ஹீரோயின்னா ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கணும்!! (மகளிர் பக்கம்)
தமிழக மக்களிடத்தில் சீரியல்களுக்கு பெயர் போனது சன் டிவி. அதிலும் இயக்குநர் திரு முருகனின் சீரியலுக்கென்று தனி ரசிகர்கள். அதனால் தான் அவரது சீரியல்கள் எப்போதும் பிரைம் டைம். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘கல்யாண வீடு’ சீரியலின் ஹீரோயின் சூர்யா கதாபாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்பூர்த்தி கௌடாவிற்கு இதில் நடிக்கவே விருப்பம் இல்லையாம். ஏன்? என அவரையே கேட்போம்.
“சொந்த ஊர் பெங்களூர். நடிப்பு துறைக்கு வர வேண்டுமென்கிற விருப்பம் துளி அளவும் கிடையாது. என்னுடைய கனவெல்லாம் சாஃப்ட்வேர் இஞ்சினியராக வேண்டுமென்பதுதான். இதனால் கர்நாடகாவில் முதலிடத்திலும், இந்திய அளவில் ஏழாவது இடத்திலும் உள்ள கல்லூரியில் சேர்ந்தேன். படிப்பைத் தவிர விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். அதற்குக் காரணம் தேசிய அளவில் பால் பேட்மிட்டன் விளையாடும் அப்பா. நானும் 2010ம் ஆண்டு ஜாவ்லின் த்ரோவில் மாநில அளவில் இடம் பெற்று இருக்கேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஸ்பூர்த்தி நடிகையான கதையை பகிர்கிறார்.
“என் தோழி ஒருத்திக்கு மீடியா மீது அதீத ஈர்ப்பு. இதனால் ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அவளை அழைத்துச் சென்றிருந்தேன். அது ஒரு கேம் ஷோ. வெளியில் காத்திருக்கும் போது, ‘நீங்களும் இதில் பங்கு பெறலாமே’ என்று ஒருவர் கூறினார். சும்மாதான் ட்ரை பண்ணேன் செலக்ட் ஆகிட்டேன். அவளால் ஆக முடியவில்லை. அதன் பின் சேனலிலிருந்து கூப்பிட்டே இருந்தாங்க. இல்லைங்க கலந்து கொள்ள விருப்பமில்லைன்னு தீர்மானமாகச் சொன்னேன். இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து கேட்டதால் வார விடுமுறை நாட்களில் மட்டும் பங்குபெற்றேன்.
இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் போது பெரிய நிறுவனம் ஒன்றில் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலைக் கிடைச்சது. மூன்று மாதம் கழித்து சேர வேண்டுமென்று அப்பாய்மென்ட் லெட்டரும் வந்தாச்சு. அதே நேரத்தில் தொலைக்காட்சி ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது. புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கன்னட சீரியலில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று என்னை கேட்டு இருந்தாங்க. ஆனால், எனக்கு நடிப்பில் அ.. ஆ… இ… ஈ… கூட தெரியாது. அதனால் நடிக்க விருப்பமில்லைன்னு மறுத்துட்டேன். அவங்களும் விடாப்பிடியா, எப்படி நடிக்கணும்ன்னு எல்லாம் பயிற்சி கொடுப்போம், முதல்ல ஆடிஷனுக்கு வாங்கன்னு சொன்னாங்க.
சரின்னு நானும், ஆடிஷன் தானே… சும்மா போகலாம்னு வந்தேன். அவங்க என்னை ஓ.கேன்னு சொல்லிட்டாங்க. அப்பக்கூட எனக்கு நடிப்பெல்லாம் வராது, தயவு செய்து விட்டுடுங்க. என்னோட துறை சாஃப்ட்வேர் தான்னு சொல்லிட்டு வந்துட்டேன்’’ என்றவர் அதன் பிறகு எதை தேர்வு செய்வதுன்னு குழம்பியுள்ளார்.
‘‘என்னை சமாதானம் செய்ய முடியாமல், எங்க அம்மாவிடம் பேசினாங்க. அவங்க இறுதி முடிவு என்னுடையதுன்னு சொல்லிட்டாங்க. எனக்கோ ஒரு பக்கம் நான் விரும்பிய வேலை, மறுபக்கம் தானாக தேடி வந்த வாய்ப்பு… எதை தேர்வு செய்வதுன்னு ஒரே குழப்பமா இருந்தது. அந்த சமயத்தில்தான் என் தோழியின் நினைவு வந்தது. நடிப்பு துறையில் தனக்கென்று ஒரு இடம் பிடிக்க வேண்டும் என்பதற்கு நிறைய பேர் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.
நமக்கு அதுவாவே வரும்போது ஏன் தூக்கிப் போட வேண்டுமென்று எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன். அதனால் வீட்டில் அம்மாவிடம் நடிக்கப் போறேன். ஆனால் திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன். அதன் பின் எனக்குப் பிடித்த ஐ.டி வேலைக்கு போயிடுவேன்னு சொன்னேன். ஆனால் அம்மாவோ, கல்யாணத்திற்குப் பிறகு உனக்கு ஐ.டியில் வேலை கிடைக்குமான்னு தெரியாது. அதனால வீட்டில் எல்லாரும் என்னை சாஃப்ட்வேர் துறையை தேர்வு செய்ய சொன்னாங்க. நாமதான் எப்போதுமே நேருக்கு மாறா யோசிப்போமே. அதனால் வீட்டில் உள்ளவர்களை எல்லாம் சமாதானம் செய்து அந்த நாடகத்தில் நடிச்சேன்” என்று கூறும் ஸ்பூர்த்தி கல்யாண வீடு சீரியலில் இணைந்தது பற்றிக் கூறினார்.
