வாழ்வென்பது பெருங்கனவு! ( மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 42 Second

இந்த தொடரில் இதுவரை இடம் பெற்ற அனைவரும் குறிப்பிட்ட ஒரு வரையறை அளவில் தங்களது பெருங்கனவை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், இவர் முற்றிலும் மாறுபட்டு தனது பெருங்கனவை சமுதாய மாற்றமாக பகிர்கிறார். அவரது நோக்கத்தை பெருங்கனவு என்று சொல்வதைக் காட்டிலும் இமாலய கனவு என்று தான் கூறவேண்டும். புற்றுநோய் இல்லாத புதிய சமுதாயம் எனும் அவரது பரந்து விரிந்த கனவை யாராலும் பாராட்டாமலும், ஊக்குவிக்காமலும் இருக்க முடியாது.

கொரோனா எனும் வைரஸ் நம்மை ஆட்டிப் படைக்கும் கொடூர கால கட்டத்தில் இருந்து வரும் நமக்கு, காலங்காலமாக மனித இனத்தை இம்சித்து வரும் கேன்சர் எனும் வைரசுக்கு இனியும் சமுதாயம் கஷ்டப்படக் கூடாது எனும் அவரது மேலார்ந்த சிந்தனை குறித்தும், அந்த இலக்கை அடைவதற்காக அவர் மேற்கொண்டு வரும் பயணத்தை குறித்தும் டாக்டர் அனிதா ரமேஷ் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

புற்றுநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவில் நாடளவில் மட்டுமன்றி உலகளாவிய சேவையில், தவிர்க்க முடியாத சக்தியாக டாக்டர் அனிதா ரமேஷ் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கொல்கத்தாவில் எம்.பி.பி.எஸ் படித்து முடித்த அனிதா, புற்றுநோய் மருத்துவ பிரிவை முக்கிய சிறப்பு பாடமாக கொண்டு சென்னையில் முதுநிலை பட்டம் முடித்தார். அதே பிரிவில் லண்டன் பல்கலையில் மற்றொரு முதுநிலை பட்டமும் பெற்றதோடு நிற்காமல், ஐரோப்பிய சங்கத்தில் பட்டய சான்றும் பெற்றார்.

சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் தலைவராக தற்போது பணிபுரியும் டாக்டர் அனிதாவின் மருத்துவ சேவை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மேலும், பல பிரபல மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு ஆலோசனைகள் வழங்கியும் வருகிறார். வாய், கர்ப்பப்பை, மார்பகம், நுரையீரல், தலை, கழுத்து என இந்த உறுப்பு தான் என்றில்லாமல் அனைத்து வகை கேன்சரையும் கட்டுப்படுத்தும் சிகிச்சை அளிப்பதில் வல்லுநர் என உலகளவில் பெயர் பெற்றுள்ளார். அது மட்டுமன்றி சர்வதேச மருத்துவ அரங்குகளில் 50க்கும் அதிக உரைகள், 44 கட்டுரைகள் என அவரது புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.

“உரிய சிகிச்சை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள், தேகப்பயிற்சி கடைப்பிடித்தால், கேன்சர் பாதிப்பில் இருந்து ஒருவரை 2 ஆண்டுகளில் மீட்க முடியும். தற்போது கேன்சர் விழிப்புணர்வுகள் அதிகரித்து வருகின்றன. புகையிலை பொருட்கள் உள்ள பாக்கெட்களின் மேலட்டையில் அபாய விழிப்புணர்வு வாசகங்கள் நல்ல பலனை அளிக்கத் தொடங்கி உள்ளன. அதேசமயம் புகை பிடிப்பவர்கள் மட்டுமின்றி அவர்களைக் காட்டிலும் அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள், அந்தப் புகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது வேதனையான விஷயம்.

என்னை பொறுத்தவரை டாக்டருக்கு படித்தோமா, வேலையில் செட்டில் ஆனோமா, சம்பாதித்தோமா என குறுகிய வட்டத்தில் என்னை அடைத்துக் கொள்ள ஒரு போதும் நினைக்கவில்லை. கடவுளுக்கு அடுத்த இடத்தில் டாக்டர்களை வைத்து பார்க்கும் இந்த சமுதாயம் உள்ள அளவுக்கும் ஏதாவது நல்லது செய்துவிட்டுச் செல்ல வேண்டும் என்பதே எனக்குள் ஊற்றெடுத்த பெருங்கனவு.

கேன்சர் பாதித்தவர்களாக கடந்த 20 ஆண்டுகளில் நான் சந்தித்த மனிதர்கள் எத்தனை பேர் என கணக்கிடவில்லை. என்றாலும், வரும் காலத்தில் கேன்சர் எனும் வார்த்தையே அகராதியில் இருக்கக்கூடாது என்பது எனது இலக்கு. அதனை செயல்படுத்தும் விதமாக, ஃப்ரீடம் ஃப்ரம் கேன்சர் ரிலீஃப் அண்ட் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (Freedom from Cancer Relief and Research Foundation) தொடங்கி உள்ளேன். பணம் இல்லாததால் கேன்சர் பாதிப்புக்கு உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பது இந்த அறக்கட்டளையின் உன்னதமான நோக்கம். இதை தனி ஒருவராக என்னால் மட்டும் சாதிக்க முடியாது.

