தமிழ் மக்களின் ’அரசியல் அணி’ !! (கட்டுரை)
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.சிவராம் (தராக்கி) `காலத்தின் தேவை அரசியல் வேலை` என்று குறிப்பிடுவார். காலத்தே பயிர் செய்தல் எல்லாவிதமான விடயங்களிலும் முக்கியம் பெறுகிறது. அதே போன்றுதான் இப்போதைய பூகோளவியல் அரசியல் மாற்றத்திலும் அரசியல் வேலையைச் சரியான முறையில் செய்தாகவேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கும் அவர்களது அரசியல் தரப்பினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது வாய்ப்பைப் பயன்படுத்தியாகவேண்டுமென்ற நிலை மீண்டும் ஒருமுறை உருவாகி இருக்கிறது.
‘விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள்’ என்ற ஒருமிப்புடன் எழுந்த அரசியல் பிரயோகம் ‘முக்கியமானதோர் அரசியல் அமைப்பு’ எனும் பாவனையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. கிழக்கிலங்கை செய்தியாளர்களின் ஒருமிப்புடன் மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் தீராத முயற்சியால் கருக்கொண்டு 2001ல் முனைப்புப் பெற்றதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு.
இலங்கையில் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் அணியாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எஃப், டெலோ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தெரிந்தோ தெரியாமலோ விடுதலைப்புலிகளின் பூரண ஆசீர்வாத அனுமதியுடனேயே செயற்பட்டுக்கொண்டும் இருந்தது. இருப்பினும் ஆயுதப்போராட்ட மௌனிப்புக்குப்பின் முதலாவதாக எதிர்கொண்ட தேர்தலுக்குப்பின்னரே அந்த இணைவுக்குள் பிரச்சினைகள் ஆரம்பிக்கத் தொடங்கின.
ஆரம்பிக்கப்பட்டது முதலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தே வந்தது. விடுதலைப்புலிகளின் முடிவு அதனைப் பலமூட்டியது. தனியான கட்சியாக பதிவு செய்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி உடன்படவில்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த வெளிப்படை. இதனை நாம் மறைப்பதற்கில்லை. ஆசனப்பங்கீடு, கட்சிப் பதிவு உள்ளிட்ட சிக்கல் காரணமாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 2010 நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனுக் காலத்தில் வெளியேறியது. பின் 2015 தேர்தலுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்தது. பிரிவுக்கு பதிவுக்கான முனைப்பின்மை மாத்திரம் காரணமல்ல. வேறும் குழப்பங்கள். 2009ல் யுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்டபின் புளொட் அமைப்பும் இணைந்து கொண்டது.
பல முரண்பாடுகள், பிரச்சினைகள், சிக்கல்களுக்குள் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல பிளவுகளைக் கண்டு இப்போது தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ), புளொட் ஆகிய கட்சிகளைக் கொண்டதாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பிரிந்து சென்ற கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முனையிலும், புதிதாக உருவான கட்சிகள் வேறு முனைகளிலுமிருந்தும் தமிழ்த்தேசிய அரசியல் வெளியில் தமக்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, வடக்கு முதலமைச்சரான ஓய்வுபெற்ற நீதியரசர் சிக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற ஒரு கட்சியுடன் அரசியல் நடத்துகிறார். அதே போன்று மாகாண சபை அமைச்சராக இருந்த அனந்தி சசிதரன் ஈழ தமிழ்ச் சுயாட்சிக் கழகத்தை நடத்துகிறார். ரெலோவில் இருந்து பிரிந்த சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோர் தமிழ்த் தேசியக் கட்சியை நடத்துகின்றனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்னொரு முனைப்புடன் ஈ.பி.ஆர். எல்.எவ். ஆக இருக்கிறார். அதேபோன்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றொரு கோணத்தில் அரசியல் செய்கிறது. எல்லா நதிகளும் சங்கமிப்பது சமுத்திரத்தில்தான் என்பதுபோல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் கண்டடைவதற்கான முயற்சிகளையே ஒவ்வொன்றும் செய்து கொண்டிருக்கின்றன.
தமிழர்களின் அரசியலில் போராட்ட இயக்கங்கள் உருவாக்கப்பட்டது முதல் ஒற்றுமை என்பதற்கு செல்லாக்காசு நிலைமையே இருந்து வந்துள்ளது. போராட்ட இயக்கங்கள் ஓரணியில் நின்று திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டமை தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் ஒற்றுமையின் முதலாவது முயற்சியாகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தையடுத்து சில கட்சிகள் இணைந்து வட கிழக்கு மாகாண சபையில் போட்டியிட்டன. அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டன. பின்னர் விட்டொதுங்கின. போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சியானதன் பயனான ஜனநாயக அரசியல் வெளி பரந்த நிலைக்கு வந்தது. இருப்பினும் ஏகபோக அரசியல் காரணமாக முரண்பாடுகள் முற்றி வெடித்தன. பல இயக்கங்கள் சிதறி ஓடி ஒழித்தன.