“கன்னடத்தில் நடித்திருந்த சீரியலை பார்த்திருந்த திருமுருகன் சார் கல்யாண வீட்டில் நடிக்க கேட்டாங்க. அப்போது தான் நடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்
கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தெரியாத மொழியில் நடிப்பது இன்னும் சிரமமாக இருக்குமே என்று ஐயோ சாமி வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்போது எனக்கு திருமுருகன் சாரின் மதிப்பு, அவரின் வேலை மற்றும் கின்னஸ் சாதனை படைச்சது எதுவுமே தெரியாமல் புறக்கணித்துவிட்டேன். ஆனால் பென்சி அக்கா என்னை அழைத்து இந்த சீரியல் பற்றியும், அவரை பற்றியும் சொன்ன பின் சாருக்கு உடனே போன் போட்டு மன்னிப்பு கேட்டேன். இருந்தாலும் இதில் நடிக்க கொஞ்சம் கஷ்டம் சார் என்றதும், ‘இதில் நீங்க நடிக்கிறீங்களோ நடிக்கலையோ, அது இரண்டாவது.
முதலில் என்னை வந்து பார்த்துட்டு போங்க. அதன் பிறகு உங்க விருப்பம்னு’ சொல்லிட்டார். ஒரு இயக்குநர் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசும் போது உதாசீனப்படுத்தினா மரியாதை இல்லைன்னு தோணுச்சு. அதனால் அவரை பார்க்க சென்றேன். ஒரு சீன் சொல்லி, ‘நீங்க என்ன மொழி வேண்டு
மென்றாலும் பயன்படுத்திக் கொள்ளுங்க’ என ஆடிசன் செய்தார்கள். மதியம் 1.20 மணிக்கு ஆரம்பித்தாங்க, 1.23 வரை ஸ்கிரிப்ட் சொன்னாங்க. 1.25க்கு வாழ்த்துகள் நீங்கதான் கதாநாயகி, சூர்யான்னு சொல்லிட்டாங்க. எனக்கு ஒன்னுமே புரியல. மொழி தெரியாது. இப்பதான் நடிக்கவே கற்றுக் கொண்டு இருக்கிறேன். என்னை நம்பி எப்படி நீங்க ஹீரோயின் கதாபாத்திரம் கொடுத்தீங்கன்னு அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர், ‘ஹீரோயின்னா ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கணும். அது உங்களிடம் இருக்கு. உங்களுக்கு உங்க மீது நம்பிக்கை இருக்கா இல்லையான்னு தெரியல… எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. நீங்க சூர்யா கதாபாத்திரத்திற்கு நேர்த்தியா இருப்பீங்க’ன்னு சொல்லிட்டார்’’ என்றவர் அதன் பிறகு அவர் சூர்யாவாக மாறியது பற்றி விவரித்தார். ‘‘ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு. என்னால சரியா பிராம்டிங்கும் எடுக்க முடியல. ஆனா, அதை எல்லாம் பொருட்படுத்தாம, ஒரு இயக்குநர் என்று பார்க்காமல், தமிழ் மொழியை கற்றுக் கொடுத்தார். எப்படி பிராம்டிங் எடுக்கணும்னு புரிய வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக நானும் அதை புரிந்து கொண்டேன். எனக்கென சில விதிகள் இருக்கு. ஷார்ட் போவதற்கு முன் ஒத்திகை பார்ப்பேன்.
எனக்கான நம்பிக்கை வந்த பிறகே கேமரா முன் நிற்பேன். ஒரு சீன் எடுக்க நான் மட்டும் உழைக்கல, என்னைச் சுற்றி கேமராமேன், லைட்மேன், தர்மாகோல் பிடிப்பவர்கள் முதற்கொண்டு எல்லாரும் அந்த ஒரு சீனுக்காக கஷ்டப்படுறாங்க. அவர்களை சங்கடப்படுத்தக்கூடாதுன்னு நினைப்பேன். தற்போது கல்யாண வீட்டில் நானும் ஓர் அங்கமாக ஐக்கியமாகி இருக்கிறேன்” என்று கூறும் ஸ்பூர்த்தி இனி தமிழில் நடிக்க மாட்டேன் என்ற அதிர்ச்சி குண்டை தூக்கிப் போட்டார்.
“இந்த சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போதே பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் இதுதான் எனக்கு பெரிதாக இருந்தது. இதை விட பெரிதாக வந்தாலும் கவலையில்லை.
ஒரு வேலை திருமுருகன் சாரோடு அடுத்து பணிபுரிவதற்கான வாய்ப்பு அமைந்தால் அப்போது பார்க்கலாம். அவர்தான் தமிழில் எனக்கு லைஃப் கொடுத்தாங்க. இதுதான் தமிழில் நடிக்கும் முதலும் கடைசி சீரியலாகக் கூட இருக்கலாம். தெலுங்கில் பாகுபலி பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் சீரியல் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறேன். நான் முன்பே சொன்னது போல் திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன். ஐ.டி வேலைக்குப் போவேன். கணவர் நடிக்க சம்மதம் சொன்னாலும் நடிப்பதை தவிர்க்கவே முயற்சிப்பேன்” என்றார் ஸ்பூர்த்தி.
Average Rating