வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்!! (மருத்துவம்)
காலம் மாற மாற புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் மாற்றமடைகின்றன; உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல்நலக் கோளாறுகள் ஏற்கெனவே உண்டு. அது தற்சமயம் வாட்ஸப்பைட்டிஸ் என்ற புதிய பெயரோடு புழக்கத்துக்கு வந்திருக்கிறது. Whats App அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் பிரச்னை என்பதால் அதையே பெயரிலும் வைத்துவிட்டார்கள். இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு. வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்கள் அதைவிடவும் குறைவு. எனவே, வாட்ஸப் பயன்படுத்துகிற அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பிரச்னையாகவே WhatsAppitis இருக்கிறது. எலும்பியல் மருத்துவர் கிருஷ்ணகுமார் இதுகுறித்து பகிர்ந்து கொள்கிறார்.
தொலைவில் இருப்பவர்களை நாம் விரும்புகிற எந்த இடத்தில் இருந்தும் எளிதில் தொடர்புகொள்ள உதவும் நவீன அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு கருவிதான் செல்போன். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவரின் உள்ளங்கையில் உலகம் இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு தற்போது அதன் அறிவியல் தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இதன் மூலம் அறிவு சார்ந்த மற்றும் பொழுதுபோக்கு தகவல்களைப் பெறுவதோடு நமது பல்வேறு விதமான அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது. இதனால் அவை நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அத்தியாவசிய பொருளாக மாறி வருகிறது.
இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் செல்போன், கணிணி போன்ற டிஜிட்டல் கருவிகளுடன் பல்வேறு காரணங்களுக்காக தங்களை அறியாமல் அதிகப்படியான நேரத்தை செலவிடுகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல, அதிக அளவிலான செல்போன் மற்றும் கணினி பயன்பாடுகளால் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் உண்டாகிறது. செல்போன் வருவதற்கு முன்னர் தட்டச்சு இயந்திரத்தில் அதிக நேரம் தட்டச்சு செய்பவர்களுக்கு அனைத்து விரல்களிலும் தேய்மானம் ஏற்பட்டு தசை மற்றும் எலும்புகளில் பிரச்னைகள் ஏற்படுவதை Stenographer thumb disorder என்று சொல்வதுண்டு.
இப்போது செல்போன் மற்றும் கணினியில் அதிக நேரம் டைப் செய்கிறபோது ஏற்படுகிற இதேபோன்ற தேய்மான பிரச்னைகள் எதனால் ஏற்படுகிறது? எந்த இடத்தில் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து Text thumb, WhatsAppitis, Blackberry thumb, Teck neck, Cellphone elbow syndrome போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. செல்போனில் Whatsapp போன்ற செயலிகளில் நாம் அதிக நேரம் தொடர்ந்து டைப் செய்து சாட்டிங் செய்கிறபொழுது, நமது கையில் உள்ள பெருவிரல்களை(Thumb) அதிகளவு பயன்படுத்துவதோடு நீண்ட நேரம் தலையைக் குனிந்த நிலையில் இருக்கிறோம்.
இதை ஒருவகை Overuse syndrome என்றே சொல்லலாம். பெருவிரலை அசாதாரண நிலையில் வைத்து தொடர்ந்து டைப் செய்கிறபோது அதைச் சுற்றியுள்ள தசைகளில் சோர்வும், அழற்சியும் ஏற்படுவதோடு அந்தத் தசைகள் சேதமடையவும் வாய்ப்புள்ளது. பெருவிரல் மூட்டு(Thumb joint), மணிக்கட்டு பகுதியிலுள்ள மூட்டு, விரல்களின் மூட்டுகளிலும் பாதிப்புகள் உண்டாகிறது. அதிக நேரம் தலையைக் குனிந்த நிலையில் இருப்பதால் கழுத்துப் பகுதி எலும்பு மற்றும் தசைகளில் பாதிப்பு உண்டாகிறது. ஒரு கையில் செல்போனை தூக்கிப் பிடித்தவாறே கையில் வைத்திருப்பதால் முழங்கை, தோள்பட்டை, மேல் முதுகுப்பகுதி, கழுத்துப் பகுதி போன்றவற்றில் வலி உண்டாகிறது.
