வெளித்தெரியா வேர்கள் !! (மகளிர் பக்கம்)
2018ஆம் ஆண்டு, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,500 கோடி பண மோசடியைப் பற்றி குறிப்பிடும்போது, அதன் நிறுவனரான சுனில் மேத்தா, “வங்கியினுள் இந்த மோசடி பல ஆண்டுகளாக ஒரு புற்றுநோயைப் போல பரவியுள்ளது என்பதை அறிகிறோம். அந்தப் புற்றினை இப்போது களையெடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்று அறிக்கை விட, “புற்றுநோய் என்பது கொடிய நோய் என்றாலும், அதனை ஒரு குற்ற உணர்வுடன், நம்பிக்கையின்மையுடன், அச்சத்துடன் பார்க்கக்கூடாது என்பதை ஒவ்வொரு நாளும் போதித்து வருகிறேன்.
அப்படியிருக்க, உங்கள் நிறுவனத்தில் நடந்த ஊழலுக்கு புற்றுநோயை நீங்கள் உருவகப்படுத்தியுள்ளீர்கள். ஊழல் என்பது திட்டமிட்ட குற்றம்.. கேன்சர் நோய் அப்படியல்ல.. எக்காரணம் கொண்டும் உங்களது கேடுகெட்ட ஊழலை இந்த நோயுடன் சமன்படுத்தாதீர்கள்..” என்று ஒரு பதில் கடிதம் வந்து, அது இந்தியா முழுவதும் கேன்சர் மீது பெரும் கவனத்தை ஏற்படுத்தியது…
அப்படியொரு கடிதத்தை எழுதியவர் தான், சமீபத்தில் நம்மை விட்டு மறைந்த “டாக்டர் சாந்தா” என்ற மருத்துவ மாமேதை. தனது கூரிய கொடுக்குகளையும், அகன்ற கால்களையும் கொண்டு மணலைப் பறித்தபடி உட்செல்வதுடன், இங்கே மறைத்தால் அங்கே தோண்டிக் கொண்டு வரும் நண்டைப் போலவே, உடலின் உள் உறுப்புகளைப் பறித்து, அதன் திசுக்களையெல்லாம் ஆக்கிரமித்து அழிப்பதோடு, ஓரிடத்தில் கட்டுப்படுத்தினால் வேறிடத்தில் முளைக்கும் தன்மை கொண்டதன் காரணமாகத் தான் கேன்சர் என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் அப்படிப்பட்ட நோயால் கொடூரமாய் பாதிக்கப்பட்டு நம்பிக்கையிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையளித்து மனிதநேயத்துடன் சிகிச்சையளித்து, அனைத்து தரப்பு மக்களையும் அதிலும் ஏழைகளை, தான் பணிபுரிந்த “அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட்டை” நோக்கி வர வைத்தவர் தான், டாக்டர் சாந்தா..
“புற்றுநோய் என்பது வலி மிகுந்த நோய்தான் என்றாலும், அதனை வருமுன் காக்கவும், ஆரம்பநிலையில் கண்டறியவும், முழுவதும் குணப்படுத்தவும் முடியும்” என்று நம்பிக்கை அளித்ததுடன், “சில புற்றுநோய்கள் மட்டும் மரபணுக்கள் வாயிலாக குடும்பங்களில் அடுத்தடுத்தும் காணப்படலாம்.!” என்ற விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வந்த டாக்டர் சாந்தாவிடம், அவரது குடும்பத்தைப் பற்றியும், ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றியும் கேள்வி எழுப்பும்போது புன்னகையுடன்தான் எப்போதும் பதிலளிப்பார்.
