குற்ற நோக்கமும் குற்றமே!! (மருத்துவம்)
குற்றங்கள் பெருகிவரும் நாட்களில் / நாட்டில் வாழ்கிறோம். நிர்பயா வழக்கில் சிறுவன் என்ற காரணத்துக்காக சமீபத்தில் விடுதலையான குற்றவாளியை நினைவிருக்கலாம். இச்சூழலில் இந்திய தண்டனை சட்டத்தின் சில அடிப்படைகளை அறிந்து கொள்வது அவசியம்.
குழந்தைகளை பாலியல் வன்முறை, சித்ரவதை செய்வது, ஆபாசமாக படம் எடுத்தல் போன்றவை பாலியல் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும். இதன்படி குற்றவாளி என்று நிரூபிக்கப்படுபவருக்கு 7 ஆண்டுகள் அதிகபட்ச கடுங்காவலும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் தண்டனை. மனநலம் பாதிக்கப்பட்ட/ மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொடுமைப்படுத்துவோருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல். குழந்தைகளை ஆபாசமாக படம் எடுப்பதும் ஊடகங்களில் பயன்படுத்துவதும் குற்றம். இச்செயலில் சம்பந்தப்பட்ட அனைவருமே குற்றவாளிகளாகக் கருதப்படுவர்.
உதாரணமாக குழந்தைகளை புகைப்படம் எடுத்த நிலையங்கள் உள்பட அனைத்துத் தரப்பும்.குழந்தைகளின் காப்பாளர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று கருதப்படுபவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டாலும், அவர்களும் குற்றவாளிகளே. ஆதரவற்றோர் இல்லங்கள், சிறுவர் காப்பகங்களில் மேற்பார்வையாளர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள், மருத்துவமனை, கல்வி நிறுவனங்களில் உள்ளவர்கள், காவல்துறை, அரசு ஊழியர்கள் போன்றோரும் இப்பட்டியலில் வருவார்கள்.
குழந்தைகளிடம் வாய்வழி பாலியல் உறவுக்கு கொடுமைப்படுத்துவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம்.இதே போன்ற இன்னொரு சட்டமும் இப்போது நடைமுறையில் உள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 என்பது, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமே.
இந்தச் சட்டத்தின் படி 18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் குழந்தைகளே. பாலின வேறுபாடு கிடையாது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை, தாக்குதல், துன்புறுத்தல், சீண்டல், பயமுறுத்தல், ஆபாச படமெடுத்தல் போன்றவையும் குற்றமே. பாதிக்கப்பட்ட குழந்தைகளை 24 மணி நேரத்துக்குள் மருத்துவப் பரிசோதனை, மருத்துவ வசதிக்கு உட்படுத்த வேண்டும், குழந்தையின் சாட்சி
30 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். ஓராண்டுக்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்படும் போது அந்த இடத்தை விட்டு அகற்றவும், நம்பிக்கைக்குரிய அல்லது பாதுகாப்பாளர்களால் பாதிக்கப்படும் போது குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளும் அளிக்கப்படுவதை இது உறுதி செய்கிறது. ஆயுள் தண்டனை வரை தர பரிந்துரைக்கப்படுகிறது.
வழக்கு ஆரம்பித்து, புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்குமூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் – பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனே மையமாக இருக்க வேண்டும். முடிந்தவரை சிறப்பு நீதிமன்றம் செயல்படவேண்டும். குழந்தைகளுக்கு தனியாக வழக்கறிஞர் கூட அவசியமில்லை. அவர்களின் நலனில் அக்கறை உள்ள யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்.
எந்த ஓர் இடத்திலும் குழந்தைகள் மேலும் துன்புறுத்தப்படக் கூடாது. அவர்களின் வசதிப்படியே வழக்கும் விசாரணையும் நடத்தப்படும். அவர்கள் விரும்பும் விதத்தில், இடத்தில் அவர்கள் சாட்சி தரலாம். பெண் காவல் அதிகாரி உடன் இருப்பது அவசியம். இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் அவர்களை அழைப்பதோ, தங்க வைப்பதோ கூடாது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அந்த வார்த்தைகளிலேயே பதிவு செய்ய வேண்டும்,
குழந்தையின் பெற்றோர் அல்லது அதற்கு நம்பகமானவர்கள் உடன் இருக்க வேண்டும். பயமுறுத்துதல் கூடாது. நட்பு ரீதியில் மட்டுமே குழந்தைகளை விசாரிக்கவோ, சாட்சிப்படுத்தவோ வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேலான பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி – அவர் சீருடையில் இல்லாமல் விசாரிக்க வேண்டும். பெண் குழந்தை எனில் பெற்றோர் அல்லது குழந்தைக்கு நம்பிக்கையானவர் உடன் இருக்க வேண்டும். பெண் மருத்துவரே பரிசோதிக்க வேண்டும். குழந்தையை எந்த விதத்திலும் அவசரப்படுத்தக் கூடாது.
அவர்கள் விருப்பப்படி நேரம் எடுத்து பதிலளிக்கலாம். விசாரனையோ, வழக்கோ – எதுவானாலும் அவர்கள் விரும்பாத எதையும் திரும்பத் திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது, குறுக்கு விசாரணையோ, சங்கடப்படுத்தும் கேள்விகளோ, அவர்களின் நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளோ கூடாது. குழந்தைகளின் பெயர், புகைப்படம் எந்த விவரமும் எந்த விதத்திலும் வெளிவரக்கூடாது.
ஒரு குற்றம் நடந்தால் மட்டுமே, அதை செய்தவர் குற்றவாளி என்பதில்லை. அந்தக் குற்றத்தை செய்யும் நோக்குடன் நடந்த அனைத்து நிகழ்வுகளும் குற்றமே. அதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகளே. எந்த விதத்திலும் குற்றவாளி குற்றத்திலிருந்து தப்பிக்கும் வழியை இச்சட்டம் தடை செய்கிறது. குற்றத்துக்குத் தரும் தண்டனையில் பாதி அதனை முயற்சிப்பவருக்கு தரவேண்டும்.
நீதிமன்றம் தாமாகவோ, விண்ணப்பத்தின் அடிப்படையிலோ இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். குற்றவாளி தண்டனை பெற்றாலும், விடுவிக்கப்பட்டாலும் தலைமறைவானாலும், மாநில அரசு, நீதிமன்ற உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் நிவாரணம் அளிக்க வேண்டும். உடல் காயம், மன உளைச்சல், குடும்பப் பொருளாதாரம், நோய்த் தொற்று, கர்ப்பம், ஊனம் என்று எதுவானாலும், அது நிவாரணத்தில் வரும். வழக்கின் விவரமும், நிவாரண விவரமும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அறிவிக்கப்பட வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Average Rating