ஈழத்தமிழர் படுகொலை குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை!! (கட்டுரை)

Read Time:15 Minute, 6 Second

ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்; இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச தடை விதிக்க வேண்டும்; குற்ற ஆதாரங்களை திரட்டி ஆவணப்படுத்த சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் நகல்கள் சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கடிதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் ப.தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
கடிதத்தின் விவரம் வருமாறு:

வரும் பிப்ரவரி 22 ஆம் நாள் தொடங்கவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் (UN Human Rights Council, 46th session ) இலங்கை மீதான முக்கியமான விவாதமும், தீர்மானமும் வரவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்களது சார்பில் அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நமது தமிழ் நாட்டின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களுக்கு நீதிவழங்குவதற்கான ஒரு முக்கியமான காலக்கட்டம் இது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
“ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை”
இலங்கை மீதான ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை ஜெனீவாவில் புதன்கிழமை (27.01.2021) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. (HRC/46/20 Promotion reconciliation, accountability and human rights in Sri Lanka – Report of the Office of the High Commissioner for Human Rights)

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) விசாரிக்க வேண்டும். இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச தடை விதிக்க வேண்டும். குற்ற ஆதாரங்களை திரட்டி ஆவணப்படுத்த சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் – என்பன உள்ளிட்ட உறுதியான பரிந்துரைகளை ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட் அளித்துள்ளார்.

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வழங்கக் கோரும் 11 ஆண்டுகால முயற்சிகளின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை ஆகும். இலங்கைக்குள் இனி நீதி கிடைக்காது; அதனை பன்னாட்டு அரங்கில் தான் நிலைநாட்ட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையர் தெளிவு படுத்தியுள்ளார்.

“தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்”
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 16.09.2015 அன்று கொண்டுவந்த தீர்மானத்தில் “இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற போது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் இணைந்துக் கொண்டு வர வேண்டும்” – என்று கோரினார்.

இதே போன்ற தீர்மானத்தை 27.03.2013 அன்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்தார். இதே கோரிக்கை அடிப்படையில் தான் 2013 நவம்பர் மாதம் இலங்கை காமன்வெல்த் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற தீர்மானம் 24.10.2013 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் கூட்டத்தை புறக்கணித்தார். அதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மதிக்கும் விதமாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா நடந்து கொள்ளவில்லை என்பதை குறிப்பிட்டு, இந்திய அரசின் நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவிக்கும் தீர்மானத்தையும் 12.11.2013 அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றினார்.

இவ்வாறு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் 2013, 2015 ஆம் ஆண்டு தீர்மானங்களின் கோரிக்கைகளை தான் இப்போது ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கையும் பிரதிபலித்துள்ளது.
“2013-ல்தமிழ்நாடெங்கும் போராட்டம்”
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்த போது, ‘சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த வேண்டும். அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும். அதற்கேற்ப தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களை செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி தமிழகத்தில்தொடர் போராட்டங்கள் தீவிரமாக நடந்தன.

அப்போது ‘அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை இந்தியா பெருமளவுக்கு நீர்த்துப் போக செய்து விட்டது’ என்று குற்றம்சாட்டி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக 19.03.2013 அன்று கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.
இவ்வாறு, 2013ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்று திரண்டு போராடிய அதே கோரிக்கைகள் தான் இப்போது ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

“பன்னாட்டு பொறிமுறை”
இலங்கைப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) அல்லதுஅதற்கு இணையான அமைப்புகளின் விசாரணைக்கு ஆணையிடுமாறு ஐ.நா. பொது அவைக்கும், ஐ.நா. பாதுகாப்பு அவைக்கும் பரிந்துரைக்க வேண்டும்; இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த, சிரியா, மியான்மர் நாடுகளுக்காக அமைக்கப்பட்டது போன்று, பன்னாட்டு பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM)ஐநா மனித உரிமைகள் பேரவை உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியாக கோரி வருகிறது.

ஈழத்தமிழர் அரசியல் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இதே கோரிக்கையை அண்மையில்முன்வைத்துள்ளன. தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்கள், ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கோரிக்கையை முன்வைத்து 15.01.2021 அன்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

இதே போன்று, இலங்கை மீது பன்னாட்டு பொறிமுறை கோரி பிரான்ஸ் நாட்டின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதே கோரிக்கையை அவரவர் நாடுகளின் அரசிடம் முன்வைத்துள்ளனர்.

இவ்வாறான சூழலில், ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக முன்வைக்கப்பட்டுள்ள “இலங்கை மீது பன்னாட்டு விசாரணை/பொறிமுறையை அமைக்க வேண்டும்” எனும் பரிந்துரை தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஐநா மனித உரிமைகள் ஆணையரின் புதிய அறிக்கையை ஏற்று, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46ஆம் கூட்டத்தொடரில் இந்திய அரசு ஒரு புதிய தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றினால், அல்லது, பிறநாடுகள் கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால், தமிழர் நீதிக்கான நீண்டநாள் கோரிக்கை வெற்றிபெறும். தமிழ்நாடு சட்டமன்றத்தின் 2013, 2015 தீர்மானங்களுக்கு இந்திய அரசு மதிப்பளித்ததாக இருக்கும். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும், கலைஞர் கருணாநிதி அவர்களும் வலியுறுத்திய கோரிக்கைகள் வெற்றிபெறும்.
“இலங்கை மீது புதிய தீர்மானம்”

ஐநா மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவை மூலம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. இனியும் உலக நாடுகள் அமைதி காக்கக் கூடாது. பன்னாட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல், Human Rights Watch உள்ளிட்ட பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.

இந்த அறிக்கை மீதான ஐநா மனித உரிமைகள் பேரவையின் விவாதம் ஜெனீவாவில் 24.02.2021 அன்று நடைபெறவுள்ளது. அதன் பின்னர், இலங்கை மீதான ஐநாவின் நடவடிக்கைகளை முடிவு செய்யும் புதியதீர்மானம் 22.03.2021 அன்று வாக்கெடுப்புக்கு வர இருக்கிறது.

கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மான்டெநெக்ரோ ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரவுள்ளன. அத்தீர்மானத்தை அமெரிக்காவும் ஆதரிக்கும். ஆனால், பாகிஸ்தானும் சீனாவும் தீர்மானத்தை எதிர்க்கும். இந்தியா எந்தப் பக்கம் நிற்கப்போகிறது? தமிழர்கள் பக்கமா அல்லது பாகிஸ்தான், சீனாவுடன் இணைந்தா? -என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இது ஒரு முக்கியமான தருணம் ஆகும். இலங்கை இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு (International Criminal Court) பரிந்துரைக்கவும், இலங்கை தொடர்பான சர்வதேச பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM) ஏற்படுத்தவும் வகைசெய்யும் புதியதீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா கொண்டு வர வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்துவதில் ஒரு அங்கமாக, ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 2013, 2015 ஆம் ஆண்டுகளில் செய்ததை பின்பற்றி, வரும் பிப்ரவரி 2-ஆம் நாள் தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இந்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் வழியில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் சார்பில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ‘நல்ல’ எண்ணெய்!! (மகளிர் பக்கம்)