தம்பதியரிடையே நடக்கும் பொதுவான போராட்டங்கள்!! (மகளிர் பக்கம்)
1. யாரை யார் அடக்கி ஆள்வது என்கிற கேள்வி.
இந்தியாவை பொறுத்தவரை இந்த அடக்குமுறை என்பது பெரும்பாலும் கணவர்கள் கைகளில்தான் இருக்கிறது. அடுத்தவரை அடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலை கொண்டவரின் வாழ்க்கையில் சமத்துவம் இருப்பதில்லை என்பதால் சந்தோஷமும் இருப்பதில்லை. அடக்கி ஆளப்படுகிறவரின் வலி ஒரு கட்டத்தில் அதிகமாகி, விவாகரத்து வரை போவதுண்டு. இதை எப்படி சரி செய்வது? கட்டுப்படுத்தாமல் இருப்பதுதான் ஒரே தீர்வு. அப்படி இருந்தாலே எல்லாம் தானாக நல்லபடியாக நடக்கும்.
2. பழிக்குப் பழி
துணையில் ஒருவர் இன்னொருவரைத் தாக்கினால், தான் அவரைத் திருப்பித் தாக்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பது. தான் யார் எனக் காட்டும் உள்ளுணர்வுடன் நாட்களை நகர்த்துவது. இந்த இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும்.
3. மிரட்டல்
தம்பதியர் இருவருக்கும் சில விஷயங்களில் உடன்பாடில்லாத ஒருமித்த கருத்துகள் இல்லாத பட்சத்தில் அவற்றைப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலானவர்கள் அப்படிச் செய்வதில்லை. உதாரணத்துக்கு குழந்தை வளர்ப்பிலேயே இருவருக்கும் இருவித அணுகுமுறை இருக்கும். ஒருவர் குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் நடத்துபவராகவும் இன்னொருவர் சுதந்திரமாக வளர்ப்பவராகவும் இருக்கலாம். இது அவர்களுக்கு இடையில் மிகப்பெரிய சண்டையை உருவாக்கும். வாழ்க்கையை தவறான பாதை நோக்கிக் கொண்டு செல்வதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ள வழிவகுக்கும்.
4. பயம்
திருமண உறவுகளில் ஏராளமான பயங்கள் இருக்கலாம். இருவரில் ஒருவர் வேண்டுமென்றே அதிகம் செலவு செய்வது, துணையின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் தன் சுயம் போய்விடுமோ என நினைப்பது என அந்த பயம் பல வகைகளில் வெளிப்படலாம். ஆரோக்கியமான திருமண உறவில் பரஸ்பரம் மரியாதை இருக்குமே தவிர, பயம் இருக்காது. நிதி, நிர்வாகம் உள்பட சகலத்திலும் ஒருவரின் கை ஓங்கி இருந்தால்தான் இந்த பயம் தலைதூக்கும்.
5. மதிப்பீடு
திருமண உறவில் இருவரும் சமம் என்பதை மறந்து எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா இடங்களிலும் தன்னையே முன்னிலைப்படுத்த நினைப்பதும், துணையின் பங்கீட்டை குறைத்து மதிப்பிடுவதும், தான் மட்டுமே அறிவானவர், அன்பானவர், பண்பானவர், அழகானவர் எனக் காட்ட முனைவதும்கூட இருவருக்கும் இடையிலான ஒரு போராட்டமே.
6. தனிமை
மேலே சொன்ன விஷயங்கள் இருவருக்குள்ளும் இருக்கிற பட்சத்தில் அவை குறித்த விவாதங்களிலும் சண்டைகளிலும் அதன் தொடர்ச்சியாக இருவரின் நெருக்கமும் பெருமளவில் குறையும். ஒருவித தனிமை உணர்வும் தலைதூக்கும். இந்த சிக்கலான பிரச்னையிலிருந்து மீள சில வழிகளை முயற்சி செய்யலாம். நம்பிக்கையை மறுபடி கட்டமைப்பது…பிரச்னைக்கு முன்பு இருவரும் எப்படி இருந்தீர்களோ… போகட்டும். இப்படியொரு மாபெரும் பிரச்னையை சந்தித்து, அதிலிருந்து மீள நினைப்பவர்கள், அதன் பிறகாவது ஒருவருக்கொருவர் வாழ்க்கையை ரகசியங்கள் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
என்னதான் பிரச்னையைச் சரிசெய்ய நினைத்தாலும், சரி செய்துவிட்டுப் புது வாழ்க்கையைத் தொடங்க முயற்சித்தாலும், தவறு செய்த துணையின் ஒவ்வொரு நடவடிக்கையும் கொஞ்ச நாளைக்கு சந்தேகத்தையே தரும். அதைத் தவிர்க்க முடியாது என்றாலும் மிக மிக ஜாக்கிரதையாகக் கையாளவேண்டும். தவறுக்கு மன்னிப்பு கேட்கிற பழக்கம் நம்மூர் கணவன் மனைவியிடம் ரொம்பவே குறைவு. மன்னிப்பு கேட்பதை மிகப் பெரிய மானக்கேடாக நினைப்பதால்தான் சின்ன பிரச்னைகூட பிரிவு வரை இட்டுச் செல்கிறது. தகாத உறவுக்குள் சிக்கி மீண்ட துணையானவர், தன் இணையிடம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டியது இந்த விஷயத்தில் மிக மிக முக்கியம். அப்படிக் கேட்கப்படுகிற மன்னிப்பு வெறும் வார்த்தை அளவில் வெளிப்படக் கூடாது. மனதின் ஆழத்திலிருந்து கேட்கப்பட வேண்டும்.
