வெளியேற்றல் கோளாறுகள் (Elimination Disorders)!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 34 Second

என்கோப்பிரிஸிஸ் (தன்னையறியாமல் மலம் கழித்தல்) குழந்தைகள் குறிப்பிட்ட வயது, வளர்ச்சிக்கு பின்னரும், தொடர்ந்து தகாத இடத்தில் (உடை/தரை) மலம் கழித்தால், அது என்கோப்பிரிஸிஸ் ஆக இருக்கலாம். இதனால் பாதிக்கப்பட்டோர் மாதம் ஒருமுறையேனும் – குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு தொடர்ந்து இப்படி நடந்து கொள்வது வழக்கம். இது எந்த மருத்துவக் காரணிகளாலோ, மருந்துகளாலோ ஏற்பட்டிருக்காது. இக்கோளாறு, எனியூரிஸிஸைக் காட்டிலும் சற்று அரிதுதான். இதில் இரு வகைகள் உள்ளன.

1. மலச்சிக்கலுடன் கூடிய என்கோப்பிரிஸிஸ் (மருத்துவரீதியாக கண்டுபிடிக்கப்பட்ட மலச்சிக்கல் பிரச்னை காணப்படும்). இவ்வகையில், வாரம் 3 முறைதான் பொதுவாக குழந்தைகள் மலம் கழிப்பதுண்டு. மலச்சிக்கல் உள்ள காரணத்தால், முழுமையாக கழிவறையில் போக முடியாததால், மிச்சமிருக்கும் கழிவு, பகல் நேரத்தில் குழந்தையின் தன்னறிவில்லாமல் கசிந்து விடும் (இது தொடர்ந்தும் ஏற்படலாம் / அரிதாகவும் ஏற்படலாம்). அடிப்படை பிரச்னையான மலச்சிக்கலை சரி செய்தால், இவ்வகை என்கோப்பிரிஸிஸ் பொதுவாக சரியாகிவிடும்.

2. மலச்சிக்கல் அல்லாத என்கோப்பிரிஸிஸ் (மருத்துவப் பரிசோதனையில் மலச்சிக்கல் இருப்பதற்கான எவ்வித தடயமும் இல்லாதது). இவ்வகைக் கோளாறு, முதல்வகையைக் காட்டிலும் சற்று அரிதுதான். குழந்தைகள் வேண்டுமென்றே முக்கிய இடங்களில் (தரை, சுவர்…) இடைவெளி விட்டு, அவ்வப்போது மலம் கழிப்பதுண்டு. அதை வீட்டில் மறைத்தும் வைப்பதுண்டு. பொதுவாக, இவ்வகைக் கோளாறு உள்ளவர்களுக்கு நடத்தைக் கோளாறு/இணக்கமற்ற கோளாறு (Conduct Disorder/ Oppositional-Defiant Disorder) இருக்கும் வாய்ப்புள்ளது.

இவ்வகைக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு, பொதுவாக எனியூரிஸிஸ் கோளாறும் சேர்ந்து காணப்படும். பெண்களைக் காட்டிலும் ஆண் குழந்தைகளிடத்தில்தான் இக்கோளாறு அதிகம் காணப்படுகிறது.

அறிகுறிகள்?

இக்கோளாறின் முக்கியத் தன்மையான, தகாத இடத்தில் மலம் கழித்தலுடன் வேறு சில அறிகுறிகளும் சேர்ந்து காணப்படுவது வழக்கம். அவை…

1. பசியின்மை
2. வயிற்று வலி
3. பேதி
4. ஆசன வாய் எரிச்சல்
5. விளையாட்டு போன்ற செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது
6. நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் இருந்து விலகுவது
7. மலம் கழிக்கும் விஷயங்களில் ரகசியமாக ஈடுபடுவது.

காரணிகள்?

மலச்சிக்கல்தான் என்கோப்பிரிஸிஸின் முக்கிய காரணி. சரியாக மலத்தை வெளியேற்ற முடியாததால், மலக்குடல் வெகுநேரம் அதை தாக்குப்பிடிக்க முடியாமல் மற்ற நேரங்களில் தானாக கசிந்து விடுகிறது.

மலச்சிக்கலை உண்டாக்கும் காரணிகள்?

1. நார்ச்சத்து இல்லாத உணவு
2. போதிய தண்ணீர் குடிக்காதது
3. பொது கழிவறை/பழக்கமில்லா கழிவறையை பயன்படுத்த தயக்கம்/பயம்
4. பள்ளியில் இருப்பதால், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கழிவறையை உபயோகிக்கக்கூடிய நிலை
5. கழிவறையை உபயோகிக்க நேரம் ஒதுக்காதது.
உளவியல் காரணங்களாக, மன உளைச்சல் (குடும்பத்தினரின் உடல் கோளாறு,
தங்கை/தம்பிப் பாப்பா பிறப்பது) மற்றும் கழிவறை பயன்படுத்துவது குறித்த பயம்/விரக்தி. இவ்வித பயம் குழந்தைக்கு ஏற்படுவதற்கு, பெற்றோரின் (முக்கியமாக தாயின்) வளர்ப்பு முறையும் பங்களிக்கிறது. பொதுவாக, தாய், கழிவறையைக் குறித்து தயக்கம் /அருவெறுப்பு காட்டி னாலோ, நிதானமின்றி திட்டி மலம் கழிக்க பயிற்சி அளித்திருந்தாலோ, இத்தகைய வெளியேற்றல் கோளாறுகள் ஏற்படும்.

