நிலையற்றுப்போன நிம்மதிப் பெருமூச்சு !! (கட்டுரை)
நாட்டை ஆட்சி செய்பவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி நிரலும் அரசாங்கத்துக்கு வேறொரு திட்டமும் இருப்பதுபோல், மக்களும் பல்வேறு எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.
தமது உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. சிறுபான்மையினரின் உரிமைகள் மட்டுமன்றி, சிங்கள மக்களின் ஜனநாயாக உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதே உண்மையாகும்.
ஆனால், ‘வாயால் வடை சுடுகின்ற’ விதத்திலான அரசியல், முன்கொண்டு செல்லப்படுகின்றதே தவிர, உரிமைகள், அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு உண்மையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அரிதாகிவிட்டது.
உரிமைகள் வழங்கப்படுவதன் முதற்கட்டமாக, அவ்வுரிமை பற்றிக் குறிப்பிட்ட மக்கள் கூட்டம் கொண்டுள்ள உணர்வுகள் புரிந்து கொள்ளப்படுவது அடிப்படையானது. உரிமைகளைக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது ஒருபுறமிருக்க, அவற்றுக்குச் செவிசாய்த்து, அதன் பின்னாலுள்ள நியாயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், இலங்கையின் நடைமுறை யதார்த்தம் அப்படியில்லை என்பதே, தமிழர்களின் அனுபவமாகும். முஸ்லிம் சமூகம் யுத்தத்துக்குப் பின்னரான காலப் பகுதியில்தான், இந்த யதார்த்தத்தைச் சரியாக உணரத் தொடங்கியிருக்கின்றது.
இதற்கு, நிகழ்காலத்தில் மிகச் சிறந்த உதாரணம், வலுக்கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரமாகும். ஒரு தனிமனித வாழ்க்கையின் கடைசிச் சடங்கு பற்றியதான, 20 இலட்சம் முஸ்லிம்களின் மத நம்பிக்கைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரமாக இதைக் குறிப்பிடலாம்.
ஓர் இனக் குழுமத்தின், மதப் பிரிவினரின் மன உணர்வுகள், ஜனாஸா நல்லடக்க கோரிக்கையில் உள்ள நியாயங்கள், புரிந்து கொள்ளப்படவில்லை என்பதே, அதிக வலிதரும் முதன்மை விடயமாகும்.
இவ்வாறிருக்க, முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வது போலான ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டு, பின்னர் அப்படி ஒன்றுமில்லை என்று முரண்நகையாகக் கருத்து வெளியிட்டு, எல்லாவற்றையும் ‘பூச்சியத்தால் பெருக்கிய’ சம்பவம் ஒன்று, கடந்த வாரம் இடம்பெற்றது.
ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு இடமளிக்கப்படும் என்று, நாட்டின் பிரதமர் சொன்னார். ஆனால், மறுநாளே அவரைவிட அரசியலில் சிறியவர்கள் வந்து, அதை மறுதலித்தனர். முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மனஆறுதல், சில மணிநேரங்களிலேயே காவு கொள்ளப்பட்டது.
சிங்கள மக்கள் வாழும் பிரதேசமொன்றில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலையொன்றின் கழிவு நீர், நிலத்துக்குக் கீழால் சென்று, நீர்நிலைகளில் கலப்பது தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த, கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சரும் வைத்தியருமான சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, “கொவிட்-19 என்பது, நிலத்தடி நீரின் ஊடாகப் பரவும் வைரஸ் அல்ல” என்று சொன்னார். அப்போது சபையில் இருந்த எம்.பிக்ளுக்கும், இதுபற்றி அறிந்த மக்களுக்கும் மனதுக்குள் கேள்வி எழுந்தது.
ஆயினும், முஸ்லிம் கட்சித் தலைவர்கள், சமூகத்தின் காவலர்கள் என்று கூறிக் கொள்ளும் எம்.பிமார் யாரும் உடனடியாக அந்தக் கேள்வியை எழுப்பவில்லை. அவர்கள் வழக்கம்போல ‘நல்ல நேரம்’ பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அடுத்தநாள் மரிக்கார் எம்.பி, அந்தக் கேள்வியை முன்வைத்தார். “நீரின் ஊடாக வைரஸ் பரவாது என்று இராஜாங்க அமைச்சரே கூறுகின்றார்; அப்படியென்றால், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை ஏன் நிலத்தில் புதைக்க முடியாது? எனவே, அதுபற்றிய ஓர் அறிவிப்பை, இப்போதாவது பிரதமர் இச்சபையில் விடுக்க வேண்டும்” என்று கோரி நின்றார்.