“மருத்துவராக வேண்டும் என்பது எனது விதிப்பலன் எனலாம். நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் என, ஒரு பெரிய குடும்பத்தின் மூத்த பெண்ணாகிய நான், பிறந்தது மயிலாப்பூரில் 1927ஆம் ஆண்டில். வீட்டிலேயே ஒரு பெரிய நூலகத்தை வைத்துப் பராமரித்து வந்த எனது பாட்டனார் ஒரு பெரும் படிப்பாளி. அந்த வீட்டில் வளர்ந்த எனக்கு, ஆரம்பக்கல்வியை எனது அன்னை தான் அளித்தார் என்றாலும், நான் முழுமையாகக் கல்வி பயின்றது பி.எஸ்.சிவசாமி உயர்நிலை பள்ளியில். அங்கு தலைமையாசிரியராகப் பணியாற்றிய அயர்லாந்தைச் சேர்ந்த மிஸ்.வீல் அவர்களும், மயிலாப்பூரில் பணிபுரிந்த லேடி டஃப்ரின் என்ற மருத்துவரும் தான், நான் மருத்துவம் பயில்வதற்கு முக்கிய காரணமாக இருந்தனர் எனலாம்..” என்று தனது பால்ய காலத்தை நினைவுகூர்ந்த அவர் தொடர்ந்து சொன்னது…
“1944ஆம் வருடம், எம்.எம்.சி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றபோது, நூறு ஆண்களின் மத்தியில் கல்வி பயின்ற பத்து பெண்களில் ஒருவராக இருந்தேன். அப்போதைய சூழலில் பெண் கல்வி என்பது உண்மையில் பெரும்பாடாக இருந்தது..
பெண்கள் பொதுவாக ஆசிரியர் அல்லது செவிலியர் என்று மட்டுமே இருந்த அந்த காலகட்டத்தில், மகப்பேறு மருத்துவத்தை தனது விருப்பப் பாடமாக பயில்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை” என்கிறார்..மருத்துவப் படிப்பு முடிந்து எழும்பூர் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவராக பணியிலமர்ந்த டாக்டர் சாந்தாவுக்கு உண்மையில் அதுபோதவில்லை.
விஞ்ஞானி சர்.சி.வி.ராமனின் பேத்தி, விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகரின் மருமகள் என்ற அடையாளத்துடன், அவர்களது அறிவியல் மரபணுக்களைக் காட்டிலும், சேவை மரபணுக்கள் இவரது உடலில் அதிகம் இருந்ததால் தானோ என்னவோ, தன்னைத் தேடி வருபவர்களைத் தாண்டி எல்லா மக்களுக்கும் ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்த அவர், அந்தக் காலத்திலேயே தனது அரசாங்கப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, புற்றுநோய் சிகிச்சையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்..
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தொடங்கிய புற்றுநோய் மருத்துவமனையில் விருப்பத்துடன் தன்னை இணைத்துக் கொண்டதோடு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மகனும், தனது மருத்துவ ஆசானுமான டாக்டர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து அயராது உழைத்து, வெறும் பன்னிரெண்டு படுக்கை வசதிகளுடன் 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “அடையாறு கேன்சர் மருத்துவமனையை” இன்று ஐந்நூறு படுக்கை வசதிகளுடன், ஆயிரத்திற்கும் மேலான ஊழியர்கள், நூற்றுக்கும் மேலான மருத்துவர்கள் பணிபுரிந்து, லட்சக்கணக்கான மக்களுக்கு புற்றுநோய்க்கான முழுமையான சிகிச்சை அளிக்கும் பார் புகழும் சேவை நிறுவனமாக மாற்றியுள்ளார்.