இன்றைய அரசியல் சூழலில் இப்போது தான், தமிழ்த் தேசியக்கட்சிகளின் ஒற்றுமையின்மை காணப்படுகிறது என்பது போன்ற மாயையொன்று உருவாகியிருக்கின்றது. இயக்கங்கள், கட்சிகளின் ஒற்றுமையின்மை என்பது காலங்காலமாக இருந்து கொண்டேஇருப்பதாகும். இதனைக் களைந்துவிட முயற்சிகளும் நடைபெற்றே வந்தன. பிளவுகள், பிரிவுகள் சாதாரணம் என்பதுபோல் இணைவுகள், இசைவுகள் சாதாரணமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் காணவில்லை.
அந்த வகையில் 2020நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் ஏற்பட்ட அரசியல் அலையினால் உருவான தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ தமிழ்ச் சுயாட்சிக் கழகம், தமிழ்த் தேசியக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகியன இணைந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன கடந்த ஜெனிவா மற்றும் தியாகி திலீபன் நினைவு போன்றவற்றின் காரணமாக இணைந்தே செயற்பட்டன. இந்த ஒற்றுமை தொடரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இரண்டாவது சுற்றுச் சந்திப்புடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரிந்து கொண்டது. இன்னும் பல சந்திப்புக்கள் நடைபெற்றபோதும் கொரோனா முடக்கம் இந்த இணைவைத் தவிர்த்து வைத்திருந்தது.
இப்போது மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளான தமிழரசுக்கட்சி, புளொட் ஆகியன தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோஅமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் முனைவுடன் மீண்டும் கடந்த மாதத்தில் சந்தித்தன. பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நான்கு கட்சிகள் இணைந்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியை தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் இன்றைய தினம் (17) யாழ்ப்பாணத்தில் சந்திக்கின்றன. அடுத்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் கலந்துரையாடவிருப்பதாக ரெலோவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவிக்கிறார்.
இந்த தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கூட்டுக்கான முயற்சி தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக அமையவேண்டும். ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ரெலோ அமைப்பே முன்னின்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. தமிழ் மக்களுக்கு ஒரு பலமான அரசியல் அமைப்பு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முதலில் இணைந்து கொண்டவர்கள் என்ற வகையில் இப்போதைய முயற்சி வெற்றியளிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் நிறைவேற்றத்தில் நிரந்தரமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான அரசியல் தீர்வொன்றே முக்கியமானதாகும். சர்வதேசத்தின் பூகோள அரசியல் மாற்றத்தினை உணர்ந்தவர்களாக தமிழ் மக்களின் அரசியல் ஒருமித்த குரலில் ஒலிப்பதற்காக இந்த ஒற்றுமை உணரப்படவேண்டும். 2001ல் பலமுரண்பாடுகளுக்கும் மத்தியில் ஒற்றுமைப்பட்டு 2009வரை செயற்பட முடிந்ததுபோல் இந்த முயற்சி பலனளிக்கட்டும்.
தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் என்ற கோசம் உருவாகும் போதெல்லாம் ஏதோ ஒரு காரணம் சொல்லப்படுவது போன்று இன்றைய நிலையில், கடந்த நல்லாட்சி காலத்தில் ஏன் இவ்வாறானதொரு தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை குறித்த முயற்சி தேசியம் தழுவி முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் காணப்படுகிறது. இவ்வாறான காரணங்கள் தமிழ்த் தேசிய நலனுக்கும் கொள்கைகளுக்கும் இடர்பாடுகளையே தோற்றுவிக்கும் என்ற அடிப்படையில், காலத்தே பயிர் செய்தல் என்ற அரசியல் வேலையைச் செய்ய தமிழ் அரசியல் கட்சிகள் பச்சைக்கொடி காட்டும் என்று நம்புவோமாக.
அடுத்த படியாக புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்ததுபோல், தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகள் ஒரணியில் செயற்படாது விட்டாலும் ஒற்றுமையாகச் செயற்பட முன்வர வேண்டும் என்ற நிலைப்பாட்டினையேனும் எடுக்கலாம்.
பொறுத்திருப்போம்.
தமிழ் மக்களுக்கு எதிராக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டிருந்த கடுமையான அடக்குமுறைகள் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டிய நிர்ப்பந்தத்தைக் காலத்தின் கட்டாயமாக ஆக்கிக் கொடுத்ததனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியிருந்தது. இன்றைய காலச்சூழலும் ஒரு காலத்தின் கட்டாயத்தினையே காட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் ஜனநாயக வெளிக்குள் ஜனநாயகத்தினை அனுபவிக்க முடியாத சூழலில் இருக்கையில் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்தக்கட்டாயம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான தமிழ் மக்களின் அரசியல் அணியை உருவாக்கும் என்று நம்புவோம்.
Average Rating