வெளித்தெரியா வேர்கள்: இந்தியாவின் ‘காட் மதர் ஆப் கார்டியாலஜி’ டாக்டர் பத்மாவதி!! (மகளிர் பக்கம்)
இந்தியர்களில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதில் 50 வயதிற்குட்பட்டவர்கள் 50 சதவீதத்தினர். 40 வயதிற்குட்பட்டவர்கள் 25 சதவீதத்தினர். இப்படி இந்திய இளைஞர்களுக்கிடையே இருதய நோய் அதிகரித்துக் கொண்டே வருவது உண்மையிலேயே கவலையளிக்கிறது..!” – டாக்டர் பத்மாவதி.இந்தியாவின் முதல் பெண் இருதய சிகிச்சை நிபுணர். பல இந்திய இருதயங்கள் ஆபத்தைத் தாண்டித் துடிக்க நம்பிக்கை அளித்த மருத்துவர். பர்மாவில் இருந்து அவர் வந்தாலும் அவரின் மருத்துவக் கனவு தமிழகத்தின் கோவையில் இருந்தே தொடங்கியது என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால், அதுதான் உண்மை.. அவர்தான் டாக்டர் சிவராமகிருஷ்ண ஐயர் பத்மாவதி..! இந்தியாவின் ‘காட் மதர் ஆப் கார்டியாலஜி’ என புகழப்பட்டவர், கடந்த ஆண்டு அவர் மறையும் வரை மக்கள் சேவை செய்தவர்.
Advertisement
Powered By Powered by – Dinakaran x eReleGo
பிறந்தது 1917 ஜூன் 20. அப்போது ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்த பர்மாவில் தனது மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகளுடன் பிறந்தவர். அவரது குடும்பத்தில் மட்டுமல்ல, ரங்கூன் மருத்துவக் கல்லூரியின் முதல் மருத்துவப் பட்டதாரியும் இவர்தான். அதிலும் பல்கலைக்கழகத்திலேயே முதல் மதிப்பெண். பல்வேறு தங்கப் பதக்கங்கள் என்று தனது முத்திரையை துவக்கத்திலே அழுத்தமாய் பதித்தவர்.
பத்மாவதியின் கல்லூரி வயதுவரை பர்மாவில் வசித்து வந்த அந்தக் குடும்பத்தை அங்கிருந்து நகர்த்தியது ஒரு போர். ஆம்.. இரண்டாம் உலகப்போரில், பர்மா மீது ஜப்பான் தாக்குதல் நடத்த, 1942ல் மெர்க்யூ நகரிலிருந்து விமானம் மூலம் தனது தாயார் மற்றும் சகோதரிகளுடன் பர்மாவை விட்டு வெளியேறினார். ‘24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற எச்சரிக்கை வந்ததும், எங்கே போவது என்று யோசித்தபோது எங்கள் மனதில் முதலில் வந்தது தமிழ்நாடுதான்.
கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் எங்கள் குடும்பத்தின் ஆண்களைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லாத போதும் தமிழ்நாட்டின் கோவையில் நாங்கள் மிகவும் பாதுகாப்பாய் இருந்தோம்’ என்று நினைவு கூர்ந்துள்ளார் இவர். போர் முடிந்த பின் பிரிந்த குடும்பம் ஒன்றுசேர, தனது மேற்கல்வி குறித்து பத்மாவதி அப்போது எடுத்த முடிவுகள் அவருக்கானதாக மட்டுமல்லாமல், இந்தியாவுக்கானதாகவும் அது மாறியது எனலாம்.
1949ல் தனது மேற்படிப்புக்காக லண்டன் சென்ற டாக்டர் பத்மாவதி, அங்கு ராயல் காலேஜில் தனக்குப் பிடித்தமான இருதயத் துறையைத் தேர்ந்தெடுத்தார். பெண்கள் பெரிதும் தேர்ந்தெடுக்காத துறை என்றாலும் அதில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் படித்ததாகக் கூறுகிறார் அவர். லண்டனின் தி ராயல் சொசைட்டி ஆஃப் எடின்பரோவில் இருதய சிகிச்சையில் ஃபெல்லோஷிப் பெற்ற பத்மாவதி, தொடர்ந்து அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து நவீன இருதய நோய் சிகிச்சைகளைக் கற்றறிந்தார்.
