கல்யாண தேன் நிலா!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:10 Minute, 28 Second

ஆயிரம் கனவுகள் சேர்த்து சரம் தொடுத்து உருவாக்கும் திருமண பந்தத்தில் தேன் நிலவு, வாழ்வில் ஒரே ஒரு முறை பூக்கும் பூ. கி.பி. 1546-ம் ஆண்டில் இருந்தே தேன் நிலவு கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது.

மண வாழ்வில் இணை சேரும் இரண்டு உயிர்களின் தித்திக்கும் முதல் பயணம் தேன் நிலவுப் பயணமே. காதல் மணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ இரண்டிலும் உடலால், பாலுணர்வால் எல்லைகள் கடந்து இரண்டறக் கலப்பதற்கான மனநிலையை உருவாக்க தேன் நிலவுப் பயணம் உதவுகிறது.

பரபரப்பான வாழ்க்கை முறையில் திருமணத்துக்குப் பின் தாம்பத்யம் என்பதும் ஒரு புராஜெக்டாக/ அர்த்தமற்ற சம்பிரதாயமாக மாறிவிட்டது. தூங்கச் செல்லும் நேரம் நீண்டு, தூங்கும் நேரம் குறைந்து வேலைகளில் ஒன்றாக தாம்பத்யமும் அடங்கிவிட்டது. இதனால் பலவித மன இறுக்கங்களுக்கு ஆளாவதுடன் திருமண பந்தத்தில் ஊடல் வளர்ந்து பெரும் சுவராகி குடும்பங்கள் உடைந்து வருகிறது. வாழ்க்கை முழுவதற்குமான தித்திக்கும் பந்தமாக தேன்நிலவை மாற்றுவதற்கு ஆலோசனை தருகிறார் மன நல ஆலோசகர் பாபு ரங்கராஜன்.

‘‘திருமண பந்தத்தில் ஆயுளின் அந்தி வரை பயணிக்கப் போகும் அந்த இரு உள்ளங்களுக்கு இடையில் பிணைப்புகளைப் பலப்படுத்த ‘நீ வேறு.. நான் வேறு அல்ல’ என்ற எண்ணம் தேவையாகிறது.

உடலாலும், மனதாலும் இருவரும் நெருங்குவதற்கான பயணமே தேன் நிலவு. இருவரும் பேசி அவரவர் விருப்பத்தைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் இந்த வேலையை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இருக்காது. முழுக்க முழுக்க இரண்டு இதயங்கள் இணைந்து அன்பைக் கொண்டாடுவதற்கான காலம் அது.

காதலால் கசிந்து காமத்தில் நனைவதற்கான கால நிலை தேன் நிலவில் மட்டுமே சாத்தியம். ஆணும் பெண்ணும் வெவ்வேறு ஹார்மோன் கட்டுப்பாட்டில் இயங்குபவர்கள். இருவரது மனநிலையும், சிந்தனையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இருவருக்குமான உளவியல் செயல்பாடுகளும் வேறு வேறானவை.

திருமண பந்தத்தில் பெண் வேறு குடும்பத்தில் இருந்து புதிய குடும்பத்தில் நுழைகிறாள். அவள் தனது கணவனை மட்டுமே முழுவதுமாக நம்பியிருக்கிறாள். திருமணம் செய்து கொள்ளும் ஆண் அவளைப் புரிந்துகொண்டு அந்த நம்பிக்கையைக் கொடுப்பதற்கு தேன் நிலவுப் பயணம் சரியான வாய்ப்பைத் தருகிறது. 500 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது தேன் நிலவு. இன்றைய சூழலில் கட்டாயம் தேவை.’’

தேன்நிலவு பயணத்தால் தாம்பத்யம் எந்தளவுக்கு இனிமையானதாக மாறுகிறது?

‘‘திருமண கால கட்டத்தில் அவர்கள் மனம் விட்டுப் பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்திருக்கும். புதிதாக ஒரு ஆணிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்க பெண்ணுக்கு நம்பிக்கை மிகுந்த மனநிலை வேண்டும்.

முதலிரவிலேயே எல்லாம் நடந்து விடுவதில்லை. திருமணத்துக்கு முன்பாக பாலுறவு பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். தெரிந்தவற்றையும் தெரியாதவற்றையும் புரிந்து கொள்வதற்கான மனநிலை மற்றும் சூழலையும் தரும் தனிமை தேவைப்படுகிறது. எந்தவித டென்ஷனும் இன்றி காதல் கொள்ளவும் காமம்கொண்டாடவும் தேன் நிலவு வாய்ப்பாகிறது.

காமம் கொள்ளும் புதிதில் உடலில் ஒருவிதமான ஹார்மோன் மாற்றங்கள் நடக்கிறது. செரட்டோனின், அட்ரீனல் போன்ற சுரப்பிகள் உடலுறவினால் தூண்டப்படுகிறது. உடலுறவு கொள்ளும் துவக்க காலத்தில் படபடப்பு, சோர்வு, பயம் போன்ற உணர்வுகள் கூட ஏற்படும். 2, 3 நாட்களுக்குப் பின்பே உடலுறவின்போதான மகிழ்ச்சி ஹார்மோன் வெளிப்படும்.

