சிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்? (மருத்துவம்)

Read Time:14 Minute, 15 Second

தேர்வில் தோற்றுப்போன குழந்தையை, ‘உன் மூளை என்ன களிமண்ணா?’ என்று திட்டுவோம்; இரக்க குணம் இல்லாதவரிடம், ‘உன் இதயம் என்ன கல்லா?’ என்று கேட்போம். உண்மையில் கல்லும் மண்ணும் சேரும் இடம் இதயமும் இல்லை; மூளையும் இல்லை; சிறுநீரகம்தான். தமிழகத்தில் 100க்கு 15 பேருக்கு சிறுநீர்க் கல் (Urinary stone) இருக்கிறது என்றால், இந்தப் பாதிப்பின் விஸ்வரூபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

விலாவில் பயங்கர வலியோடு கிராமத்துக் கிழவர் ஒருவர் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். ஸ்கேன் பார்த்ததில் அவருக்கு இரண்டு சிறுநீரகங்களிலும் கற்கள் இருப்பது தெரிந்தது. சிகிச்சை கொடுத்தேன். அவர் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது மனைவியோடு அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருப்பதாக புகார் வந்தது. விசாரித்தேன். “எனக்குக் கல்லு வந்ததுக்குக் காரணமே என் பொண்டாட்டிதான், டாக்டர்… அவிச்ச இட்லியிலே கல்லு. வடிச்ச சாதத்துலே கல்லு. வீட்டில் ஆக்கிப்போடுவதெல்லாமே கல்லுதான்.

இப்படிக் கல்லும் மண்ணுமா சமைச்சிப் போட்டு எனக்குக் கல்லு வர வச்சுட்டா, டாக்டர்!” என்று புலம்பினார். அவரைச் சமாதானப்படுத்தி, “சாப்பாட்டில் இருக்கும் கல்லுக்கும் சிறுநீர்க் கல்லுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை!” என்று புரியவைப்பதற்குள் மண்டை காய்ந்துவிட்டது. இப்படி ஒருவர், இருவர் என்றில்லை… ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். “சிறுநீரகத்தில் கல் இருக்கிறது” என்று சொன்னதும், உடன் வந்த மனைவியிடமோ, மருமகளிடமோ, “உடனே அரிசிக் கடையை மாத்து” என்றுதான் கோபமாகச் சொல்வார்கள்.

அதில் உண்மையில்லை. சிறுநீர்க் கல் தோன்றுவது தனிக் கதை. நாம் குடிக்கும் தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட் எனப் பல உப்புகள் உள்ளன. சாதாரணமாக உணவு செரித்த பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சமயங்களில், இவற்றின் அளவு ரத்தத்தில் அதிகமாகிவிடும். அப்போது, இவை சிறுநீரில் வெளியேற சிரமப்படும். கிடைத்த இடத்தில் படுத்துக்கொள்ளும் துறவி மாதிரி சிறுநீர் வடியும் பாதையில் எங்கு வேண்டுமானாலும் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீர்க் கல்.

இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வழக்கத்தில், பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கும். வியர்க்க விறுவிறுக்க உழைக்கும் ஆண்கள் என்றால், பூக்களைத் தேடி வரும் தேனீக்கள் போல சிறுநீர்க் கற்கள் குஷியாக வந்து சேரும். என்ன காரணம்? நிறைய வியர்க்கும்போது இயல்பாகவே சிறுநீரின் அளவும் குறைந்துவிடுகிறது. அப்போது சிறுநீரில் வெளியேற வேண்டிய உப்பு, சிறுநீரகத்திலேயே தங்கிப் படிந்து, கல்லாக மாறுகிறது. அதிக வெயிலில் அலைந்தாலும், வேலை பார்த்தாலும் இந்த வாய்ப்பு அதிகரிக்கிறது.

சிறுநீரகத்தில் உப்போ, கல்லோ சேராமல் இருக்க வேண்டுமானால் அதனுள் தண்ணீர் தாராளமாக வந்து போக வேண்டும். அப்போதுதான் அது கல்லும் மண்ணும் கலக்காமல் ‘சுத்த’மாக இருக்கும். சிலர் தண்ணீர் குடிக்கவே சோம்பல்படுவார்கள். அதிலும் குளிர்காலத்தில் தண்ணீரை ஓர் எதிரிமாதிரிதான் பார்ப்பார்கள். சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதோடு சரி, மற்ற நேரங்களில் தண்ணீரைத் தொடவே மாட்டார்கள்.

உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதவர்களுக்குசிறுநீர்க் கல் கட்டாயம் வரும். இந்த வரியில் “தேவையான அளவுக்கு” என்பதை அடிக்கோடிட்டுப் படியுங்கள். காரணம், தேவைக்கு மேல் தண்ணீர் குடித்தாலும் ஆபத்துதான். அப்படி அதிகமாகக் குடிக்கும்போது, சிறுநீரும் அதிக அளவில் வெளியேற வேண்டும். இது சிறுநீரகத்துக்கு நாம் தரும் சுமை. சிலருக்கு இரண்டு சிறுநீரகங்களிலும் கல் உண்டாகி, சிறுநீர் செல்லும் பாதையை அடைத்துக்கொள்ளும்.

இவர்கள் மேலும் மேலும் தண்ணீர் குடிப்பதால், சிறுநீர் நிரம்பி, வழிய இடமின்றி சிறுநீரகம் திணறும். இது மிக மிக அரிதாக நிகழும் விபத்து என்றாலும் எச்சரிக்கை தேவை. தமிழகத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் கடின நீராக இருக்கிறது. இதில் இயற்கையாகவே கால்சியம் அதிகம். இந்தத் தண்ணீரைத் தொடர்ந்து குடிக்கும்போது, இதிலுள்ள கால்சியம் சிறுநீரில் வெளியேறாமல், சிறுநீரகத்திலேயே படிந்து கல்லாக மாறுகிறது. கடின நீரில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிட்டாலும் இதே நிலைமைதான் ஏற்படுகிறது.

சிலர் பால், பாதாம், பசலைக்கீரை, பூண்டு போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் ஊடக விளம்பரங்களைப் பார்த்து அவர்களாகவே கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடுவார்கள். இவர்களுக்குக் கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோல் அதிகப்படியான புரதம், உப்பு, மசாலா கலந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டாலும் சிறுநீர்க் கல் வரும். ஃபாஸ்ட் ஃபுட், பாக்கெட் ஃபுட், ரெட் மீட் என எந்நேரமும் எதையாவது வயிற்றுக்குள் திணித்துக்கொள்பவர்களுக்கு, உடற்பருமன் மட்டுமல்ல, சிறுநீர்க் கல்லும் வரும்.

அடுத்த காரணம், சிறுநீர்த் தொற்று. இது அடிக்கடி ஏற்பட்டால், திறந்த வளைக்குள் எலி புகுவது எவ்வளவு எளிதோ அவ்வளவு எளிதில் சிறுநீர்க் கல் தோன்றும். எப்படி? கிருமிகள் சிறுநீரகப் பாதையைத் தாக்கும்போது அங்கு பல இடங்களில் ‘பல்லாங்குழிகள்’ உண்டாகும். நோய் சரியான பிறகும் அவை மூடப்படாமலேயே இருக்கும். அப்போது கால்சியம் போன்ற உப்புகள் சிறுநீரில் கொஞ்சமே இருந்தாலும், அந்த வழியாக அவை வரும்போது, அக்குழிகளில் படிந்து ‘பணியாரம்’ மாதிரி சிறுநீர்க் கல் உருவாகும். சில கிருமிகள் யூரியாவை உற்பத்திசெய்கின்றன. யூரியா அளவுக்கு மீறினால், அதுவும் கல்லாக மாறிவிடும்.

குடும்பத்தில் யாருக்காவது சிறுநீர்க் கல் வந்திருந்தால், அதுவே பரம்பரை வியாதியாகி, அவர்கள் பிள்ளைகளுக்கு வரவும் வாய்ப்புண்டு. இவை தவிர, பேராதைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது, புராஸ்டேட் வீக்கம், கவுட் நோய், வைட்டமின் ஏ குறைபாடு போன்றவையும் சிறுநீர்க் கற்கள் உருவாவதை உற்சாகப்படுத்துகின்றன. பொதுவாக, சிறுநீரகம், சிறுநீரகக் குழாய் (Ureter), சிறுநீர்ப் பை ஆகிய மூன்று இடங்களில் சிறுநீர்க் கல் வருவது வாடிக்கை. பலருக்கும் சிறுநீரகப் பையில் உண்டாகும் கல்தான் பொதுவான பிரச்னை.