“கேன்சருக்கு மருத்துவமனையா? வருகிற நோயாளிகள் இறப்பதற்கென்றே மருத்துவமனையை முதன்முதலில் உருவாக்கும் மருத்துவர்கள் நீங்கள்..” என்று அச்சமயம் கேலி பேசப்பட்ட அடையாறு மருத்துவமனையை, பல விஷயங்களில் முதன்முதலாய் என்று மாற்றினார் மருத்துவர் சாந்தா. இந்தியாவின் முதல் நியூக்ளியர் ஆன்காலஜி துறை, குழந்தைகளுக்கான தனிச்சிறப்பு புற்றுநோய் துறை, முதல் கோபால்ட் 60 யூனிட், முதல் மாமோகிராம் மையம், புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கான எம்.சி.ஹெச், டி.எம் என்ற தனி அங்கீகாரத்துடன் மேற்படிப்புத் துறை, அருகாமை கிராமங்களில் முன்மாதிரியான விழிப்புணர்வு சேவைகள் என ஒவ்வொன்றிலும் முதன்மையாக நிற்பதுடன் ஆசியாவின் முதல் முழுமையான புற்றுநோய் சிகிச்சை மையம் (Comprehensive Cancer Care) என்ற சிறப்பையும் பெற்றுள்ளது இவர் தலைமையில் இயங்கிய அடையாறு புற்றுநோய் மருத்துவ மையம்..
ஒன்பது ஏக்கர் பரப்பளவில், உயர்ந்த கட்டிடங்களுடன், எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், டாக்டர் சாந்தா 65 ஆண்டுகளாக வசித்து வந்தது ஒரு எளிமையான அறையில் தான். அதிலும் அதிகாலை நான்கு மணிக்கு விழிப்பதில் இருந்து, இரவு பதினோரு மணிக்கு தனது அறைக்கு திரும்பும் வரை, கண்களில் பரிவுடனும், முகத்தில் மலர்ந்த புன்னகையுடனும் பணிபுரிந்தார். தனது சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல், திருமணம் கூட புரிந்து கொள்ளாமல், நோயுற்றவர்களுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் என எந்தவொரு பாகுபாடும் இன்றி, அனைவரையும் ஒரேபோல நடத்திய இவருக்கு, குழந்தைகள் என்றால் தனிப்பிரியம். தனது மருத்துவ மாணவர்களின் குழந்தைகளின் பெயரைக் கூட நினைவில் வைத்துக் கொண்டு, “சங்கவி கலெக்டருக்குப் படிக்கறதுக்கு ஆசைப்படறான்னா, அவளை படிக்க வைம்மா.. நம்ம நாட்டுக்கு வலிமையான, நேர்மையான இளைய தலைமுறை கட்டாயம் வேணும்..” என தனது பல்லாயிரக்கணக்கான மருத்துவ மாணவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் ஒரு ரோல்மாடலாக விளங்கியவர் இவர்.
ஆனால் தனது ரோல்மாடல்கள் என்று மேயோ கிளினிக் சகோதரர்களைக் குறிப்பிடும் டாக்டர் சாந்தா, “அமெரிக்காவின் இன்றைய தரம் மிகுந்த மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவிய மேயோ சகோதரர்கள், தாங்கள் மருத்துவப் பணியின் வாயிலாக ஈட்டிய வருமானம் அனைத்தையும் இல்லாதவர்களுக்கு வழங்கி, பெறுவதை விட கொடுப்பதே சிறந்தது என்று மக்களுக்கு உணர்த்தியவர்கள்..” என்று பெருமையுடன் கூறியதோடு, தானும் அதேபோல் தனக்கு வழங்கப்பட்ட மாக்சேசே, பத்மவிபூஷன், பத்மபூஷன், அன்னை தெரசா போன்ற நூற்றுக்கணக்கான விருதுகளின் வாயிலாக வந்த நிதித்தொகையை அப்படியே தான் பணிபுரிந்த மருத்துவமனையின் மேம்பாட்டிற்காக வழங்கியிருக்கிறார்.
