அறிவியல் வளர்ச்சியால் அதிகரிக்கும் மார்க்கண்டேயன்கள்!! (மகளிர் பக்கம்)
மகனுக்குத் தன் முதுமையைக் கொடுத்து, இளமையைப் பெற்று இன்பமாக வாழ்ந்தான் யயாதி… மகாபாரதத்தில் படித்திருக்கிறோம். அந்த மாயாஜாலம், மந்திர வேலை, முனிவரின் வரமெல்லாம் தேவையில்லையாம். ‘இயல்பாகவே மனிதர்களின் ஆயுள் கூடிக்கொண்டிருக்கிறது… இளமையும்! இன்னும் சில வருடங்களில் 80 வயசு தாத்தா 40 வயது மனிதருக்கு இணையாக ஓடுவார்… ஆடுவார்… மலை ஏறுவார்’ என்று ஒரு போடு போட்டிருக்கிறார் அமெரிக்க டாக்டர் ஒருவர். இந்த ஆச்சரிய செய்தி சாத்தியம்தானா?
வயதைக் குறைக்கும் சிகிச்சையில் (Anti aging) ஈடுபட்டிருக்கும் பிரபல டாக்டர் டெர்ரி கிராஸ்மேன் கூறியதின் சுருக்கம்… ‘‘1900ல் மனிதர்களின் சராசரி வயது 47. 2000ல் அது 72. 2015ல் ஜப்பான் போன்ற நாடுகளில் 82 ஆக உயர்ந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் மனித ஆயுள்காலம் 4-5 மாதங்கள் அதிகரிக்கின்றன. விரைவிலேயே அது ஓராண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் மனிதர்கள் வாழும் காலம் நீட்டிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
காரணம், மருத்துவ அறிவியல், தகவல் தொழில்நுட்பத்துடன் இணைவது அதிகமாகி இருக்கிறது… வேகமாகி இருக்கிறது. அதன் அடிப்படையில் வயதாவதைத் தடுக்கும் ஆய்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. சில ஆண்டு களுக்கு முன் 65-70 வயதுக்கு உட்பட்டவர்களை ‘வயதானவர்கள்’ என்றோம். இன்றோ, 85 வயதோடு ஒப்பிட்டால் அது ‘இளம் முதுமை’. இனிவரும்
ஆண்டுகளில் 80 வயதுக்காரர்கள் 40 வயதில் இருப்பதைப் போல ஆரோக்கியமாக இருப்பார்கள்.
இளைஞர்களோடு சேர்ந்து மலையேற்றத்தில் கூட ஈடுபடுவார்கள்!’’அதிரவும் ஆனந்தப்படவும் வைக்கும் இந்த நிகழ்வு சாத்தியம்தானா? சென்னையில் இது தொடர்பாக சிகிச்சை அளித்து வரும், ‘லைஃப் அலைவ்’ மருத்துவமனை மருத்துவர் சுனிதா ரவியிடம் பேசினோம். ‘‘டெர்ரி கிராஸ்மேன் மேற்கத்தியர். இந்த விஷயங்கள் சம்பந்தமா ‘ட்ரான்ஸ்ஸெண்ட்’னு (TRANSCEND) ஒரு புத்தகமே எழுதியிருக்கார். TRANSCENDக்கு அர்த்தம்… T-Talk with your doctor, R – Relaxation, A – Assessment, N – Nutrition, S – Supplements, C – Calorie reduction, E – Exercise, N – New Technologies, D – Detoxification. அதாவது, மருத்துவ ஆலோசனை, ரிலாக்ஸ், மதிப்பீடு, ஊட்டச்சத்து, இணையாக சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள், கலோரி குறைப்பு, உடற்பயிற்சி, புதிய தொழில்நுட்பங்கள், நச்சுகளை அகற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய வழிமுறைகள்.
