’பரதத்தை தெருவுக்கு இறக்கக் கூடாது’’ கலாநிதி நிசாந்தராகினி கூறுகிறார் !! (கட்டுரை)
“நடனக்கலை ஒரு தெய்வீகக்கலை. அதைத் தெருவுக்கு கொண்டுவரக்கூடாது என்பது, எனது ஆணித்தரமான கருத்தாகும். அவ்விடயத்தில் நான் மிகுந்த கவனம் செலுத்திவருகிறேன்” இவ்வாறு கூறுகிறார், இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் திகழும் நடனத்துறை முனைவர்களுள் ஒருவரான கலாநிதி திருமதி நிசாந்தராகினி திருக்குமரன்.
தேசியகல்வி நிறுவகத்தில் கடந்த 13 வருடகாலமாக, நடனத்துறைக்கு பொறுப்பாகவிருக்கும் நடனத்துறை மேலாளர் கலாநிதி திருமதி நிசாந்தராகினி, தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு இறுதியில் நடனத்துறை முனைவர் பட்டத்தைப் பெற்ற பின்னர், முதன்முதலாக முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவுக்கு விஜயம்செய்தார்.
அவரது மாணவி செல்வி ஜெயகோபன் தட்சாயினி விடுத்த வேண்டுகோளின் பேரில் இங்கு விஜயம்செய்த அவர், இந்து கலாசார திணைக்கள அனுசரணையோடு, இங்கு ஆரம்பமாகிய பரத நாட்டிய வகுப்பை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். அவர் தங்கியிருந்த நடனஆசிரியை ஜெயகோபன் தட்சாயினியின் வீட்டில், முனைவர் நிசாந்தராகினியை நேர்காணல் செய்தோம்.
அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறியதாவது:
சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்க வீதிகளில் நாட்டிய உடுப்புகளுடன் பரதநாட்டியம் ஆட மாணவிகள் பணிக்கப்படுவதை கண்டித்திருக்கிறேன். பரதக்கலையை தெருவுக்கு கொண்டுவரக்கூடாது. சில இடங்களில், மைதான விளையாட்டு நிகழ்வுகளின் இடைவேளைகளில் நாட்டியக் கலையை காட்டவிரும்புவார்கள். அது தவறு; அதற்கு இடமளிக்கக்கூடாது. தெய்வீகக்கலையை அதற்குரிய இடத்தில், அதற்குரிய மரியாதைகளுடன்தான் பேணவேண்டும். கலை, கலாசாரம், பண்பாடுகளை நாம்தான் பேணவேண்டும். அதனை அழிக்க முற்படக்கூடாது.
ஒர் இனத்தின் பண்பாட்டு அடையாளமாக இருப்பது கலை, பண்பாடு, பாரம்பரிய அம்சங்கள். ஓரினம் எத்துணை வளர்ச்சியடைந்துள்ளது என்பதைக் கட்டியம்கூறி நிற்பது, அவ்வினத்தின் கலை, கலாசாரம், பண்பாடு ஆகிய அம்சங்கள். இதனை அவ்வினத்தின் அளவுமட்டங்கள் எனலாம். அந்தவகையில், இனத்தின் இருப்புக்குப் பாதுகாவலராக இருப்பவர்கள், நாங்களே என்பதில் பெருமை அடைகிறோம்.
கேள்வி: உங்களின் பாடசாலைக்கல்வி, ஆரம்பகாலம் பற்றிக்கூறுங்கள்?
பதில்: நான், யாழ்ப்பாணம், உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவள். யாழ். யூனியன் கல்லூரியில் பயின்றவள். 2000ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சை எழுதி, 02 ஏபி பெறுபேற்றைப் பெற்று, யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில், நடனத்துறை பட்டப் படிப்புக்காகச் சேர்ந்தேன்.
கேள்வி: நல்ல பெறுபேற்றைப் பெற்ற நீங்கள், இராமநாதன் கல்லூரியில் சேர்ந்த காரணமென்ன?
பதில்: அது, எனது அம்மாவின் ஆசை. அந்தக்காலத்தில் மேடை நாடகம், நடனத்துறையில் அதீத ஈடுபாடு காட்டினேன். எமது பரம்பரையில் யாருக்கும் கலைவாசனை இல்லை. இருந்தும் அம்மாவின் கனவை நிறைவேற்றும்பொருட்டு, நான் நடனத்துறையை சிறுவயது முதல் தேர்ந்தெடுத்து, ஆர்வம்காட்டினேன். அதனால்தான் அங்கு சேர்ந்தேன்.
யாழ்.பல்கலைக்கழக முன்னாள் நடனத்துறைத் தலைவராக இருந்த திருமதி டொக்டர் கிரிசாந்தி ரவீந்திரனை குருவாகக்கொண்டு பயின்றேன். பல்கலைக்கழகத்தில் டொக்டர் திருமதி ஜெயரஞ்சனி ஞானதாஸின் வழிகாட்டலில், மேடை நாடகத்தில் பயிற்சி பெற்றேன். எனது அணியில் 92 மாணவர்களில் முதல் மாணவியாக தேர்ச்சியடைந்தேன். தமிழ், சிங்கள தொலைக்காட்சி நாடகங்களில் நடித்திருக்கிறேன்.
பட்டப்படிப்பை அடுத்து, கொழும்பில் திருமணம் நிச்சயமாகியிருந்தது. கணவரது உறவினரான பேராசிரியர் சிவத்தம்பியின் வழிகாட்டலில், 2007இல் தேசியகல்வி நிறுவகத்தில் திட்ட அலுவலராக இணைந்தேன். வடக்கிலிருந்து அங்கு சென்றதால் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. மொழிப்பிரச்சினை முதல் சிரேஷ்டத்துவம் வரை!