மருத்துவமனையின் வளர்ச்சிக்கு உதவியது போலவே நோயாளிகளின் நலனில் அக்கறை கொண்ட டாக்டர் சாந்தா, புற்றுநோய் சிகிச்சை மருந்துகளை உயிர்காக்கும் மருந்துகள் பிரிவில் மாற்றி குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ததுடன், புற்றுநோயாளிகளுக்கு விமான, ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தின் கட்டணங்களை குறைத்திடவும் வழிவகுத்தார்.“மனிதர்கள் பலவிதம் என்பது போல, புற்றுநோய் வகைகளும் பலவிதம். ஆனால் எந்தவொரு புற்றுநோயும் தனது அறிகுறிகளைக் காட்டத் தவறுவதே இல்லை.. போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், அறிகுறிகளை மக்கள் உதாசீனப்படுத்துவதாலும், புற்று முற்றிய நிலையில் பலருக்கு சிகிச்சை அளிக்க நேரிடுகிறது. இதற்கு அரசாங்கமும், அனைத்து மருத்துவ சம்மேளனங்களும் ஒன்றிணைந்து இயங்க வேண்டும்” என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது மட்டுமன்றி, அதனை முழுமையாக செயல்படுத்தியும் வந்தார்.
தனது தொடர் மருத்துவப் பணிகளுக்கிடையே, பல்வேறு வகையான புற்றுநோய்கள் குறித்து நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு “கேன்சர்” என்ற வார்த்தையின் பொருளை மாற்றியமைத்தவர் என்பதோடு, கேன்சருக்கான சிகிச்சைமுறைகளில் பெரும் முன்னேற்றங்களைத் தருவித்து, உலக மருத்துவத்துக்கே புற்றுநோய் குறித்த புதுவழியைக் காட்டியதால்தான் டாக்டர் சாந்தாவுக்கு இந்திய புற்றுநோய் கழகத்தின் தலைவராகவும், உலக சுகாதார அமைப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், இந்திய அமெரிக்க புற்றுநோய் கழகத்தின் இந்தியத் தலைவராகவும், ஐசிஎம்ஆர் தனது திட்டக்குழு உறுப்பினராகவும் பல்வேறு பதவிகளைத் தந்து அழகு பார்த்தது மருத்துவ உலகம்..
“இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சை என்பது அபார வளர்ச்சியையும், வெற்றியையும் கண்டுள்ளது.கேன்சர் என்றால் மரணம் என்ற நிலை முற்றிலும் மாறிவிட்டது. இன்னும் சில வருடங்களில் மூலக்கூறு அமைப்பு சார்ந்த மரபியல் சிகிச்சையும், நோயெதிர்ப்பியல் சிகிச்சையும் (molecular, genetic and immune therapy) என அனைத்தும், புற்றுநோயின் தலையெழுத்தை மாற்றக்கூடும் என்பது உறுதி..” என்று கூறியதோடு, தனது வாழ்நாளின் வயதான இறுதிநாட்கள் வரை உறுதியுடன் பணிபுரிந்தும் வந்தார்.
ஆம், ஐந்து ஆண்டுகளுக்கு முன், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட போதும் அறையில் முடங்கிவிடாமல் வீல்சேரில் அமர்ந்தபடியே பணிபுரிந்த டாக்டர் சாந்தா, மாரடைப்பின் காரணமாக, 93 வயதில் அறுவை அரங்கிலேயே உயிர்நீக்க, அவர் மறைந்த நாளன்றும், அவர் விரும்பியது போலவே, அவரது உதவி மருத்துவர்கள், மரணத்திற்குக் கூட செல்லாமல் கனத்த மனதுடன் காத்திருந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தனர்..
“வேதனையுடன், கண்ணீருடன் நிற்கும் குடும்பங்களில் புன்னகையை வரவழைப்பது மட்டுமே எங்களது குறிக்கோள். மருத்துவம் என்பது அறிவியலும், கலையும் இணைந்த ஒரு துறை. அதனால்தான் நோயை மட்டுமன்றி நோயாளியையும் குணப்படுத்த மருத்துவர்கள் கடமைப்பட்டுள்ளனர்..” என்று எப்போதும் அறிவுறுத்தும் டாக்டர் சாந்தா எனும் மதிநுட்பம் மிகுந்த மனிதநேயத்தின் குரலும், செயல்பாடுகளும், அடையாறு மருத்துவமனை கட்டிடங்களைத் தாண்டி உலகெங்கும் செயல்பட்டு வருகிறது என்பதே உண்மை..!!
Average Rating