அனுசரிப்புக் கோளாறுகள் (ADJUSTMENT DISORDERS)!! (மருத்துவம்)
வாழ்க்கையில் நடக்கும் சிறுசிறு மாற்றங்கள், அவ்வப்போது மன உளைச்சலை ஏற்படுத்துவது சகஜமே. சில நேரங்களில், நாம் மாற்றங்களுக்கு தகுந்தவாறு அனுசரித்துப் போக முடியாமல் திண்டாடினாலும், மெல்ல மெல்ல அதை சமாளிக்கக் கற்றுக் கொள்வது வழக்கம். சிலருக்கு இம்மாற்றங்கள் தீவிரமான மன உளைச்சலை ஏற்படுத்தலாம். இப்படி சிறுசிறு மாற்றங்கள் / நிகழ்வுகளைச் சமாளிக்க முடியாமல் போவதால் ஏற்படும் மனநலக் கோளாறுதான், அனுசரிப்புக் கோளாறு. இதை ஏற்படுத்துவது, ஒருவர் வாழ்வில் நடக்கும் சில மாற்றங்கள்தானே தவிர, (சென்ற தொடரில் பார்த்தது போல) அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அல்ல.
குழந்தைகள் / டீன் ஏஜரை பாதிக்கும் பொதுவான மாற்றங்கள் / நிகழ்வுகளின் எடுத்துக்காட்டுகள் இதோ…
1. பெற்றோரின் விவாகரத்து / பிரிவு
2. பள்ளியில் பிரச்னை
3. இடமாற்றம் / பள்ளி மாற்றம்
4. செல்லப்பிராணியின் இழப்பு
5. குழந்தைப் பிறப்பு (தங்கை / தம்பியின் பிறப்பு)
6. நண்பர்களுடன் பிரச்னை.
பொதுவாக, இந்த மனநலப் பிரச்னையின் அறிகுறிகள், குழந்தையின் மனதை பாதிக்கும் நிகழ்வு நடந்து 3 மாதத்துக்குள் ஆரம்பிக்கும். தாக்கம் ஏற்படுத்தும் நிகழ்வுகள், பிறருக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், பாதிக்கப்பட்டவருக்கு அது மிகவும் முக்கியமானதாக இருக்கும். மேலும், மன உளைச்சலைத் தரும் அந்த காரணி நீங்கிய 6 மாத காலத்துக்குள், இந்த அனுசரிப்புக் கோளாறும் தானாகவே சரியாகிவிடும். 6 மாத காலத்திற்கு மேல் அறிகுறிகள் நீடித்தால், அது அனுசரிப்புக் கோளாறாக இருக்க வாய்ப்பில்லை.
வாழ்வில் நிகழும் மாற்றங்கள், பொதுவாக ஏற்படுத்தும் மனஉளைச்சலை காட்டிலும், இக்கோளாறினால், அதிக தாக்கம் ஏற்பட்டு, ஒருவரின் உணர்ச்சிகள் (Emotion) மற்றும் நடத்தையை (Behavior) பெருமளவு பாதிக்கும். பாதிக்கப்பட்டவரின் பள்ளி / குடும்ப / சமூக வாழ்க்கையையும் சேர்த்து பாதிக்கும் போதுதான், அது அனுசரிப்புக் கோளாறாக இருக்கும்.
அறிகுறிகள்…
டீன் ஏஜினர் தங்கள் வாழ்வில் மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும் நிகழ்வை சந்தித்த சிறிது காலத்துக்குப் பின்னர், வித்தியாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தால், அது அனுசரிப்புக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். பாதிக்கப்பட்டவரின் அறிகுறிகள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம்.
பொது அறிகுறிகள் (எண்ணம் மற்றும் உணர்ச்சிகள்)
1. கவலை
2. நம்பிக்கையற்ற நிலை
3. மகிழ்ச்சியின்மை
4. அழுதுகொண்டே இருப்பது
5. நடுக்கம்
6. பதற்றம்
7. துயரம்
8. தூக்கமின்மை
9. கவனம் செலுத்துவதில் பிரச்னை
10. தற்கொலை எண்ணங்கள்
11. எரிச்சல் / கோபம்.