கேள்வி: இலங்கையின் பாடசாலை கலைத்திட்ட வடிவமைப்பில் பெரும் பங்காற்றும் தேசிய கல்வி நிறுவகத்தில், நடனத்துறை சார்ந்து நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
பதில்: நடனத்துறையைப் பொறுத்தவரையில் அன்று, வடக்கு முன்னணியிலிருந்தது. அதுபோல கிழக்கையும் நல்லநிலைக்குக் கொண்டுவரும் முதல் முயற்சியை மேற்கொண்டு ஆய்வுசெய்தபோது, முதலில் ஆசிரியர்களை வாண்மை மிக்கவர்களாகப் பயிற்சியளிக்க எண்ணி, தொடர் பயிற்சி வகுப்புகளை கிழக்கிலுள்ள நடன ஆசிரியைகளுக்கு வழங்கினேன். அது நிறைய பலனளித்தது. கிழக்கில் நல்ல பெறுபேறுகள் கிடைத்து வருகின்றன. கிழக்கிலிருந்த அதே பிரச்சினை மலையகத்திலும் உள்ளது. எனவே, இதே யுக்தியை, தற்சமயம் பாவித்து வருகின்றேன்.
கேள்வி: இலங்கையில் எத்தனை நடனஆசிரியர்கள் உள்ளனர், அத்தொகை போதுமானதா?
பதில்: இலங்கையில் சுமார் 500 நடனத்துறை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் 150 பேர், ஏனைய பாடங்களையும் கற்பிக்கின்றனர். ஆளணி குறைவாக இருந்தாலும் நடனத்துறை கிரமமாக வளர்ச்சியடைந்து வருவது மகிழ்ச்சிக்குரியது.
கேள்வி: தங்கள் கலாநிதிப் பட்டம் அண்மையில் பெற்றதாக அறிந்தோம். அது தொடர்பாகக் கூறுங்கள்?
பதில்: எனது கலாநிதி பட்டப்படிப்பை, தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில், டொக்டர் மாதவி அம்மையாரை குருவாகக்கொண்டு, கடந்தாண்டு பூர்த்தி செய்தேன். சமகாலத்தில், இலங்கையில் நடனத்துறையில் கலாநிதிப் பட்டம் முடித்தவர்கள் சுமார் எட்டுப் பேரளவில் உள்ளோம்.
கேள்வி: தங்களது ஆற்றுகைகள் எங்கெல்லாம் மேடையேறின?
பதில்: எனது ஆற்றுகைகள் இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் இடம்பெற்றன. கடந்தாண்டு, மதுரையில் இடம்பெற்ற முதலாவது உலக இசை மாநாட்டில் நடன ஆற்றுகை இடம்பெற்றது. அதுவொரு பாக்கியம்.
கேள்வி: நீங்கள், நடனத்துறையில் கடந்த இரு தசாப்த காலமாக பரிணமித்து வருகிறீர்கள். அந்தளவில் தங்களுக்கு ஏதாவது விருதுகள், பாராட்டுகள் கிடைக்கப்பெற்றனவா?
பதில்: இதுவரை எந்த அரச விருதும் கிடைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, விருதுகளை நான் பெரிதாக விரும்புவதில்லை. காரணம் இன்று விருதுகள் மலினப்பட்டு விட்டன. விலைகொடுத்து விருது வாங்குகின்ற காலம். கலாநிதி, பேராசிரியர் பட்டங்களையே காசு கொடுத்து வாங்குகிறார்கள். ஆக, அரச விருது மட்டுமே என்னால் எதிர்காலத்தில் பெறப்படும்; பொறுத்திருப்போம்!
கேள்வி: சரி! நீங்கள் தனியாக கலாஷேத்திரம் வைத்து நடத்துகிறீர்களா?
பதில்: உண்மையில் நான் ‘லங்காபுரி அவைக்காற்று கலையகம்’ என்ற நிறுவனத்தை தொடங்கி, நடன ஆசிரியர்களை இணைத்து நடத்திவருகிறேன். இலங்கையிலிருந்து ஓர் ஆற்றுகையை வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்கின்போது, இலங்கையராகச் செல்லவேண்டும் என்ற நோக்கமே அது. இராவணணை நேசிக்கின்ற காரணத்தால் அப்பெயரை வைத்தேன்.
கேள்வி: ஒரு மாணவி நடனத்துறையைப் பயில வேண்டுமானால், என்னென்ன தகைமைகள் இருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்?
பதில்: ஆர்வம் தேவை. அத்துடன் நல்ல குருவும் வாய்க்க வேண்டும். இரண்டும் இருந்தால், நிச்சயமாக அத்துறையில் பிரகாசிக்க முடியும்.
கேள்வி: முத்தமிழுக்கு பேர்போன சுவாமி விபுலாநந்தர் பிறந்த மண்ணுக்கு முதல் தடவையாக விஜயம் செய்திருக்கிறீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
பதில்: வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு விஜயம். இந்தியாவில் மகாத்மா காந்தி சமாதி தரிசனம்; அதுபோன்று, சுவாமி விபுலாநந்தருடைய தரிசனம் மகிழ்ச்சியளிக்கிறது. அவர் பிறந்த வீட்டையும் நினைவு மண்டபத்தையும் அவரது திருவுருவச் சிலக்கு அவரது துறவற தினத்தில் மாலைஅணிவிக்கும் பாக்கியமும் கிடைத்தமை வாழ்வில் ஒரு பேறாகக் கருதுகிறேன். இங்குள்ள விருந்தோம்பல், படித்தவர்களை, மனிதர்களை கௌரவிக்கின்ற பண்பு, கலையை நேசிக்கின்ற மாண்பு எல்லாம் என்னை பெரிதும் கவர்ந்தன.
Average Rating