சிலர் செல்போனில் டைப் செய்வதற்கு ஒரு கையை மட்டுமே பயன்படுத்துவதுண்டு. இதனால் ஒரு கையில் மட்டும் அதிக பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக இரண்டு கைகளாலும் டைப் செய்கிறபொழுது கைகளில் ஏற்படுகிற பாதிப்புகள் சற்று குறைய வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனின் அளவு பெரிதாக பெரிதாக டைப் செய்கிற பகுதி பெரிதாவதால் சற்று சுலபமாக டைப் செய்யலாம். டேப்லெட், லேப்டாப் போன்ற சற்று பெரிய திரையை உடைய கருவிகளை கீழே வைத்து பயன்படுத்தும் பொழுது அதிக அளவு தலையைக் குனிந்து இருப்பதால் தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் அதிக வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
தசைகள், எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதோடு நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி திரைகளை பார்த்துக் கொண்டிருப்பதால் கண்கள் உலர்ந்து விடுகிறது. இதுபோன்ற டிஜிட்டல் திரைகளிலிருந்து வெளிப்படும் நீலநிற ஒளிக்கதிர்களால் தற்காலிக கண்பார்வைக் குறைபாடு ஏற்படுவதோடு கண் விழித்திரை குறைபாடும் உண்டாகிறது. இரவு நேரங்களில் தூக்கத்தைத் தவிர்த்து இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதால் தூக்கக் குறைபாடுகள் மற்றும் நினைவுத்திறன் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
செல்போன், கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கு மனிதர்களை முகத்தோடு முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனிதத் தொடர்பியல் சார்ந்த திறன்களும் குறைகின்றன. மேலும் இதனால் அதிக கோபமும், அதிக மன அழுத்தமும் உண்டாகிறது. குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற டிஜிட்டல் திரைகளை அதிகளவு பயன்படுத்துவதால் அவர்களுக்கு, கவனக்குறைவு பிரச்னை, மொழியைக் கற்றுக்கொள்ளும் திறனில் பிரச்னை ஏற்படுவதோடு கண்ணில் கிட்டப்பார்வைக் கோளாறு ஏற்படவும் வழிவகுக்கிறது. மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பிரச்னைகள் ஏற்பட காரணமாகிறது.
பெற்றோர் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து வருவதோடு, அவர்களை அமைதிப்படுத்துவதற்காக செல்போனைக் கொடுத்து பழக்கப்படுத்துவதால், நாளடைவில் அவர்கள் அதற்கு அடிமையாகிவிடும் நிலை உண்டாகிறது. செல்போன் பயன்படுத்தத் தொடங்கும் முதல் குறுகிய காலத்தில் அதிக அளவு பயன்படுத்துகிறபோது 60 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்கு உடல் பகுதிகளில் வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த நபர்கள் வலி ஏற்படாமல் இருப்பதற்காக செல்போனை மாற்று முறைகளில் பயன்படுத்துவது அல்லது அதன் பயன்பாடுகளைக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரச்னைகளை எப்படி தடுக்கலாம்?
செல்போன், கணினி போன்றவற்றின் பயன்பாடுகளைக் குறைத்து அதை கட்டுக்குள் வைக்க வேண்டும். உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் அதிகமாகிற பொழுது உரிய மருத்துவரை அணுகி மருந்துகள், பிசியோதெரபி சிகிச்சைகள் மற்றும் மனநல ஆலோசனைகளைப் பெற வேண்டும். இதன் பாதிப்புகள் தீவிரமாகிற பொழுது சில சமயம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படலாம். டிஜிட்டல் திரைகளை தொடர்ந்து பயன்படுத்துகிறபோது உடலில் வலி ஏற்பட்டால் அதை பயன்படுத்துவதை உடனே நிறுத்திவிடுவது நல்லது.
