‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ போராட்டம்: வயிற்றெரிச்சல் கோஷ்டிகள்!! (கட்டுரை)
ஜனநாயகப் போராட்டங்களை நோக்கி, மக்கள் திரள்வதை அடக்குமுறையாளர்களும் அவர்களின் இணக்க சக்திகளும் என்றைக்குமே விரும்புவதில்லை.
இங்கு ‘அடக்குமுறையாளர்’கள் அடையாளத்துக்குக்குள், அரசுகள், அரசாங்கங்கள், பெரும்பான்மைவாதம், இனவாதம், மதவாதம் உள்ளிட்ட கூறுகள் அடங்குகின்றன.
‘இணக்க சக்திகள்’ என்ற அடையாளத்துக்குள், அடக்குமுறையாளர்களிடம் சலுகை பெறும் தரப்புகளும், குறுகிய அரசியல் மூலம் ஆதாயம் தேடும் தரப்புகளும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான தரப்புகள்தான், போராட்டங்களை ஊடறுக்கின்றன; காட்டிக் கொடுக்கின்றன.
பௌத்த சிங்களப் பேரினவாத அடங்குமுறைகளுக்கு எதிராக, தமிழ் மக்கள் அரசியல் உரிமைப் போராட்டத்தை நடத்த ஆரம்பித்தது முதல், சலுகைகளுக்காகப் பேரினவாதத் தரப்புடன் இணங்கிச் செயற்பட்ட தமிழ்த் தரப்புகள் இருக்கின்றன.
அவற்றில் சில தரப்புகள், கால ஓட்டத்தில் காணாமல் போயிருக்கின்றன. இன்னும், சில தரப்புகள், தவிர்க்க முடியாத சூழலில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டக் களத்தின் பங்காளிகளாகத் தம்மை மாற்றியும் கொண்டிருக்கின்றன. ஆனாலும் வரலாற்றுப் பக்கங்களில், அந்தத் தரப்புகளின் கறுப்புப் பக்கங்களை மறைக்க முடியாது.
பேரினவாத அடக்குமுறையாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இயங்குபவர்களும், குறு அரசியலுக்காகப் போராட்டங்களைக் காட்டிக் கொடுப்பவர்களும், தமிழ் அரசியல் சூழலில் இப்போதும் உலாவுகிறார்கள். அதற்கு, ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான போராட்டத்தைத் தொடர்ந்து, நிகழும் நிகழ்வுகளை அவதானித்தாலே புரிந்து கொள்ள முடியும். (இனி, பத்தி முழுவதும் ‘பொத்துவில்2பொலிகண்டி’ போராட்டம் என்றே வரும்)
முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த 12 ஆண்டுகளில், வடக்கு – கிழக்கை இணைத்து, மக்களின் பெரும் பங்களிப்போடு நடத்தப்பட்ட போராட்டமாக, ‘பொத்துவில்2பொலிகண்டி’ போராட்டத்தைக் குறிப்பிட முடியும். 30 ஆண்டுகளில் பின்னராக, முஸ்லிம் மக்களின் கணிசமான பங்களிப்போடு நடத்தப்பட்ட போராட்டமாகவும் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது.
இது, பௌத்த சிங்களப் பேரினவாத சிந்தனைக்கும், அதை முன்மொழியும் ராஜபக்ஷர்களுக்கும் பாரிய எரிச்சலை உண்டு பண்ணியிருக்கின்றது. அத்தோடு, ராஜபக்ஷர்களின் இணக்க சக்திகளுக்கும், குறு அரசியல் நலனுக்காக அங்கலாய்க்கும் தரப்புகளுக்கும் ஜீரணிக்க முடியாத அளவுக்கான ‘ஒரு வியாதி’யை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது. அந்தத் தரப்புகளை, ‘வயிற்றெரிச்சல் கோஷ்டிகள்’ என்ற பெயரில் அழைத்துக் கொள்ளவும் முடியும்.
நீதிமன்றத் தடைகள், பொலிஸாரின் அடாவடி நடவடிக்கைகள், கன மழை என்று தொடர்ந்த தடைகளைத் தாண்டி, பொத்துவிலில் போராட்டம் ஆரம்பித்தது முதல், போராட்டம் கவனம் பெறத் தொடங்கியது. அது போராட்டத்தை நோக்கி, மக்களைத் திரள வைத்தது.