மேலைநாடுகள்ல இந்த வழிமுறையை நிறைய பேர் பின்பற்றுறாங்க… டாக்டரை தேடி வர்றாங்க. நம்ம நாட்டுல டாக்டரை பார்க்கறதுலயே ஏகப்பட்ட தடைகள் இருக்கு. மருந்தை தப்பான விஷயமா, பயத்தோட பார்க்கறாங்க. ‘எனக்கு நோயே வந்ததில்லை’, ‘நான் மருந்தே சாப்பிடுறதில்லை’ன்னு சொல்லிக்கறதுல பல பேர் பெருமைப்பட்டுக்கறாங்க. ‘ஏதோ உடம்புல பிரச்னை இல்லாம வாழறோமா, அது போதும்’கிற மனோபாவம் வந்துடுது. உடம்பு சரியில்லைன்னாதான் டாக்டரை தேடிப் போவாங்க. அவரும் என்ன பிரச்னையோ அதுக்கு மட்டும் சிகிச்சை கொடுப்பார்.
போதுமான டாக்டர்கள் இல்லாததுனால அவங்களால நோயாளிகளுக்கு அதிக நேரம் ஒதுக்க முடியறதில்லை. இதையெல்லாம் தாண்டி போறதுதான் இந்த ‘ஆன்டி ஏஜிங்’.ஒரு நோயாளிக்கு நாங்க கன்சல்ட் குடுக்குற நேரம் குறைந்தது ஒரு மணி நேரம். நாங்க நோய்களுக்கு சிகிச்சை கொடுக்கறதில்லை. பி.பி., சுகர்னு எல்லா உடல் கோளாறுகளுக்கும் மற்ற மருத்துவர்கள்கிட்ட சிகிச்சை பெறலாம். ‘ப்ரிவென்ஷன்’, ‘ஏர்லி டிடெக்ஷன்’… இந்த மாதிரி சிகிச்சை கொடுக்கிறோம்.
நம்ம உடம்பை வச்சு எப்படி சிறப்பா வாழ்க்கையை வாழலாம்னு யோசிக்கணும். ‘எனக்கு 40 வயசாகிடுச்சு. உடம்பு இனிமே இப்படித்தான் இருக்கும்’னு ஒருத்தர் நினைச்சார்னா ஒண்ணும் பண்ண முடியாது… நம்பிக்கை வேணும். 80 வயசுல 40 வயசுக்காரர் மாதிரி மலையேறணும்னா 20 வயசுலயே அதற்கான உடல் பராமரிப்பை ஆரம்பிச்சுடணும். இந்தியாவுல ‘கர்மா’னு சொல்லுவோம். அதாவது, ஒரு செயல் நடந்தா, அதுக்கு எதிர்விளைவு ஒண்ணு கண்டிப்பா இருக்கும். அதுக்கான பலனை அனுபவிச்சுதான் ஆகணும். இந்து மதத்துல ‘சரீர தர்மம்’னு சொல்லுவாங்க.
சரீரம்னா உடல். தர்மம்னா சட்டம் (விதி). நம் உடம்பு இயற்கை கொடுத்தது. இந்த உடலுக்கு நாம என்ன தர்றோமோ, அதை எப்படி கவனிச்சிக்கிறோமோ, அதுதான் நமக்குத் திரும்பக் கிடைக்கும். 40 வயசுல ‘ஐயையோ சுகர் வந்துடுச்சே!’, ‘உடம்பு வெயிட் போட்டுடுச்சே!’ன்னு யோசிப்போமே தவிர, அது வரை நாம இந்த உடம்புக்கு என்ன செஞ்சோம்கிறதை கணக்குலயே எடுத்துக்க மாட்டோம். ‘எந்த வயசுலயும் சிறந்த, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சமுதாயத்துக்கே வழிகாட்டுறதுதான் ‘ஆன்டி ஏஜிங்.’