ஆக்ஸிடாக்ஸின் என்ற ஹார்மோன் சுரப்பின்போதே அவர்கள் இன்ப நிலையை உணர்கின்றனர். மனதளவிலான புரிதலும், ஹார்மோன் கலாட்டாக்களும் சேர்ந்து உடலுறவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது. உடலுறவின் மீதான ஈடுபாடு அதிகரிப்பதற்கும் இதுவே காரணம்.

நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை ஹார்மோன் மாற்றங்களைத் தொடர்ந்து தாம்பத்யம் தித்திப்பு நிலையை எட்டுவதற்கு தேன்நிலவு உதவுகிறது. ஈர்ப்பு, அன்பு இரண்டையும் அதிகரிக்கச் செய்கிறது. தாம்பத்ய இன்பத் தேடலை அதிகரிக்கச் செய்கிறது.’’

தேன் நிலவுப் பயணத்துக்கு எப்படித் திட்டமிடலாம்?

‘‘தேன் நிலவு செல்ல எத்தனை நாட்கள்? எவ்வளவு பட்ஜெட் என்பதையும் திட்டமிட வேண்டும். இருவருக்கும் பிடித்த இடமாகத் தேர்வு செய்யலாம். தேன் நிலவு செல்லும் இடத்தில் மனைவிக்கு எதிர்பாராத விதமாகப் பரிசளித்து அசத்தலாம். லைட் மியூஸிக், கேண்டில் லைட் டின்னர் என முன்கூட்டியே திட்டமிட்டு தங்கும் ஹோட்டலில் ஏற்பாடு செய்யலாம்.

இதுபோன்ற விஷயங்கள் வாழ்வின் எந்தச் சூழலிலும் மறக்காது. தாம்பத்யத்தில் இருவருக்கும் விருப்பம் உள்ள விஷயங்களில் விளையாடலாம். போகும் இடங்களில் என்னென்ன ஸ்பெஷல் என்பதையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு திட்டமிடுவதும் தேன் நிலவு அனுபவங்களில் இன்பம் கூட்டும். தேவையற்ற டென்சனைக் குறைக்கும்.’’தேன் நிலவுப் பயணத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை?

‘‘தேன் நிலவுப் பயணத்தின் போது உங்கள் இணைக்கு பயணங்கள் பிடிக்குமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பயணத்திலேயே அசதி ஏற்பட்டுவிடாமல் குறைவான பயண நேரமும், தனிமைக்கும் தாம்பத்யத்துக்கும் அதிக நேரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

தேன் நிலவு செல்லும் இடங்களில் எதற்கும் அலையத் தேவையின்றி முன்கூட்டியே திட்டமிடுங்கள். அருவி, ஆறு, மலை என்று இயற்கையில் கரையுங்கள். இவையும் அன்பை அதிகரிக்கச் செய்யும். காமத்தில் ஒருவருக்குப் பிடித்ததை இன்னொருவர் கண்டுபிடியுங்கள். துவக்கத்தில் உண்டாகும் பயம், பதற்றத்தின் போது விட்டுக் கொடுத்து அன்பைக் கொட்டிக் கொடுங்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை ‘எனக்கு இந்த இடம்தான் பிடிக்கும்’, ‘நான் இதைத்தான் சாப்பிடுவேன்’ என தன் விருப்பத்தை மனைவியின் மீது திணிக்கக் கூடாது. பயணத்தில் விவாதங்கள் செய்யக் கூடாது.

தான் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும் என பணிக்கக் கூடாது. பயணத்தில் செலவானதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. தேன் நிலவுப் பயணத்தின் இனிமை எந்தக் காரணத்தாலும் கலைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அன்பைப் பரிசளிப்பதில் மட்டுமே போட்டியிடலாம். ஒருவரது குறையைக் கண்டு பிடித்துப் பெரிதாக்கக் கூடாது.’’தேன் நிலவுப் பயணம் வாழ்க்கை முழுக்க இனிக்க என்ன செய்யலாம்?

‘‘உங்கள் இணையிடம் உள்ள நல்ல விஷயங்களைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். தாம்பத்ய நேரத்தில் பெண்ணின் விருப்பங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுங்கள். பாலின்ப வேளையிலும் ரொமான்டிக் விஷயத்திலும் பாராட்டுங்கள். உங்கள் தனிமை நேரத்துக்கான செல்லப் பெயர்கள் வைத்து அழைத்துப் பரவசப்படுத்துங்கள்.

பெண்ணின் அழகை வர்ணித்து அன்பு செய்யுங்கள். அவளது சுயமரியாதை எந்த இடத்திலும் குறைந்திடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அன்பில் கரையுங்கள்… அன்பாகிக் கலந்திடுங்கள்… தேன் நிலா ஒருபோதும் தேய்ந்திடாது.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவாலும் உறவு சிறக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post தண்ணீருக்கு மாற்றே இல்லை!# Save Water!! (மருத்துவம்)