குழந்தைகளை பாதிக்கும் பெற்றோரின் சண்டைகள்!! (மருத்துவம்)
‘பெற்றோருக்குள் நடக்கும் பிரச்னைகளாலும், உறவுகளுக்குள் ஏற்படும் மனக்கசப்புகளாலும் குழந்தைகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். முந்தைய தலைமுறைகளில், கூட்டுக் குடும்ப முறையில் கணவன் மனைவிக்குள் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் பெரியவர்கள் முன் பிரச்னை வரக்கூடாது என்று பொறுத்துக்கொள்வார்கள்.இதனால் மிகவும் குறைந்த அளவே சண்டை சச்சரவுகள் ஏற்படும். அப்படியே அவர்களுக்குள் பிரச்னைகள் ஏற்பட்டாலும் பெரியவர்கள் அதை தடுத்து சுமுகமாக வழி நடத்துவார்கள். ஆனால், இப்போதுள்ள தனிக்குடும்பங்களில் பெரியவர்களே கிடையாது என்று ஆகிவிட்டது.
எனவே, சண்டை சச்சரவுகளும் அதிகரித்துவிட்டன. அதேபோல் மாமியார் மருமகளுக்குள் ஏற்படும் பிரச்னைகளையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. குழந்தைகளுக்கு அம்மா, அப்பா இருவரும் சமமாகத்தான் தெரிவார்கள்.அதனால், அவர்களில் யாரைப் பின்பற்றுவது என்பதிலும் குழப்பங்கள் ஏற்படும்’’ என்கிற மன நல மருத்துவர் ஜெயந்தி விஸ்வநாதன், இதுபற்றி நம்மிடம் விளக்கமாகப் பேசுகிறார்.பெற்றோருக்குள் ஏற்படும் சண்டைகள், உறவினர்களால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால் குழந்தைகள் எந்த அளவு பாதிக்கப்படுகின்றனர்?
‘‘பெற்றோரின் சண்டைகளால் குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மற்ற குழந்தைகள் போல் சகஜமாக இருக்க முடியாமல் அவர்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெரியவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும்போது தங்கள் நண்பர்களிடமோ, உடன்பிறந்தோரிடமோ பகிர்ந்துகொள்கின்றனர். அப்போது அவர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் ஒருவித மன நிம்மதி கிடைக்கிறது. ஆனால், குழந்தைகளுக்கு இந்த உத்தி தெரியாது. அதற்குண்டான தெளிவும் அவர்களுக்கு இருக்காது.
இதனால் வீட்டைத் தாண்டி வெளியே வரும்போது அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் அல்லது அவர்களை பிறர் சிரமப்படுத்துகின்றனர். உதாரணம், பிற குழந்தைகளை அடிப்பது, கீழே தள்ளிவிடுவது, பெரியவர்களிடம் அதிகம் கோபப்படுவது போன்றவை.’’
மன உளைச்சலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு என்னென்ன பிரச்னைகள் தோன்றுகின்றன?
‘‘இவர்களுக்கு வெளி உலகத்தை சமாளிப்பது கடினமாகிவிடுகிறது. வெளியே சென்று விளையாட, மற்ற குழந்தைகளுடன் பழகுவது என்பது இவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. அதுவரை சுறுசுறுப்பாக, துருதுருவென்று ஓடிக்கொண்டிருந்த குழந்தை மிகவும் சோர்வாக, ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். நன்றாகப் படித்த குழந்தைகளுக்கு பாடத்தில் கவனம் குறையலாம். பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடிப்பது இதன் அறிகுறிதான். பாடத்தில் கவனம் குறைவதால் பள்ளியிலும் பிரச்னைகள் ஏற்படும். இதனால் மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள்.’’
நெருக்கமாக உள்ள ஒருவரை பிரியும்போது அல்லது அவர்களது மரணம் குழந்தைகளை எந்த விதத்தில் பாதிக்கிறது?