பொது அறிகுறிகள் (செயல்பாடுகள்)
1. சண்டை போடுவது
2. அலட்சியப் போக்கு
3. நண்பர்கள் மற்றும் குடும்பத்தைத்
தவிர்த்தல்
4. படிப்பில் தொய்வு
5. பள்ளியைத் தவிர்ப்பது
6. வன்முறை.
வகைகள்…
1. மனச்சோர்வு நிலை கொண்ட அனுசரிப்புக் கோளாறு கவலை, சோகம், அழுகை, நம்பிக்கையின்மை, மகிழ்ச்சியின்மை, முன்பு பிடித்த விஷயத்தில் நாட்டமின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
2. பதற்ற நிலை கொண்ட அனுசரிப்புக் கோளாறு கவனம் செலுத்துவதில் கடினம், வருத்தம், ஞாபக மறதி, பலவீனமாக உணர்தல், பயம் போன்ற அறிகுறிகள் இவ்வகையில் காணப்படும்.
3. மனச்சோர்வு மற்றும் பதற்ற நிலை கலந்த அனுசரிப்புக் கோளாறு மேலே பார்த்த இருவகை அறிகுறிகளும் கலந்து காணப்படும்.
4. நடத்தைப் பிரச்னை கொண்ட அனுசரிப்புக் கோளாறு சண்டையிடுவது, பொருட்சேதம் செய்வது, பள்ளிக்கு செல்ல மறுப்பது போன்ற நடத்தைப் பிரச்னையின் அறிகுறிகள் காணப்படும்.
5. உணர்ச்சி மற்றும் நடத்தைப் பிரச்னையுடன் காணப்படும் அனுசரிப்புக் கோளாறு
இவ்வகையில், மேலே பார்த்த மனச்சோர்வு, பதற்றம் மற்றும் நடத்தைப் பிரச்னையின் அறிகுறி கள் எல்லாம் சேர்ந்து காணப்படும். இவை தவிர, குறிப்பிடப்படாத அனுசரிப்புக் கோளாறு உள்ளவர்களின் அறிகுறிகள், மேலே பார்த்த எந்தக் குறிப்பிட்ட வகையிலும் சாராமல், அதே நேரத்தில் உடல்ரீதியான (தூக்கமின்மை) பிரச்னைகள் மற்றும் வேலை/ நண்பர் / குடும்பம் / பள்ளி/ வாழ்வில் பாதிப்புகளுடன் காணப்படும்.
யாரை பாதிக்கும்?
குழந்தைப் பருவத்திலேயே, அடிக்கடி மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள குழந்தைகள், குறிப்பாக, போதிய ஆதரவு இல்லாத குழந்தைகளை அனுசரிப்புக் கோளாறு அதிகம் பாதிக்கும். ஆண்களைக் காட்டிலும், பெண்களையே அதிகமாக இது பாதிக்கிறது. பெற்றோரின் வளா்ப்பு முறை (பொத்திப் பொத்தி வளர்ப்பது / அடித்து வளர்ப்பது), குடும்ப பிரச்னைகள் மற்றும் சிறு வயதிலேயே அதிக இடமாற்றம் செய்வது போன்ற விஷயங்கள், ‘வாழ்வில் நடப்பதெல்லாம் நம் கையில் இல்லை’ என்ற எண்ணத்தை உருவாக்கி, பிரச்னைகளுக்கு அனுசரித்து போக முடியாதவாறு குழந்தையின் மனதை பலவீனம் ஆக்கிவிடும். ஏற்கெனவே இருக்கும் வேறு மனநலப் பிரச்னைகள், போர் / வன்முறையை நேரில் பார்த்த அனுபவம், கடினமான வாழ்க்கை சூழ்நிலை, ஒருவரை எளிதில் அனுசரிப்புக் கோளாறு தாக்குவதற்கு வசதியாக அமைந்து விடுகிறது.
