மருத்துவ மகத்துவ மருதாணி!! (மகளிர் பக்கம்)
மருதாணியை விரும்பாத மங்கையர் உண்டா? மருதாணி இலைகள் பறித்து, அம்மியில் அரைத்து, சிறிது சிறிதாக எடுத்து, கை, கால்களில் இட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் கழுவிய பின், யாருக்கு அதிகம் சிவந்திருக்கின்றன என்று பார்க்க போட்டியே நடக்கும் அந்தக் காலத்தில். இப்போது அவ்வளவு எல்லாம் சிரமப்படத் தேவையே இல்லை. மெஹந்தி கோன், மெஹந்தி பேஸ்ட், மருதாணி பவுடர் என்று பல வடிவங்களில் மருதாணி கிடைக்கிறது. விரைவாக நிறமும் கிடைக்கிறது.
மருதாணி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றன. மருதாணியின் மகத்துவத்தை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் வித்யா.கே.எம். ‘‘மருதாணியின் அறிவியல் பெயர் ‘லாசோனியா இன்னர்மிஸ்’. மருதாணி சிறிய புதர்ச்செடி போல நெருக்கமாக வளரும். இதன் இளம் இலைகள் வெளிர் பச்சையாகவும், முதிர் இலைகள் அடர் பச்சையாகவும் காணப்படும். இதன் இலைகள் கசப்புச்சுவை உடையவை.
மருதாணியில் ஹென்னா டோனிக் அமிலமும், நிறமூட்டக்கூடிய காரணிகளும் அடங்கியிருக்கின்றன. மருதாணியை ஆயுர்வேத மருத்துவத்தில் காயங்களை, கொப்புளங்களை சரியாக்கவும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், கூந்தல் வளரவும் பயன்படுத்துகிறோம்.
மருதாணி உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும். சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு மருதாணி அருமருந்தாகும். மருதாணி பூக்களை 3 கிராம் எடுத்து அரைத்து அதை சுடுதண்ணீரில் கலந்து, இரவு சாப்பிட்ட பின், தொடர்ந்து 3 மாதங்களுக்கு குடித்துவர, தூக்கம் இல்லாமை, முடி கொட்டுதல் இரண்டும் சரியாகி விடும்.
நகங்களில் வரும் பூஞ்சைக் கிருமி தாக்குதல், நகச்சுற்று போன்ற பிரச்னைகளுக்கும் மருதாணியை அரைத்துப் பூசி வந்தால் சரியாகும். நகங்களின் இடுக்கில் சீழ்கட்டி இருந்தால் மருதாணியுடன், மஞ்சள் அரைத்துப் பூசலாம். தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்வதால் வரும் சேற்றுப்புண்கள், வேனல் கட்டிகள், கொப்புளங்களுக்கும் மருதாணி நல்ல மருந்து. சருமம் சார்ந்த நோய்களுக்கு மூலகாரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததே. ரத்தத்தை சுத்திகரிக்க 12 கிராம் மருதாணி இலைகளை எடுத்து, சுடுநீரில் கொதிக்க வைத்து, டிகாக்ஷன் செய்து, அதில் 8 டம்ளர் தண்ணீர் கலந்து, ஒரு டம்ளர் வீதம் இரவு உணவுக்குப் பின் குடிக்கலாம். தோல் அரிப்பு, கொப்புளங்களும் நீங்கும்.
முடி உதிர்வை தடுக்க மருதாணி இலைகளை அரைத்து வெட்டிவேர் கசாயத்துடன் சேர்த்து, ஆலிவ் ஆயில், முட்டை வெள்ளைக் கருவுடன் கலந்து, ஒரு இரும்பு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். 2 மணி நேரம் கழித்து இந்தக் கலவையை முன் நெற்றி, மயிர்க்கால்களில் நன்கு தேய்த்து குளிக்கலாம், மருதாணி, துளசி, செம்பருத்தி இலைகளை உலர வைத்து அரைத்த கலவையை, தேங்காய் எண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து வந்தால் மயிர்க்கால்கள் அடர்த்தியாகும்.
திருமணத்துக்கு ஓரிரு நாள் முன் மருதாணியை திருமணப் பெண்ணின் கை, கால்களில் விதவிதமாக வைத்து அழகுப்படுத்து வது சடங்காகவே உள்ளது. வட இந்திய மக்கள் திருமணப் பெண்ணுக்கு மெஹந்தி வைப்பதை கலகலப்பான விழாவாகவே நடத்துவார்கள். இது திருமணப் பெண்ணின் உடலை குளிர்வித்து ஆரோக்கியத்தோடு இருக்கச் செய்கிறது… அழகாகவும் காட்டுகிறது. இயற்கையான மருதாணி இலையில் உள்ள சாயங்கள் எந்த பக்கவிளைவுகளும் அற்றவை. இளநரையை மாற்றக்கூடிய தன்மையும் மருதாணிக்கு உண்டு.
மெஹந்தி கோன்கள், மருதாணி பவுடர், செயற்கை சாயங்கள் சேர்க்கப்பட்ட பிளாக் ஹென்னா… இவையெல்லாம் இப்போது அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கின்றன. பிளாக் ஹென்னா வில் சேர்க்கப்படும் செயற்கை சாயங்கள் சருமத்தின் மென்மைத் தன்மையை கெடுத்து சரும அரிப்பு, வறட்சி ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடியவை. மருதாணியின் இலைகளை பறித்து, அரைத்து இயற்கையாக பூசும் போது கிடைக்கும் பயன்கள் செயற்கை ஹென்னாவில் இருப்பதில்லை.சூட்டு உடம்புக்காரர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மருதாணி வைத்துக் கொள்ளலாம். இவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் வைத்திருந்தால் கூட ஒன்றும் செய்யாது.
சைனஸ், ஆஸ்துமா, குளிர்ச்சி அலர்ஜி உள்ளவர்கள் மாதம் ஒரு முறை மட்டுமே மருதாணி வைக்க வேண்டும். அதுவும் அரை மணி நேரத்தில் மருதாணியை எடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் இருமல், தும்மல், சளி போன்ற பிரச்னைகள் ஏற்படும். அழகோடு ஆரோக்கியமும் அளிக்கும் மருதாணியின் அருமையை புரிந்து பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமே!
Average Rating