‘‘மிகவும் நெருக்கமான, தனக்கு மிகவும் பிடித்த ஒரு நபரைப் பிரிவது என்பது குழந்தைகளுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. வெகுசில குழந்தைகளே ஒரு நாளோ அல்லது இரண்டு நாளிலோ அதை மறந்து விளையாடத் தொடங்கி விடுவார்கள். ஏனைய குழந்தைகள் அந்தப் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவதியுறுகின்றனர்.
மேலும் மிகவும் பிடித்த ஒரு நபருக்கு மரணம் ஏற்படும்போது அதை அவர்களால் புரிந்து கொள்ளவும் முடிவதில்லை. இதனால் மன வருத்தம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஒரு வித பயமும் ஏற்படுகிறது. இரவில் படுக்கையில்சிறுநீர் கழிக்க ஆரம்பிப்பது, பகலில் தனியாக ஒரு அறையில் இருக்கக்கூட பயப்படுவது போன்ற அச்சங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.’’
தாத்தா, பாட்டி மரணம் போன்ற பிரிவுகளால் அவதியுறும் குழந்தைகளுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன?
‘‘குழந்தைகளின் தாத்தா, பாட்டி அல்லது அவருக்கு மிகவும் பிடித்த ஒரு நபரின் மரணத்தால் ஏற்படும் மன உளைச்சல் மட்டுமல்லாமல் ஒருவித பயத்துக்கு ஆளாகின்றனர். தனக்கோ அல்லது தன்னைச் சேர்ந்த வேறு நபருக்கு மரணம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சத் தொடங்குவார்கள். இதனால் வீட்டை விட்டு வெளியே வர விரும்பமாட்டார்கள். பள்ளிக்குச் செல்ல கூட விரும்ப மாட்டார்கள்.’’
இவற்றிலிருந்து குழந்தைகளை வெளியே கொண்டுவருவது எப்படி?
‘‘இவ்வாறு அச்சத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் பேசி புரிய வைக்க முயற்சிக்கலாம். குழந்தைகளின் வயதுக்கேற்ப அவர்களிடம் பேசிப் புரிய வைக்க முடியும். 9, 10 வயதுக் குழந்தைகள் என்றால் இது இயற்கை, யாருக்கு வேண்டுமென்றாலும் நிகழலாம், பிறப்பு மற்றும் இறப்பு என்பது பொதுவான ஒன்று என்று புரிய வைக்கலாம். 7, 8 வயதுக்குழந்தைகளுக்கு புரியவைப்பது கொஞ்சம் சிரமம். ஆனால், குழந்தைகள் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் இந்த மன உளைச்சலிலிருந்து வெளியே வரத் தொடங்கிவிடுவர். அப்படி நிகழாத பட்சத்தில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது நல்லது.
எதிர்பாராத விதமாக சில குழந்தைகளின் நெருங்கிய உறவினர் அல்லாமல் அவர்களின் பெற்றோர்களே மரணிக்க நேரும்போது அவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிவிடுவார்கள். இதிலிருந்து வெளியே வர முடியாமல் அவதிப்படுவார்கள். அதை அவர்களால் ஜீரணிக்க முடியாது. சிலர் வேறுவிதமாக இதை தனக்கான குடும்ப பொறுப்பாக எண்ணி, வீட்டில் உள்ள சகோதர சகோதரிகளிலேயே தாம்தான் பெரியவர், தாம்தான் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் எனும் உத்வேகத்துடன் வாழ்க்கையில் முன்னேறத் தூண்டுதலாக மாறவும் வாய்ப்புள்ளது.
இதுபோன்று எதிர்பாராமல் ஏற்படும் அதிர்ச்சியிலிருந்து மீள அவர்களுக்கு ஆறு மாத காலம் தேவைப்படும். பிரிவால் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காலம்தான் மருந்தாகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர்களின் மனநிலை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.’’
Average Rating