அலுவலகம் தேடி வரும் கேரியர் சாப்பாடு! (மகளிர் பக்கம்)
மயிலாப்பூர், பஜார் சாலை. காலை ஆறு மணிக்கெல்லாம் கடையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தனர் சுமன் மற்றும் லட்சுமி தம்பதிகள். சிறிய அளவில் இரண்டு பேர் மட்டுமே நிற்கக் கூடிய இடமாக இருந்தாலும், சாலை என்று கூட பார்க்காமல் நான்கு வேலை சாப்பாட்டிற்கும் அங்கு கூட்டம் நிரம்பிக் கொண்டு இருப்பதை நாம் கண்கூடாக காண முடியும். ‘‘இந்த கடையை துவங்கி இரண்டு வருஷமாச்சு. ஆரம்பத்தில் காலை மற்றும் இரவு நேர உணவு தான் கொடுத்து வந்தோம். அதன் பிறகு மக்களின் தேவையை புரிந்து கொண்டு, மதியம் மற்றும் மாலை நேர ஸ்நாக்சும் ஆரம்பிச்சோம்’’ என்று பேசத்துவங்கினார் எம்.பில் பட்டதாரியான லட்சுமி. இவரின் கணவர் எம்.பி.ஏ பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்துள்ளார். சில காரணங்களுக்காக அவர் அந்த வேலையை ராஜினாமா செய்ய, ‘கயல் உணவகம்’ துவங்கப்பட்டது.
‘‘நானும் பட்டப்படிப்பு முடிச்சிருக்கேன். திருமணத்திற்கு முன்பு வரை ஒரு பள்ளியில் ஆசிரியராகத்தான் பணியாற்றி வந்தேன். திருமணத்திற்கு பிறகு நான் வேலைக்கு போவதை நிறுத்திட்டேன். எங்களுடையது கூட்டுக் குடும்பம் தான். என் மாமனாருக்கு 72 வயதாகிறது. அவர் பால் வியாபாரம் இன்றும் செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு எல்லாமே என் மாமியார் தான். அவங்க எனக்கு இன்னொரு அம்மான்னு சொல்லலாம். நாங்க இந்த உணவகம் ஆரம்பித்ததற்கும் அவங்க தான் முழு காரணம். சில காரணங்களால் இவர் வேலையை ராஜினாமா செய்துட்டார். வேறு வேலை தேடிக்கொண்டும் இருந்தார். ஆனால் இந்த காலத்தில் உடனடியாக வேலை கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. மாமனார் பிசினஸ் ஒரு பக்கம் மற்றும் எங்களின் சேமிப்பு இருந்ததால், பெரிய அளவில் நாங்க பணக்கஷ்டத்தை சந்திக்கவில்லை.
அதற்காக நாங்களும் சும்மா இருக்க முடியாதே. மேலும் என் கணவரும், தினமும் காலை வேலைக்கு சென்று பழக்கப்பட்டவர். அவருக்கு வீட்டில் சும்மா இருக்கவும் பிடிக்கவில்லை. அதுவே அவருக்கு ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் தான் நான் வேறு இடத்தில் வேலை தேடுவதற்கு பதில் நாமே ஏன் ஒரு தொழிலை துவங்கக்கூடாதுன்னு கேட்டேன். அவருக்கும் அது சரி என்று பட அப்படித்தான் இந்த உணவகத்தை ஆரம்பித்தோம்’’ என்றவரை தொடர்ந்தார் சுமன். ‘‘2018 அக்டோபர் மாசம் தான் இந்த கடையை ஆரம்பிச்சோம். அப்பா பால் வியாபாரம் செய்து வந்தாலும், சின்ன வயசில் இருந்தே அவரின் தொழிலில் என்னை ஈடுபடுத்தவில்லை. அதற்கு காரணம் என்னதான் அவரின் தொழிலாக இருந்தாலும், எனக்கு என்று ஒரு தனித்தன்மை வேண்டும் என்று விரும்பினார். அதனால் தான் என்னை நன்கு படிக்க வைத்தார். நான் படிச்சிட்டு வேலைக்கு போனாலும், சமையல் துறை மேல் எனக்கு தனிப்பட்ட ஆர்வம் எப்போதுமே இருந்தது.