ஏனென்றால் வலிதான் இதுபோன்ற செயல்களை மேலும் செய்யக்கூடாது என்பதை நமக்கு உணர்த்தும் முதல் அறிகுறி. எனவே, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு நாம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். நமது பயன்பாட்டு அளவுகளைக் குறைத்துக்கொள்வதோடு, பயன்படுத்தும் முறைகளில் மாற்றங்கள் செய்யலாம். உதாரணமாக குனிந்த நிலையில் உட்கார்ந்து டைப் செய்வதைத் தவிர்த்து நேராக நின்று கொண்டு டைப் செய்யலாம். ஒரு கையில் உள்ள பெருவிரலை பயன்படுத்துவதற்கு பதிலாக இரண்டு கை பெருவிரல்களையும் பயன்படுத்தலாம் அல்லது டைப் செய்வதற்கு மற்ற விரல்களையும் பயன்படுத்தலாம்.
சிறிய திரையைக் காட்டிலும் பெரிய திரையைப் பயன்படுத்தும் பொழுது டைப் செய்வதற்கு எளிதாக இருக்கும். சினிமா அல்லது வீடியோக்களை அதிக நேரம் பார்க்கிறபோது ஸ்டாண்டுகளில் வைத்து நேராக அமர்ந்து பார்க்கலாம். தூக்கத்தைக் கெடுத்து இரவில் அதிக நேரம் சாட்டிங் செய்வதை தவிர்ப்பது நல்லது. இரவு நேர வாட்ஸ் அப் சாட்டிங் கண்களுக்கும் கெடுதல். தூக்கமின்மைக்கும் காரணமாகிவிடும். செல்போன் அல்லது கணினி போன்ற பிற டிஜிட்டல் திரைகளில் அதிக நேரம் செலவிடும் நபர்கள் 20 நிமிடத்திற்கு ஒருமுறை, 20 நொடிகள் கால அளவில் அந்தத் திரைகளைத் தவிர்த்து வேறு பொருட்களை பார்க்க வேண்டும்.
இதன் மூலம் கண்கள் உலர்ந்து போகும் நிலையைத் தவிர்க்கலாம். இதுபோன்ற திரைகளில் குளிர்சாதன அறைக்குள் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்யும் நபர்கள், மரங்கள் நிறைந்த பசுமையான இடத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி, யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. முக்கியமாக டைப் செய்யும் நேரத்தைக் குறைக்க நேரடியாக போன் செய்தும் பேசிவிடலாம்!
நீங்கள் செல்போன் அடிமையா?!
செல்போனுக்கு நாம் அடிமை ஆகிவிட்டோமா இல்லையா என்பதை பின்வரும் சில செயல்பாடுகள் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம். ஏதோ ஒரு முக்கியமான பணியில் இருக்கையில் தொந்தரவாக இருக்கக்கூடாது என்று கருதி செல்போனை சைலன்ட் மோடில் வைத்து விடுவோம். ஆனாலும் அடிக்கடி அதை எடுத்து ஏதாவது மெசேஜ், போன் கால் வந்துள்ளதா என்று பார்க்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இது அடிமையானதற்கான முக்கிய அடையாளம்.
கோபம் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது அதைக் குறைப்பதற்காக சிலர் செல்போனை பயன்படுத்துவதுண்டு. இதுவும் அடிமைத்தனத்தின் அறிகுறியே. வீடியோகேம்களை விளையாடும் நபர்களில் சிலர் நேரம் போவதையே உணராமல், தங்களின் பிற வேலைகளை மறந்து அந்த விளையாட்டில் மூழ்கிவிடுவதுண்டு. இதுவும் கவனிக்க வேண்டிய ஒன்று. சமூக வலைதளங்களில் செலவிடப்படும் நேர அளவைக் கொண்டும் ஒருவரின் செல்போன் அடிக்ஷனை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
Average Rating