அந்த வேளையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மேற்படி கேள்விக்கு விடையளிக்கும் பாங்கில், “உடல்களை அடக்குவதற்கு இடமளிக்கப்படும்” என்று கூறினார்.
ஆரம்பத்திலிருந்தே, ஜனாஸா விவகாரத்தில் பிரதமர், சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார் என்றும், இன்னுமொரு தரப்பினரே இதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர் என்பதும் அரசல்புரசலாக ஏற்கெனவே தெரிய வந்திருந்தது.
ஆனபோதும், ஜனாஸா விவகாரம் சற்று ஓய்ந்து போயிருந்த சூழலில், பிரதமர் இவ்வாறான அறிவிப்பொன்றை விடுப்பார் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. எது எவ்வாறாயினும், முஸ்லிம்களுக்கு ஆறுதலான செய்தியாக அமைந்தது.
“அப்பாடா! வேண்டுதல் நிறைவேறிவிட்டது. இனி ஜனாஸாக்களை அடக்கலாம்” என்று முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கினர். மறுபுறத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள், இதற்கு உரிமை கோரத் தொடங்கினர். சோரம்போன அரசியல்வாதிகள், தமது வியூகம் பலிக்கத் தொடங்கி இருக்கின்றது என்று கதைவிட ஆரம்பித்தனர்.
ஆனால், இந்த நிம்மதிப் பெருமூச்சு, மறுதினமே இருந்த இடம் தெரியாமல் போனது. அடுத்தநாள் அமர்வில், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, பிரதமரின் நிலைப்பாட்டை மறுதலிக்கும் விதமான கருத்தை முன்வைத்தார்.ஜனாஸா அடக்கம் தொடர்பான முடிவை, சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழுவே எடுக்கும் என்றார். மொட்டு அணியின் பெண் எம்.பி ஒருவரும், இதே கருத்தை, நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த ஊடக சந்திப்பொன்றில் சொன்னார். இதைப் பிரதமர் மறுத்துரைக்கவும் இல்லை.
எவ்வாறாயினும், இவ்விடத்தில் நிறையச் சந்தேகங்கள் எழுகின்றன. அதில் முக்கியமானது, பிரதமருக்கே அதிகாரம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றதா என்பதாகும். அதேநேரம், அரசாங்கத்துக்குள் எந்த முரண்பாடும் இல்லை என்று, ஆளும்தரப்புக் கூறி வந்தாலும், அவர்களுக்குத் தெரியாமலேயே ஆளும்தரப்பின் உள்முரண்பாடு, வெளிப்பட்ட ஒரு சம்பவமாகக் கூட, அரசியல் அவதானிகள் இதனை நோக்குகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ என்பவர், சாதாரணமான அரசியல் தலைவரல்லர். இரண்டு முறை ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் கோலோச்சியவர். 50 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவம் உள்ளவர். அப்படிப்பட்ட ஒருவர், இந்நாட்டின் உயரிய சபையில், “அடக்குவதற்கும் இடமளிக்கப்படும்” என்று சும்மா வந்துகூற மாட்டார். அப்படியென்றால், அதற்குப் பின்னால் நிறையக் காரணங்கள் இருக்கலாம்” என ஊகிக்க முடிகின்றது.
பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான குழு, நல்லடக்கத்தையும் மேற்கொள்ளலாம் என்று சிபாரிசு செய்துள்ளது. இதை ஊடகமொன்றுக்கு பேராசியர், தற்போது பகிரங்கமாகவே கூறியுள்ளார். இதுவொரு முக்கிய காரணமாக அமைந்திருக்கலாம்.
அதேபோன்று, சீனா , இந்தியா அதிகாரப் போட்டிக்கிடையில் இருதலைக் கொள்ளியாகியுள்ள இலங்கை மீது, இந்தியா அண்மைக்காலமாகக் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. இந்நிலையிலேயே. முஸ்லிம் உலகத் தலைவர்களிடையே முக்கியத்துவம் பெற்று விளங்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வரவுள்ளார்.