மேலைநாடுகள்ல கொடுக்கும் பயோஐடென்டிக்கல் ஹார்மோன் – அசெஸ்மென்ட்ஸ், க்ரீம்ஸ், இன்ஜெக்ஷன் எல்லாம் நாங்களும் தர்றோம். எங்ககிட்ட 80 சதவிகிதம் பேர் எடை குறைப்புக்காக வர்றாங்க. 20 சதவிகிதம் பேர்தான் உடல்நலக் கோளாறு இல்லைன்னாலும் தேடி வர்றாங்க. அந்த 20ல 10 சதவிகிதம் பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவங்க. சுற்றுலாவுக்கு வந்தவங்க, தமிழ்நாடு, புதுச்சேரியில வசிக்கிறவங்களா இருப்பாங்க. 65-70 வயதுப் பிரிவை சேர்ந்தவங்களா இருப்பாங்க. 30 வயசுல எவ்வளவு எனர்ஜி இருக்குமோ, அது இந்த வயசுலயும் தேவைன்னு நினைப்பாங்க.
பயோஐடென்டிக்கல் ஹார்மோன் வேணும்னு கேப்பாங்க. அவங்களை டெஸ்ட் பண்ணி, அதன் அடிப்படையில ஹார்மோன்ஸ் குடுப்போம். வெளிநாடுகள்ல இருந்தவங்க, அதிகம் பயணம் செய்யறவங்க, இதைப்பத்திக் கேள்விப்பட்டவங்க ஆன்டி ஏஜிங்ல ஆர்வம் காட்டுறாங்க. இப்போல்லாம் இந்தியப் பெண்களுக்கு மெனோபாஸ் சீக்கிரமாகவே வந்துடுது. முன்னாடி 50-55 வயசுலதான் வரும். அப்போ 4, 5 குழந்தைங்களை பெத்துக்கிட்டிருந்தாங்க. கர்ப்பமா இருக்கற காலத்துல பீரியட்ஸ் வராது. கருமுட்டைகள் தீர்ந்து போகும்போது மெனோபாஸ் வரும்.
நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்போது மெனோபாஸ் ஆகிற டைமும் தள்ளிப் போகும். இப்போ கல்யாணமே தாமதமாகப் பண்ணிக்கிறாங்க… கருவுறுவதிலும் தாமதம். குழந்தையும் ஒண்ணு, ரெண்டு போதும்னுடுறாங்க. அதனால 42, 43 வயசுலயே மெனோபாஸ் வந்துடுது. பெண்களுக்கு மறு உற்பத்தியாகிற ஹார்மோன்ஸ் பெரும்பாலும் இல்லாமப் போயிடும். ஃபேட் அதிகமாயிடும். மறதி, கோபம் எல்லாம் வரும். தூக்கம் வராது. தாம்பத்திய உறவு கஷ்டத்தைக் கொடுக்கும். நார்மல் லூப்ரிகென்ட்ஸ் எல்லாமே கம்மியாயிடும். ஸ்கின், சீபம்லாம் சரியா இருக்காது. இந்தியாவுல மெனோபாஸ் வந்த பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறாங்க.
மேலைநாடுகள்ல இந்தப் பிரச்னை இல்லை. வாழ்க்கையை நல்லா வாழ சக்தி தரும் ஹார்மோன்ஸ்தான் அவங்களுக்குத் தேவை. அது ஆன்டிஏஜிங்ல கிடைக்கும். ஆன்டி ஏஜிங் ட்ரீட்மென்ட் இல்லை… சப்ளிமென்ட். ஒருத்தரோட பருமன் சதவிகிதம், தசைகள், ஜீரண சக்தி, ஸ்டெமினா, ஹார்மோன் லெவல், நியூட்ரிஷன் லெவல் எல்லாத்தையும் பரிசோதிப்போம். இதுல உளவியல் பகுப்பாய்வும் (Psychological Analysis) ரொம்ப முக்கியம். கவனம், நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், திறமைகள், எல்லாமே மன ஆரோக்கியம் சம்பந்தமானது. உடல், மனம் இரண்டையும் பிரிக்க முடியாது.
