நியூஸ் பைட்ஸ்!! (அவ்வப்போது கிளாமர்)
மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவுக்கு 139வது இடம்
ஐ.நா. தயாரித்துள்ள உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் 2021 பட்டியலில், 149 நாடுகள் இடம்பெற்றன. அதில் இந்தியாவிற்கு 139வது இடம் கிடைத்துள்ளது. பின்லாந்து நான்காவது முறையாக உலகிலேயே மகிழ்ச்சியான நாடு என அறிவிக்கப்பட்டு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான் கடைசி இடமான 149வது ரேங்கில் இடம்பெற்றுள்ளது.
வீரர்கள் தற்கொலை
கடந்த ஏழு ஆண்டுகளில், கிட்டத்தட்ட 800 ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. இதன்படி மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு இந்திய வீரர் தற்கொலை செய்து கொள்வதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நாம் ராணுவ வீரர்கள் சந்திக்கும் கடுமையான உடல் ரீதியான உழைப்பையும் கடினத்தையுமே பேசி வருகிறோம். ஆனால் கடுமையான காலநிலையில், குடும்பத்தை விட்டு பிரிந்து சரியான விடுமுறைகள், ஓய்வு இல்லாமல் வீரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அவர்களுக்கு சரியான உளவியல் ஆலோசனைகளும் உதவிகளும் கிடைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அட்லாண்டாவில் மிகப்பெரிய உணவுக் காடு
அட்லாண்டா மாநகரத்தில், மிகப்பெரிய உணவுக் காடு உருவாகி வருகிறது. 7.1 ஏக்கரில் 2500க்கும் அதிகமான உணவு மற்றும் மருத்துவ தேவைக்கான மரங்களும் செடிகளும் இங்கு ஆயிரக்கணக்கான மக்களால் விவசாயம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இங்கு மக்கள் தங்களுக்குத் தேவையான உணவை இலவசமாக எடுத்துச் செல்லலாம். சில சமயம், மக்கள் தேவைக்கு மீறிய உணவை எடுத்துச் செல்வதாக பிரச்சனைகள் தோன்றினாலும், அதைக் கட்டுப்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி
2022ல் இந்தியாவில் நடக்கஉள்ள மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி, நவி மும்பை, அகமதாபாத் மற்றும் புவனேஸ்வரில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி, அடுத்தாண்டு ஜனவரி 20 முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை நடக்கவுள்ளது.
கருச்சிதைவு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு
இந்தியாவை அடுத்து, நியூசிலாந்திலும், பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் போதும் அல்லது குழந்தை இறந்து பிறந்தாலோ, சம்மந்தப்பட்ட பெண்ணிற்கும் அவருடைய இணையருக்கும் அவர்கள் தங்கள் இழப்பிலிருந்து மீண்டு வர, சம்பளத்துடன் கூடிய விடுப்பை அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளதையடுத்து, நியூசிலாந்து இரண்டாவது நாடாக இந்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
சிறந்த திரைப்பட விமர்சகர் -சோஹினி சட்டோபாத்யாய்
2019ல் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் சமீபத்தில் வெளியாயின. அதில் சிறந்த திரைப்பட விமர்சகர் என்ற விருதை சோஹினி சட்டோபாத்யாய் என்ற பெண் விமர்சகர் பெற்றுள்ளார். இவர் பல ஆங்கில பத்திரிகைகளில் திரைப்பட விமர்சனங்களையும் ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக பெண்கள் சம்பந்தமான பல திரைப்பட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
Average Rating