அப்பாவின் நண்பர் கேட்டரிங் செய்து வருகிறார். விடுமுறை நாட்களில் அவருக்கு கேட்டரிங் ஆர்டர் இருக்கும் போது, நானும் உடன் சென்று அவருக்கு உதவி செய்வது வழக்கம். அதன் மூலம் தான் ஒரு கேட்டரிங் துறை எவ்வாறு செயல்படுகிறது என்று தெரிந்து கொண்டேன். அங்கு சமையல் மட்டும் இல்லை, பொருட்கள் வாங்குவது, எவ்வாறு செயல்படுத்துவது என அனைத்தும் கற்றுக் கொண்டேன். அது தான் இப்போது கடை திறக்கவும் உதவியது. ஐந்து தலைமுறையா மயிலாப்பூரில் தான் வசித்து வருகிறோம். அதனால இங்கேயே ஒரு கடை ஆரம்பிக்க நினைச்சோம். அதற்கான இடத்தை தேடிய போது தான், பஜார் சாலையில் என் நண்பர் ஒருவர் கடை வைத்திருந்தார். அவரின் கடையின் அருகே சிறியதாக இடம் இருப்பதாகவும். அதை பயன்படுத்திக்கச் சொன்னார். இரண்டு பேர் தான் நிற்க முடியும். அது சரிவருமான்னு யோசித்த போது அம்மா தான், தயங்காமல் ஆரம்பி, பெரிய அளவில் வளருவன்னு சொன்னாங்க.
அவங்களும் என் மனைவியும் அளித்த ஊக்கம் தான் இந்த கடை திறந்து இரண்டு வருடமாகிறது’’ என்றவர் நான்கு வேளையும் உணவு வழங்கி வருகிறார். ‘‘உணவகம் பொறுத்தவரை தரம் மற்றும் சுவை மாறாமல் இருக்கணும். அதை நாங்க இந்த இரண்டு வருஷமா கடைப்பிடித்து வருகிறோம்’’ என்றார் லட்சுமி. ‘‘என் மாமனாரின் நண்பர் எங்களுக்கு ஒரு மாஸ்டரை அறிமுகம் செய்தது மட்டும் இல்லாமல் உணவகம் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வந்தார். அவர் அனுப்பிய மாஸ்டர் தான் ஒரு மாதம் உணவகத்தில் இருந்து எங்களின் செஃப்புக்கு சொல்லிக் கொடுத்தார். ஆரம்பத்தில் இரண்டு பேர் கொண்டு துவங்கப்பட்ட கயல் உணவகத்தில் இப்போது பத்து பேர் வேலை செய்கிறார்கள். இங்க கடை மட்டும் இல்லாமல், வெளியே நிறுவனங்களுக்கும் கேரியர் சாப்பாடு மற்றும் காதுகுத்து, கிரஹப்பிரவேசம், வளை காப்பு போன்ற விழாக்களுக்கும் கேட்டரிங் வழங்கி வருகிறோம்.
