வட்டமிடும் முஸ்லிம் எம்.பிக்கள் வாய்ப்பைச் சமூகத்துக்காக பயன்படுத்துவார்களா? (கட்டுரை)
இலங்கை அரசியல் களநிலை சட்டென மாறியிருக்கின்றது. பெசில் ராஜபக்ஷ அமைச்சராகவும் பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவியேற்று, நேரடி செயற்பாட்டு அரசியலுக்குள் நுழைந்ததன் மூலம் இது நடந்திருக்கின்றது.
பெசில் உள்ளே வந்ததால், ஆளும் கட்சிக்குள் இருக்கின்ற குழப்பங்கள் மட்டுமன்றி நாட்டில் நிலவுகின்ற அநேகமான பிரச்சினைகளையும் அவர் தீர்த்து வைத்துவிடுவார் என்று ஆளும் தரப்பினர் திடமாக நம்புகின்றனர்.
ஆனால். “அவர் என்ன அலாவுதீனின் அற்புத விளக்குடன் வருகின்றாரா?” என்று எதிரணியினர் கேள்வி எழுப்புகின்றனர். யார் அதிகாரத்துக்கு வந்தாலும், நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளை தீர்த்து வைக்க முடியாது என்பதே, அவர்களது நிலைப்பாடாக இருக்கின்றது.
69 இலட்சம் மக்களின் ஆணைப்படி ஆட்சிக்கு வந்த இவ்வரசாங்கம், 20ஆவது திருத்தத்ததை நிறைவேற்றியதன் மூலம், மேலும் அதிகப்படியான அதிகாரங்களை வசப்படுத்தி வைத்திருந்தும் கூட நாட்டின் பிரச்சினைகளை வெற்றிகரமாகத் தீர்க்க முடியவில்லை என்பதே நிதர்சனமாகும்.
இந்நிலையில், பெசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், அவர் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் ஆளும் தரப்பினர் கோரி நின்றனர். அந்த ஆசையும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இப்போதாவது நெருக்கடிகளை அரசாங்கம் தீர்த்துவைக்குமா என்பதே, மக்கள் மனங்களில் உள்ள எதிர்பார்ப்பாகும்.
பெசிலின் மீள்வருகையை, பெருந்தேசிய அரசியல்வாதிகள் இரு கோணத்தில் நோக்கினார்கள் என்றால், அநேகமான முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த மாற்றத்தை அல்லது திருப்பத்தை, தமக்கு சாதகமானதாகவே நோக்குகின்றார்கள்.
முன்னதாக, ஒருகுறிப்பிட்ட காலப்பகுதியில் பெசிலையும் ஏனைய ராஜபக்ஷர்களையும் விமர்சித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும், இடைப்பட்ட காலத்தில் ‘கள்ளமௌனம்’ காத்தனர். அவர்கள் கூட, இப்போது ‘நான் முந்தி நீ முந்தி’ என, அவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் இருந்து, இதனை இலகுவாகவே புரிந்து கொள்ளலாம்.
எனவே, இந்த மாற்றம் முஸ்லிம் சமூகத்துக்கு எவ்வாறான அனுகூலங்களைக் கொண்டு வரப் போகின்றது? முஸ்லிம் அரசியல் தலைவர்களும் எம்.பிக்களும் இந்தச் சந்தர்ப்பத்தை, தமது சொந்த இலாபத்துக்காகவா அல்லது சமூக நலனுக்காகவா பயன்படுத்தப் போகின்றார்கள் என்பதே இப்போதுள்ள வினாவாகும்.
பெசில் ராஜபக்ஷ, அரசியலில் சத்தமில்லாமல் காய்நகர்த்துவதில் வல்லவர் என்பது பொதுவான அபிப்பிராயமாகும். மறுபுறத்தில், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்ததுடன் இதன்மூலம் முஸ்லிம்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அபிவிருத்திசார் அனுகூலங்களையும் அடைந்து கொண்டனர் என்பதை மறுக்கவியலாது.
ஆனால், 2015, 2019, 2020 தேர்தல்கள், மற்றும் 52 நாள் நெருக்கடி போன்ற இக்கட்டான நிலைமைகளில் பிரதான முஸ்லிம் கட்சிகள், ராஜபக்ஷர்களுக்கு எதிராக நின்றதாலும், முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள பிம்பமே, இந்த ஆட்சியின் முதலீடு என்பதாலும் முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் முக்கிய தலைவர்களையும் ராஜபக்ஷர்கள் சற்றுத் தூரமாகவே நிறுத்தி வைத்திருக்கின்றனர்.
சமகாலத்தில், இன்னுமொரு நகர்வு மிக சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுவதையும் கூர்ந்து கவனிப்போரால் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
அதாவது, தேசிய அரசியலில் ஒரு காலகட்டத்தில் கோலோச்சியவர்கள் பலர் இப்போது ‘சீனி’லேயே இல்லாமல் ஆக்கப்பட்டு உள்ளார்கள். நேற்று முளைத்த அரசியல் காளான்கள், இன்று முக்கிய பாத்திரத்தை ஏற்றுள்ளனர்.
அதுபோலவே, முஸ்லிம் அரசியலிலும் முக்கிய தலைவர்களாக ராஜபக்ஷர்களால் கூட உயர்த்திப் பிடிக்கப்பட்டவர்கள் இன்று ஏதோ ஒரு வகையில் ஒதுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் வலுவாகவே எழுகின்றது.