துணையைத் தாண்டிய இன்னொருவருடன் உறவு கொள்வது என்பதொன்றும் கிரிமினல் குற்றமில்லைதான். ஆனாலும், அத்தகைய உறவைத் தகாதது என்றுதான் எல்லா மதங்களுமே போதிக்கின்றன. கடவுளுக்கு எதிரான செயலாகச் சொல்கின்றன. கணவன் அல்லது மனைவியின் நம்பிக்கையை வேரோடு கிள்ளிப் போடுகிற வகையில் அமைகிற இந்த உறவு பாதிக்கப்பட்டவரின் பார்வையில் படுபாதகமான செயல் என்பதில் சந்தேகமே இல்லை. பிரச்னையைப் பேசி முடித்து, முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது…
அத்துடன் எல்லாம் சரியானது என சகஜமாக வேண்டாம். அப்படியொரு உறவில் சிக்கியதற்காகவும், துணையை ஏமாற்றி யதற்காகவும் தான் எந்தளவுக்கு வருத்தப்படுகிறோம், வேதனைப்படுகிறோம் என்பதை துணையிடம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். திருமணம் தாண்டிய அந்த உறவு இவர்களது
தாம்பத்திய வாழ்க்கையை எப்படியெல்லாம் சீரழித்தது என்பதையும் இருவரும் பேசிப் புரிந்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட துணையின் வலியை தானும் அப்படியே உணர்ந்த கதையை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளலாம். தான் தகாத உறவில் சிக்கி இருந்தவரை, கணவன் அல்லது மனைவியின் மன
நிலையில் ஏற்பட்ட உணர்ச்சிப் போராட்டங்களை தானும் அனுபவித்ததை சொல்லி மன்னிப்பு கேட்கலாம்.
இனிவரும் காலங்களில் துணையுடன் செலவிடுகிற நேரத்தை அதிகப்படுத்த வேண்டியதும் அவசியம். வெறுமனே உடன் இருப்பதைவிடவும், துணையின் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பது, கட்டி அணைப்பது, இருவரும் சேர்ந்து உட்கார்ந்து பேசுவது, உணவு சாப்பிடுவது என சின்னச் சின்ன விஷயங்களில்கூட அன்பைக் காட்டலாம். அதே நேரத்தில் துணைக்கு தனிமை தேவை எனத் தெரிந்தால் அதை அனுமதிக்கவும் தயங்க வேண்டாம். தான் இப்படியொரு தகாத உறவில் சிக்கித் தவிக்க தன் துணைதான் காரணம் என்றோ, வேறு விஷயங்களின் மீதோ பழிபோடுவதைத் தவிர்க்க வேண்டும். நடந்த எல்லாவற்றுக்கும் தானே காரணம் என பிரச்னைக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தன்னால் மனம் வருந்திய துணைக்கு அன்பளிப்புகள் கொடுத்தும் அன்பான வார்த்தைகள் சொல்லியும் மீண்டும் மீண்டும் ஆறுதல் தேடலாம், தவறில்லை.
தன் செயலை நியாயப்படுத்த தனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என மற்றவரது தகாத உறவுகளைப் பற்றிப் பேசி, ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் தவறு. அது தம்பதியருக்கிடையிலான பிரச்னையை இன்னும் பெரிதாக்கும். இனி இப்படி எக்காலத்திலும் நடக்காது என வாக்குறுதி அளிக்கலாம். தேவைப்பட்டால் மேரிட்டல் தெரபிஸ்ட் உதவியை நாடி, ஆலோசனை பெற்றும், இதிலிருந்து மீண்டு வரலாம். சமுதாயத்தின் மிகப் பெரிய அந்தஸ்தில், பொறுப்பில் இருப்பவர்களுக்கு இப்படி திருமணம் தாண்டிய உறவு உருவாகும்போது, அது யதேச்சையாக நடந்ததாகவும், அதன் பின்னணியில் காதல், அன்பு என எதுவும் இல்லை என்றும் சொல்வார்கள். அப்படி சொல்லிக் கொள்வது அவர்கள் தப்பிப்பதற்கான வழி ஆகாது.