விளைவுகள்?
அனுசரிப்புக் கோளாறின் விளைவுகள் சில நேரங்களில் ஆபத்தாக முடியலாம். ஏனெனில், இக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்தான நடத்தைப் பிரச்னைகளான வன்முறை, குடி / போதைப் பழக்கம் மற்றும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மேலும், அனுசரிப்புக் கோளாறு, வேறு மனநலப் பிரச்னை / போதைப் பழக்கத்துடன் சேர்ந்து காணப்பட்டால், நீண்டகால மனநலப் பிரச்னைகளான மனச்சோர்வு (Depression), மது / போதை அடிமை, தற்கொலை முயற்சி போன்றவற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
எப்போது சிகிச்சை தேவை?
பொதுவாக அனுசரிப்புக் கோளாறு, அதற்கு காரணமான நிகழ்வு விலகியவுடன், தானாகவே சரியாகிவிடும். ஆனால், பொதுவாக மனஉளைச்சல் தரும் நிகழ்வு, வாழ்க்கையில் ஒரு பகுதியாக பெரும்பாலும் நிலைத்துவிடவும் கூடும் (எ-டு: பெற்றோரின் விவாகரத்து, இறப்பு…). இல்லையெனில் மற்றுமொரு மனஉளைச்சல் தரும் சூழ்நிலை அடுத்தடுத்து நேரிட்டால், திரும்பவும், மனப் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த மனநலப் பிரச்னை, பாதிக்கப்பட்டவரை மேலும் மனதளவில் பலவீனமாக்கி, எதிர்காலத்தில் எவ்வித பிரச்னையையும் சமாளிக்க முடியாமல் செய்யுமளவு, மன ஆரோக்கியம் கெட்டு விடக்கூடும். ஏற்கெனவே பார்த்ததுபோல, பல ஆபத்தான விளைவுகளும், அனுசரிப்புக் கோளாறினால் ஏற்படும் என்பதால், ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், மனவலிமை கூடி, எதிர்காலத்தில், எந்தப் பிரச்னையையும் ஆரோக்கியமான வழியில் சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.
காரணி மற்றும் சிகிச்சை
அனுசரிப்புக் கோளாறுகளுக்கு மரபணு, வாழ்க்கை தந்த கசப்பான அனுபவங்கள், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம், குணாதிசயம் போன்றவை காரணிகளாகலாம். வேறு மனநலக் கோளாறுகள் ஏற்கனவே இருப்பின், அறிகுறிகளின் காரணியை ஆராய்ந்த பின்பே, இது அனுசரிப்புக் கோளாறுதானா எனக் கண்டறியப் படும். உளவியல் நிபுணர், அறிகுறிகளை ஆராய்ந்து அனுசரிப்புக் கோளாறுதான் என நிர்ணயித்த பின்னர் சிகிச்சையை ஆரம்பித்துவிடுவார். தற்கொலை எண்ணங்கள் இருப்பின்,
உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது.
பொதுவாக அனுசரிப்புக் கோளாறுக்கு குறுகிய கால உளவியல் சிகிச்சை போதுமானது. அதிகபட்ச பதற்ற / மனச்சோர்வு அறிகுறிகள் இருப்பின், அதற்கு மருந்து கொடுக்கப்படலாம். ஆனால், சற்று சரியான பின், மருத்துவ ஆலோசனையின்றி திடீரென மருந்தை நிறுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், அதனால் வேறுபல பிரச்னைகள் வரக்கூடும் (Withdrawal symptoms). எந்தவகை அனுசரிப்புக் கோளாறு என்பதைப் பொறுத்து, சிகிச்சை வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர், ஏன் இந்த மன உளைச்சல் தரும் நிகழ்வு இந்தளவுக்குப் பாதித்தது என்பது குறித்து புரிந்துகொள்ள சிகிச்சை உதவும்.
