தஞ்சாவூரு ராஜா… தஞ்சாவூரு ராணி… !! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 57 Second

‘தாத்தா காலத்தில் இருந்தே தலையாட்டி பொம்மைகள், கொலு பொம்மைகளைத் தயாரிப்பதுதான் எங்களின் பரம்பரைத் தொழில். எங்கள் அப்பாவின் இறப்பிற்குப்பின் நான் இந்தத் தொழிலை செய்து வருகிறேன்’’ என பேச ஆரம்பித்தார் விருது பெற்ற பொம்மைக் கலைஞரான பூபதி.‘‘வாழ்க்கையில் எத்தனை பிரச்னைகளைச் சந்தித்து கீழே போனாலும் தன்னம்பிக்கை இருந்தால் மீண்டெழ முடியும் என்பதே தஞ்சாவூர் பொம்மை உணர்த்தும் செய்தி’’ என்றவர், ‘தஞ்சாவூர் ெபாம்மை போல தலைய தலைய ஆட்டாதே’ என்பதே தஞ்சாவூர் பொம்மைகளின் அடையாளம். தஞ்சாவூர் ராணியும் ராஜாவும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்ததால், அவர்கள் நினைவைப் போற்ற ராஜா-ராணி பொம்மைகளாக உருவாக்குவதாகவும் தெரிவிக்கிறார்.

‘‘நடனம், நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடம் என கலைகளுக்குப் பெயர் பெற்ற தஞ்சையில் ஒரு காலத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது விரல்விட்டு எண்ணும் நிலையில் தொழில் வீழ்ச்சி கண்டுள்ளது. பண்டிகை காலங்களான நவராத்திரி கொலு போன்ற நேரங்களில் மட்டுமே நாங்கள் பிஸி. மற்றபடி தஞ்சையில் மாரியம்மன் கோயில், அம்மன் பேட்டை, கீழ அலங்கம் போன்ற இடங்களில் மட்டுமே சிலர் இந்தத் தொழிலில் இருக்கின்றனர்.

எங்கள் ஊரின் பெருமையான தலையாட்டி பொம்மைகளை இப்போது வேறெங்குமே காண முடிவதில்லை. எங்கள் பொம்மைகள் வெளிநாடுகளுக்குப் பயணித்த காலம் மலையேறி உள்ளூரிலேயே கேட்பாரற்ற நிலையில் கிடக்கிறது’’ என்றவர், பொம்மை தயாரிப்பு தொழிலில் இருந்த பலரும் மாற்றுத் தொழிலை நோக்கிச் சென்றுவிட்டனர். இப்போதிருக்கும் தலைமுறையும் படித்தவர்களாய் பல்வேறு பணிகளுக்கு மாறிவிட்டனர் என்கின்றார்.

‘‘தள்ளிய வேகத்தில் நிமிரும் ‘ராஜா-ராணி’ பொம்மை. தலையை மட்டுமே ஆட்டும் ‘தாத்தா-பாட்டி’ பொம்மை. வாணிபம் செய்கிற ‘செட்டியார்-ஆச்சி’ பொம்மை என தஞ்சையின் அடையாளத்தை தாண்டி, நவீன வரவுகளான தலை மற்றும் உடலை அசைத்து நான்கு திசையும் கழுத்தை மட்டுமே திரும்பி ஆடும் ‘நடன மங்கை’ பொம்மை, கேரளத்து ‘கதக்களி’ நடன பொம்மை, தலையாட்டி தவழும் ‘பேபி டால்’. தலையாட்டும் கிறிஸ்துமஸ் தாத்தா என புதிய வரவுகளாகவும் சில கொலு பொம்மைகள் எங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