பெசில் ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமாக இருந்த ரிஷாட் பதியுதீன் இப்போது இரண்டாவது தடவையாக தடுப்புக் காவலில் இருக்கின்றார். ரவூப் ஹக்கீம் மீதும் பயங்கரவாத முத்திரை குத்துவதற்குக் கடுமையான பிரயத்தனங்கள் எடுக்கப்படுகின்றன.
மஹிந்த மற்றும் பெசில் மூலம் நிறைய அபிவிருத்திகளைக் கொண்டு வந்த அதாவுல்லாவுக்கு ஒரு பிரதியமைச்சுப் பதவிகூட கொடுக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டுள்ளார். ஆனால், முஸ்லிம் தலைவர்கள்தான் இப்படி இருக்கின்றார்களே தவிர முஸ்லிம் எம்.பிக்கள் ஆளும் தரப்புடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றார்கள். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இதற்கு நல்லதொரு அத்தாட்சியாக அமைந்தது.
ஹக்கீமும் ரிஷாட்டும் இதற்கு எதிர்த்து வாக்களித்தனர். 20இனை பொதுவாக எதிர்த்த முசாரப் எம்.பி., பெசில் ராஜபக்ஷவை எம்.பியாக்குவதற்கு வழிவகுக்கும் ‘இரட்டைப் பிரஜாவுரிமை’ தொடர்பான ஏற்பாட்டுக்கு ஆதரவளித்தார். இவ்விரு கட்சிகளின் மற்ற எல்லா எம்.பிக்களும் அரசாங்கத்துக்கு ஆதரவாகவே நின்றனர் என்பது, இவ்விடத்தில் நினைவு கொள்ளத்தக்கது.
இவ்வாறு அரசாங்கத்துடன் இணங்கிப் போவது, முஸ்லிம் சமூகத்துக்காகவே என்று எம்.பிக்கள் சொல்லிக் கொண்டாலும், அவர்களது செயற்பாடுகள் அதனை நம்பும்படியாக இருக்கவில்லை.
ஏனெனில், இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி முன்னாள் எம்.பிக்கள் கட்சித் தலைவர்களும் மக்களின் நலனைக் காரணம்காட்டி, இதற்கு முன்னர் பல தீர்மானங்களை எடுத்திருக்கின்றார்கள்; பல நகர்வுகளைச் செய்திருக்கின்றார்கள்.
‘இது பிழை’ என்று மக்களுக்குச் சொன்னதை, பின்னர் அவர்களே ‘இதுதான் சரி’ என்று நியாயப்படுத்திய சம்பவங்கள் ஏராளம் உள்ளன.
முஸ்லிம் சமூக நலனுக்காக என்று அவர்கள் கூறினாலும், உண்மையில் நடந்தது என்ன? எதைப் பெறுவதற்காக இந்த நாடகம் ஆடுகின்றார்கள் என்பதெல்லாம் மக்கள் அறியாத சங்கதியல்ல. எனவே, இப்போது “பெசில் வந்ததால், நாங்கள் நல்லதை நடத்திக் காட்டுவோம்” என்று கூறுவதை, அது நடக்கும் வரைக்கும் நம்ப முடியாத நிலையே உள்ளது.
முஸ்லிம் சமூகத்துடன் பெசிலுக்கு நெருக்கம் உள்ளது என்ற அடிப்படையில், அவரது வருகை சில சாதக நிலைமைகளைக் கொண்டு வரலாம் என்று கோட்பாட்டு ரீதியாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த நெருக்கத்தை கடந்த காலத்தில் நாசமாக்கியது இனவாதமும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் அற்பத்தனமான நகர்வுகளும்தானே? அப்படியென்றால் இப்போது மட்டும் எந்த அடிப்படையில் நம்புவது?
பெசில் ராஜபக்ஷவால் நாட்டில் இருக்கின்ற எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விடலாம் என்பது யதார்த்தத்தை மீறிய எதிர்பார்ப்பாகும். சமூகத்துக்காகக் கூட அறிக்கைவிடாத முஸ்லிம் எம்.பிக்களுள் பலர், இப்போது அமைச்சர் பெசிலுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்; மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அதுமட்டுமன்றி. முஸ்லிம் கட்சிகளில் உள்ள பல எம்.பிக்கள் தமக்கு அமைச்சு அல்லது பிரதியமைச்சு தர வேண்டும் என்று, பெசிலைச் சுற்றி வட்டமிடுகிறார்கள்.
சிறுபான்மைத் தரப்புகளையும் உள்வாங்கிச் செயற்பட அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இராஜாங்க அமைச்சுப் பதவியையேனும் பெற்றுக் கொள்ள ஒரு சிலர் ஒற்றைக்காலில் நிற்பதாக கூறப்படுகின்றது.
இதுதான் இங்கே பிரச்சினை! தேசிய அரசியலில், பெசிலின் உள்வருகையால் முஸ்லிம் சமூகத்துக்கும் சாதகமான வாய்ப்புகள் ஏற்படலாம் என்றாலும், அதனை முஸ்லிம் தலைவர்களும் பதவிகளுக்காக ஆலாய்பறக்கும் எம்.பிக்களும் தமக்காகப் பயன்படுத்துவார்களா? அல்லது, சமூகத்துக்காகப் பயன்படுத்துவார்களா என்பதிலேயே அதன் விளைபயன் தங்கியிருக்கின்றது.
Average Rating