அழகே… என் ஆரோக்கியமே…!! (மருத்துவம்)
‘ஹெல்த் அண்ட் பியூட்டி’ என்பதைப் பலரும் பெண்கள் தொடர்பான விஷயமாகவே பார்க்கிறார்கள். அழகு ப்ளஸ் ஆரோக்கியம் என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமான விஷயம் இல்லை. குழந்தைகள், ஆண்கள், முதியவர்கள் எல்லோருக்குமே சொந்தமான, பொதுவான விஷயம்தான் ஹெல்த் அண்ட் பியூட்டி. அதனால், இந்த தொடரில் பாரபட்சமின்றி அனைத்து வயதினர் மற்றும் அனைத்து தரப்பினரின் நலன் காக்கும் விஷயங்களையும் அலசப் போகிறோம்.
குழந்தைப்பருவம், வளர்நிலை பருவம்(Adolescent), வளர்ச்சியடைந்த மற்றும் வயோதிக பருவம் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொண்டால்தான் சருமம் சார்ந்த பிரச்னைகளையும் நம்மால் சரியாகப் புரிந்துகொண்டு பராமரிக்க முடியும். அதன் அடிப்படையில், குழந்தைகளின் சருமத்தின் இயல்புகள் என்ன என்பதிலிருந்து தொடங்குவோம்…
தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் சிசுவானது, சுற்றிலும் உள்ள திரவத்தில்தான் வளர்கிறது. அந்த திரவத்தின் பெயர் அம்னியாட்டிக் ஃப்ளூயிட்(Amniotic fluid.) நம்முடைய கைகளை சிறிது நேரம் தண்ணீரில் வைத்துக் கொண்டிருந்தாலே, அதன் இயல்புத் தன்மை மாறி, ஊறியதுபோல் இருப்பதை கவனித்திருப்போம். ஆனால், சிசு தன் உடல் முழுவதுமே திரவத்தில் மூழ்கி இருந்தால்கூட அதன் தோல் ஊறி, சுருங்காமல் இருப்பதற்கு, ஈரப்பதத்தை தவிர்க்கும்(Hydrophobic) வெர்னிக்ஸ் கேஸியோஸா(Vernix cascosa) என்ற எண்ணெய் போன்ற பொருளால் பாதுகாக்கப்பட்டிருக்கும். இது, சிசுவின் சருமம் மெலிவடைவதைத் தடுக்கிறது.
நம் சருமத்துக்கு இயற்கையாகவே ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் ஆற்றல் உள்ளது. மேலும் நீரை புறந்தள்ளும் அதன் தன்மையால் நம் உடலில் உள்ள நீர், தாது உப்புகள், எலக்ட்ரோலைட்ஸ் அதிகமாக வெளியேறு வதையும் தடுக்கிறது. பிறந்த குழந்தையின் சருமமானது ஒரு வயதுக்குப் பின்னரே பெரியவர்களின் சருமத்தைப் போல வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இயல்பில் நம் சருமத்தில் அமில கவசம்(Acid mantle) ஒன்று இருக்கிறது. கிருமிகள், வேதிப்பொருட்கள் மற்றும் இயந்திர அழுத்தம் போன்றவற்றால் சருமம் பாதிக்கப்படுவதிலிருந்து இந்த அமில கவசம்தான் பாதுகாக்கிறது. இதனால்தான் யாராவது அழுத்திப்பிடிக்கும்போது அல்லது பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்யும்போது ஏற்படும் அழுத்தங்களினால் தோல் பாதிப்படைவதில்லை. நம்முடைய சருமத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள எண்ணெயின் பெயர் சீபம். செமீபசியஸ் சுரப்பி (Sesameus gland) இதனை சுரக்கும். பிறந்த சில வாரங்களிலிருந்து சில மாதங்கள் வரை தாய்ப்பாலில் சுரக்கும் சில ஹார்மோன்களும் சேர்ந்து இந்த சீபத்தை அதிகமாக சுரக்க வைக்கலாம். அப்பொழுது குழந்தையின் முகத்தில் பரு தோன்றலாம்.