முஸ்லிம்களின் சிறுபான்மையாக வாழும் நாடுகளில், அம்மக்களின் உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்திவரும் அவர், இலங்கை ஜனாஸா விடயத்திலும் அழுத்தங்களைப் பிரயோகிப்பார் என்ற ஊகத்தில், இவ்வறிப்பை பிரதமர் விட்டிருக்கலாம்.
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்தின் மீது, மனித உரிமைகள் மீறல் பற்றிய நெருக்குதல்கள் வலுக்கத் தொடங்கி இருக்கின்ற சூழலில், வலுக்கட்டாய ஜனாஸா எரிப்பு, இலங்கை மீதான சர்வதேச கெடுபிடிகள் அதிகரிக்கக் காரணமாகலாம். எனவே, அதைத் தணிப்பதற்கான அறிவிப்பாக இது இருக்கலாம்.
அதுமட்டுமன்றி, உரிமை மீறல்களை மையப் புள்ளியாகக் கொண்டு, தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு விடுவார்களோ என்ற எண்ணத்தை, அண்மைய பேரணி ஏற்படுத்தி இருக்கின்றது. அவ்வாறு நடந்தால், பிரித்தாளும் அரசியலுக்கான களநிலைமைகள் பாதகமாகிவிடும் என்ற அடிப்படையிலோ, கடைசிக் கட்டத்திலாவது முஸ்லிம்களை சமாளிப்போம் என்ற தோரணையிலோ அடக்குவதற்கு பச்சைக்கொடி காட்டும் நிலைப்பாட்டை பிரதமர் முன்வைத்திருக்கக் கூடும்.
ஆனால், ஒரு நாட்டின் பிரதமர் உயரிய சபையான நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவாகவும் நேரிடையாகவும் கூறிய கருத்துகளை ஓர் அமைச்சரும் எம்.பியும் செல்லாக்காசாக்கும் விதத்தில் பேசியுள்ளனர். அல்லது, இவ்வாறு பேசுமாறு ஏவப்பட்டு, யாராலோ அனுப்பி வைக்கப்பட்டவர்களாகவும் கருதலாம். இதனால், பிரதமரின் வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டனர்.
கொவிட்-19 நோய்த் தொற்றால் உயிரிழப்போரின் உடல்களை, அடக்க முடியும் என்று, ஆரம்பத்திலேயே உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டிருந்தது. ஆகவே, முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இலங்கையும் அதற்கிணங்கச் செயற்பட்டிருக்க வேண்டும்.
ஆயினும், அரசாங்கம் ஜனாஸாக்களை எரிக்கும் நிலைப்பாட்டை, இன்னும் உத்தியோகபூர்மாக மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை. “இதோ அனுமதிக்கப் போகிறோம்“, “இவ்வாரம் வர்த்தமானி வெளியாகும்” என்பதான மாயத் தோற்றங்கள், ஏற்படுத்தப்படுகின்றனவே தவிர, இன்று வரையும் இந்தத் தீ அணையவில்லை.
இலங்கையின் அரசியல் யதார்த்தத்தையும் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த வேண்டிய நிலையில், அரசாங்கம் இருக்கின்றது என்பதை, முஸ்லிம்கள் அறிவார்கள். ஆனால், சிங்கள மக்களுக்கும் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக, இப்போது பெருமளவுக்குத் தெளிவு கிடைத்து விட்டது. எனவே, இனியும் இழுத்தடிப்பது தார்மீகம் அல்ல!
சிறுபான்மைச் சமூகத்தின் உணர்வுகளைத் தாமாகவே புரிந்து கொண்டு, அவற்றை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், உரிமைளை வழங்காது இருப்பதை விடவும், வழங்குவது போல பொய்த் தோற்றம் காட்டி ஏமாற்றுவது, ‘வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவது போல’ மிகவும் மனதை வருத்துவதாகும். அது, அம்மக்களின் உணர்வுகளைக் கேலிக்கு உள்ளாக்குவதற்கு ஒப்பான விடயமாகும்.
Average Rating