உடல், மனரீதியா நல்லா பரிசோதனை பண்ணி அதுக்கேத்த மாதிரி ஹார்மோன்ஸ் கிடைக்க வழி பண்ணுவோம். இது சில நாட்கள், வாரங்கள்ல முடியற சிகிச்சை கிடையாது. வாழ்நாள் முழுக்க சிகிச்சை எடுத்துக்க வேண்டியிருக்கும். இதை எல்லாரும் பண்ண வேண்டியதில்லை. இது அவசர சிகிச்சையோ, அத்தியாவசிய சிகிச்சையோ கிடையாது. வயதாகும் வேகத்தைக் குறைக்கிறது இயற்கைக்கு எதிராகப் போகிற விஷயம் இல்லை. இயற்கையோட இணைஞ்சது. நிறைய பேர் எங்ககிட்ட ‘இது இயற்கையானதுதானா, பக்க விளைவுகள் எதுவும் வராதே’ன்னு கேப்பாங்க.
நான் அவங்ககிட்ட கேட்கறது, ‘நீங்க சாப்பிடுற உணவு இயற்கையானதுதானா? நீங்க செய்யற வேலை இயற்கையானதுதானா?’ உடற்பயிற்சியை யாரும் செய்யறதில்லை. பிடிச்சதை மட்டும் சாப்பிடுறாங்க. அதுல ஊட்டச்சத்து இருக்கா, நல்லதா கெட்டதான்னெல்லாம் பார்க்கறதில்லை. ஆதிமனிதன் வேட்டையாடியும் இயற்கையா கிடைக்கிற உணவையும்தானே சாப்பிட்டுக்கிட்டு இருந்தான்? அப்போ உணவுல உப்பு, சர்க்கரை எல்லாம் இல்லை. விவசாயம் செய்ய ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் 3, 4 வேளை சாப்பிடுறதெல்லாம் வந்தது.
ஆரம்பத்துல மனிதன் பசிக்கும்போது மட்டும்தான் சாப்பிட்டான். இப்போ இது பிடிக்கும், இது பிடிக்காதுன்னு ருசி சார்ந்ததா உணவு ஆகிடுச்சு. உடம்புக்கு தேவையானதை சாப்பிடுறது கிடையாது. இதையெல்லாம் சரிப்படுத்தினா வயதாகும் வேகத்தை குறைக்கலாம். நம்ம நாட்டுல உடலின் தோற்றத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்கறோம்… மேக்கப் போட்டுக்கறது, கூந்தலை சரி பண்றதுன்னு. இதெல்லாம் தற்காலிகமானது… வெங்காயம் மாதிரி. மேல் தோல் காஞ்சு போயிருக்கும். உரிச்சிட்டா உள்ள இருக்கற தோல் நல்லா இருக்கற மாதிரி இருக்கும்… காஞ்சு போற வரைக்கும்.
‘ஆன்டி ஏஜிங்’கிறது உடம்புக்கு உள்ளே தர்ற ஒரு சிகிச்சை. ஒருத்தர் நல்லா எக்சர்சைஸ் பண்றார், நல்ல டயட்ல இருக்கார், ஆனா, மனசு சரியில்லைன்னா அவரால யூத்ஃபுல்லா இருக்க முடியாது. மன ஆரோக்கியம் ஆன்டி ஏஜிங்குக்கு ரொம்ப முக்கியம். டெர்ரி கிராஸ்மேன் உடம்பை பராமரிக்க மருந்து சாப்பிடச் சொல்றார். நாம உடம்பு சரியில்லைன்னாக் கூட மருந்து சாப்பிடத் தயங்குறோம். சமீபத்துல என் ஃப்ரெண்டோட வீட்டு ஃபங்ஷனுக்கு போயிருந்தேன். அவங்களோட வயசான அம்மாவும் அப்பாவும் நல்ல ஆரோக்கியத்தோட இருந்தாங்க. காரணம், அவங்க பாரம்பரியமா பின்பற்றும் உணவுமுறைகள், செயல்கள்தான். இதையெல்லாம் சரியா பின்பற்றினதால அவங்க நல்லா இருக்காங்க.
