பொறியாக மாறிய ஜெனீவா !! (கட்டுரை)

Read Time:13 Minute, 58 Second

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக, இம்மாதம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் பிரேரணையை, எதிர்கொள்ளும் வகையில், சில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.

அதில் ஓர் அம்சமாகவே, மனித உரிமை விடயங்களில் கடந்த காலங்களில் இயங்கி வந்த ஆணைக்குழுக்கள், ஏனைய குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து, நடவடிக்கை எடுப்பதற்காக, ஜனவரி மாதம் 22 ஆம் திகதி மற்றோர் ஆணைக்குழுவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நியமித்தார்.

இது, மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாயினும் இந்த யோசனை புதியதல்ல. கடந்த வருடம், மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொண்ட வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன, 2020 பெப்ரவரி 27 ஆம் திகதி, அப்பேரவையில் ஆற்றிய உரையின் போது, இவ்வாறானதோர் ஆணைக்குழுவை நியமிப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், “அரசாங்கம் 11 மாதங்கள் தாமதித்து ஏன் நடவடிக்கை எடுத்தது” என்று எவரும் கேட்டால், அதற்குப் பதில், “நாம் மனித உரிமைகள் விடயத்தில் நடவடிக்கை எடுத்துள்ளோம்” எனக் கூறுவதற்காக, அக்கூட்டத்துக்கு நெருங்கிய ஒரு தினத்தில், ஜனாதிபதி அதை நியமித்துள்ளார்.

புதிய ஆணைக்குழுவுக்கு நான்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த கால ஆணைக்குழுக்கள், குழுக்கள் ஆகியவை, மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதநேய சட்ட மீறல்கள், ஏனைய அவ்வாறான குற்றங்களைக் கண்டறிந்து உள்ளனவா என்பதைக் கண்டுபிடிப்பது, அவற்றில் முதலாவதாகும்.

அந்த ஆணைக்குழுக்களும் குழுக்களும் செய்துள்ள பரிந்துரைகளை அடையாளம் காணுதல்; அப்பரிந்துரைகளை நிறைவேற்றியுள்ள முறை, தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எவை, என்பவற்றைக் கண்டறிதல் ஆகியன இரண்டாவதும் மூன்றாவதும் பொறுப்புகளாகும்.

அந்நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல், நான்காவது பொறுப்பாகும்.
புதிய ஆணைக்குழுவில் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவில் ஏனைய உறுப்பினர்களாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ, முன்னாள் மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் கடமையாற்றுகின்றனர். இந்தக்குழு, தனது இறுதி அறிக்கையை ஆறு மாதங்களில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கையளிக்க வேண்டும்.

தனிநபர் கொலைகளுக்குப் புறம்பாக, பரவலான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் காலம் முதல், பதவிக்கு வந்த அரசாங்கங்கள், ஆணைக்குழுக்களை நியமித்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது, 60,000க்கும் மேற்பட்டோர் காணாமல்போனதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி பிரேமதாஸ காணாமல்போனோர் தொடர்பாக ஆராயவென ஓர் ஆணைக்குழுவை நியமித்தார்.

அதேகுற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரணை செய்வதற்காக, ஜனாதிபதி சந்திரிகா, மூன்று பிராந்திய ஆணைக்குழுக்களையும் பின்னர் நாட்டுக்கே பொதுவானதோர் ஆணைக்குழுவையும் நியமித்தார்.

அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து, 2006 ஆம் ஆண்டு மீண்டும் போர் ஆரம்பித்ததை அடுத்து, மீண்டும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 2006ஆம் ஆண்டு ‘பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு’ வை நியமித்தார்.

போர் முடிவடைந்ததன் பின்னர், இலங்கையில் பொறுப்புக் கூறல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்து வந்த ஐ.நா செயலாளர் நாயகத்தைச் சமாளிக்க, 2010 ஆம் ஆண்டு, ‘கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’வை ஜனாதிபதி மஹிந்த நியமித்தார்.

காணாமல்போனோர் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழவே, ஜனாதிபதி மஹிந்த, அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையில், மற்றோர் ஆணைக்குழுவை நியமித்தார்.

இறுதிப் போர் தொடர்பான குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதால், புதிய ஆணைக்குழு, ஜனாதிபதிகளான பிரேமதாஸ, சந்திரிகா ஆகியோர் நியமித்த ஆணைக்குழுக்களைப் பற்றி ஆராயும் எனக் கருத முடியாது.

இம்மாதம் கூடவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் போது, “நாம் மனித உரிமைகள் விடயத்தில் செயற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்” என்று காட்டுவதே, அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிகிறது. எனவே, புதிதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, மஹிந்த நியமித்த ஆணைக் குழுக்களின் பரிந்துரைகளை மட்டும் ஆராயும் என ஊகிக்கலாம்.