இதனால், சிறுநீரகத்துக்கு உடனடியாக ஆபத்து நேராது என்பது ஆறுதல். ஆனால், இப்போது சிறுநீரகத்தில் கல் உண்டாவது அதிகரித்து வருகிறது. காரணம், இந்தியப் பாரம்பரிய உணவுகள் இருந்த இடத்தை மேற்கத்திய உணவுகள் பிடித்துக்கொண்டன. இவற்றில் கால்சியம், ஆக்சலேட் போன்ற உப்புகள் ரொம்பவே அதிகம். இவை கற்களாக மாறும்போது மான் கொம்பு மாதிரி கிளை கிளையாக வளரும். இவை சிறுநீரகத்தில் குடிபுகும்போது உடனடியாக ஆபத்து நேர்கிறது. எப்படி?

விருந்துக்கு வந்த இடத்திலேயே திருடின கதையாக சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர் வடியும் பாதையில் உருவாகும் கல்லானது முதலில் சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்யும். இதன் விளைவாக, சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர்ப் பையில் சிறுநீர் தேங்கும். இது சிறுநீரகத்துக்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும் (Hydronephrosis). இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், சிறுநீரகம் பழுதாகிவிடும். இது கிட்னி ஃபெயிலியரில் கொண்டுபோய் நிறுத்தும்.

சரி, சிறுநீர்க் கல்லை எப்படி அறிவது? சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தோன்றாது. கல் நகரும்போது அல்லது சிறுநீரகக் குழாயின் ஆரம்பத்தில் அடைப்பை ஏற்படுத்தும்போது வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். இது சிறுநீரகக் கல்லுக்கான முக்கிய அறிகுறி. சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், வயிற்றில் வலி தோன்றி, விரைகளுக்குப் பரவும். சிறுநீர்ப் பையில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி துவங்கி, சிறுநீர் வெளியேறும் துவாரம்வரை பரவும்.

அத்துடன், அடிக்கடி சிறுநீர் போக வேண்டும் என்ற உணர்வு, அப்படிப் போகும்போது எரிச்சல், வலி, குமட்டல், வாந்தி…. எல்லாமே கைகோர்த்துக்கொள்ளும். சிறுநீரில் ரத்தம் கலந்து வரலாம். வயிற்றை எக்ஸ்-ரே எடுத்து சிறுநீர்க் கல்லைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், மிகச் சிறிய கற்கள் இதில் தெரியாது. பதிலாக, அல்ட்ரா சவுண்ட்/சி.டி.ஸ்கேன்/ஐவிபி எக்ஸ்-ரே (IVP X-ray) எடுத்துப் பார்த்தால் கல் இருக்கும் இடம், அளவு, எண்ணிக்கை, சிறுநீரகம் பாதிக்கப்படுள்ளதா எனப் பல விவரங்களைத் துல்லியமாகத் தெரிந்து, சிகிச்சை தர முடியும். அதேசமயம், எல்லாக் கற்களுக்கும் ஒரே மாதிரி சிகிச்சை கிடையாது. கற்களில் பல ரகம் உண்டு. ரகம், இடம்… இதைப் பொறுத்து சிகிச்சை மாறும். எந்த ரகம்? என்ன சிகிச்சை? ஒரு வாரம் பொறுங்கள்.

கல் இல்லாத வாழ்வுக்கு என்ன வழி?

* தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.
* வெயிலில் அதிகம் அலையாதீர்கள்.
* உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
* துரித உணவுகளை ஓரங்கட்டுங்கள்.
* இறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
* கோலி சோடா, பிளாக் டீ மற்றும் செயற்கை மென்பானங்கள் குடிப்பதைத் தவிருங்கள்.
* வாழைத்தண்டுச் சாறு, நீர் மோர், பார்லி தண்ணீர் சாப்பிடுங்கள்.
* பால் பொருட்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
* நீர்ச்சத்துள்ள பழங்களையும் காய்கறிகளையும் அதிகப்படுத்துங்கள்.
* டாக்டர் சொல்லாமல் கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லே, கல்லே கரைந்துவிடு!! (மருத்துவம்)
Next post மனதை உருக்கும் உண்மை கதை ! நான் எப்படி வடகொரியாவில் இருந்து தப்பினேன்!! (வீடியோ)