திரும்பிப் பாருங்கள் !! (கட்டுரை)

Read Time:15 Minute, 9 Second

காபூல்: ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் ஒரு நாள் முன்னதாக வெளியேறின. அதனால், 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க படைகள் வெளியேறியதால் காபூலில் தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 9 ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர், தீவிரவாதிகளை போட்டுத் தள்ளுவதற்காக அடுத்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க படைகள் நுழைந்தன. அதன்பின், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானை, தலிபான் தீவிரவாதிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் கைப்பற்றினர்.

அமெரிக்க அரசு நிர்வாகம் தங்களது படைகளை இன்றுக்குள் (ஓக. 31) வாபஸ் பெறுவதாக அறிவித்ததால், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுக்குள் படிப்படியாக கொண்டு வந்தனர். தலிபான்களுக்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆப்கானில் வசித்து வந்த வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் கடந்த 3 வாரங்களாக வெளியேற்றின.

தலிபான்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்களும் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்கு நடந்த துயரங்களை உலகமே பார்த்துக் கொண்டு இருந்தது. கிட்டதிட்ட 1.5 இலட்சம் பேர் ஆப்கானில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தலிபான் – அமெரிக்க படைகள் விவகாரம் ஒருபக்கம் இருக்க, ஐஎஸ்ஐஎஸ் – கே என்ற அமைப்பின் தீவிரவாத குழுக்கள், தலிபான்களுக்கு எதிராக செயல்படும் ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாண படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வந்தன. ஐஎஸ் தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்கர் உட்பட 170க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதன்பின் அமெரிக்கா நடத்திய பதிலடி ட்ரோன் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகளின் வாகனங்கள், முக்கிய தளபதிகள் சிலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர்.

கெடு விதிக்கப்பட்ட ஒரு நாள் முன்னதாக, அமெரிக்கா தனது கடைசி விமானமான ‘சி -17’-வுடன் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்றடைந்தது. ஆப்கானின் ஆபத்தான கட்டங்களில் இருந்து நாடு திரும்பிய வீரர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படைகள் ஆப்கானைவிட்டு வெளியேறியதால், காபூல் உள்ளிட்ட நகரங்களில் பட்டாசு வெடித்தும், வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும், வெடிகுண்டுகளை வானை நோக்கி வெடிக்க வைத்தும் தலிபான்களும், மக்களும் கொண்டாடினர்.

ஆனால், காபூல் மக்கள் விமான நிலையத்தின் மீது மற்றொரு தாக்குதல் நடந்திருக்கலாம் என்று அஞ்சினர். இருந்தும் தலிபான்கள் தரப்பில் வெளியிட்ட செய்தியில், ‘இது, கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு; காபூல் மக்கள் பயப்பட வேண்டாம். அமெரிக்க படைகள் சென்றுவிட்டன. 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்தது. இது வரலாற்று சிறப்புமிக்க தருணம்’ என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் பிடியில் இருந்த காபூல் விமான நிலையம் இனி யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாததால், இனிமேல் விமானப் போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஆப்கானில் தீவிரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்க இராணுவம் 2001 ஆம் ஆண்டு முதல் 775 பில்லியன் ​​டொலருக்கும் மேலாக செலவு செய்துள்ளது.

தற்போது, நேட்டோ மற்றும் அமெரிக்க படைகள் வெளியேறியதால், பல இலட்சம் மக்களை கொன்று குவித்த 20 ஆண்டுகால ஆப்கான் போர் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில், தலிபான் தீவிரவாதிகள் தங்களது விருப்பப்படி ஆப்கானில் புதிய அரசை அமைக்க உள்ளார்கள். அந்த அரசு எப்படி இருக்கும்? என்று உலக நாடுகளே எதிர்பார்த்துக் கொண்டுள்ளன.

20 ஆண்டுகால போர் எப்படி நடந்தது?

– 2001 செப். 11:

ஆப்கானிஸ்தானில் இருந்த ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்-கொய்தா, அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தை தகர்த்தது.
இந்தத் தாக்குதலுக்காக நான்கு வர்த்தக விமானங்கள் கடத்தப்பட்டன. அதில், இரண்டு நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தையும் மற்றொரு விமானம், வொஷிங்டனில் உள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறையான ‘பென்டகன்’ கட்டடத்தை தாக்கியது. நான்காவது விமானம், பென்சில்வேனியா வயல்வெளி பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த தாக்குதல்களில் கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர்.

– 2001 அக். 7:

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களான காபூல், கந்தஹார், ஜலாலாபாத் ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ள தலிபன் மற்றும் அல் – கொய்தா இலக்குகளை அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்கின.

– 2001 நவ. 13:

அமெரிக்க கூட்டுப்படையுடன் சேர்ந்து, தலிபான்களுக்கு எதிராக செயல்படும் வடக்கு கூட்டணியும் தாக்குதல்களை நடத்தின. இவர்கள் காபூலுக்குள் நுழைந்து தலிபான்களை விரட்டியடித்தனர்.

– 2004 ஜன. 26

‘லோயா ஜிர்கா’ என்ற நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, புதிய ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்டமானது. அந்த அரசியலமைப்பு, 2004 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வழிவகுத்தது.