தம்பதியரில் ஒருவர் வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு, குடும்பத்துக்கான வேலைகளில் மூழ்கி இருந்ததன் காரணத்தால் துணையுடன் தரமான நேரத்தைச் செலவிட முடியாமல் போயிருக்கலாம். உணர்வுரீதியான பேச்சுவார்த்தைக்குக் கூட இருவருக்கும் நேரம் இருந்திருக்காது. இருவரில் ஒருவருக்கு உண்டான இந்த தகாத உறவுப் பிரச்னைக்குப் பிறகாவது இருவருக்குமான நேரத்தைப் பற்றி யோசித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அடுத்து வருகிற நாட்களில் இருவருக்குமான நெருக்கத் தருணங்களைத் தவற விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காலம் என்பது எல்லாக் காயங்களையும் ஆற்றும் என்பது உண்மைதான். துணையின் கடந்த காலத் தவறையும் காலம் சரி செய்து விடும்.
ஆனாலும் அதே தவறு மறுபடி நடக்காமல் பார்த்துக் கொள்வது தவறு செய்த துணையின் கைகளில்தான் உள்ளது. உதாரணத்துக்கு வேலையிடத்தில் ஒருவருடன் அப்படியொரு உறவு உருவாகி, முறிந்திருந்தால், கூடியவரையில் வேறு வேலைக்கு நகர்வதோ, சம்பந்தப்பட்ட நபரின் அருகாமையைத் தவிர்ப்பதோதான் சிறந்தது. உறவு கொண்டு பிரிந்த அதே நபரின் அருகாமை மீண்டும் அப்படியொரு உறவைத் துளிர்க்கச் செய்யலாம், ஜாக்கிரதை. டி டே…. அதாவது, டிஸ்கவரி டே என்கிற தினத்தை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துணையின் தகாத உறவை நீங்கள் கண்டுபிடித்து உறுதி செய்த நாள்தான் டி டே. மன்னிப்பது வேறு… மறப்பது வேறு… என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். மன்னிப்பது என்பது மனம் சம்பந்தப்பட்டது. மறப்பது என்பது அறிவு சம்பந்தப்பட்டது. மன்னிப்பது சுலபம். மறப்பது சிரமம்.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை தவறு செய்த கணவனோ, மனைவியோ துணையிடம் மனம் வருந்தி, கவுரவம் பார்க்காமல், ஈகோவுக்கு இடம் கொடுக்காமல் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால்தான் பிரச்னை சுமுகமாக முடியும். மன்னிப்பே கேட்காமல், மறுபடி துணையுடனான உறவைத் தொடர நினைப்பது, துணையை கால் மிதியடி மாதிரி சகித்துக் கொள்ளச் செய்வதற்குச் சமமானது. அது சரி, மன்னிப்பு உபயோகமானதுதானா என்றால் நிச்சயம் உபயோகமானதுதான். ஏமாற்றியவருக்கும் சரி, ஏமாற்றப்பட்டவருக்கும் சரி அது உதவும். ஏமாற்றப்பட்டவரின் கோபம் குறைந்து, இயல்பான மனநிலைக்குத் திரும்ப அந்த மன்னிப்பு அவசியம். அதே போல பழுதடைந்த திருமண உறவை சீராக்கி, இயல்பு நிலைக்குக் கொண்டுவர, தவறு செய்த துணைக்கும் அந்த மன்னிப்பு அவசியமாகிறது.
பெரும்பாலான குடும்பங்களில் மனைவி வேலைக்குச் செல்பவராக இருந்தால் தவறு செய்த கணவரை மன்னித்து மறுபடி ஏற்பதென்பது கேள்விக்குறியாகவே இருப்பதைப் பார்க்கிறோம். அதுவே பொருளாதார ரீதியாக கணவரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ள மனைவிக்கு கணவரின் தவறை மன்னித்து ஏற்றுக் கொள்வதுதான் வாழ்வாதாரத்துக்கான வழியாக இருப்பதையும் பார்க்கிறோம். மன்னிப்பதும் மன்னிக்காமல் விடுவதும் அவரவர் மனநிலையை, தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது என்பதிலும் சந்தேகமில்லை. மன்னிப்பு கேட்பவரை மன்னிப்பதே மனித மாண்பு. மன்னிக்காமல் விடும்போது மனக்கசப்புகள் அதிகமாகி, வெறுப்புகள் கூடி, விரக்தியான மனநிலையே மிஞ்சும்.
Average Rating