பார்ப்பவர் கண்களில் அழகு..! (மருத்துவம்)
அழகை பராமரிக்கவும், வசீகர முகப் பொலிவுடன் இருக்கவும் மெனக்கெடாத பெண்கள் ஒருவர் கூட இருக்க முடியாது. அங்க, அவயங்கள் அமைவதில் இயற்கை ஒரு போதும் பாரபட்சம் காட்டுவதில்லை என்றாலும், பரம்பரை மரபு சார்ந்த வகையில் ஒரு சிலருக்கு அங்கங்கள் அவலட்சணமாக அமைவதை என்னவென்று கூறுவது?அதே சமயம், அவளுக்கு என்ன… சாமுத்ரிகா லட்சணத்துடன் களையான முகம்… என கவர்ச்சியான பெண்கள் குறித்து ஆண்கள் ஏக்கத்துடனும் பெண்கள் பொறாமையுடனும் வர்ணிப்பதும் இயல்பிலேயே நீடிக்கிறது.
‘‘விகாரமான தோற்றத்தை லட்சணமாக மாற்றுவது குறித்து பெண்களிடையே ஆண்டுக்கணக்கில் குழப்பங்கள் நிலவுகிறது. அறிவியலும், நவீன தொழில்நுட்பமும் அனைத்து துறைகளிலும் போட்டி போட்டு முன்னேற்றம் கண்டுள்ள இந்த கால கட்டத்தில், காஸ்மெட்டாலஜி (அழகியல்) துறை இப்போது பருவப் பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது’’ என்கிறார் காஸ்மெட்டாலஜி நிபுணர் டாக்டர் செல்வம்.
பூப்பெய்திய பெண் பாதுகாப்பின்றியும், அனுமதியின்றியும் படி தாண்டக்கூடாது என்ற காலம் மலையேறி, குடும்பம் தத்தளிக்காமல் இருக்க வேண்டும் என்றால், பெண்களும் சம்பாதிக்கச் செல்ல வேண்டும் எனும் மாற்றம் சமுதாயத்தின் கட்டாயமாக இன்று கருதப்படுகிறது. இங்கு தான் பெண்களில் பலருக்கும் பிரச்னை ஏற்படுகிறது.
கல்லூரியில் டாப் ரேங்க், கோல்டு மெடலிஸ்ட், நுழைவுத் தேர்வில் அசத்தல், அபார துணிச்சலுடன் நேர்முகத் தேர்வில் கொளுத்தி போட்ட பட்டாசாக பெண் பொளந்து கட்டினாலும், தோற்றப்பொலிவு ஒரு சில துறைகளில் மிக முக்கியமானதாக உள்ளது. வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களையும் இங்கு குறை கூற முடியாது. வாடிக்கையாளரை கவர்ந்து பேச, முகம் மட்டுமன்றி அங்க பொலிவுடனும், கனிவான, கவர்ச்சியான தோற்றத்துடனும், களையாகவும் பெண் ஊழியர்களை நியமித்தால்தான் வியாபார போட்டியை சமாளிக்க முடியும் என வர்த்தக நிறுவனங்கள் கருதுகின்றன. உதாரணத்துக்கு, விமான பணிப்பெண்களை ஒரு காலத்தில் சுட்டிக்காட்டுவார்கள்.
ஆனால் இன்றைக்கு ஷாப்பிங் மால்களிலும், தங்க மாளிகைகளிலும், கார்ப்பரேட் நிறுவனங்களிலும் அவ்வளவு ஏன் ஏறக்குறைய 90% தனியார் நிறுவனங்களிலும் பெண்களின் தோற்றம், நடை, உடை, பாவனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனால் தான் போட்டி போட்டுக்கொண்டு ஷாப்பிங் மால்களிலும், தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் நகைக்கடை உள்பட வர்த்தக தளங்களில் ஷோ கேஸ் பொம்மைக்கு பதிலாக நடமாடும் நிஜங்களை பணிக்கு அமர்த்தி ஜொலிப்பு கூட்டி, வசூலை வியாபாரிகள் குவிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
சரி, பெண்களின் தோற்றத்தை மாற்றி அமைப்பதால், பக்கவிளைவு ஏற்படுமா என எழுப்பிய கேள்விக்கு, ஆண்டவன் படைத்த அழகு மேனியை மென்மேலும் மெருகேற்றுவதால் எந்த தீமையும் இல்லை’’ என்று பெண்களின் அச்சத்தை போக்கும் விதமாக காஸ்மெட்டிக் சிகிச்ைச குறித்து விவரித்தார் டாக்டர் செல்வம்.