டாக்டர் ஹெலன் டௌசிக் என்ற பிரபல இருதயநோய் பேராசிரியரிடம், ‘‘ப்ளூ பேபி” எனப்படும் இருதய நோய்களுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கக் கற்றுக் கொண்டார். தொடர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், நவீன இருதய நோய் சிகிச்சையின் தந்தையான பேராசிரியர் டாக்டர் பால் வைட் அவர்களுடன் நான்கு வருடம் பணியாற்றினார். ஆஞ்சியோ(angio) உட்பட நவீன இருதய சிகிச்சை நுட்பங்களையும் அறிந்து கொண்டவர், தொடர்ந்து ஸ்வீடனில், எக்கோ என்ற இருதய ஸ்கேனிங்கில் பயிற்சியும் பெற்று தன்னை ஒரு தேர்ந்த இருதய சிகிச்சை மருத்துவராக மாற்றினார்.
டாக்டர் பத்மாவதியை இழக்க விரும்பாத அமெரிக்க மருத்துவமனைகள் அவரை அங்கேயே பணிபுரிய அழைத்தன. அதேசமயம் அப்போதைய சுகாதார அமைச்சரான ராஜ்குமாரி அம்ரித் கௌர், டில்லியின் பெண்கள் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய நியமன ஆணையினை பத்மாவதிக்கு அனுப்பி வைத்தாராம். அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதில் அற்புதமான எதிர்காலம் இருப்பதை உணர்ந்தாலும், போர்க்காலத்தில் தனக்கும், தனது குடும்பத்திற்கும் வாழ்வளித்த இந்தியாவிற்கு திரும்புவதுதான் முறை என்று முடிவெடுத்து, 1953ல் இந்தியா திரும்பி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் தனது பணியைத் துவங்கியுள்ளார். அது இந்தியாவின் இருதயநோய் சிகிச்சைத் துறைக்கே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பதுதான் உண்மை.
1954ல், தான் பணிபுரிந்த மருத்துவக் கல்லூரியில், இருதயத் துறையை முதன்முதலாய் தொடங்கியவர், அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் நிறுவனத்தின் நிதியுதவியோடு, இந்தியாவின் முதல் கேத் லாப் ஒன்றையும் தொடங்கினார். மாரடைப்பின் போது மேற்கொள்ளப்படும் ஆஞ்சியோகிராம், ஸ்டென்டிங் போன்ற உயிர்காக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள உதவும் இந்த கேத் லாப் அந்தக் காலத்திலேயே துவங்கப்பட்டது இந்திய மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம்.
மாணவர்கள் வெளிநாடு போகாமல், இந்தியாவிலேயே எளிதில் கற்குமாறு இருதயத் துறையின் பட்ட மேற்படிப்பான டி.எம். கார்டியாலஜியைத் துவக்கியதும் டாக்டர் பத்மாவதியே. ஆம். இந்திய மருத்துவக் கவுன்சிலின் முக்கிய உறுப்பினரான அவரது பரிந்துரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேற்படிப்பு தான், இன்று நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான இருதய நோய் வல்லுனர்களை உருவாக்கி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றி வருகிறது.
இவரது பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசு, 1967ல் மவுலானா ஆசாத் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதன்மை இயக்குநராக பதவியேற்க அவரை அழைத்தது. தொடர்ந்து அத்துடன் இணைந்து செயல்பட்ட இர்வின் & ஜிபி பண்ட் மருத்துவமனையில் இருதய சிகிச்சைப் பிரிவுகளைத் தொடங்கினார் டாக்டர் பத்மாவதி. அப்போது அவர் சமர்ப்பித்த நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டன. அவற்றுள் முக்கியமானது குழந்தைகளை பெரிதும் பாதிக்கும் ரூமேடிக் காய்ச்சல் என்ற வாத நோய் குறித்த ஆய்வுகள் மற்றும் அவை உருவாக்கிய இருதய பாதிப்புகளும். அவரது இந்த ஆய்வுக் கட்டுரையை இன்றளவும் நினைவுகூர்கிறது இந்திய மருத்துவ உலகம்.
