மன அழுத்தத்தினால் வரும் இதய நோய்!! (மருத்துவம்)
மன அழுத்தத்துக்கும் இதயநோய்க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் மன அழுத்தம் அதிகரிக்கும்போது அது பிரச்னையை அதிகமாக்கிவிடும். நீண்டநாள் மன அழுத்தம் பிரச்னை இருப்பவர்களுக்கு மன அழுத்தத்துக்கு காரணமான ‘அட்ரினல்’ மற்றும் ‘கார்டிசோல்’ போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கின்றன . ரத்தம் கட்டியாவதற்கு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை இந்த ஹார்மோன்கள் உண்டாக்குகின்றன என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
மன அழுத்தத்துக்கும் இதயத்துக்கும் உள்ள தொடர்பை நாம் அறிய வேண்டும் என்றால், நம் உடல் ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஆதிகாலத்தில் மனிதன் காட்டில் வேட்டையாடி வாழ்ந்தபோது, அவன் சந்தித்த மிக முக்கிய அச்சுறுத்தல் சிங்கம், புலி, பாம்பு போன்ற விலங்குகளின் தாக்குதல். அதைச் சமாளிக்க உருவானதே நம்முடைய உடலின் பல்வேறு செயல்பாடுகள். இன்றும் அவை அவ்வாறே இயங்குகின்றன.
எந்த வகைப் பிரச்னையாக இருந்தாலும், நம் உடலில் நிலவும் சமநிலை பாதிக்கும்போது,நம் உடல் அதை ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. உடனே, மூளையின் பாதுகாப்பு அமைப்பு வேலை செய்யத் தொடங்குகிறது. மூளையில் இருந்து அட்ரீனல் சுரப்பியைத் தூண்டும் சமிக்ஞை அனுப்பப்படுகிறது. அட்ரீனல் சுரப்பியின் ஹார்மோன் நம் உடலின் எல்லாத் தசைகளையும் தயார்ப்படுத்த உதவுகிறது! இதயத்தை வேகமாகச் செயல்பட வைக்கிறது. ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்கிறது. இதனால், உடலில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. எல்லாமும் சேர்ந்து இதயத்துக்குக் கூடுதல் பளுவை ஏற்படுத்துகின்றன.
மன அழுத்தம் ஏற்படும்போது, அதை இதயம் இரண்டு வகைகளில் எதிர்கொள்கிறது.
1. திடீரென்று வரும் பாதிப்புகள்,
2. அதிகமான உணர்ச்சியின்போது வெளியேறும் ஹார்மோன் பாதிப்புகள். இதனால், இதயத்தின் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
மிக முக்கியமான மற்றொரு வகை… சிறு சிறு எரிச்சல்கள், கோபங்கள், இயலாமைகள் போன்றவை இதயத்தைப் பாதிக்கும். தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னையும் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால், உடலின் வளர்ச்சிதை மாற்றப் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. மீண்டும் மீண்டும் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. இதை ‘க்ரானிக் ஸ்டிரஸ்’ என்பார்கள். மன அழுத்தம் அதிகரிக்கும்போது அதைக் குறைக்கிறேன் என்று பலர் சிகரெட் பிடிப்பார்கள், டீ அருந்துவார்கள், நொருக்குத் தீனி சாப்பிடுவார்கள். இவை அனைத்தும் இதயத்தைப் பாதிக்கின்றன.
மன அழுத்தத்தைக் குறைக்க வழி
மன அழுத்தம், இதய நோய்க்கான முக்கிய வாய்ப்பு. உங்களுக்கு மன அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதைக் கண்டறியுங்கள். மன அழுத்தம் போக தினசரி குறைந்தது 5 முதல் 10 நிமிடங்களுக்கு கண்களை மூடி தியானம் செய்யுங்கள்; யோகா செய்யுங்கள். இதனால் மன அழுத்தம், ரத்த அழுத்தம் வெகுவாககுறையும்.
Average Rating