குறைமாதங்களில் பிறக்கும் குழந்தையின் சரும நலன்
குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம். இந்த குழந்தைகளுக்கு சருமத்தின் மீது தடவப்படும் பொருட்களை உள்ளே உறிஞ்சும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் விளம்பரங்களைப் பார்த்து கண்ட க்ரீம்களை குழந்தையின் மீது தடவக்கூடாது. குறை மாத குழந்தைகளுக்கு உடலின் வளர்ச்சியைவிட சருமத்தின் வளர்ச்சி குறைவாக இருப்பதால், எதை தடவினாலும் உள்ளே சென்று பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறைமாத குழந்தைகளின் உடலினுள் இருக்கும் நீர், நீராவியாக மாறி சருமத்தின் வழியாகத்தான் அதிகமாக வெளியேறும்.
இவர்களுக்கு பிறந்து 2 வாரம் வரை வேர்க்காது. நீராவியாக வெளியேறும் நீர் மற்றும் உடலின் தட்ப வெப்ப நிலையை சரிவர பராமரிக்காத மென்மையான சருமம் போன்ற காரணங்களால் எளிதில் தாது உப்புக்களை இழக்க வைக்கும். உடலின் சூட்டை குறைத்து ஹைப்போ தெர்மியாவை(Hypothermia) உண்டாக்கும். இதுவும் குழந்தைக்கு ஆபத்து. அதனால் மிகவும் குளிர்ச்சியான இடத்திலோ, மிகவும் சூடான இடத்திலோ குழந்தையை வைக்கக் கூடாது. எடை குறைவான குழந்தையை தாய் தன் உடம்போடு அணைத்து கங்காரு போல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் அக்குழந்தை உடலின் தட்பவெப்பநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். குறைமாத குழந்தையை முதல் சில வாரங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பாட்டினாலே போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஊசி போடும் முன் தடவப்படும் மருந்துகளில் ஆல்கஹாலோ, அயோடினோ அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு ப்ளாஸ்டர் உபயோகித்தால் மிகவும் மெலிதான வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதை எடுக்கும் போதுகூட மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும். கவனமற்று உபயோகித்தால் சருமம் வறண்டு போய் உரிந்து விடலாம்.
அதேபோல் குழந்தையை குளிக்க வைக்கும்போதும் சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். குழந்தை பிறந்தவுடன் சிறிது தண்ணீரில் துடைத்து விட்டு, 6 மணி நேரம் கழித்து குளிக்க வைப்பது நல்லது. குறைமாத குழந்தைகளின் தொப்புள் கொடி காய்ந்து விழுந்த பிறகு தினமும் குளிக்க வைப்பது நல்லது. குளிப்பாட்டும்போது, நீரின் சூடானது, குழந்தை உடம்பின் சூட்டோடு ஒத்து இருக்க வேண்டும். மிதமான திரவ வடிவிலான க்ளென்சர் அல்லது ஸின்டெட்ஸ் சோப் போன்ற தோலை எரிச்சல் படுத்தாத பொருட்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். சிலர் ஸ்பாஞ்ச் போன்றவைகளை உபயோகப்படுத்தி துடைப்பார்கள். இது தவறு.
குழந்தையை துடைக்கும்போது உலர்ந்த மென்மையான பருத்தி துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். அழுந்த துடைக்கக் கூடாது. ஆடையை உடனே அணிவிக்க வேண்டும். நம் ஊரின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு தினமும் குளிப்பாட்ட வேண்டும். பருத்தி உடைகளையே குழந்தைகளுக்கு உடுத்த வேண்டும். குழந்தையைப் படுக்க வைக்க உபயோகப்படுத்தும் துணியும் பருத்தியாக இருக்க வேண்டும். குழந்தையை குளிப்பாட்டியவுடன் வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் பவுடரை கொட்டி பூசுவார்கள். இது முற்றிலும் தவறானது. குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால் அதுவே குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடக்கூடும்.
Average Rating