எப்போதும் காப்போம் சிறுநீரகம்!! (மருத்துவம்)
சிறுநீரகம் என்றதும் ஒரு மிகப்பெரிய வடிகட்டி என இதை நினைக்க வேண்டாம். ஒவ்வொரு சிறுநீரகத்திலும், ரத்தத்தை சுத்தம் செய்யும் அமைப்பான நெஃப்ரான்கள் தலா 10 லட்சம் உள்ளன. இந்த நெஃப்ரான்களில்தான், ரத்தக் குழாய் போன்ற வடிகட்டி உள்ளது. சிறுநீரகத்தினுள் ரத்தம் நுழைந்ததும் நெஃப்ரான்கள் இரண்டு கட்ட செயல்பாட்டின் மூலம் ரத்தத்தில் உள்ள தாதுஉப்புக்கள் உள்ளிட் டவற்றைப் பிரிக்கின்றன. பிரிக்கப்பட்ட கழிவுகள் மீண்டும் மற்றொரு குழாய் வழியே பயணிக்கின்றன. அங்கே, உடலுக்குத் தேவையான தாது உப்புகள் மீண்டும் கிரகிக்கப்பட்டு, சிறுநீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது.
சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 190 – 200 லிட்டர் ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன. இதில், கிட்டத்தட்ட 1.8 லிட்டர் சிறுநீராக வெளியேறுகிறது. மீதம் உள்ளவை மீண்டும் உடலுக்குள் செலுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பிரிக்கப்படும் சிறுநீரானது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்படுகிறது.
பயன்கள்
கழிவுகள், நச்சுக்களை அகற்றி ரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன.
சிறுநீரகங்கள், ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற எலெக்ட்ரோலைட் அளவைப் பராமரிக்கின்றன.
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க உதவுகின்றன.
எரித்ரோபோய்டின் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த எரித்ரோபோய்டின்தான் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியைத் தூண்டுகின்றன.
வைட்டமின் டி-யைச் செரிவானதாக்கி, எலும்புகள் பயன்படுத்த உதவுகிறது.
உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்திருக்கிறது.
ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது.
செயல்பாடு பாதிக்கப்படுவதால்…
சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், நச்சுக்கள் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால், கால் வீக்கம், வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, சுவாசித்தலில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை பெறவில்லை எனில், சிறுநீரகங்கள் முற்றிலுமாகச் செயலிழந்துவிடுகின்றன. இதனால், உயிரிழப்புகூட ஏற்படலாம்.
சிறுநீரகத்தைப் பாதிக்கும் விஷயங்கள்
சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்பை உடனடிச் சிறுநீரகப் பாதிப்பு (Acute Kidney Injury) மற்றும் நாட்பட்ட நோய் (Chronic Kidney Disease) என இரண்டாகப் பிரிக்கலாம். உடனடி சிறுநீரகப் பாதிப்பு ஏற்படக் காரணங்கள்
1 சிறுநீரகத்துக்குப் போதுமான ரத்த ஓட்டம் தடைப்படுதல்.
2 சிறுநீரகங்கள் சேதம் அடைதல்.
3 சிறுநீரகங்களில் சிறுநீர் வெளியேறுவதில் தடைகள் ஏற்படுதல்.
காரணங்கள்
1 விபத்து காரணமாக ரத்த இழப்பு.
2 உடலில் நீரிழப்பு ஏற்படுதல்.
3 செப்சிஸ் (Sepsis) நோய்த்தொற்று.
4 சில மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல்.
5 பிரசவத்தில் சிக்கல் ஏற்படுதல்.
ஓட்டப்பந்தய வீரர்களுக்கு அக்யூட்’ என்கிற உடனடி சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம். இவர்கள் நீண்ட தூரம் ஓடும்போது, போதுமான அளவு நீர் அருந்துவது இல்லை. இதனால், திசுக்கள் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து புரதம் வெளிப்படும். அதிக அளவில் புரதம் வெளியேறி ரத்தத்தில் கலக்கும்போது, மயோகுளோபின்’ (Myoglobin) எனும் பிரச்னை ஏற்படும். இது சிறுநீரகச் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
Average Rating