உணர்ச்சிகளை தூண்டுபவையா உள்ளாடைகள்? (மருத்துவம்)
‘காயங்களுடன் கதறலுடன்
ஓடி ஒளியுமொரு பன்றியை
துரத்திக் கொத்தும்
பசியற்ற காக்கைகள்
உன் பார்வைகள்.’- கலாப்ரியா
லாவண்யா இளம்பெண்… சென்னையில் வசிப்பவர். என்னிடம் ஓர் ஆலோசனை வேண்டி வந்தார். அவருடைய கணவர் ஒரு ‘லாஞ்சரி’ (Lingerie) பிரியர். லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை. அதை வாங்கி வந்து லாவண்யாவை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை. ‘லாஞ்சரியில் என்னைப் பார்த்தால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது. பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்குப் பிடிக்கவில்லை. பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து, கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள். என் போன்ற குடும்பப் பெண்ணை அணியச் சொல்வது சரியா?’ என்றார் லாவண்யா. நியாயமான கேள்வி! உணர்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? அதைப் பிறகு பார்ப்போம்.
லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். பிரெஞ்சு மொழியில் ‘Linge’ என்றால் ‘துவைக்கக் கூடியது’ என்று பொருள். ‘Lin’ என்பதற்கு ‘லினைன்’ என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும் உண்டு. இவ்விரண்டு வார்த்தைகளின் கலவையாகத்தான் ‘லாஞ்சரி’ உருவானது. 20ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்று காரணங்களுக்காக பெண்கள் பயன்படுத்தினார்கள். உடலை அழகாகக் காட்டுவதற்கு… சுத்தமாக, பளிச்செனக் காட்டுவதற்கு… அடக்கமும் கண்ணியமும் கொண்டவர்களாக தெரிவதற்கு! 1960ம் ஆண்டு ‘ஃப்ரெடரிக்ஸ்’ என்ற நிறுவனம் லாஞ்சரியை வடிவமைத்தது. ஹாலிவுட் நடிகைகளின் கவர்ச்சிக் காட்சிகளுக்கு அதை வழங்கவும் செய்தது. நடிகைகள் அந்த உடையில் கவர்ச்சி + அழகுடன் தெரிந்ததால், அவற்றுக்கான மவுசு அப்போதிருந்து அதிகரிக்க ஆரம்பித்தது. அமெரிக்காவில், ‘மென்’ஸ் ஹெல்த்’ என்னும் மருத்துவ இதழ் ஒருமுறை ஓர் ஆய்வை ஆண்களிடம் நடத்தியது.
‘உங்களுடைய செக்ஸ் ஆர்வத்தை அதிகப்படுத்தும் பாலியல் கருவி எது?’ இந்தக் கேள்விக்கு 90 சதவிகிதம் ஆண்கள் சொன்ன பதில்… ‘லாஞ்சரி’. அமெரிக்காவில் பிரபலமடைந்த லாஞ்சரி, இப்போது இந்தியாவிலும் வலம் வரத் தொடங்கிவிட்டது. கவர்ச்சி யான உள்ளாடைகளில் மனைவியைப் பார்ப்பதை பல கணவர்கள் விரும்பத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இதனால் ஒரு ஃபேன்டஸியும் செக்ஸுக்கான அகத்தூண்டலும் கிடைக்கிறது. பொதுவாக ஆணுக்கு, அழகான பெண்ணை பார்த்தவுடனேயே பாலியல் தூண்டுதல் கிடைத்து விடுகிறது. பெண்ணுக்கு அப்படியல்ல… மனம் ஓர் ஆணை விரும்பினால்தான் செக்ஸுக்கான அகத்தூண்டுதல் பெண்ணுக்குக் கிடைக்கும். ஒரே வித உடைகளில் மனைவியைப் பார்க்கும் ஆண்களுக்கு காலப்போக்கில் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டுவிடும். அந்த சலிப்பை விரட்ட, கவர லாஞ்சரி பெண்களுக்கு உதவும்.
இது நவீன யுகம்… பெண்கள், ஆண்களுக்கு இணையாக எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்… பல துறைகளில் பிரகாசிக்கிறார்கள்… எல்லாவற்றையும் அறிந்தும் வைத்திருக்கிறார்கள். மனைவி படுக்கையறைக்குள் லாஞ்சரி அணிந்து வருகிறாரா? கணவனிடம் உறவுக்கு ‘ஓ.கே.’ சொல்கிறார் என்று அர்த்தம். பெண்கள் லாஞ்சரியை தாராளமாக அணியலாம். அதே நேரத்தில், வெறும் உள்ளாடை சார்ந்து மட்டும் கவர்ச்சி அமையாது என்பதையும் நினைவில் கொள்ளவும். பெண்களின் உடலமைப்பில்தான் கவர்ச்சி இருக்கிறது. பேக்கிங் அழகாக இருந்தால் போதுமா? உள்ளே இருக்கும் பொருள் தரமாக இருக்க வேண்டாமா? எனவே, பெண்கள் கணவனைக் கவரும் விதமாக உடலழகைப் பராமரிப்பது அவசியம். ஆண்கள் கவர்ச்சிகரமான உள்ளாடைகளை மனைவியை அணிய வைத்து, ரசிப்பதில் தவறில்லை. அதையும் மனைவியின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும்.
‘கவர்ச்சியான உள்ளாடைகளோடு பார்ப்பதால் மட்டுமே மனைவி மீது செக்ஸ் ஈர்ப்பு வருகிறது’ என்று ஒருவர் சொல்கிறாரா? அவருக்கு மனநலம் சார்ந்த பிரச்னை இருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Average Rating