கண்ணீர் கதைகளும் காரணங்களும்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 14 Second

குழந்தை வரம் வேண்டிக் காத்திருக்கிற ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் நெருப்பில் இருப்பதைப் போன்று தகிப்பானவை! Coming Soon என்கிற எதிர்பார்ப்பில் வாழ்க்கையே சூன்யமாகிப் போனவர்கள் எத்தனையோ பேர். குழந்தையில்லாத வாழ்க்கை என்பதொன்றும் குறைபாடுள்ள வாழ்க்கை இல்லை. ஆனாலும், அதை நிறைவடையாத வாழ்க்கையாகவே இந்தச் சமூகம் பார்க்கிறது. அந்த அவலத்தைத்தான் தமக்கு சாதகமாக்கிக் கொண்டன மருத்துவத் துறையும், மருந்துத் தயாரிப்பில் கல்லா கட்டிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும்…

கடந்த தலைமுறைகளில் இல்லாத அளவுக்கு இந்தத் தலைமுறையில் குழந்தையின்மை என்கிற பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்க என்னதான் காரணம்? கடந்த 10 வருடங்களில் குழந்தையின்மைக்கான செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தெருவுக்குத் தெரு பெருகியதன் காரணம்தான் என்ன? குழந்தையின்மை சிகிச்சைகளின் ஆரம்பக்கட்டம் எப்படி இருக்கும்? மனம் திறந்து பேசுகிறார் மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் எஸ்.செல்வி.

திருமணமாகி ஓரிரண்டு ஆண்டுகளில் கருத்தரிக்கவில்லை என்றால் தம்பதியர் மருத்துவ ஆலோசனைகளை நாடிச் செல்கின்றனர். அங்கே அவர்களுக்குரத்தப் பரிசோதனை, கர்ப்பப்பை ஸ்கேன் பரிசோதனை, கருக்குழாய் அடைப்புப் பரிசோதனை, விந்துப் பரிசோதனை எல்லாம் செய்யப்படுகின்றன. குழந்தையின்மைக்கு மனைவியிடமோ, கணவரிடமோ அல்லது இருவரிடமுமோ குறைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதெல்லாம் மருந்து, மாத்திரையிலேயே சரியாயிடக்கூடிய பிரச்னைதானே டாக்டர்…’’ என அப்பாவியாக, ஏக்கத்துடன் கேட்பார்கள் தம்பதியர்.மருத்துவர்களும் மனைவிக்கு ரத்த சத்து மாத்திரை, ஃபோலிக் அமில மாத்திரை, கால்சியம் மாத்திரை, வைட்டமின் மாத்திரை, கருமுட்டை வளர்ச்சி மாத்திரை, ஹார்மோன் ஊசிகள்…கணவனுக்கு உயிரணுக்கள் உற்பத்திக்கு சத்து மாத்திரைகள், வீரியத்தை அதிகரிக்கும் மாத்திரைகள்…

தவிர, இன்னும் மருந்துச் சந்தையில் குழந்தையில்லாத தம்பதியரைக் குறிவைத்துப் புதிது புதிதாக வந்துகொண்டிருக்கிற மாத்திரைகள் என எழுதிக் கொடுக்கிறார். மருந்து, மாத்திரைகளை விழுங்கும் போதே கருத்தரித்துவிட்டது போன்ற நம்பிக்கை அவர்களைப் பற்றிக் கொள்கிறது. மருந்துகளுக்காக ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறார்கள்… நாள் தவறாமல், நேரம் தவறாமல் அந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள்.ஒவ்வொரு மாதமும் எப்படி சிகிச்சை நடைபெறுகிறது தெரியுமா?

மாதவிலக்கு வந்த இரண்டாம் நாள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மாத்திரைகளையும் ஊசிகளையும் வாங்கிக் கொண்டு, பிறகு 10ம் நாளில் இருந்து கருமுட்டை வளர்ச்சியைப் பார்க்க ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பிறகு கருமுட்டை உடைவதற்கு ஊசி போடப்படும். பிறகு கணவன்-மனைவி இயற்கையாக சேர்ந்திருக்கவோ அல்லது விந்துநீரை கர்ப்பப்பையில் செலுத்தும் IUI என சொல்லப்படும் சிகிச்சை முறையையோ மருத்துவர் பரிந்துரைப்பார்.

இத்துடன் ஒரு மாத சிகிச்சை முடிந்துவிடும். ஆனால், அதற்குப் பின் 15 நாட்கள் அதாவது, அடுத்த மாதவிலக்கு வரும் நாள் வரை மாதவிலக்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில் இருக்கும் அந்தப் பெண்ணின் மனநிலை பரிதாபத்துக்கு உரியது. அவள் பயந்த மாதிரியே அந்த நாளும் வந்துவிடும். அதாவது, மாதவிலக்கு வந்துவிடும். மீண்டும் 2வது நாள் மருத்துவமனை விசிட்… மறுபடியும் அதே ஆலோசனை…. மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள்… அதே காத்திருப்பு… அதே பயத்துடன்! மீண்டும் மாதவிலக்கு!