டான்ஸிங் டால்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் காற்றின் திசைக்கு அசைவதால், மக்கள் பெரும்பாலும் இதனையே விரும்பி வாங்குகின்றனர். டான்ஸிங் டால் பொம்மைகள் பாரம்பரிய தஞ்சாவூர் பொம்மைகள் கிடையாது. இவற்றின் வரவால்தான் தலையாட்டி பொம்மைகளின் விற்பனை மந்தமாகியுள்ளது. இவை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், காகிதக் கூழ், மரத் தூள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுவதோடு, நடன மங்கைகளின் உடல் பாகங்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டு, தலையும், உடலும் அல்லது தலை மட்டும் ஆடும்விதமாக கம்பியின் மீது உட்கார வைக்கப்படுகிறது.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து களிமண் எடுத்துவந்து அவற்றுடன் காகிதக்கூழ் உள்ளிட்டவற்றை இணைத்து தயாராகின்றன. பொம்மையின் வளைவான அடிப்பாகத்திற்கு கொட்டாங்குச்சி சிரட்டை போன்ற அமைப்பில் தூய களி மண்ணை நிரப்பி இரண்டு நாட்கள் வெயிலில் உலர வைக்கப்படும். இந்தக் களிமண் சிரட்டைக்குள்தான் தஞ்சாவூர் பொம்மை தலையாட்டும் ரகசியம் இருக்கிறது. இவற்றின் அடிப்பாகம் அதிக எடையுடன் பெரிதாகவும், மேல்பாகம் குறைந்த எடையில் குறுகலாகவும் இருக்கும். இதில் முதலில் தயாராவது பொம்மையின் அடிப்பாகம்தான். மேல்பாகம் தனியாகத் தயாரிக்கப்பட்டு பின்னர் அடிப்பாகத்துடன் இணைக்கப்படும். பிறகு உப்புத்தாள் கொண்டு தேய்த்து வண்ணம் தீட்டி வெயிலில் உலர வைக்கப்படும்.

ஒரு செட் என்பது ராஜா-ராணி இணையைக் குறிக்கும். 120 ரூபாயில் தொடங்கி பொம்மையின் அளவுக்கு ஏற்ப விலை அதிகரிக்கும். பெரிய சைஸ் பொம்மைகளை ஆர்டருக்கு ஏற்ப மோல்டுகளை உருவாக்கிய பின்னரே தயாரிப்போம்.இன்றைய இளம் தலைமுறை கணினி, மொபைல் ஆப், சீன பொம்மைகள் என மாறிவிட்டதால், மண் பொம்மைகளின் மவுசு குறைந்து உற்பத்தியும், விற்பனையும் சரிவைச் சந்தித்து வருகிறது’’ என முடித்தார்.

பொம்மை தயாரிப்பு முறை…

1 ராஜா முகத்திற்கு தனி மோல்ட், ராணி முகத்திற்கு தனி மோல்ட் என இரண்டு மோல்டுகளில் தயாராகின்றது.

2 காகிதக்கூழ், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் இரண்டையும் இணைத்து பூரி மாவு பதத்தில் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக்கி, பூரிக் கட்டையில் வட்டமாகத் தேய்க்கின்றனர்.

3 மோல்டின் முன் பகுதிக்கு ஒன்று, பின் பகுதிக்கு ஒன்றாய் வட்ட வடிவ மாவை வைத்து மோல்டிற்குள் செய்தித்தாள்களைத் திணித்து கிழங்கு மாவு பசை கொண்டு மோல்ட் இணைக்கப்படுகிறது.

4 வெயிலில் நன்றாக உலர்த்தியபின் மோல்டை பிரித்தால், தலையாட்டி பொம்மையின் மார்பு வரையிலான உருவம் தயார்.

5 கொட்டாங்குச்சி சிரட்டைக்குள் களிமண்ணை வைத்து அடிபாகம் தொண்ணூறு டிகிரி சாய்வுக் கோணத்தில் உருவாக்கப்படுகிறது.

6 இதன் மீது பொம்மையின் மார்பளவு வடிவத்தைப் பொருத்தி, உப்புத்தாளால் பிசிர்களை தேய்த்தபின், வார்னிஷ் செய்கின்றனர்.

7 மீண்டும் வெயிலில் உலர்த்தி இறுதியாக வண்ணம் தீட்டப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)
Next post குடம்புளி பற்றி தெரியுமா?! (மருத்துவம்)