உலகமே முடியாது என கூறினாலும் நான் சாதித்துக் காட்டுவேன்! (மகளிர் பக்கம்)
பாராலிம்பிக் பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனை பாலக் கோலி
பாராலிம்பிக் வரலாற்றில் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் தான் முதல் முறையாக பேட்மிண்டன் போட்டிகள் சேர்க்கப்பட்டன. இதில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலக் கோலி பங்கேற்றார். பாராலிம்பிக் பேட்மிண்டனில் மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய மூன்று பிரிவுகளில் விளையாடிய ஒரே இந்திய வீராங்கனையும் இவர் தான். உலக தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள பாலக் கோலி, தனது அதிரடியான ஆட்டங்களை ஆடிய பொழுதும் பதக்கங்கள் ஏதும் வெல்லவில்லை. இருந்தாலும் தனது அடுத்தடுத்த போட்டிகளில் மனம் தளராமல் பங்கேற்க தயாராகிறார் பாலக் கோலி.
ஒவ்வொரு நாளும் காலையில் விடியும் போது நமக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கும். ஒன்று நம்முடைய கனவை தூக்கத்தில் கண்டுகொண்டு இருப்பது. மற்றொன்று தூக்கத்தில் கண்ட கனவை நினைவாக்க முயற்சி எடுப்பது. இதில் நாம் எதை தேர்வு செய்கிறோமோ அதில்தான் நம்முடைய வெற்றி இருக்கும். அந்த வகையில் பாலக் கோலி இரண்டாவது வாய்ப்பை தேர்வு செய்தவர். பஞ்சாப் பகுதியின் ஜலந்தரில் பிறந்தவர் பாலக் கோலி. பிறக்கும் போதே இடது கையில் பிரச்சினை இருந்ததால் அது சரியாக வளரவில்லை. தன்னுடைய குறையை பார்த்து பலரும் பரிதாபப்படுவது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் தன்னுடைய இயலாமையை தனது சிறப்பு திறனாக மாற்ற எண்ணினார்.
2017ஆம் ஆண்டு தன்னுடைய 14வது வயதில் பாரா விளையாட்டுகளில் சேர முடிவு எடுத்தார். அவருக்கு ஏற்ற விளையாட்டு என்ன என்று தேடிய போது பேட்மிண்டன் விளையாட்டை தேர்வு செய்தார். “எனது உடல் குறைபாட்டை ஒரு சூப்பர் திறமையாக மாற்றிக் கொண்டேன்” என்கிற பாலக், “உலகமே முடியாது என கூறினாலும், அது சாத்தியம் தான், அதை நான் சாதித்து காட்டுவேன் என கூற வேண்டும்” என்கிறார். “என்னை முதல் முறையாக பார்க்கும் எவரும், ‘உன் கைக்கு என்ன ஆனது?’ என்று கேட்பார்கள். பிறப்பிலேயே அப்படித்தான் என அவர்களிடம் தெரிவிப்பேன்.
நான் குழந்தையாக இருந்த போது ‘பிறந்ததிலிருந்தே அப்படித்தான்’ என்கிற சொல்லுக்கான அர்த்தம் கூட எனக்குத் தெரியாது. ஆனால், அந்த பதிலை கூற வேண்டும் என நான் அறிந்திருந்தேன். எந்த ஒரு விளையாட்டையும் தொழில் முறையில் விளையாட நான் விரும்பியதில்லை. ஆனால் எந்த விளையாட்டை நான் விளையாடினாலும், அது எனக்கான விளையாட்டு என கூறப்படுவதை நான் கேட்டிருக்கிறேன்” என்கிறார் பாலக் கோலி. இந்தியாவின் பாரா பேட்மிண்டன் பயிற்சியாளரான கௌரவ் கண்ணாவை, கோலி சந்தித்த போது, பலரும் இவரால் பாரா பேட்மிண்டனில் சாதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
அந்த சமயத்தில் பயிற்சியாளர் கௌரவ் கண்ணா பாலக் கோலிக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். இது குறித்து கூறியுள்ள பாலக், “எதுவும் இல்லாத இடத்திலிருந்து, உலகின் டாப் 6 இடங்களை பிடித்து பாராலிம்பிக் போட்டிகளுக்கு நான் தகுதி பெற்றது, உண்மையிலேயே ஒரு நீண்ட கால போராட்டம். அந்த போராட்டத்தை வெற்றிப் பாதையாக மாற்றிய என் பயிற்சியாளருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவரை நான் சந்தித்த போது, என்னுடைய நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களை பட்டியலிடச் சொன்னார். எதிர்மறை விஷயங்கள் ஒரு சில தான் இருந்தன.
அதைப் பார்த்த என் பயிற்சியாளர் ‘‘இவை தற்காலிகமானவை, முயன்றால் அதையும் மாற்றி அமைக்க முடியும்” என்று எனக்கு ஆலோசனை கூறினார்’’ என்ற பாலக், நேர்மறையாக இருக்கும் தன் பலத்தை கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியத்தில் பேட்மிண்டனில் களமிறங்கினார். பயிற்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் தேசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் என மூன்று பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றார்.
அதன் பின்னர் உகாண்டாவில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். அத்துடன் உலக பாரா பேட்மிண்டன் தரவரிசையில் 11வது இடத்தையும் பிடித்தார். 2019ஆம் ஆண்டில் இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் பாராலிம்பிக் கனவிற்கு தடையாக இருக்குமோ என்று கருதப்பட்டது. எனினும் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக தள்ளிப்போனது அவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. காயத்தில் இருந்து மீண்ட பாலக் கோலி இந்தாண்டு துபாயில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றார்.
அதில் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம், இரட்டையர் பிரிவில் வெண்கலம் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் என மூன்று பதக்கங்கள் வென்று அசத்தினார்.
விளையாட்டால் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசுகையில், “என் வாழ்வில் எனக்கு ஏற்பட்ட மாற்றம் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். நம் வாழ்வில் நமக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள நாம் சாதகமாக இருக்க வேண்டும். அதுவே உங்களை மிகப்பெரிய உச்சத்துக்கு கொண்டு செல்லும்” என்கிறார் பாலக் கோலி.
Average Rating