இதே போன்ற ஒரு நிலைமையின் கீழ் தான், ஜனாதிபதி மஹிந்த, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார். பொறுப்புக் கூறல் விடயத்தில் மஹிந்த, 2009 ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ முனுக்கு வழங்கிய வாக்குறுதியை, நிறைவேற்றத் தவறியதை அடுத்து, ஐ.நா செயலாளர் நாயகம் ஒரு வருடம் காத்திருந்து, 2010 ஆம் ஆண்டு, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்க, இந்தோனேசிய முன்னாள் சட்ட மா அதிபர் தருஸ்மனின் தலைமையில், ஒரு குழுவை நியமித்தார். இதை அறிந்த உடன் மஹிந்த, ‘இதோ நான் செயலில் இறங்கிவிட்டேன்’ எனக் காட்டுவதற்காக, ஒரு குழுவை நியமித்தார்.

நேரடியாக, அதை மனித உரிமைகள் விடயத்தோடு தொடர்புபடுத்தினால், தாம் அச்சமடைந்ததை உள்நாட்டில், மக்களுக்கு விளங்கும் என்பதால் 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை, தோல்வி அடைந்ததற்கான காரணத்தை ஆராய்வதே அதன் நோக்கம் எனக் குறிப்பிட்டார். தாம் எதிர்த்த போர் நிறுத்த உடன்படிக்கை, தோல்வியடைந்தது ஏன் என அவர் ஆணைக்குழு நியமித்து விசாரணை நடத்துவதன் மர்மம் என்ன? அதுவும், போர் வெற்றியடையும் என்பது தெளிவாகத் தெரிந்த நிலையில், 2008ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி, போர் நிறுத்தத்தைத் தாமே இரத்துச் செய்தவர், அதன் தோல்விக்கான காரணத்தை ஆராய்வது, எவ்வளவு விந்தையான விடயம்? அதுவும் போர் முடிவடைந்து, ஒரு வருடத்துக்குப் பின்னர் திடீரென ஏன் இந்தத் தேவை ஏற்பட்டது?

அதேபோல் தான், ஜனாதிபதி கோட்டாபய இந்தப் புதிய ஆணைக்குழுவை நியமித்து இருக்கிறார். கடந்த கால ஆணைக்குழுக்கள் மனித உரிமை மீறல்களைக் கண்டறிந்துள்ளனவா என்பதையும் அவற்றின் பரிந்துரைகளையும் அப்பரிந்துரைகளை நிறைவேற்றியுள்ள முறையையும் கண்டறிய ஆணைக்குழு ஒன்று தேவையா? அவை தான், அக்குழுக்களின் அறிக்கைகளில் இருக்கின்றனவே என்று ஒருவர் கேட்கலாம்.

பழைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்ற, மேலும் என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதே, புதிய ஆணைக்குழுவின் நோக்கமாக இருக்கலாம். அதைப் படிப்டியாக விவரிப்பதற்காக, நான்கு பொறுப்புகளாகப் பிரித்து, புதிய ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி வழங்கியிருக்கலாம்.

ஆனால், சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் இந்தப் புதிய முயற்சியை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. மனித உரிமை விடயத்தில், உலக அபிப்பிராயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வரும் நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்ட ‘ஹியூமன் ரைட்ஸ் வொச்’ நிறுவனம், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக் ஆணைக்குழுவை விவரித்ததைப் போல், இதுவும் ஓர் ஏமாற்றுவித்தை எனக் குறிப்பிட்டுள்ளது. உடனடியாகவும் அவசியமாகவும் இருக்கும் சர்வதேச நடவடிக்கைகளைத் திசை திருப்புவதற்கான இந்த நேர்மையற்ற முயற்சியால், உலக நாடுகள் ஏமாறக் கூடாது என, அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மஹிந்தவின் காலத்திலும் இப்போதும் அரசாங்கம், மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளை நிராகரித்துவிட்டு, அப்பேரவையைச் சமாளிக்க அப்பிரேரணைகளில் உள்ள சில விடயங்களை, இதய சுத்தியின்றி நிறைவேற்றுகிறது. கடந்த வருடம் அரசாங்கம், முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை நிராகரித்துவிட்டு, அப்பிரேரணையிலுள்ள காணாமற்போனோர் அலுவலகம் போன்றவற்றைத் தொடர்ந்து நடத்துவதாகக் கூறியது.

ஆனால், இம்முறை மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் தலைவர்களுக்கு எதிராக, இதுவரை எடுக்காத நடவடிக்கைகளை எடுக்கும் போல் தெரிகிறது. குற்றம் செய்ததாக நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ள இலங்கையின் அதிகாரிகளுக்கும் ஏனையோருக்கும் எதிராக, பேரவையின் உறுப்பு நாடுகள் தத்தமது நாடுகளில் வழக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு எதிராக, சொத்துத் தடை, பயணத் தடை போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இவ்வருடத்துக்கான தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, தமிழ்த் தலைவர்கள் கேட்டுக்கொண்டதைப் போல், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

ஒருபுறம், மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்ற மனித உரிமைகள் பேரவையின் நிர்ப்பந்தம். மறுபுறம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான குறறச்சாட்டுகளை விசாரிப்பதில்லை என்று, தாமே மக்கள் மத்தியில் வளர்த்த அபிப்பிராயத்தின் காரணமாக, நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காரணமாக இப்போது, அரசாங்கம் பொறியில் அகப்பட்டுள்ளமை தெளிவாகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படிப்பட்ட ரோடு மெஷின்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை ! (வீடியோ)
Next post இது சாதாரண பிரச்னை அல்ல!! (மருத்துவம்)