தற்போது சக்தி மற்றும் ரவி என இருவர் செஃப்பாக இருக்காங்க. காலை டிபன். மதிய உணவு. மாலை ஸ்நாக்ஸ் மற்றும் இரவு டிபன் எல்லாமே செய்வதால் இருவரும் தங்களின் வேலைகளை பிரித்துக் கொண்டு செய்வது சுலபமாக உள்ளது. ஆரம்பித்த போது காலை டிபன் மற்றும் இரவு நேர உணவு மட்டும் தான் இருந்தது. பலர் மதிய உணவும் கேட்டதால், அதையும் துவங்கினோம். மதியம் கலவை சாப்பாடு மற்றும் முழு சாப்பாடு இரண்டும் உண்டு. வெரைட்டி சாப்பாட்டில், வெஜிடபிள் ரைஸ், தக்காளி சாதம், தயிர் சாதம் மூன்றும் கண்டிப்பாக இருக்கும். இதைத் தவிர கோவக்காய் சாதம், கேரட் சாதம், புளி சாதம்… என ஒவ்வொரு நாளும் மாறுபடும். எல்லா வகையான சாப்பாடும் ரூ,50 தான். முழு சாப்பாடு மட்டும் ரூ.75. சிலரால் முழு சாப்பாடு சாப்பிட முடியாது.
அவர்களுக்கு ரூ.50ல் அரை அளவு சாப்பாடு தறோம். மாலை நேர ஸ்நாக்ஸ் சுரக்காய் பஜ்ஜி, புடலங்காய் பஜ்ஜி, கேரட் பஜ்ஜி, நவதானிய வடைன்னு போடுறோம். இரவு அடை அவியல், சோலா பூரி, முடக்கத்தான் தோசை, முசுமுசு தோசை, வல்லாரை தோசை, ராகி அடை, கம்பு தோசைன்னு வெரைட்டியா தறோம்’’ என்றவர் தன் கணவருக்கு அளித்த ஆலோசனை பேரில் துவங்கப்பட்டதாம். ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்வாங்க… அப்படித்தான் சுமனும் வேலை இல்லாத அந்த மூன்று மாதங்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளார். ‘‘காலை எழுந்து அலுவலகம் சென்றால் மாலை தான் திரும்புவேன். வேலையை விட்டு இருந்த மூன்று மாதம் ரொம்பவே கஷ்டமா இருந்தது. அந்த சமயத்தில் தான் என் மனைவி இந்த ஆலோசனை கொடுத்தாங்க. மற்றவங்களிடம் வேலைப் பார்ப்பதற்கு பதில் நாமே தொழில் துவங்கலாம்ன்னு சொன்னாங்க. எனக்கு சமையல் துறையில் ஏற்கனவே இருந்த அனுபவம் பக்கபலமாக இருந்தது.
அவங்களும் அம்மாவும் கொடுத்த ஊக்கம் தான் நான் இன்று காலில் பம்பரம் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கிறேன். எங்க வீட்டின் மாடிப் பகுதியை கிச்சனா மாத்தி அமைச்சிட்டேன். இங்க சமைச்சு, கடைக்கு கொண்டு போயிடுவோம். அங்க தோசை, பஜ்ஜி மட்டுமே நேரடியா போட்டுத் தருவோம். காலை நான்கு மணிக்கு என்னுடைய நாள் துவங்கும். ஒவ்வொரு வேளை சாப்பாடு தயாரானதும், அதை கடைக்கு எடுத்து சென்று அங்கு வரும் வாடிக்கையாளர்களின் தேவையை பார்த்துக் கொள்வேன். கைக்குழந்தை இருப்பதால், என் மனைவி மாலையில் மட்டுமே கடைக்கு வருவார். மற்றபடி நான் இல்லாத போது மாஸ்டர் கடையில் இருப்பார்.
செவ்வாய் மட்டும் காலை மற்றும் மதிய உணவு வரை மட்டும் தான். அன்று மாலை அந்த வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க சென்றுவிடுவேன். இது ஒரு குடும்பமாதான் செய்றோம். வெளியே விழாக்களுக்கு ஆர்டர் செய்தால் உதவிக்கு என் மச்சான் வந்திடுவார். மற்றபடி என் தங்கை, மச்சான், மனைவின்னு எல்லாரும் சேர்ந்துதான் இதனை இயக்கி வருகிறோம். இதையே பெரிய அளவில் செய்யும் எண்ணமும் உள்ளது. அதற்கான இடம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்’’ என்றனர் கணவன்-மனைவி இருவரும் கோரசாக.
Average Rating