அறக்கட்டளைக்கு என்னால் முடிந்த நிதி ஒதுக்கி உள்ளேன். அறக்கட்டளை வளர்ந்தால் தானே எனது லட்சியக் கனவை எட்ட முடியும். எனவே அன்பு உள்ளங்கள் அளிக்கும் அன்பளிப்பை அறக்கட்டளை கடமை உணர்வுடன் ஏற்றுக்கொள்ளும். அதேவேளையில் யாரையும் வற்புறுத்தும் வேலையில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன், அறக்கட்டளை உறுப்பினர்களையும் அனுமதிக்க மாட்டேன். சக மருத்துவர்கள் உள்பட என்னை அறிந்தும், புரிந்தும் கொண்ட பலரும் என்னை பெரிதும் ஊக்குவித்து வருகின்றனர்.

இத்தனை ஆண்டு மருத்துவ சேவையை அப்படியே தொடர்ந்து வந்தாலும், அறக்கட்டளை மூலமாக கேன்சர் இல்லாத உலகம் உருவாக வேண்டும் எனும் இலக்கையும் விரைவில் சாதிக்க வேண்டும் எனும் பேரார்வம் ஏற்பட்டு உள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கியுள்ள அந்த அறக்கட்டளையை, கேன்சர் பாதிப்பு உள்ளவர்கள் நேரில் அணுகினால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சைகள் வழங்கி, நோயிலிருந்து விடுபட்டு வீடு திரும்பும் புதிய மனிதராக மாற்றுவோம். அதேசமயம், இங்கு ஒரு கிளினிக் தொடங்கி, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை வழங்கி வருகிறேன்.

இங்கு நான் கூற விரும்புவது ஒன்று மட்டுமே. பாதிப்பு ஏற்பட்டு அதன் பிறகு சிகிச்சை என்பதை காட்டிலும், கேன்சர் விழிப்புணர்வில் ஒவ்வொரு தனி மனிதனும் அதீத ஆர்வம் செலுத்த வேண்டும் என்பது தான். தனக்குத் தானே முதலில் விழிப்புணர்வு உருவாக்கிக் கொண்டு, பிறகு சமுதாயத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் ஒழிய, அரசுதான் விளம்பரம் செய்கிறதே நமக்கென்ன என்று அசட்டையாக இருந்தால், அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம். அரசு விழிப்புணர்வு விளம்பர அளவில் தான் பொதுவாக இருக்கும். அதேசமயம் ஒருவர் நினைத்தால், ஒரு லட்சம் பேருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். அன்னா ஹசாரே ஒரு தனி நபராகத்தான் இருந்தார்.

ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில், நாட்டின் ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் அவருக்கு ஒரே நாளில் தோள் கொடுத்ததை யாரும் மறக்கக்கூடாது. அதைப்போல் கேன்சரையும் எதிர்த்து விழிப்புணர்வு உண்டாக்கும் உணர்வு ஒவ்வொருவரின் ரத்தத்திலும் தானாக ஊற்றெடுக்க வேண்டும். இதற்காக யாரும் மணிக்கணக்கில் தங்களை வருத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம். ஒருநாளில் சும்மா ஒரு 10 நிமிடம் ஒதுக்கி பிறருக்கு அறிவுறுத்தினால், தன்னால் இந்த சமுதாயம் திருந்தும் என்ற நம்பிக்கை எனக்குள் ஆழமாக வேரூன்றி உள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் மட்டுமே தீவிரம் என்றில்லாமல் சமூக நற்பணிகளிலும் அறக்கட்டளை கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் சமீபத்திய கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், சானிடைசர், மாஸ்க் போன்றவைகளை இலவசமாக வழங்கினோம். ஸ்மார்ட் போன் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளை தவற விடக்கூடாது என்ற நோக்கத்துடன் ஏழை மாணவர்களை தேடிப்பிடித்து எங்களால் இயன்ற அளவு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துள்ளோம்” என்ற டாக்டர் அனிதா குழந்தைகள் புற்றுநோய் சர்வதேச சங்கம், ஐரோப்பிய புற்றுநோய் மருத்துவ சங்கம் போன்றவற்றில் நிரந்தர உறுப்பினராக உள்ளார் என்பது தமிழர்களாகிய நமக்கும் பெருமைதான்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர்காலத்தில் குழந்தைகளை குறி வைக்கும் வைரஸ்! (மருத்துவம்)
Next post எஸ்.பி.பி அவர்களின் கோடிக்கணக்கான ரசிகைகளில் நானும் ஒருத்தி…!! ( மகளிர் பக்கம்)