ஜெனீவாவில் இருப்பதா, வீற்றோவால் தொலைப்பதா? (கட்டுரை)

Read Time:15 Minute, 4 Second

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவர பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றன.

ராஜபக்‌ஷர்கள் மீண்டும் பதவியேற்றதும், ஏற்கெனவே இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இருந்து இலங்கை விலகிவிட்டது. அப்படியான நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால், புதிய தீர்மானம் தொடர்பிலான ஆரம்ப வரைபு (Zero Draft) இலங்கைக்கு எந்தவித நெருக்கடிகளையும் வழங்காத ஒரு சூனியமான வரைபாகவே வெளிவந்திருக்கின்றது.

குறிப்பாக, ஏற்கெனவே அமைக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம், இழப்பீடு அலுவலகம் ஆகியவற்றை சுயாதீனமாகச் செயற்பட அனுமதிப்பதோடு, உதவிகளையும் வழங்க வேண்டும்; ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தோடு தொடர்ந்தும் ஊடாட வேண்டும்; பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு அமைய மாற்றியமைக்க வேண்டும்; நீதிமன்ற சுயாதீனத்தைப் பேண வேண்டும்; 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும்; முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களை, ஆரம்ப வரைபு இலங்கையிடம் வலியுறுத்துகின்றது.

அதேவேளை, இலங்கையில் நிகழ்த்தப்பட்ட அதிதீவிர மனித உரிமைகள் மீறல்கள், தீவிர யுத்த மீறல்கள் தொடர்பிலான தரவுகளைப் பெறவும், அதைப் பாதுகாக்கவும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு பரிந்துரைக்கின்றது.

அத்தோடு, அனைத்துலக நியாயாதிக்கத்தின் அடிப்படையில், அந்தந்த நாடுகளில், இலங்கையைச் சேர்ந்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குகளை முன்னெடுக்கக் கோருகின்றது. ஆரம்ப வரைபின் உள்ளடக்கம், பருமட்டாக மேற்கண்ட விடயங்களையே உள்ளடக்கி இருக்கின்றது.

அந்த வரைபில், எந்த இடத்திலும் தமிழ் மக்கள் என்ற அடையாளப்படுத்தல்கள் ஏதும் இல்லை. அப்படியான நிலையில், புதிய தீர்மானம் தொடர்பில், தமிழ்த் தரப்புகளும், அதன் இணக்க சக்திகளும் நம்பிக்கை இழந்திருக்கின்றன. ஆரம்ப வரைபு வெளியானது முதல், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளிடம் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றன.

இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான பலம், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளிடம் தற்போது காணப்படுகின்றதா என்கிற கேள்வி முக்கியமானது. ஏனெனில், தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமெனில், இந்தியா பெரும் வகிபாகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற சூழல் நீடிக்கின்றது.

இலங்கையுடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகளில் பிரச்சினைகள் நீடிக்கின்ற நிலையிலும், இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றுக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலையில் இந்தியா இல்லை. சிலவேளை, வாக்களிப்பிலிருந்து விலகியிருக்கலாம். அதன்மூலம், தன்னுடைய ஆதரவு நாடுகளை, புதிய தீர்மானத்தை ஆதரிக்கும் செயற்பாட்டுக்கு இந்தியா உந்தலாம்.

ஆனால், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, இலங்கைக்கு ஆதரவு வழங்கும் சூழல் காணப்படுகின்றது. ஜனாஸா எரிப்பு விடயத்தில், அதிருப்தியுடன் காணப்பட்ட இஸ்லாமிய நாடுகள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையோடு, விடயம் சுமூகமாகத் தீர்க்கப்பட்டு இருப்பதாக நினைக்கின்றன. அவ்வாறான நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானத்துக்கு, அவை ஆதரவு வழங்குவதற்கான சாத்தியம் குறைவு.

