கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை!! (மருத்துவம்)
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். இதை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது. அதே போல் மேற்பூச்சு மருந்தாகவும் பயன் தருகிறது. தோல் நோய்களின் தொல்லைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. இதன் காய்களை வற்றலாக்கி அதை உண்பதன் மூலம் சர்க்கரை நோய்க்கும் மருந்தாக மணத்தக்காளி பயன்தருகிறது. ரத்த அழுத்தத்தை இது தணிக்கிறது. ஈரலுக்கு வலுத்தரக் கூடியதாகவும் மணத்தக்காளி விளங்குகிறது.
மண்ணீரலுக்கும் இது மருந்தாகிறது. ஆன்டி பாக்டீரியல் குணம் காரணமாக நுண் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டதாகவும் மணத்தக்காளி பயன் தருகிறது. நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை கொண்டதாக, நோய் கிருமிகள் வராமல் தடுக்கக் கூடியதாக மணத்தக்காளி வேலை செய்கிறது. கல்லீரலை பலப்படுத்தக் கூடிய, குடற் புண்ணை ஆற்றக் கூடிய மருந்தை மணத்தக்காளியை பயன்படுத்தி தயார் செய்யலாம். இது உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய ஒரு உணவாகவும் அமையும். இதற்கு தேவையான பொருட்கள் மணத்தக்காளி கீரை, சீரகம், மஞ்சள், நல்லெண்ணை, சமையல் உப்பு. வாணலியில் சிறிதளவு நல்லெண்ணை எடுத்துக் கொள்ளவும்.
எண்ணை காய்ந்ததும் சிறிதளவு சீரகம் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும், அதனுடன் மணத்தக்காளி கீரையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கலாம். இதனுடன் மஞ்சள் பொடியும், சமையல் உப்பும் தேவையான அளவு சேர்க்கவும். பின்னர் இதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு தேவையான நீரை விட்டு கொதிக்க விட வேண்டும். இதை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் பலம் பெறுகிறது. குடற்புண்ணை ஆற்றும் தன்மை கொண்டதாக விளங்குகிறது.
அவ்வப்போது மணத்தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மஞ்சள் காமாலை நோய் நம்மை அண்டுமோ என்ற அச்சம் இல்லாமல் இருக்கலாம். கல்லீரலுக்கு பலம் தருவதால் மஞ்சள் காமாலை வராமல் இது தடுக்கிறது. மஞ்சள் காமாலை தாக்கம் கொண்டவர்களும் இதை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மஞ்சள் காமாலை படிப்படியாக மறைந்து போக செய்கிறது. அதே போல் மணத்தக்காளி வற்றலை பயன்படுத்தி சளிக்கான மருந்தை தயார் செய்யலாம். இது சுவையின்மையை போக்கக் கூடியதாக, பசியை தூண்ட செய்வதற்கும் பயன்படுகிறது.
இதற்கு தேவையான பொருட்கள், மணத்தக்காளி வற்றல், மிளகு பொடி, நெய், சீரகம், சமையல் உப்பு. பாத்திரத்தில் சிறிது அளவு நெய் எடுத்து மணத்தக்காளி வற்றலை நன்றாக வறுக்கவும். அதனுடன் தேவையான அளவு நீர் விட வேண்டும். சிறிதளவு சீரகம், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது மிளகு பொடி சேர்க்கவும். நன்றாக கொதிக்க வைத்து தேநீராக தயார் செய்து கொள்ளலாம். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இது சளியைப் போக்கக் கூடியதாக பயன் தருகிறது. சுவையின்மையை போக்கி பசியை தூண்டுவதாகவும் இந்த தேநீர் பயன் தருகிறது. இவ்வாறு நாம் அன்றாடம் நமக்கு அருகில் கிடைக்கும் உணவு பொருட்கள், மருந்து பொருட்களை கொண்டு எளிய மருந்துகளை உருவாக்கி உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வோம்.
Average Rating