‘‘அழகு பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது ஆங்கில பொன்மொழி. ஆயிரம் கோடி மாந்தர் அமைந்த இந்த பரந்த உலகில், ஒருவரின் அங்க வடிவமைப்பு பொதுவாக மற்றவரிடம் காணப்படுவதில்லை என்பது பெரும் வியப்பு. ஆனால் சாமுத்திரிகா லட்சணத்துடன் அமைந்த பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். முகம் உள்பட தேகத்தை பொலிவாக்கும் காஸ்மெட்டாலஜி துறை உலகளவில் பெண்களிடம் இப்போது மிகவும் பிரபலம் ஆகியுள்ளது. தோற்றம் சார்ந்த வருத்தம், தாழ்வு மனப்பான்மை மற்றும் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் மனநிலை ஆகியவற்றை சரி செய்ய, காஸ்மெட்டிக் சர்ஜரி உதவும்.
விஞ்ஞானம் சார்ந்த வளர்ச்சியும், மக்களின் விழிப்புணர்வு மற்றும் தோற்றப்பொலிவு மெருகூட்டும் தேவைகள் இந்த துறையை நல்ல வளர்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. விகாரமான முகத்தை வசீகரம் ஆக்கவும், மார்பக கவர்ச்சி இல்லை என்றும், தொப்பையை குறைக்கவும், வெளிப்பார்வைக்கு புலப்படும் தழும்புகளை நீக்க வேண்டும் என்று எங்களை நாடி வரும் பெண்களுக்கு முதலில் அது தொடர்பான விரிவான ஆலோசனை வழங்குகிறோம். காது மடலில் ஏற்படும் இயற்கை குறைபாடு, சப்பை மூக்கு, கூரான மூக்கு, தீக்காய தழும்புகள், அன்னப்பிளவு, உதட்டுப்பிளவு என்றும் பல பெண்கள் ஆலோசனை பெறுகின்றனர்.
காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு வரும் பெண்களை உடனடியாக சர்ஜரிக்கு உட்படுத்த முடியாது. முதலில் அவர்களின் உடல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்வோம். காரணம் சிகிச்சைக்குப் பின் உடலில் பக்கவிளைவு ஏற்படாமல் இருக்க வேண்டும். மனதளவில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக மூன்று கட்ட ஆலோசனை வழங்குகிறோம். முதலில் பயனாளியின் தேவை என்ன என்பது பற்றி கேட்டறிந்து கொள்வோம். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப என்ன சிகிச்சை அளிக்கலாம் என்று இரண்டாம் கட்டத்தில் ஆலோசனை செய்வோம்.
அதில் சிகிச்சையினால் ஏற்படும் பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்தும் விவரிக்கப்படும். கடைசி கட்டத்தில் அவர்கள் சிகிச்சையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்தால் மட்டுமே தான் சிகிச்சை முறையினை மேற்கொள்கிறோம். ஒரு சில காஸ்மெட்டிக் சர்ஜரிகளில், உடனடியாக மாற்றம் கொண்டுவர முடியாது. சர்ஜரிக்குப் பின் சில காலம் பொறுமை காத்த பின்னரே, பலன் தெரியும்.
இதன் முக்கிய அம்சம் என்றால், பயனாளிக்கு செய்யப்படும் சிகிச்சை குறித்து நூறு சதவீதம் ரகசியம் காக்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, சமீபகாலமாக சர்ஜரியை எளிமையாக மேற்கொள்ள முடிவதால், பலரும் விரும்பி அணுகுகின்றனர்’’ என்றார் டாக்டர் செல்வம்.
Average Rating