ஜெனீவா காலத்திலும் அரசாங்கத்தின் விடாப்பிடியான நிலைப்பாடு!! (கட்டுரை)
நாட்டில், கடந்த ஒரு வருட காலமாக கொவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புபட்ட நெருக்கடிகள் பற்றியே, பேசிக் கொண்டிருக்கின்றோம். கொரோனா வைரஸ் தொற்றாமல் பாதுகாப்பது, தொற்றியவர்களுக்கு சிகிச்சையளிப்பது ஆகியவற்றைத் தாண்டி, பேசப்பட்ட ஒரேயொரு விடயம் ஜனாஸா எரிப்பு விவகாரமாகும்.
ஆனால், மேற்குறிப்பிட்ட எந்த நெருக்கடியும் இதுவரை முடிவுக்கு வரவில்லை. வைரஸ் பரவலோ, மரணங்களோ முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. எல்லா விடயங்களிலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றும் இலங்கை, ‘உடல்களை அடக்கம் செய்யவும் முடியும்’ என்ற வழிகாட்டலை மட்டும் பின்பற்றவில்லை.
ஒரு நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் காணப்பட்ட வழக்கமான பிரச்சினைகளை, கொவிட்-19 மேவி நின்றது என்பதே உண்மையாகும். மாறாக, கொரோனா வைரஸ் பரவலும், வலிந்த ஜனாஸா எரிப்பும் மட்டுமே, கடந்த ஒரு வருட காலத்தில் இலங்கையில் நிலவிய நெருக்கடி என்றும் கூறி விட முடியாது.
மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொதுஜன பெரமுன அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆயினும், அரசாங்கம் நினைத்த மாதிரி நாட்டில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தி, பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு காலம் இடம்கொடுக்கவில்லை. அபிவிருத்தித் திட்டங்களில் தேக்கநிலை, பொருளாதார நெருக்கடி, கடன்சுமை, வாழ்வாதாரப் பிரச்சினை, சிறுபான்மைச் சமூகங்கள் மீதான கடும்போக்கு வாதத்தின் வன்மம் என ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, அண்மைக் காலத்தில் ஆளும் தரப்புக்குள்ளேயே கருத்து வேற்றுமைகளும் வலுக்கத் தொடங்கி இருக்கின்றன. அத்துடன், தேர்தலில் வெற்றிபெறும் வியூகத்தை நடைமுறைப்படுத்திய காலப்பகுதியில், ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே இருந்த அந்த ‘இறுக்கமும் நெருக்கமும்’, இப்போது தளர்வடைந்து உள்ளதாகக் கூறப்படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ முரண்பாடுகளைக் களைவதற்கோ ஜனாதிபதி, பிரதமர் தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்க முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக, மூடிமறைப்பதற்கான எத்தனங்களே தொடர்ந்தும் எடுக்கப்படுகின்றன.
கொவிட்-19 நோய் சார்ந்த நெருக்கடிகளின் காரணமாகவே, அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற முடியவில்லை; நாட்டில் எதிர்பார்த்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்ற ஒரு கருத்தைப் பலரும் முன்வைக்கின்றனர்.
அது உண்மைதான்! ஆனால், அது மட்டுமே உண்மை என்று கூறிவிட முடியாது. கொவிட்-19 நோய் பரவல், ஜனாஸா எரிப்பு விவகாரம் ஆகியவை இல்லாத ஒரு சாதாரண சூழல் நிலவியிருந்தால், மேலே குறிப்பிட்ட ஏனைய பிரச்சினைகள் எல்லாம், பூதங்கள் போல மேற்கிளம்பியிருக்கும்.
நாட்டில் கொவிட்-19 நோய் பரவலானது எதிர்காலம் பற்றிய பெரும் கவலையை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது. அந்தவகையில், இதற்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பை நிறைவேற்றும் பாங்கிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாராட்டுதலுக்கு உரியவை.
இருப்பினும், ஒருவகையில் பார்த்தால், கொவிட்-19 நோயோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் போயிருந்தால், வேறு விதமான அரசியல் குழப்பங்களை இலங்கை எதிர்கொள்ள நேரிட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவே ஊகிக்க முடிகின்றது. கொரோனா வைரஸ் நெருக்கடிச் சூழலே, இலங்கையில் புகைச்சல் நிலையில் அல்லது உறைநிலையில் உள்ள ஏனைய குழப்பங்களை வெளியில் தெரியாதபடி மறைத்துக் கொண்டு இருக்கின்றது.
இதையும் தாண்டி, சில விவகாரங்கள் வெளியில் துருத்திக் கொண்டு நிற்கின்றன. சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் இவற்றுள் முக்கியமானவை. ஆனால், அதற்கும் கூட தீர்வுகாணும் உந்துதல் ஆட்சியாளர்களுக்கு இருப்பதாகத் தென்படவில்லை.
‘சிங்கள பௌத்த மக்களால் நிறுவப்பட்ட ஆட்சி’ என்று கூறிய நாளில் இருந்தே ஆட்சியாளர்கள், பெரும்பான்மை இனத்துக்கும் சிறுபான்மை இனத்துக்கும் இடையில் ஒரு பிரிகோட்டைப் போட்டுள்ளனர். முஸ்லிம்களையும் தமிழர்களையும் வேறாகக் கையாள்வதற்கான பிம்பம் இதன்மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது எனலாம்.
தமிழர்கள் ஒரு தீர்வுத் திட்டத்தை வேண்டி நிற்கின்றனர். ஆயினும், பௌத்த தேசியவாத செல்வாக்குள்ள பல்லின நாடொன்றில் சாத்தியமான தீர்வுத்திட்டக் கோரிக்கைகளையே தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்க வேண்டியதும் அவசியம்.
