் பிரபலமாகி விட்டார் என்றால் உடனடியாக அவருக்கு ஒரு டூப் நடிகரைத் தேட வேண்டிய கட்டாயமும் இயக்குநர்களுக்கும், சண்டைப் பயிற்சியாளர்களுக்கும் ஏற்படுகிறது.
அப்படி டூப் போடும் நபர் குறிப்பிட்ட அந்த நடிகரின் உருவத்தை ஒத்தவராக இருக்க வேண்டும். அப்போதுதான் திரையில் அந்த நடிகரே சாகசத்தில் ஈடுபட்டதாக ரசிகர்கள் நம்புவார்கள். அதனால் அவரது உருவத்தையொத்த நபரைத் தேட வேண்டிய சங்கடமும் கட்டாயமும் அவர்களுக்கு இருக்கிறது. கூடவே அவர் சண்டைப்பயிற்சி அறிந்தவராகவும் சாகசங்களில் ஈடுபடும் துணிச்சல் கொண்டவராகவும் இருக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.
ஆனால் பெண் நடிகர்களுக்கு டூப் போடுவதென்பது அரிதாகத்தான் இருக்கிறது. 1970 -களில் ராணி சந்திரா என்ற கதாநாயக நடிகை அறிமுகமாகி முன்னதாக ‘பொற்சிலை’ போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். சிவகுமாரும் அவரும் இணைந்து நடிக்க ‘பத்ரகாளி’ படம் பெரும் பகுதி தயாரிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில் ராணி சந்திரா ஒரு விமான விபத்தில் அகால மரணமடைந்தார். வளர வேண்டிய, திரையில் பல சாதனைகள் நிகழ்த்த வேண்டிய அழகான ஒரு இளம் நடிகை மரணமடைந்தது திரையுலகுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெரும் இழப்புதான்.
இதனால் பாதிக்கப்பட்ட மற்றொருவர் ‘பத்ரகாளி’ படத் தயாரிப்பாளர். ஏறக்குறைய படம் முடிவடையும் நிலையில் ராணி சந்திரா இறந்து போனது தயாரிப்பாளருக்கு வருத்தமளித்தாலும், பெரும் அதிர்ச்சியையும் சேர்த்தே அளித்தது. ஏராளமான பணம் முதலீடு செய்யப்பட்டு எடுக்கப்படும் ஒரு திரைப்படம் இது போன்ற சில அசம்பாவிதங்களால் பாதியில் நின்று போனால் அந்தத் தயாரிப்பாளரின் கதி என்பது அதோகதிதான்.
என்ன செய்யலாம் என திரைப்படக் குழுவினர் யோசித்தபோதுதான் ராணி சந்திரா போன்ற ஒரு நபரைக் கண்டுபிடித்து டூப் போட வைத்து மீதிப் படத்தை முடிப்பது என முடிவு செய்தனர். இதையொட்டி புஷ்பா என்ற துணை நடிகையைத் தேர்வு செய்து நடிக்க வைத்தனர். படம் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. ராணி சந்திராவின் மறைவே இந்தப் படத்துக்குப் பெரும் விளம்பரமாகவும் ஆகிப் போனது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் மறக்க முடியாதவையாகிப் போயின.
‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ யும் ‘கேட்டேளே அங்கே அதைப் பார்த்தேளா இங்கே’ யும் இப்போதும் எப்போதும் ரசிக்கக்கூடிய பாடல்களாக இருக்கின்றன. டூப் போட்ட புஷ்பாவுக்கு தொடர்ந்து முகம் தெரியும் வகையில் சின்னச் சின்ன வாய்ப்புகள் சில திரைப்படங்களில் கிட்டின. ‘அழியாத கோலங்கள்’ படத்தில் பாலியல் தொழிலாளியாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் மிகவும் நெருக்கமாக நடித்தார். ஆனால், அதுவே அவருக்கான அடையாளமாகிப் போனதும் கூட துரதிருஷ்டம்தான். அதற்குப் பிறகு அவர் பெரிதாகப் பேசப்படும்படியான படங்களில் நடிக்கவும் இல்லை. (பின்னர் 90களில் இவருடைய மகள் மோகனா, பாக்யராஜ் படத்தின் (வீட்ல விசேஷங்க) நாயகியானார்.)