இந்தச் சூழல்களைக் கருத்தில் கொண்டுதான், புதிய தீர்மானத்தின் (ஆரம்ப வரைபின்) உள்ளடக்கம் அமைந்திருப்பதாக பிரித்தானியாவுக்கு இணக்கமான இராஜதந்திரிகள் கூறுகிறார்கள். ஆரம்ப வரைபுக்கும் புதிய தீர்மானத்தின் இறுதி வரைபுக்கும் இடையில், பெரிய மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஏனெனில், தீர்மானத்துக்கு ஆதரவாக நாடுகளைத் திரட்டுவது என்பது, குதிரைக்கொம்பாக இருக்கின்ற நிலையில், தீர்மானத்தின் உள்ளடக்கங்களை பலப்படுத்தினால், தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் போகும் சூழல் இருப்பதாகக் கருதுகிறார்கள். இலங்கையை, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் ஏதோவொரு வடிவில் தொடர்ந்தும் வைத்துக் கொள்வதற்கு தீர்மானமொன்று அவசியம் என்கிற நிலையில், சில விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது.

ஆரம்ப வரைபு தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் தமிழ்த் தேசிய கட்சிகளும் சிவில் அமைப்புகளும், இதுகுறித்து அதிருப்தியோடே இருக்கின்றன. ஆனால், ஆரம்ப வரைபுக்கு எதிராக, கூட்டமைப்பு எந்தவித அதிருப்தியையும் பொதுவெளியில் இதுவரை வெளியிடவில்லை.

ஆரம்ப வரைபு வெளியான தருணத்தில், அதற்கு எதிராகப் பொது அறிக்கையொன்றை வெளியிடத் தயாராக இருந்த ஏனைய கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கூட, சில நாள்களில் அமைதியாகிவிட்டன. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் சிவில் சமூக அமையமும், ஆரம்ப வரைபுக்கு எதிர்ப்பு வெளியிட்டிருக்கின்றன. அதனை வெளிப்படுத்தி, தீர்மானத்தை கொண்டுவர எத்தனிக்கும் நாடுகளின், ஜெனீவாவுக்கான தூதுவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கின்றன.

முன்னணியின் கடிதம், பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி எழுதப்பட்டிருக்கின்றது. அதில், ‘புதிய தீர்மானம் தொடர்பிலான ஆரம்ப வரைபை நிராகரிக்கின்றோம்; இலங்கையைப் பொதுச்சபை ஊடாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டு இருக்கின்றது.

அந்தக் கடிதத்தின் 98 சதவீதமான பகுதிகளை, அப்படியே பிரதிசெய்த கடிதமொன்றை, தமிழ்ச் சிவில் சமூக அமையம், மார்ச் முதலாம் திகதி எழுதியிருக்கின்றது. இரு கடிதங்களுக்கும் இடையிலான, பிரதி செய்யப்படாதவைகளாக கீழ்க்கண்ட பகுதிகளைக் கொள்ளலாம்.

அதாவது, ‘தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, ஆரம்பத் தீர்வாகக்கூட 13ஆவது திருத்தத்தை கருத முடியாது’ என்று முன்னணி தெரிவித்திருக்கின்றது.ஆனால், சிவில் சமூக அமையமோ, ‘13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை; என்றாலும், அதனை ஒருதலைப்பட்சமாக நீக்க எத்தனிக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை, ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றிருக்கின்றது.