இதென்ன கொடுமை… இப்படியே இன்னும் எத்தனை மாதங்கள்… எத்தனை வருடங்கள்… முடிவே கிடையாதா? நம்பிக்கை சற்றே தளர… கொஞ்ச நாட்கள் சிகிச்சைகளை நிறுத்தி வைப்போம் என்கிற முடிவுக்கு வருவார்கள். பிறகு யாரோ புதிதாக ஒரு மருத்துவரைப் பற்றிச் சொல்ல, அடுத்த பயணம் அதை நோக்கி, புதிய நம்பிக்கையுடன்! அந்த மருத்துவர் அதே பரிசோதனைகளையும் வழக்கமான மருந்துகளுடன் புதிதாக இன்னும் சிலதையும் சேர்த்துக் கொடுக்க, அதே சக்கரத்தில் மீண்டும் சுழலத் தொடங்குவார்கள். இந்த முறை நிச்சயம் நல்லது நடக்கும் என்கிற பெரிய நம்பிக்கையுடன்!

குழந்தையின்மைக்கான சிகிச்சைகளில் சிலருக்கு வெற்றியும் பலருக்குத் தோல்வியும் கிடைக்கிறது. எப்படியாவது குழந்தை கிடைத்துவிடாதா எனக் கடைசி முயற்சியாக டெஸ்ட் டியூப் பேபி எனப்படும் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைகளுக்கும் தயாராகிறார்கள். லட்சங்களை வாரி இறைத்தாலும் ஏற்கனவே சொன்னது போல இதிலும் சிலருக்கே வெற்றி. பலருக்கு தோல்விதான்.

எங்களுக்கு மட்டும் ஏன் குழந்தை இல்லை’ என்கிற கவலையிலும் ஏக்கத்திலும் தவிக்கிறார்கள். குழந்தையில்லை என்ற காரணத்துக்காக ஏற்படுகிற மணமுறிவுகளும், பிரிவுகளும் எக்கச்சக்கம். கல்வியறிவும் இன்றி, சுயகால்களில் நிற்கத் தெரியாத, பெற்றோர், உடன்பிறந்தார் ஆதரவில்லாத பல பெண்களின் நிலை இன்னும் மோசம். ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளக்கூட தகுதியில்லாதவன் என்கிற கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகிற ஆண்களின் நிலை அதைவிடப் பரிதாபம்.

குழந்தையின்மைக்கான பரிசோதனைகளை மீண்டும் மீண்டும் செய்வதாலும் ரசாயன மருந்துகளையும் நாட்டு மருந்துகளையும் விழுங்குவதாலும் எத்தனை பேருக்கு குழந்தைப்பேறு கிடைத்துவிடுகிறது எனத் தெரியுமா? அதிகபட்சம் 40 சதவிகிதம். அதாவது, 100 பேர் சிகிச்சை மேற்கொண்டால் அதில் 40 பேருக்கே கருத்தரிக்கும். அப்படியானால் மீதி 60 சதவிகிதத்தினரின் நிலை? வாழ்நாள் முழுக்க குழந்தைக்கான தேடலில் இளமையை, சொத்துகளை எல்லாவற்றையும் இழந்து நிற்கிற அவர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்?’’

உலகளவில் 15 சதவிகித தம்பதியர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வளர்ந்து வரும் நாடுகளில் நான்கில் ஒரு தம்பதியருக்கு இந்தப் பிரச்னை இருப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார நிறுவனத் தகவல். குழந்தையின்மைக்கான காரணங்களில் 1/3 அளவு ஆண்களிடமும், 1/3 அளவு பெண்களிடமும் என சம அளவில் பிரச்னைகள் இருப்பதாகச் சொல்கின்றன புள்ளி விவரங்கள். மீதி 1/3 அளவுப் பிரச்னைகள் இருவரிடமும் சேர்ந்து காணப்படுபவை. ஆனாலும், உலகில் 190 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, குழந்தைஇன்மைக்கான சுமையையும் பழியையும் சுமப்பவர்கள் பெண்களே என்பதும் வருத்தத்துக்குரிய செய்தி.

குழந்தையில்லாத ஆப்பிரிக்க பெண்களின் நிலை ரொம்பவும் பரிதாபத்துக்குரியதாகவே இருக்கிறது. அவர்களது கலாசாரத்தைப் பொறுத்தவரை குழந்தை பெற்ற ெபண்களே சமூகத்தில் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். குழந்தையில்லாத பெண்களை வீட்டில் நடக்கும் நல்ல காரியங்களில் மட்டுமல்ல, கெட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்க அவர்களது கலாசாரம் அனுமதிப்பதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஆண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ உண்டா? (அவ்வப்போது கிளாமர்)