சித்தர்கள் மனிதர்களாகப் பிறந்தவங்கதானே? மூலிகை சாப்பிட்டாங்க, ஆன்மிகம், தியானம், யோகா எல்லாத்துலயும் ஈடுபட்டாங்க. அதுதான் அவங்க பல ஆண்டுகள் வாழ்ந்ததுக்கான காரணம். திருப்பதியில எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்… பேச்சலர். 98 வயசு. அவர் கூட நடக்கணும்னா ஓட வேண்டியிருக்கும். அவ்வளவு வேகமா நடப்பார். எலும்பு மேல தோல் போர்த்தின மாதிரி உடம்பு. தங்கம் மாதிரி மின்னும். 10 சதவிகிதம் கூட அவர் உடம்புல ஃபேட் இல்லை. காரணம், சின்ன வயசுலருந்து அவர் யோகா பண்றார்… கூடவே உணவுக் கட்டுப்பாடு!
மனிதர்களுக்கு 4, 5 மாசம் ஆயுசுல கூடுதுன்னு பொதுவா சொல்லிடமுடியாது. அது, அவங்கவங்க உடல்நிலையைப் பொறுத்த விஷயம். சராசரியா இந்தியர்களின் ஆயுள் 78ன்னு சொல்றது மருத்துவ முன்னேற்றத்தை வச்சுதான். பிரசவத்துல பல பெண்கள் இறந்துபோன காலம் ஒண்ணு இருந்தது… மருத்துவ வசதி இல்லாததுனால. இப்போ அடிபட்டா போடறதுக்கு டி.டி. இன்ஜெக்ஷன் இருக்கு. அம்மைக்கெல்லாம் தடுப்பூசி வந்தாச்சு. அப்படியே வந்தாலும் உயிர் காக்கும் மருந்துகள் இருக்கு. இதையெல்லாம் வச்சுத்தான் சராசரி ஆயுளை கணக்கிடுறோம்.
டெர்ரி கிராஸ்மேன் தன் 68 வயசுல உடம்பை மெயின்டெயின் பண்றதுக்கு நிறைய உடற்பயிற்சி செய்யறார், மருந்து எடுத்துக்கறார். வர்றவங்க இதையெல்லாம் செஞ்சுதான் ஆகணும். இது கொஞ்சம் காஸ்ட்லியான சிகிச்சை. சாப்பிடும் உணவுல மாற்றம் பண்ணணும். எக்சர்ஸைஸ் பண்ணணும். என்னென்ன விஷயங்கள் நமக்கு அழுத்தம் குடுக்குதோ அதையெல்லாம் விட்டுட்டு வெளியில வர முயற்சி செய்யணும்… இதற்காக சைக்கலாஜிக்கல் கவுன்சலிங், பிஹேவியரல் கவுன்சலிங் எல்லாம் கொடுக்கறோம். அப்புறம் பிசிக்கல் அசெஸ்மென்ட் பண்ணுவோம்.
ஒரு ஸ்பெஷல் ஸ்கேன் பண்ணுவோம். என்ன தேவையோ, அதுக்கேத்த மாதிரி சிகிச்சை கொடுப்போம். டெர்ரி கிராஸ்மேன் சொல்றதெல்லாமே சாத்தியம்தான். துணிமணி, சுற்றுலான்னு எவ்வளவு செலவு பண்றோம். அதோட ஒப்பிட்டா இதுக்காகும் செலவு கம்மிதான். ஒவ்வொரு நாளும் நம்ம உடம்பை எப்படி பாதுகாப்பா வச்சுக்கறதுன்னு பார்க்காம, நோய்களுக்கு செலவழிச்சுக்கிட்டு இருக்கோம். அதனால பிரயோஜனமே இல்லை…’’ -அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் சுனிதா ரவி.
Average Rating