இந்தக் கடிதங்களின் கவனிக்கத்தக்க அம்சங்களாக, சில விடயங்களைக் குறிப்பிடலாம். மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானத்தைக் கொண்டுவரும் பிரித்தானியா உள்ளிட்ட முக்கிய இருநாடுகள், பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தோடு அங்கம் வகிக்கின்றன. அதனால், இலங்கை விடயம் பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்தப்பட்டு, அங்கு இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கடிதங்களிலேயே, (சிரியாவில் ஆயுத மோதல்கள் பெருமெடுப்பில் நிகழ்ந்த தருணத்தில்), சிரியாவுக்கு எதிராக பாதுகாப்புச் சபையில் 14 தடவைகள் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, அவை (ரஷ்யாவினதும் சீனாவினதும்) வீற்றோ அதிகாரத்தால் தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆயினும், இலங்கை விடயத்தைப் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பரிந்துரைப்பதோடு, அங்கு அது தோற்கடிக்கப்பட்டாலும், பாதுகாப்புச் சபை இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தின் அக்கறை கொண்டிருக்கின்றது என்கிற விடயத்தை காட்டுவதற்கு உதவும் என்றும் கோடிட்டுக் காட்டப்பட்டு இருக்கின்றது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அடைதல் என்பது, பாதுகாப்புச் சபை என்கிற தடையைத் தாண்டியதாக இருக்க வேண்டும் என்கிற நிலையில், முன்னணியினதும், சிவில் சமூக அமையத்தினதும் கடிதத்தில், அதன் சாத்தியப்பாடுகள்/சாத்தியமின்மைகள் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

குறித்த கடிதங்களின் உள்ளடக்கங்களில் ‘புலமைத்துவ பரீட்சார்த்தப் பாணி’யொன்று பேணப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கான நீதிகோரும் பயணத்தில் சாத்தியமான வழிகளை அரசியல், இராஜதந்திர வழிகளில் அடைவதுதான் தலைமைத்துவம் வழங்கும் தரப்புகள் முன்னெடுக்க வேண்டியது.குறிப்பாக, மக்களின் ஆணைபெற்ற அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் அது தொடர்பில், அறம் சார்ந்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

ஆனால், பல நேரங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்து, பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வதற்கும், தனிப்பட்ட அரசியல் குறு நலன்களைப் பெறுவதற்கும் பிராந்திய வல்லரசு தொடங்கி மேற்கு நாடுகள், தமிழ்த் தரப்பிலுள்ள சில தரப்புகளும் தனி நபர்களும் முனைகிறார்கள்.

பாதுகாப்புச் சபைக்கு, இலங்கை விடயத்தைக் கொண்டு செல்ல முடியுமா, அங்கு வெற்றிபெற முடியுமா என்றால், அதன் உண்மை நிலை என்ன என்பது தொடர்பில் சின்னக்குழந்தைக்குக் கூட தெளிவிருக்கின்றது. குறிப்பாக, பல்லாயிரம் பில்லியன்களை இலங்கையில் முதலீடு செய்துவரும் சீனா, வீற்றோ அதிகாரத்தோடு இருக்கும் அரங்கொன்றில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் வென்றுவிடும் என்பதெல்லாம் பரமசிவனின் அடிமுடியைத் தேடியவர்களின் கதைக்கு ஒப்பானது.

இன்றைய அவலநிலை எப்படிப்பட்டது என்றால், புதிய தீர்மானம் ஒன்றினூடாக இலங்கையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் பேணுவதாகும்.அந்த வாய்ப்பும் இல்லாமற்போனால், தமிழ் மக்களுக்கான நீதிக்கான பயணம், இடறி அதலபாதாளத்துக்குள் வீழ்ந்துவிடும். அதனை, சர்வதேச ஊடாட்டங்களுக்குள் மீண்டும் கொண்டுவருவது என்பது, சாத்தியமே இல்லாமல் போகலாம்.

அதனால், இருக்கின்ற சாத்தியமான வழிகளில், உச்சபட்ச அடைவை நோக்கி நகர்வதும், அதைத் தக்க வைப்பதும்தான் புத்தியுள்ள ஒரு சமூகம் செய்யும். அதனை, விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்களும் செய்ய வேண்டியிருக்கின்றது. அதனை, தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தை, பரீட்சார்த்த களங்களாகப் பிரயோகிக்க முயல்கின்ற தரப்புகள் புரிந்து கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டயாலிசிஸ்!! (மருத்துவம்)
Next post மனித வரலாற்றையே நடுநடுங்க வைத்த உண்மை நிகழ்வு! (வீடியோ)