தடைகள் தாண்டிய முதல் நாள் போராட்டம், இரண்டாவது நாளில், முஸ்லிம் மக்களின் பங்களிப்போடு அடுத்த கட்டத்தை அடைந்து, ஊடகக் கவனத்தைப் பெற ஆரம்பித்தது. அது, தடைகள் தாண்டி போராட்டத்தை ஆரம்பித்தவர்களை அடையாளம் காட்டியது.
இந்தத் தருணத்திலிருந்து, ‘வயிற்றெரிச்சல் கோஷ்டி’யும் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியது. அதில் ஒரு கோஷ்டி, பிரதேசவாதத்தை முன்னிறுத்தி முனகிக் கொண்டிருந்தது. அந்தக் கோஷ்டி, ராஜபக்ஷர்களின் ஏவல் சக்தி; அவர்களின் அரசியல் இருப்புக்கு, தமிழ் மக்களின் பிரதேசவாதம் கடந்த ஒருங்கிணைவு அச்சுறுத்தலானது. அதனால், பிரதேசவாதத்தை எப்படியாவது முன்னிறுத்தி, போராட்டத்தைக் குழப்ப முனைந்தது. இந்தக் கோஷ்டியை, மக்கள் இலகுவாகப் புறந்தள்ளினார்கள். அவர்களின் பேச்சுகளைக் கண்டுகொள்ளவில்லை.
இன்னொரு கோஷ்டியோ, போராட்டத்தில் சுமந்திரனும் சாணக்கியனும் கவனம் பெறுகிறார்கள் என்கிற பொறாமைத் தீயால் எழுந்தவர்கள். அவர்கள், இரண்டாவது நாளிலேயே, போராட்டத்தை முடக்கும் அளவுக்கான செயற்பாடுகளை, சமூக ஊடகங்களில் ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால், மற்றைய ‘வயிற்றெரிச்சல் கோஷ்டி’யோ, போராட்டத்தின் ஒற்றுமையை மாத்திரமல்ல, அதன் மீதான நம்பிக்கையையே சிதைக்கும் வேலைகளில் இன்றும் ஈடுபட்டு வருகிறார்கள்.
‘பொத்துவில்2பொலிகண்டி’ போராட்டத்துக்குள் நிகழ்ந்த குழப்பங்களுக்குப் பெரும்பாலும் ‘வயிற்றெரிச்சல் கோஷ்டி’யினரே காரணமாக இருந்தார்கள்.
‘பொத்துவில்2பொலிகண்டி’ போராட்டத்துக்கான அழைப்பு, வடக்கு, கிழக்கு சிவில் சமூக சம்மேளனத்தால், நில ஆக்கிரமிப்பு, நினைவேந்தல் தடை, ஜனாஸா எரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பத்து விடயங்களை முன்னிறுத்தியே விடுக்கப்பட்டிருந்தது.
பத்துக் காரணங்களை உள்ளடக்கிய அறிக்கையே வெளிநாட்டுத் தூதரங்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள், போராட்டத்துக்கான ஆதரவை வெளியிட்டன.ஆனால், போராட்டத்தின் இறுதியில் போராட்டப் பிரகடனமாக முன்வைக்கப்பட்ட ஆவணம் என்பது, போராட்டத்துக்கான அழைப்பின் போது முன்னிறுத்தப்பட்ட காரணங்களில் இருந்து குறிப்பிட்டளவு மாறுபட்டிருந்தது.
பிரகடனத்தின் உள்ளடக்கங்களில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், தமிழ் மக்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள். அவை நிராகரிக்க முடியாதவை. ஆனால், அந்தக் கோரிக்கைகளோடு போராட்டத்தின் பங்காளிகளாகத் தம்மை இணைத்துக் கொண்ட முஸ்லிம் மக்கள், முழுமையாக இணங்கும் சூழல் இல்லை.
ஏனெனில், அவர்களுக்கு என்றோர் அரசியல் நிலைப்பாடு இருக்கின்றது. போராட்டத்துக்கான அழைப்பைக் குறிப்பிட்ட பத்துக் காரணங்களை முன்வைத்து அழைத்த போது, அந்தக் காரணங்களோடு இணங்குவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராக இருந்தர்கள். அதனால், போராட்டத்தின் பங்காளியாக மாறினார்கள்.ஆனால், இறுதியில் வாசிக்கப்பட்ட பிரகடனத்துக்கு, முஸ்லிம் மக்களின் அங்கிகாரம் கோரப்பட்டதா என்கிற கேள்வி எழுகின்றது?
