குழந்தைகளிடம் தனி மொழியில் பேசுவது அவசியமா?!! (மருத்துவம்)
குழந்தைகளிடம் பெற்றோரும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் தனிமொழியில் உரையாடுவதை கவனித்திருப்போம். சாப்பிட வேண்டுமா என்பதைக் கூட ‘மம்மு வேணுமா’ என்று கேட்பது ஒரு பிரபல உதாரணம். இப்படி விநோதமான மொழியில் குழந்தைகளிடம் பேசுவது அவசியம்தானா? மருத்துவர்,பேச்சுமொழி நிபுணர் சரண்யா கிருஷ்ணனிடம் கேட்டோம்…
‘‘தாயின் கருப்பையில் இருக்கும்போது குழந்தைக்குக் கேட்கும் திறன், 6 மாதத்தில் தொடங்குகிறது. குழந்தை பிறந்த பிறகு தேவைகளை கேட்க, அழுகை போன்ற முறைகளில் ஒலியெழுப்பி தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறது.ஒரு வயதுக்குள் சத்தங்களை கோர்த்து, வார்த்தைகளை உருவாக்குகிறது. குழந்தையோடு பழகுகிற உறவினரோடு உறவுமுறை வைத்து சொல்லி பழக்கும்போது அந்த வார்த்தையை பேசத் தொடங்குகிறது.
இங்கிருந்து குழந்தையின் மொழித்திறன் வளர்ச்சியடைகிறது. இதையே முதல் நிலை என்கிறோம். மூன்றரை வயதுக்கு மேல் இயல்பான முறையில் பேசத் தொடங்குவது இரண்டாம் நிலை.
அதுபோல குழந்தைகள் பேசுகிற மொழிக்கும் அதன் மரபுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பிறந்த குழந்தைக்கு அதன் சூழலில் என்ன மொழி பேசுகிறார்களோ அந்த மொழியை பேசும். அதுவே, தன் தாய்மொழி பேசும்போது எளிதில் அந்த மொழியை உள்வாங்கி கொள்ளும். ஏனெனில், மரபு ரீதியாக அந்த மொழி அதனுள் இருப்பது ஒரு காரணம்.
ஒரு வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளிடம் அதிகம் பேச வேண்டும். இவர்களிடம் டிவி, ஐபேட், செல்போன், கணினி போன்றவற்றை அறிமுகப்படுத்தாமல் இருக்க வேண்டும். இல்லையேல் அவர்களின் மொழித்திறனில் மாறுபாடு ஏற்படும். குழந்தைகளிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 5 வயதுவரை அவர்களின் மொழித்திறனில் கவனம் செலுத்துவது அவசியம்.’’
குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும்?
‘‘குழந்தைகளிடம் மூன்றரை வயது வரை மழலை பேச்சு இருக்கும். அந்த மூன்றரை வயது வரை அவர்களின் மழலை மொழியில்தான் பெரியவர்களும் பேச வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் மூளை குழப்பம் இல்லாமல் புரிந்துகொள்ளும். அதற்கு மாறாக பெரியவர்களின் மொழியைத் திணிக்கக் கூடாது.
அதேபோல் குழந்தையின் வலது கை பழக்கம் அல்லது இடது கை பழக்கத்தை அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். ஏனெனில், வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இடது மூளை பகுதி திறனாக இருக்கும், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது பகுதி மூளை திறனாக இருக்கும். இதை கட்டாயப்படுத்தி மாற்றும்போது அதன் மொழித்திறனில் குளறுபடி நிகழும். உதாரணத்துக்கு திக்குவாய் உண்டாகக் கூடும்.
இதேபோல் மூன்றரை வயது கடக்காமல் பிளே ஸ்கூல், யு.கே.ஜி, பிரிகேஜி சேர்ப்பது குழந்தைகளின் சீரான மொழித்திறனை குலைத்துவிடும். மூன்றரை வயது வரை அதன் பெற்றோர் உடன் இருந்து குழந்தையின் மழலை மொழியிலேயே பேசி மூன்றரை வயது கடந்தவுடன் பெரியவர்கள் பேசும், வழக்கமான மொழியில் அவர்களை பேசி பழக்கலாம்.
குழந்தைகளிடம் மழலை மொழியில் பேசும் முறைக்கு வரையறை இல்லை. குழந்தை என்ன தொனியில் பேசுகிறதோ அதே தொனியில் பேசி கொஞ்சலாம்.குழந்தைகளிடம் தொடர்ந்து பேசும்போது அவர்களின் பேசும் திறன் வளரும். அதோடு செயல்பாடுகளோடு கூடிய பேச்சு கொடுப்பது நல்லது. ஒரு பொருளை எடுக்கச்சொல்வது அந்த பொருளின் நிறம் சொல்வது அந்த பொருளின் தன்மை சொல்வது போன்றவையாகும்.’’
குழந்தையின் பேசும் திறன் அதிகரிக்க…
‘‘குழந்தையிடம் நிறைய பேசுங்கள், புத்தகங்களை படித்துக்காட்டுங்கள், பாடுங்கள், பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பி Sound games விளையாடி சத்தம் எழுப்புத்திறனை மேம்படுத்துங்கள். விலங்குகள் மற்றும் பறவைகள் எவ்வாறு சத்தம் எழுப்புகின்றன என்பதை குழந்தைகளை அறியச்செய்யுங்கள்’’.
Average Rating