உலகெங்கும் பயணித்து தான் தேடிக் கற்ற கல்வியில் இடம்பெறாத இருதய நோய்கள் பல நமது நாட்டின் கீழ்த்தட்டு மக்களிடையே அதிகம் இருப்பதைக் கவனித்தவர், அவை வராமல் தடுக்க, அனைத்திந்திய இருதய நோய் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, சுற்றியுள்ள கிராமங்களில் முகாம்களை தொடர்ந்து நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ‘மருந்து நிவாரணிகளை உங்கள் சேவகனாக்குங்கள். அவை எஜமானாக அனுமதித்துவிடாதீர்கள்” என்றார். நோயாளிகளைத் தொட்டு கண்களாலும், காதுகளாலும் பார்த்தாலும், இருதயத்தால் உணர்ந்துதான் சிகிச்சை அளிக்கிறேன் என்றவர், புதிய புதிய தொழில்நுட்பங்களை தினம்தினம் கற்றுக் கொண்டே இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பர்மீஸ், ஜெர்மனி, ஃப்ரெஞ்ச் என பல மொழிகளை சரளமாய் பேசும் பத்மாவதி, புத்தகங்களின் மீது பேரார்வம் கொண்டவர். தனது மருத்துவமனையில் தனி நூலகம் ஒன்றை நிறுவி, 300க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் உலகிற்கு சமர்ப்பித்துள்ளார். மேலும் இரண்டு உலகளாவிய இருதய சிகிச்சை அரங்கங்களில் தனது உரையை நிகழ்த்தி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
தனது பணி ஓய்வுக்குப்பின், 1981ல் ஆசியாவின் முதல் பிரத்யேக இருதய நோய் சிகிச்சை மருத்துவமனை என்கிற தனிச் சிறப்புமிக்க ‘நேஷனல் ஹார்ட் இன்ஸ்டியூட்’ இருதய நோய் சிகிச்சை மருத்துவமனையினை நிறுவி பின்தங்கிய மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்தார். அது இன்றுவரை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நம்மிடையே ஆஞ்சியோ, ஸ்டென்ட், பை பாஸ் சர்ஜரி போன்ற வார்த்தைகள் இயல்பாகி விட்ட நிலையில், இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்படுவதும், அதற்கு இந்த சிகிச்சைகள் மேற்கொள்வதும் சகஜமாகிவிட்டதே என வருந்தியவர், ‘உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினால், எளிதில் இருதய நோய் ஏற்படுவதில்லை. அதிலும் இளவயது மாரடைப்பு ஏற்படுவதே இல்லை’ என்பதை வலியுறுத்தி, தானும் அவ்வாறே வாழ்ந்து காட்டினார்.
தனது 103 வயது வரை, ஆரோக்கியத்துடன் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு, நீச்சல் பயிற்சியே காரணம் என்றவர், வாரத்தில் ஆறு நாட்களும், வருடத்தில் ஆறு மாதங்களும் நீச்சல் பயிற்சியை விடாது மேற்கொண்டதாகவும், அத்துடன் நடைபயிற்சி, டென்னிஸ் என தன்னை எப்போதும் சுறுசுறுப்பாய் வைத்துக் கொண்டதாகவும் தன் வாழ்வின் ரகசியத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இறுதி மூச்சுவரை மருத்துவப் பணிபுரிந்த டாக்டர் பத்மாவதிக்கு பத்ம பூஷன், பத்ம விபூஷன், பி.சி. ராய் விருது, கமலா மேனன் விருது, டாக்டர் ஆஃப் சயின்ஸ் பட்டம் என்று பல்வேறு விருதுகளைத் தொடர்ந்து அடுத்தடுத்து வழங்கி சிறப்பித்துக் கொண்டே இருந்தது இந்திய அரசு. திருமணம் செய்து கொள்ளாமலே தன் வாழ்நாளை இருதய நோய் சிகிச்சைத் துறைக்கு அர்ப்பணித்த இந்த பெண் ஆளுமை கடந்த 2020 ஆகஸ்ட் 29ல் தனது 103ம் வயதில் கோவிட் நோய் தொற்றில் சிக்கி தான் பணியாற்றிய மருத்துவமனையிலே இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது.
Average Rating