ஒரு டூப் நடிகை கதாநாயகியாக சக்கைப்போடு போட்ட அதிசயம் 90களின் ஆரம்பத்தில் திவ்ய பாரதி என்ற கதாநாயக நடிகை இந்தியிலும் தமிழிலும் தெலுங்கிலும் பிரபலமாகி வந்தார். பெண் நடிகர்கள் பிரபலமாகும்போது சில நேரங்களில் துரதிருஷ்டமும் கூடச் சேர்ந்தே அவர்களைத் துரத்துகிறது. திவ்ய பாரதிக்கு என்ன துரதிருஷ்டம் துரத்தியது என்பது அவருக்கே தெரியுமா என்பதும் தெரியவில்லை. ஒரு தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் மும்பையின் அடுக்கு மாடிக் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து திவ்ய பாரதி அகாலமாக மறைந்து போனார். அவர் மரணத்துக்கான காரணம் இப்போது வரையிலும் மர்மமானதாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது.
திவ்ய பாரதி நடித்துக் கொண்டிருந்த படத்தை முடிப்பதற்கும் ஒரு டூப் நடிகையைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து நடிக்க வைத்தனர். அவரும் கூட தெலுங்குத் திரையுலகில் அவ்வப்போது ஒருசில படங்களில் அப்போது தலையைக் காட்டி வந்த ஒரு துணை நடிகையே. திவ்ய பாரதிக்காக டூப் போட்டு நடித்த அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த டூப் நடிகை தோற்றத்தில் ஓரளவுக்கு திவ்ய பாரதியைப் போலவே இருந்ததாலும் அவர் நடித்த அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதாலும் டூப் போட்ட பெண் நடிகரைத் திரையுலகினர் மொய்த்தனர். அந்த நடிகையும் புத்திசாலித்தனமாக வந்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் யாவும் பெரும் வெற்றி பெற்றன.
தெலுங்குத் திரையுலகைத் தாண்டி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் அவர் நடித்துப் பேரும் புகழும் பெற்றார். திரையுலகில் பல ஆண்டுகளுக்குப் பெயர் சொல்லும் நடிகையாகவும் அவர் தொடர்ந்தார். 2000 ஆம் ஆண்டுகள் வரையிலும் அவரின் ஆதிக்கம் நீடித்தது. அப்போதைய பிரபல கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்தார். அவர் ஆந்திரத்தின் விஜயலட்சுமி என்ற ரம்பா. திரையுலகில் டூப் போட்டு வெற்றி பெற்றுப் பின்னர் கதாநாயகியாகவும் தொடர்ந்து சாதித்துக் காட்டிய ஒரே பெண் நடிகர் ரம்பாவாகத்தான் இருப்பார்.
டூப் நடிகைகளின் வரவுக்கு வித்திட்ட அஸ்வத்தம்மாபின் நாட்களில் டூப் நடிகைகள் பெற்ற வெற்றிகள் அனைத்துக்கும் வித்திட்டவர் என்று அஸ்வத்தம்மாவைத்தான் சொல்ல வேண்டும். அவர்தான் இதற்கெல்லாம் முன்னோடி. பெண் நடிகர்களுக்கு டூப் போடுவது அரிதுதான் என்றாலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முதலாக டூப் போட நேர்ந்ததும், பின்னணிக் குரலில் பாடப்பட்டதும் நடிகை அஸ்வத்தம்மாவுக்குத்தான். ‘சிந்தா மணி’ திரைப்படத்தின் நாயகன் தியாகராஜ பாகவதரை மட்டுமின்றித் தன் எழிலார்ந்த தோற்றப் பொலிவாலும் இனிய குரலாலும் ரசிகர்களையும் மெய்ம்மறக்கச் செய்தவர் அஸ்வத்தம்மா.