அதைவிட, குறிப்பிட்ட காரணங்களை முன்வைத்து, போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துவிட்டு, அதைத் தாண்டிய விடயங்களை உள்ளடக்குவது என்றால், அதை வெளிப்படையாக அறிவித்து, பங்காளித் தரப்பினரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது அடிப்படை. அந்த அடிப்படைதான் நம்பிக்கையைத் தொடரச் செய்யும்.
ஆனால், ‘பொத்துவில்2பொலிகண்டி’ இறுதிப் பிரகடனத்தின் உள்ளடக்கம், ஆரம்பக் காரணங்களில் இருந்து, பெருமளவு விலகி இருந்ததற்கு, வெளியில் இருந்து போராட்டத்துக்குள் நுழைந்த தரப்புகளே காரணம் என்று, போராட்டத்தின் முதல் கட்டத்திலிருந்து இறுதிக் கட்டம் வரையில் இருந்த பங்காளிகள் கூறுகிறார்கள்.
போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவுக்குள் இருந்த ஒருசில ஆசாமிகள், போராட்டத்தின் பேரெழுச்சியைத் தங்களுக்கான அரசியல் ஆதாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தவும் விளைந்திருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு தொடர்கின்றது. சில ஆசாமிகளின் நடவடிக்கைகள் அதனை வெளிப்படுத்தவும் செய்கின்றது.
ஜனநாயப் போராட்டங்களின் போது, மக்கள் பெருந்திரளாகக் கூடும் போது, அவர்களின் கோரிக்கைகள் பல்வேறு விதமாக எழுவது இயல்பு. ஆனால், போராட்டத்துக்கான அழைப்பு என்பது, எந்த அடிப்படையில் இருந்ததோ அதனை இறுதி வரை பேணுவது போராட்டத்துக்கான அழைப்பை விடுத்தவர்களின் கடமை.
பத்துக் காரணங்களை முன்னிறுத்தியே, ‘பொத்துவில்2பொலிகண்டி போராட்டம்’ முன்னெடுக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் சுமந்திரன் உரையாற்றியதும், அவருக்கு எதிராகத் துரோகிப் பட்டங்களை தூக்கிக் கொண்டு கஜேந்திரகுமாரும், இன்னும் சில புலமைத்தரப்பினரும் முன்வந்தார்கள்.
அவர்களிடம் உண்மையில் இருந்தது, போராட்டத்தின் நோக்கம் பற்றியதாக இருக்கவில்லை. மாறாக, போராட்டத்தில் சுமந்திரன், மக்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறார். அதை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என்கிற நோக்கமே மேலேழுந்தது.
பொலிகண்டியில் சாணக்கியன் மக்களால் கொண்டாடப்பட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள், என்னென்ன காரியங்களை எல்லாம் ஆற்றினார்கள் என்பதற்கான ஆதாரங்கள், வீடியோக்களாக சமூக ஊடகங்களில் இருக்கின்றன.
ஒரு போராட்டத்தின் ஆரம்பம், அடிப்படைகளை மறந்து நின்று, அதற்கு இன்னொரு நிறத்தைப் பூசுவது என்பது அயோக்கியத்தனம். அந்த அயோக்கியத்தனத்தைப் ‘பொத்துவில்2பொலிகண்டி’ப் போராட்டத்தின் மீது நிகழ்த்துவதற்கு, ‘வயிற்றெரிச்சல் கோஷ்டி’கள் தயாராக இருக்கின்றன. அவர்களிடத்தில் இருந்து போராட்டத்தையும் அதற்கான மக்களின் அர்ப்பணிப்பையும் காப்பாற்றியாக வேண்டும். அதுதான், தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு நல்லது.
ஏனெனில், ‘வயிற்றெரிச்சல் கோஷ்டி’களிடம் அரசியலுக்கான அறம் என்பது, சிறிதும் இல்லை. மாறாக, சுயநல சிந்தனைகளும் அடக்குமுறைகளுக்கு ஒத்தூதும் இயல்புமே மேலோங்கி இருக்கும்.
Average Rating