வெளியேற்றல் கோளாறினால் ஏற்படும் பிற பிரச்னைகள்?

என்கோப்பிரிஸிஸ் பலகுழந்தைகளுக்கு காணப்பட்டாலும், அவமானத்துக்கும் சங்கடத்துக்கும் பயந்து, பெற்றோர் சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வருவதில்லை. என்கோப்பிரிஸிஸ் உடன் பல்வேறு உளவியல்-சார் (உணர்ச்சி/சமூக) பிரச்னை
களும் சேர்ந்து காணப்படுவதால், ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிப்பது முக்கியம். இக்கோளாறுள்ள குழந்தைகள் மனச்சோர்வு, மற்ற குழந்தைகளுடன் பழக மறுப்பது, மற்ற வீட்டில் போய் தங்க முடியாத சூழ்நிலை, நண்பர்களின் கேலி, குடும்பத்தினரின் கோபம், திட்டு போன்ற பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனால், இவர்கள் தன்னம்பிக்கை இழந்து, அவமானப்பட்டு சமுதாயத்திலிருந்து விலக ஆரம்பித்து விடுவதும் உண்டு.

சிகிச்சை?

பெரும்பாலான என்கோப்பிரிஸிஸ் பிரச்னைகள், மலச்சிக்கலால் ஏற்படும் காரணத்தினால், வேறு ஏதேனும் மருத்துவப் பிரச்னை அடிப்படையாக உள்ளதா என்பதை முழுவதுமாக ஆராய்வது முக்கியம். குழந்தையைக் குறித்த எல்லா விவரங்களையும் திரட்டியப் பின், இது என்கோப்பிரிஸிஸ் தானா என்பது நிர்ணயிக்கப்படும். எந்த வகை என்கோப்பிரிஸிஸ் எனத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சை வரையறுக்கப்படும்.

பொதுவாக, மலச்சிக்கல் வகை என்கோப்பிரிஸிஸ் இருந்தால். அதற்கு மலச்சிக்கலை தவிர்க்கவும், ஆரோக்கியமாக கழிவறையைப் பயன்படுத்தும் பழக்கமும் ஊக்குவிக்கப்படும். மலச்சிக்கலுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சையும் ஆலோசனையும் மற்றும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படும்.நடத்தை சிகிச்சை உத்திகளாக, கழிவறையில் முறையான இடைவெளியில் உட்காரச் சொல்லி பழக்கப்படுத்துவது, சரியான உணவு மற்றும் தூக்கத்தை கடைப்பிடிக்கச் சொல்வது, பிரச்னையை சமாளிக்கும் உத்தி போன்றவையும் மருத்துவ சிகிச்சையுடன் சேர்த்து அளிக்கப்பட வேண்டும்.

மலச்சிக்கல் அல்லாத எனியூரிஸிஸுக்கு எதிர்த்து நிற்கும் நடத்தையை (Defiant behavior) மாற்றும் வழிமுறைகளும், நடத்தை சிகிச்சை (Behavior therapy) மற்றும், எப்போது கழிவறையைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். சில நேரங்களில், குழந்தையின் அவமான உணா்வு, குற்றவுணர்வு, தாழ்வு மனப்பான்மை சரி செய்ய உளவியல் சிகிச்சையும் (Psychotherapy) தேவைப்படலாம்.குழந்தை மற்றும் குடும்பத்தினருக்கு இக்கோளாறு குறித்து தகவல்கள் எடுத்துரைக்கப்படும்.

குழந்தை, சரியான கழிவறைப் பழக்கத்தில் ஈடுபட்டால், அச்செயலை ஊக்குவித்தல் அவசியம். மொத்தத்தில், பெற்றோர், குழந்தையைப் புரிந்து கொண்டு பொறுமையாகவும் அனுசரிப்புடனும் நடந்து கொள்வது முக்கியம். குழந்தைகளுக்கு கழிவறை குறித்த நேர்மறை எண்ணங்களை வளர்க்க உறுதுணையாக இருத்தல் வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தயங்காமல், அருவெறுக்காமல், கழிவறையை (வீட்டிலும் வெளியிலும்) பயன்படுத்தும் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே விதைப்பது அவசியம். குழந்தைகள் மற்றும் டீனேஜரைப் பாதிக்கும் உறக்க-விழிப்பு கோளாறுகள் (Sleep-Wake Disorders) குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குற்ற நோக்கமும் குற்றமே!! (மருத்துவம்)
Next post உதயநிதி ஸ்டாலினின் கதை!! (வீடியோ)