தானா சேர்ந்த கூட்டம்!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 14 Second

நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பித்த காரணத்தால் பலரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐ.டி.துறையில் வேலை பார்த்து வருபவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் கணினியில்தான் வேலை என்பதால், அவர்கள் தங்களின் வேலை நேரம் போக, அதையே தங்களின் பொழுதுபோக்கு அம்சமாக மாற்றிவிட்டனர். குறிப்பாக முகநூலில் தங்களுக்கு என ஒரு பக்கம் ஆரம்பித்து அதில் அவர்கள் விரும்பும் அனைத்து விஷயங்களையும் எந்த ஒரு தடையும் இல்லாமல் செய்து வருகிறார்கள் இந்தப் பெண்கள் குழுவினர். கடந்த இரண்டு வருடமாக இயங்கி வரும் இந்தக் குழுவினை துவங்கிய ஷர்மிளா குழு ஆரம்பித்த காரணம் மற்றும் அதில் நடக்கும் செயல்பாடு குறித்து விவரித்தார்.

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தூத்துக்குடியில். இங்கு +2 வரை படிச்சேன். அதன் பிறகு சென்னையில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிச்சேன். படிப்பு முடிச்ச கையோடு ஐ.டி. துறையில் வேலை கிடைத்தது. பத்து வருஷம், சென்னை ஐ.டி. கம்பெனி என என் நாட்கள் கழிந்தன. இதற்கிடையில் எனக்கு திருமணமாச்சு. அவரும் ஐ.டி. துறை என்பதால் தற்போது இருவரும் லண்டனில் செட்டிலாகி நான்கு வருஷமாச்சு. டி.எஸ்.கே திவாஸ் முகநூல் பக்கம் ஆரம்பிச்சு இரண்டு வருஷமாச்சு. அது ஆரம்பிப்பதற்கு முன் நான் ஏற்கனவே ஒரு முகநூல் குழுவில் உறுப்பினரா இருந்தேன். அது மட்டும் இல்லாமல் டிக்டாக் மற்றும் டப்ஸ்மாஷ் செய்து என்னுடைய முகநூலில் வெளியிடுவேன். அதை பார்த்து பலர் என்னை பாராட்டுவாங்க. அப்பதான் இது போல் டப்ஸ்மாஷ், டிக்டாக் என்று செய்யாமல், ஏன் ஒரு குழு அமைத்து அதை பயனுள்ள பக்கமாக மாற்றக்கூடாதுன்னு தோணுச்சு. அந்த எண்ணத் தில்தான் ‘டி.எஸ்.கே. திவாஸ்’ முகநூல் பக்கம் ஆரம்பமாச்சு.

எல்லா பெண்களிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஒருவர் நன்றாக வரையலாம், சமைக்கலாம், வீட்டை அழகுப்படுத்தலாம், பாடலாம்… இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் தளமாகத்தான் எங்க முகநூல் பக்கம் அமைத்திருக்கேன். என்னதான் பெண்கள் வெளியுலகத்தில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை ஆக்கிரமித்தாலும், அவர்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை வெளிப்படுத்த தயங்குகிறார்கள். ஒருவருக்கு நடனம் ஆட பிடிக்கும். அதை வெளிப்படுத்த கூச்சமாக இருக்கும். ஒருவர் நன்றாக பாடுவார். அவரின் எல்லை பாத்ரூம் வரை மட்டுமே. இப்படிப்பட்டவர்களின் திறமையை இந்த பக்கத்தில் வெளியே கொண்டு வர முடிவு செய்தேன். தற்போது இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இது முழுக்க முழுக்க பெண்களுக்காகவே அமைக்கப்பட்ட குழு என்பதால், எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தங்களின் மனம் திறந்து விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பக்கம் ஆரம்பிச்சிட்டா மட்டும் போதாது. உறுப்பினர்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளணும். அதனால் நிறைய போட்டிகள், ஃபேஷன் ஷோக்கள், குறும்படங்கள் இயக்குவது, நடனம் மற்றும் பாட்டு, கவிதை எழுதுவது என பெண்களை கவரும் அம்சங்கள் தினமும் இருக்கும். மேலும் முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையில் இயங்குவதால் உறுப்பினர்கள் தவிர்த்து, வேறு யாரும் இதில் உள்ள செயல்பாட்டினை பார்க்க முடியாது. அதில் போடப்படும் பதிவுகள் அனைத்தும் குழுவுக்குள் மட்டுமே தான் இயங்கும். இப்போது ரீசென்டா ‘கவிக்குயில்கள்’ன்னு ஒரு ஆல்பம் ரிலீஸ் செய்தோம். அதாவது குழுவில் உள்ள உறுப்பினர்கள் எழுதிய கவிதைகளை தொகுத்து ஆல்பமா வெளியிட்டோம். ஒவ்வொரு ஆண்டும் நான் சென்னை வரும் போது மெகா ஈவன்ட் போல் அமைத்து அதில் ஃபேஷன் ஷோ, ராம்ப் வாக், பாட்டு, டான்ஸ்ன்னு இருக்கும் என்றவர்’’ தற்போது கொரோனா காலம் என்பதால் தங்களின் செயல்பாடுகள் அனைத்தையும்
ஆன்லைனில் நடத்தி வருகிறாராம்.