– 2004 டிசம்பர் 7:

ஆப்கான் ஜனாதிபதியாக ஹமீத் கர்ஸாய் தெரிவானார். இவர், தலிபான் எதிர்ப்பு குழுக்களை வழிநடத்தியவராவார்.

– 2006 மே 12:

பிரிட்டிஷ் படைகள், ஆப்கானின் தெற்கில் உள்ள தலிபான் கோட்டையான ஹெல்மண்ட் மாகாணத்திற்குள் நுழைந்தன. அவர்கள், புனரமைப்பு திட்டங்களுடன் தலிபான்களையும் அழித்து வந்தனர். அங்கு ஏற்பட்ட மோதலில் 450க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் படையினர் உயிரிழந்தனர்.

– 2009 பிப்ரவரி 17:

ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்படும் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா ஒப்புதல் அளித்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து நாற்பதாயிரமாக உயர்ந்தது. அவர்கள் நாட்டின் தென் பகுதியில் தீவிர போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

– 2011 மே 2:

அமெரிக்காவை சிதைத்த அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டான். பாகிஸ்தான் இராணுவ பயிற்சி மையத்தில் இருந்து, கிட்டதிட்ட ஒரு மைல் தூரத்துக்கும் குறைவான இடத்தில் பதுங்கியிருந்த பின்லேடன், அமெரிக்க கடற்படை அதிரடி வீரர்களால் கொல்லப்பட்டான். அவனது உடல் கடலில் தூக்கி வீசப்பட்டது. சிஐஏ தலைமையிலான 10 ஆண்டுகால வேட்டை பின்லேடனை கொன்றதுடன் முடிவுக்கு வந்தது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ‘பாகிஸ்தான் நம்பமுடியாத கூட்டாளி’ என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது.

– 2013 ஏப். 23:

தலிபான் தீவிரவாத அமைப்பின் நிறுவனரான முல்லா முஹமது ஒமர் திடீரென இறந்தான். அவனது மரணம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டாக வெளியிடப்படாமல் இரகசியமாக வைத்திருந்தனர். ஆப்கானிஸ்தான் உளவுத்துறையின்படி, முல்லா ஒமர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அதனை மறுத்தது.

– 2014 டிச. 28

முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரின் போர் நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதாக அறிவித்தனர். அமெரிக்காவும் தங்களது படையினரின் எண்ணிக்கை குறைத்துக் கொண்டது. அங்கேயே தங்கி இருந்தவர்கள் ஆப்கன் இராணுவத்தினருக்கும், காவல்துறையினருக்கும் பயிற்சி கொடுத்து வந்தனர்.

– 2015 ஆக. 10:

படைகளின் வீரியம் குறைந்ததால், தலிபான்கள் மீண்டும் தங்களது தொடர் தற்கொலை படை தாக்குதல்கள், கார் குண்டுவெடிப்பு மற்றும் பிற தாக்குதல்களைத் தொடங்கினர். காபூலில் உள்ள பாராளுமன்ற கட்டடம் மற்றும் குண்டூஸ் நகரம் மீது தாக்குதல் நடத்தினர். காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையம் தலிபான்களால் தாக்குதலுக்கு ஆளானது.

– 2019 ஜன. 25:

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக அஷ்ரப் கனி பதவிவகித்த காலப்பகுதியில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

– 2020 பிப். 29:

அமெரிக்கா, தலிபான்கள் இடையே, கத்தாரின் தோஹாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, 14 மாதங்களுக்குள் அனைத்து வெளிநாட்டுப் படைகளையும் திரும்பப் பெற அமெரிக்கா மற்றும் நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொண்டன.

– 2021 ஏப். 13:

2021 ஆம் ஆண்டு செப். 11 ஆம் திகதிக்குள் அனைத்து அமெரிக்க படைகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்தார்.

– 2021 ஆக. 16:

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் முக்கிய பிரமுகர்கள் நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆப்கன் அரசுப் படையினர், குறைந்தபட்ச எதிர்ப்பை மட்டுமே வெளிப்படுத்தினர். அதனால், தலிபான்கள் உயிர் சேதமின்றி ஆப்கானை தங்களுடைய வசமாக்கிக் கொண்டனர்.

– 2021 ஆக. 31:

ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகள் முழுவதையும் விலக்கிக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை (யுஎன்எஸ்சி) நடத்திய அவசர கூட்டத்தில், இந்தியாவின் தற்போதைய தலைவர் தலைமை வகித்தார். அப்போது, ஆப்கானிஸ்தான் நிலைவரம் குறித்து முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ‘ஆப்கானை மையமாக கொண்டு ஒரு நாட்டை அச்சுறுத்துவது அல்லது தாக்குவது அல்லது தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஆகிய நடவடிக்கைகளில் மற்ற நாடுகள் ஈடுபடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

– 200 வீரர்கள் எப்ப வருவாங்க?

* கடைசியாக 5 அமெரிக்க இராணுவ விமானங்களில் மூலம் மக்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால், இன்னும் 200 அமெரிக்கர் மற்றும் ஆயிரக்கணக்கான ஆ?ப்கானிஸ்தான் மக்கள் காபூலில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இவர்கள், ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டுமானால், இனிமேல் தலிபான்களின் அனுமதியை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்வென்பது பெருங்கனவு – கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! (மகளிர் பக்கம்)
Next post சிறுநீரக நோய்க்கு வாழைத்தண்டு சூப் சாப்பிடுங்க!! (மருத்துவம்)