நாம் மேலே சில பத்திகளுக்கு முன் சொன்ன ‘சாந்த சக்குபாய்’ படம் பாதியில் நின்று போன விடயத்துக்கு இப்போது வருவோம். சினிமா பேசத் தொடங்கிய காலத்திலிருந்து அதுவரை தமிழ் சினிமா கண்டிராத வகையில் ஒரு காரியம் செய்தார்கள். நாயகி அஸ்வத்தம்மாவைப் போன்ற உயரமும் உருவமும் கொண்ட ஒரு பெண்ணை அழைத்து வந்து தூரக் காட்சிகளாக (லாங் ஷாட்) எடுத்துப் படத்தை முடித்தனர். டூப் போட்ட அந்தப் பெண் பாடவும் செய்தார். ஆனால், சொந்தக் குரலில் இல்லை.
அவருக்கு பதிலாக வி.ஆர்.தனம் என்பவர் பாடல்களைப் பாடினார். இப்படித்தான் தமிழ் சினிமாவில் முதல்முறையாக டூப் போடுவதும், பின்னணி குரலில் பாடுவதும் அறிமுகமாகியது. இதன் மூலம், இசை அறிவும் பாடும் திறனும் கொண்டவர்கள் மட்டும்தான் சினிமாவில் நடிக்க முடியும், நடிகராக முடியும் என்ற நிலை மாறியது. புதியதோர் துறை உருவாகவும், தொழில் நுட்பத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய கதாநாயகர்களும் நாயகிகளும் உருவாகவும் வாய்ப்புக் கிடைத்தது.
தமிழ் சினிமாவின் வரலாறே அதன் பின்னர் படிப்படியாக மாறியது. இவை அனைத்துக்கும் காரணம் அஸ்வத்தம்மாவும், அவருக்கு ஏற்பட்ட காச நோயும்தான். இன்றைக்குப் பல மொழி களில் பலரின் குரல்களில் நடிகைகள் பேசிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அடித்தளம் இட்டவர் என்னவோ அஸ்வத்தம்மா தான். ஆனால், அவர் அறியாமலே யாரும் எதிர்பார்க்காமலே இவை அனைத்தும் தன் போக்கில் நிகழ்ந்தன.
ஆரம்ப காலத் திரைப்படங்களில், (1960கள் வரையிலும் என்றும் கூட சொல்லலாம்) கதாநாயகிகள் – நாயகர்களுக்குக் கொடுமையான, குணப்படுத்த முடியாத, மருந்தில்லாத நோயாகக் காசநோய் (டி.பி) பீடித்து மரணிப்பார்கள். ‘பாலும் பழமும்; படத்தின் நாயகி சாந்தி (சரோஜாதேவி) கண் முன் வந்து போகிறார். டாக்டர் கணவனுக்குத் தொந்தரவாக இருக்கக்கூடாது என வீட்டை விட்டு வெளியேறும் அவர், யாரோ ஒரு இஸ்லாமியப் புண்ணியவானின் தயவால் ஸ்விட்சர்லாந்து சென்று தனக்கு ஏற்பட்ட காச நோயைக் குணப்படுத்திக்கொண்டு தாய்நாடு திரும்புவதாகக் கதை பின்னப்பட்டிருக்கும். மூன்று மணி நேரத் திரைப்படத்தின் போக்கையே நாயகிக்கு ஏற்பட்ட இந்தக் காசநோய் திசை திருப்பியது.
இப்போது அப்படங்களைப் பார்க்கும்போது உதட்டோரம் மெல்லிய ஒரு கேலிப் புன்னகை இழையோடுகிறது. இன்றைக்கும் பயத்தின் உச்சத்தில் அனைவரையும் இருத்தி வைத்திருக்கும் கொரோனாவும் கூட இனி வரும் காலத்தில் இதேபோல அடுத்தடுத்த தலைமுறைகளின் கேலிக்கு ஆளாகலாம்.
ஆனால், நிஜமாகவே வளரும் கதாநாயகியான அழகான அஸ்வத்தம்மா இந்தக் காச நோய்க்கு ஆளாகி 1944ல் மறைந்து போனார். தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவே ஒரு நல்ல நடிகையை, இசைக் கலைஞரை இழந்தது பெரும் வருத்தத்துக்குரியது. மிகக் குறைந்த படங்களில் – தமிழில் இரண்டு மட்டுமே – நடித்திருந்தாலும் திரையுலக வரலாற்றில் மறக்க முடியாதவராக நிலை பெற்று நிற்கிறார் அஸ்வத்தம்மா.
Average Rating