‘‘பொதுவாக ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு போட்டி இருக்கும். அது நடனப் போட்டியாகவும் இருக்கும் அல்லது சமையல் போட்டியாக கூட இருக்கும். அது தவிர யாராவது ஒரு பிரபலங்களை பேட்டி எடுத்து அதையும் இதில் பதிவு செய்கிறோம். இதுமட்டுமில்லாமல், லைவா ஜும்பா, யோகா போன்ற பயிற்சிகளும் உண்டு. ஃபேஸ்புக் பொறுத்தவரை தனிப்பட்ட குழு என்று பதிவு செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால் நாங்க இதில் பல போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதால் எங்க குழுக்கான தனிப்பட்ட லோகோ அமைத்து எங்களின் தனிப்பட்ட குழுவாக மட்டுமே இயக்கி வருகிறோம். இந்த குழுவில் உலகம் முழுக்க இருக்கும் பெண்கள் இருப்பதால், ஒவ்வொரு ஊரிலும் சுமார் எட்டு, பத்து பேர் உறுப்பினர்களாக இருப்பாங்க. அவங்க சந்திக்கும் நிகழ்வுகளையும் முகநூல் பக்கத்தில் வெளியிடுவாங்க. சில சமயம் குழுவாக போட்டியில் பங்கு பெறும் போதும் இவங்க இணைந்து செயல்படுவாங்க.

இந்த குழு மூலம் நாம் ஏதும் சம்பாதிப்பதில்லை. ஆனால் நம்முடைய திறமைக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும் போது, அது நமக்குள் ஒருவித தன்னம்பிக்கை மற்றும் சந்தோஷத்தை ஏற்படுத்தும். சில பெண்கள் பெரிய அளவில் மனஉளைச்சலில் இருப்பாங்க. அவங்களுக்கு இதில் நடக்கும் ஒவ்வொரு செயல்பாடும் ஒரு வித ரிலாக்ஸ் கொடுக்கும். துவண்டு விழாமல் மீண்டும் உற்சாகமாக எழுந்து செயல்படுவார்கள். இந்த குழுவை நான் மட்டுமே இயக்கவில்லை. என்னுடன் சேர்ந்து ஆர்த்தி, ரோஸ், ரெஹானா, அமலா வாணி என நான்கு பேர் எனக்கு உதவியா இருக்காங்க. பொதுவாகவே சமூகவலைத்தளம் என்றால் நிறைய பிரச்னைகள் இருக்கும். நானும் நிறைய பிரச்னைகளை சந்தித்து இருக்கேன். அதில் இருந்து மீண்டும் வந்திருக்கேன். அதனாலேயே எங்க குழுவின் இயக்கத்தை நாங்க ரொம்பவே பாதுகாப்பா வச்சிருக்கோம். எங்க குழுவில் இணையவேண்டும் என்றால், அந்த குழு உறுப்பினர்கள் யாராவது ஒருவர் அழைப்பு விடுத்தால் தான் இணைய முடியும். அவ்வாறு இணையும் ஒருவருக்கு நன்கு பரிச்சயமானவர்கள் மட்டுமே இருப்பார்கள்.

இதன் மூலம் முகம் தெரியாத நபர்களை தவிர்க்க முடியும். மேலும் பெண் பெயரில் ஆண்கள் போலி அக்கவுன்ட் வைத்திருக்க வாய்ப்பு இருப்பதால் அவர்களின் உண்மையான அடையாளங்கள் இல்லாமல், குழுவில் இணைப்பதில்லை என்பதை தீர்மானமாக வைத்திருக்கிறோம். இது ஒருபுறமிருக்க, குழுவுக்குள்ளே சின்னச் சின்ன பூசல்கள், தவறான புரிதல்கள் போன்ற பிரச்னை ஏற்படும். அதையும் சமாளிக்கணும். எல்லாவற்றையும் விட எங்க குழுவில் உள்ள பெண்களின் திறமைக்கு ஏற்ப ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். இது தான் எங்களின் அடுத்த கட்ட திட்டம். ஒருமுறை நடிகர் ஜீவா அவர்களை பேட்டி எடுத்த போது, குழுவில் ஒரு பெண் அவரின் கண்களை வரைந்து கொடுத்தார். அவருக்கு பிடித்து போக… முழு படம் வரைந்து கொடுக்க சொல்லி இருக்கார். அதே போல் நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு பாட்டு ரிலீஸ் செய்திருக்கோம்’’ என்றவர் ‘நேசக்கரங்கள்’ என்ற அமைப்பை துவங்கி அதன் மூலம் பல சேவைகளை செய்து வருகிறார்.

‘‘இந்த அமைப்பு எங்க குழுவினருக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பல உதவிகளை எங்களுக்குள்ளே நாங்க செய்து வருகிறோம். வீட்டு வேலை செய்பவர்களின் குழந்தைகளுக்கு இதன் மூலம் ஒரு தொகை திரட்டி அவர்களின் கல்விக்கு உதவி செய்கிறோம். அதேபோல் எங்க குழுவில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது நலமாக இருக்கிறார். அவரின் மருத்துவ செலவினை இந்த அமைப்பு மூலம் ஏற்பாடு செய்தோம். இன்னும் நிறைய உதவிகளை செய்யும் எண்ணம் உள்ளது’’ என்றார் ஷர்மிளா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முத்தம் பற்றி ஒரு ஆய்வு!! (அவ்வப்போது கிளாமர்)
Next post உடல் கேலிகளுக்கு காதையோ, மனதையோ கொடுக்காதீர்கள்!! (மகளிர் பக்கம்)