அந்த வரிசையில், வாதப் பிரதிவாதங்கள், சர்ச்சைகளைக் கொண்டதும் சர்வதேசத்துடன் தொடர்புடையதுமான விவகாரங்களாக ஆகியுள்ள போர்க் குற்றச்சாட்டுகளையும் யுத்தகால மனித உரிமை மீறல் சார்ந்த விடயங்களையும் ஒருபுறம் வைப்போம். ஆனால், தமிழர்களின் சிவில் சமூக கோரிக்கைகளுக்கு செவிமடுக்கலாம். தமிழர்கள் உரிமைகளை வழங்குவதில் ஒரு மென்போக்கையாவது கடைப்பிடிக்கலாம். ஆனால், அதில் கூட இவ்வரசாங்கம் ஒருவித ஓர்மத்துடன் செயற்படுவதாகவே தெரிகின்றது.
இதேவேளை, இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம்கள் விடயத்திலும், ஆட்சியாளர்கள் கடுமையான நிலைப்பாடுகளையே எடுக்கின்றனர் என்பது இரகசியமல்ல. இதற்கு, ஆகப் பிந்திய உதாரணம், ஜனாஸா எரிப்பு விவகாரமாகும்.
கொவிட்-19 நோய் தொற்றுக் காரணமாக உயிரிழக்கின்ற அல்லது, மரணித்த பிறகு கொவிட்-19 நோய் உறுதி செய்யப்படுகின்ற உடல்களை ‘புதைக்கவும் முடியும்’ என்று முழு உலகுமே கூறி வருகின்றது. ஆனால், உலக சுகாதார ஸ்தாபனத்தில் உள்ள நிபுணர்களையும் விஞ்சிய அறிவாளிகள் போல காட்டிக் கொள்ளும், ஓரிரு நிபுணர்களின் கதைகளை நம்பி, இதுவரை ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை.
உடல்களைப் புதைப்பது தொடர்பாக ஆராய்வதற்காக முதலாவதாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தொடர்பாக ஏற்பட்ட விமர்சனத்தையடுத்தே இரண்டாவது குழு நியமிக்கப்பட்டது. பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான இக்குழுவில், இலங்கையின் தலைசிறந்த துறைசார் நிபுணர்கள் உள்ளடங்கியிருந்தனர்.
இந்த இரண்டாவது குழு, இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, உடல்களைத் தகனம் செய்யலாம் அல்லது, புதைக்கலாம் என்று பரிந்துரைத்தது. ஆனால், இவ்வறிக்கையையும் மூடுமந்திரமாக பேணிய அரசாங்கம், முன்தீர்மானிக்கப்பட்ட முடிவு போல, ‘தொடர்ந்தும் எரிப்போம்’ என்ற தீர்மானத்தை அறிவித்தது.
இது, சுகாதார அடிப்படைகளையும் தாண்டிய அரசியல் கலப்புள்ள நிலைப்பாடு என்பதை, சிங்கள புத்திஜீவிகளே சொல்லி விட்டனர். ஆனால், இது இந்த நாட்டில் வாழும் ஓர் இனத்தின் மனநிம்மதியை வெகுவாகக் கெடுத்துள்ளது.
இப்போது, ஜெனீவா பருவகாலம் ஆகும். படையினர் மேற்கொண்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் பற்றிய அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பித்ததும் அரசின் மீதான பிடி சற்று இறுகும் என்றே கூறப்படுகின்றது.
ஏற்கெனவே, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்லெட் இது தொடர்பான அறிக்கையொன்றை இலங்கைக்கு அனுப்பியுள்ளார். ஜெனீவா அமர்வுகள், இலங்கைக்குச் சாதகமாக இருக்கப் போவதில்லை என்பதற்கான சமிக்கையாகவும் கருதலாம்.
சமகாலத்தில், இலங்கையில் கொவிட்-19 நோய்த் தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்படுகின்றமையும் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்படுகின்றமையும் இப்போது சர்வதேச அவதானிப்பைப் பெற்றுள்ளன.
இந்தப் பின்னணியில், ஐ.நா, சர்வதேச மன்னிப்புச் சபை போன்றவை மட்டுமன்றி பல உலக நாடுகளும் இதுபற்றிய தமது கரிசனையை வெளிப்படுத்தி உள்ளன; அமெரிக்காவும் கோரிக்கை விடுத்துள்ளது.
எனவே, முஸ்லிம்களின் விவகாரமும் ஜெனீவா அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் தலையிடியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன. ஆனால், அரசாங்கம் இதுபற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
ஆட்சியாளர்கள் உண்மையில் தமக்கு வருகின்ற சவால்கள், நெருக்கடிகளை குறைக்க வேண்டுமென்று நினைத்தால், தமிழர்கள் விடயத்தில் சற்று மென்போக்கை கடைப்பிடிப்பதுடன், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கும் இடமளித்திருக்கலாம்.
ஆனால், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனச் சுட்டிக்காட்டி, அரசாங்கம் மறுப்பறிக்கையை அனுப்பியுள்ளது. அதே பாணியிலேயே ஜனாஸா விடயத்திலும் யாரையும் கணக்கெடுக்காமல் மசியாமல் இருக்கின்றது.
ஜனாஸா விவகாரம் போன்ற, சிறுபான்மையினரின் சாதாரணமான அடிப்படை உரிமை பிரச்சினைக்கேனும் தீர்வை பெற்றுத் தராமல், விடாப்பிடியாக இருப்பதும் சர்வதேசத்தை கணக்கெடுக்காமல் விடுவதும், தேவையற்ற தலையிடிகளுக்கே இட்டுச் செல்லும் என்பதே உலக அனுபவமாகும்.
Average Rating