இந்தப் புரிதல், எதிர்காலத்தில் வரக்கூடிய பிற கடின நிகழ்வுகளை ஆரோக்கியமான முறையில் சமாளிக்கும் திறன்களை கற்றுத் தரும். பிரச்னையில் இருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தேவையான ஆதரவு, சிகிச்சை மூலமாக வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பற்றுதல் கோளாறு (Attachment disorders)குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.
கலா ஏன் கவலையுற்றாள்?
தந்தை அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் போது, கலா பிறந்தாள். அவளுக்கு 3 வயது இருக்கும்போது, இந்தியா வந்தனர். இந்தியாவில் ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, அவள் தந்தைக்கு வேலை இடமாற்றம் காரணமாக குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்ல வேண்டிய நிர்பந்தம். இதைக் கேள்விப்பட்ட நாள் முதல் கலா கவலையுற்றாள்… ஆனால், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவள் பழகிய பள்ளி, நண்பர்களை விட்டுப் பிரிந்து செல்வது, பரிச்சயமற்ற இடம் கொடுத்த பயம், நிச்சயமற்ற சூழ்நிலை… எல்லாம் கலாவை வெகுவாக பாதித்தது.
சிங்கப்பூர் சென்ற பின்னர், புதிய சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள எவ்வளவோ முயன்று பார்த்தாள் கலா. ஆனால், அவளின் புதுப் பள்ளியின் சூழல், சக மாணவியரின் அணுகுமுறை, அவளுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. தன் அம்மாவிடம் மனம் விட்டு பேசும் கலா, இப்போதெல்லாம் எரிந்து எரிந்து விழ ஆரம்பித்தாள். அறைக்குச் சென்று தாழிட்டு அழுதுகொண்டே இருந்தாள். அவள் நடத்தையிலும் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன.
இந்தியாவில் நல்ல மதிப்பெண்களை எடுத்து சிறந்த மாணவியாக விளங்கிய கலா, படிப்பில் மிகவும் பின் தங்க ஆரம்பித்தாள். பள்ளியில் காரணமின்றி கோபப்பட்டு சண்டையிட ஆரம்பித்தாள். பள்ளியில் கெட்ட சகவாசம் கிடைக்கப்பெற்று மெல்ல போதைப் பழக்கத்துக்கும் அறிமுகமானாள். பணத்தேவைக்காக அம்மாவிடம் பொய் சொல்லவும் அவள் தயங்கவில்லை. அவள் போக்கில் வித்தியாசம் கண்ட அவள் தாய், படிப்பு பின்தங்கியதை காரணமாகக் காட்டி, மனநல மருத்துவரிடம் கூட்டிச் சென்றாள்.
கலாவுக்கு உணர்ச்சி மற்றும் நடத்தைப் பிரச்னையுடன் சேர்ந்த அனுசரிப்புக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு, உளவியல் ஆலோசகரிடம் செல்ல பரிந்துரைக்கப்பட்டது. அங்கு அவளுக்கு மனம் விட்டு பேச வாய்ப்பளிக்கப்பட்டு, பிரச்னையை ஆரோக்கியமான முறையில் சமாளிக்கும் உத்திகள் பயிற்றுவிக்கப்பட்டன. ஆரம்பத்திலேயே அழைத்து வரப்பட்டதால், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் கலா காப்பாற்றப்பட்டாள். வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும், அதை எதிர்நோக்கி மனவலிமையுடன் (Resilience) சமாளிக்கும் திறமையையும் ஆலோசனையில் வளர்த்துக் கொண்டாள் கலா.இப்போது கலா, நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்று, அதே சிங்கப்பூரில், நல்ல மாணவியாக மகிழ்ச்சியுடன் சிறந்துவிளங்குகிறாள்.
Average Rating