என்ன செய்வது தோழி? (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 56 Second

நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது சக மாணவன் காதலித்தான், காதலித்தேன், காதலித்தோம். படிப்பு முடிந்து வேலைக்கு சேர்ந்த பிறகும் காதல் தொடர்ந்தது. அடிக்கடி சந்திப்போம். அப்போது நிறைய செல்ஃபி எடுப்போம். பக்கத்தில் நின்று மட்டுமல்ல முத்தம் கொடுத்து, கன்னம் உரசி, கட்டி அணைத்து என பலவிதங்களில் படங்கள் எடுத்துள்ளோம். இப்படி இருவர் செல்போன்களும் மாறிமாறி படங்கள் எடுக்கவும், பேசவும் மட்டுமே பயன்பட்டன. எல்லை மீறியதில்லை.

ஆனாலும் அவன் அடிக்கடி வற்புறுத்துவான். நான் தவிர்த்து வந்தேன். உடனே திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம். அவனை மிகவும் விரும்பினேன். அவன் தான் உலகம் என்று நம்பினேன். ஒருநாள் எதேச்சையாக அவனது செல்போனை எடுத்து பார்த்தபோது என்னைப் போன்றே பலருடன் நெருக்கமாக இருந்த செல்ஃபி படங்கள்….. அவனுக்கு நான் ‘மட்டுமல்ல’ என புரிந்த போது அதிர்ச்சியாக இருந்தது.அதனால் அவனை தவிர்க்க ஆரம்பித்தேன். காரணம் சொல்லவில்லை. ஆனால் அவன் அழுது அடம் பிடித்தான்.

நான் இல்லை என்றால் செத்து விடுவேன் என்றான். நான் கண்டு கொள்ளவில்லை. அடுத்த ஒரு மாதம் எந்த தொல்லையும் இல்லை. விட்டது பிரச்னை என நினைத்தேன். அவனுடன் எடுத்த படங்கள், அவன் கொடுத்த பரிசுப் பொருட்கள் என எல்லாவற்றையும் அழித்து விட்டேன். திடீரென ஒருநாள் அவனை கட்டியணைத்து முத்தம் தரும் போட்டோவை அனுப்பி வைத்தான். அவனை அழைத்து திட்டியபோது… ‘ இன்னும் நிறைய படங்கள் வெச்சிருக்கேன். யாருக்கு அனுப்பனும் சொல்லு’ என்று திமிறாக கேட்டான்.

அதன்பிறகு தினமும் ஒவ்வொரு படமாக அனுப்பிக் கொண்டிருக்கிறான். அவன் நோக்கம் புரிந்து விட்டது. வீட்டில் சொல்ல தைரியமில்லை. என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நான் தனியாக சென்று போலீசில் புகார் கொடுத்தாலும் வெளியில் தெரிந்து விடுமோ என்று பயமாக உள்ளது. இதை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை. நான் செய்த தவறால் நிம்மதியில்லாமல் தவிக்கிறேன். இதிலிருந்து மீள என்ன செய்வது தோழி?
– பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

தோழியின் பிரச்னை குறித்து சென்னை மாநகர காவல்துறை, மத்திய குற்றப் பிரிவு, துணை ஆணையர் எஸ்.ஆர்.செந்தில்குமார் ஐபிஎஸ் அவர்களிடம் கேட்டபோது, ‘‘பிரச்னை வந்த பிறகு அதனை சரி செய்யாமல் தள்ளிப்போடுவது பிரச்னையை அதிகரிக்கத்தான் செய்யும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், பெற்றோர்கள் எப்போதும் நமக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். அதே நேரத்தில் இப்படி புகார் கொடுக்க தயங்குபவர்கள் தவறான முடிவை எடுக்க நேரிடலாம்.

எனவே வீட்டில் தெரிந்தால் சங்கடம், வெளியில் தெரிந்தால் அசிங்கம் என பயப்படுகிறவர்கள் தனியாக வந்தும் சைபர் கிரைம் பிரிவில் புகார் தரலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் அந்தப் பிரிவில் பெண் இன்ஸ் பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் இருப்பதால் பெண்கள் தங்கள் பிரச்னைகளை தயக்கமின்றி சொல்லலாம். சென்னையை சேர்ந்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவை இரவு 8 மணி வரை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்.

புகார் கொடுத்ததும் முதல் நாளிலேயே 90 சதவீத பிரச்னை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நாளில் கூட பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். மறுநாள் வரவேண்டிய அவசியம் கூட இருக்காது. அந்த படங்களை நாங்கள் பார்ப்போமோ என்ற சந்தேகம் கூட வேண்டாம். அதேபோல் குற்றவாளிகளால் புகார் கொடுத்தவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மிரட்டல், அச்சுறுத்தல் இருந்தால் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையை தவிர மற்ற மாநகரங்களில் உள்ளவர்கள் அந்தந்த மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவிலும், மற்றவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் தெரிவிக்கலாம். எல்லோரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.

புதிதாக அறிமுகமானவர்கள், வெளி ஆட்களுடன் மட்டுமல்ல நண்பர்கள், உறவினர்களுடன் செல்ஃபி, படங்கள் எடுக்கும் போது கவனம் வேண்டும். தேவையில்லாத சூழ்நிலைகளில் விளையாட்டாகவோ, விருப்பத்துடனோ இப்படி எடுத்த படங்கள் பலரின் வாழ்வை சீர்குலைத்துள்ளன. நெருக்கமான சூழ்நிலைகளில் படம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது எப்போதும் நல்லது. அன்பு உள்ளத்தில் நிலையாக இருந்தால் போதும். அதை ஊருக்கு படம் பிடித்து காட்ட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு உதவிட காவல்துறை எப்போதும் தயாராக உள்ளது.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மழலையரை முடக்கும் மூளைக்காய்ச்சல்!! (மருத்துவம்)
Next post டீன் ஏஜ் குழந்தைகளைக் கையாள்வது எப்படி?! (மருத்துவம்)